கொன்றைவேந்தன் – மூலம்

-ஔவையார்

தமிழில் எழுந்த பிற்கால (சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்) நீதிநூல்கள், சமுதாயத்தின் தகவமைப்பில் பேரிடம் வகித்துள்ளன. கடந்த நூற்றாண்டின் இறுதி வரை தமிழ்ப் பாடத்தில் இவை கற்பிக்கப்பட்டன. திண்ணைப் பள்ளிக்கூடங்களில் அடிப்படைப் பாடமாக இருந்தவை  இந்த நூல்களே. 

எளிய ஒற்றை வரிகளில் வாழ்க்கைக்கு அடிப்படையான நீதிபோதனையைச் சொல்லிச் செல்வது இந்த நூல்களின் குணம். பிற்காலப் பெண்பாற் புலவரான (சங்க கால ஔவை வேறு) ஔவையார் இயற்றிய  ‘கொன்றைவேந்தன்’ அவற்றில் குறிப்பிடத் தக்கது. 91 வரிகளால் ஆன சிறு நூல் இது.

கடவுள் வாழ்த்து

1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

 2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று

 3. இல்லறம் அல்லது நல்லறம் அன்று

 4. ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்  

 5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு  

 6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்

 7. எண்ணும் எழுத்தும் கண்எனத் தகும்  

 8. ஏவா மக்கள் மூவா மருந்து  

 9. ஐயம் புகினும் செய்வன செய்  

10. ஒருவனைப் பற்றி ஓரகத்து இரு

11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்

12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு  

13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு  

14. கற்புஎனப் படுவது சொல்திறம் பாமை

15. காவல் தானே பாவையர்க்கு அழகு

16. கிட்டா தாயின் வெட்டென மற  

17. கீழோர் ஆயினும் தாழ உரை

18. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

19. கூரம்பு ஆயினும் வீரியம் பேசேல்

20. கெடுவது செய்யின் விடுவது கருமம்

21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை

22. கைப்பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி

23. கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி

24. கோள்செவிக் குறளை காற்றுடன் நெருப்பு

25. கௌவை சொல்லின் எவ்வெவர்க்கும் பகை

26. சந்ததிக்கு அழகு வந்திசெய்யாமை

27. சான்றோர் என்கை ஈன்றோட்கு அழகு

28. சிவத்தைப் பேணின் தவத்திற்கு அழகு

29. சீரைத் தேடின் ஏரைத் தேடு

30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்

31. சூதும் வாதும் வேதனை செய்யும்

32. செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும்  

33. சேமம் புகினும் யாமத்து உறங்கு

34. சைஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்

35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்

36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்

37. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

38. தாயிற் சிறந்தொரு கோயிலும் இல்லை

39. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு

40. தீராக் கோபம் போராய் முடியும்

41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு

42. தூற்றும் பெண்டிர் கூற்றெனத் தகும்

43. தெய்வம் சீறின் கைதவம் மாளும்

44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும்

45. தையும் மாசியும் வையகத்து உறங்கு

46. தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது

47. தோழ னோடும் ஏழைமை பேசேல்

48. நல்இணக்கம் அல்லது அல்லற் படுத்தும்

49. நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை

50. நிற்கக் கற்றல் சொல்திறம் பாமை

51. நீரகம் பொருந்திய ஊரகத்திரு

52. நுண்ணிய கருமமும் எண்ணித்துணி

53. நூல்முறை தெரிந்து சீலத்து ஒழுகு

54. நெஞ்சை ஒளித்தொரு வஞ்சகம் இல்லை

55. நேரா நோன்பு சீர் ஆகாது

56. நைபவர் எனினும் நொய்ய உரையேல்  

57. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்  

58. நோன்பென் பதுவே கொன்றுதின் னாமை  

59. பண்ணிய பயிரிற் புண்ணியம் தெரியும்

60. பாலோடு ஆயினும் காலம்அறிந்து உண்

61. பிறன்மனை புகாமை அறம்எனத் தகும்

62. பீரம் பேணில் பாரம் தாங்கும்  

63. புலையும் கொலையும் களவும் தவிர்

64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்  

65. பெற்றோர்க்கு இல்லை செற்றமும் சினமும்  

66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்

67. பையச் சென்றால் வையம் தாங்கும்

68. பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்

69. போனகம் என்பது தான்உழந்து உண்டல்  

70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்

71. மாரி அல்லது காரியம் இல்லை

72. மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை

73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது

74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்

76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு

77. மேழிச் செல்வம் கோழை படாது

78. மை விழியார் தம் மனை அகன்று ஒழுகு

79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம்

80. மோனம் என்பது ஞான வரம்பு

81. வளவன் ஆயினும் அளவறிந்து அழித்துஉண்

82. வானம் சுருங்கின் தானம் சுருங்கும்

83. விருந்து இலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்

84. வீரன் கேண்மை கூர் அம்பாகும்

85. உரவோர் என்கை இரவாது இருத்தல்

86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை

88. வேந்தன் சீறீன் ஆம் துணை இல்லை

89. வைகல் தோறும் தெய்வம் தொழு

90. ஒத்த இடத்து நித்திரை கொள்

91. ஓதாதவர்க்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம்

$$$

காண்க: கொன்றைவேந்தன் - விளக்கவுரை- பத்மன்

$$$

18 thoughts on “கொன்றைவேந்தன் – மூலம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s