-பத்மன்
கொன்றைவேந்தன் (46-50)

கொன்றைவேந்தன்- 51
நீரகம் பொருந்திய ஊரகத் திரு
விளக்கம்:
நீர்நிலை நன்கு அமைந்துள்ள ஊரிலே குடியிரு என்று அறிவுறுத்துகிறார் ஔவையார்.
‘நீரின்றி அமையாது உலகு’ என்று எச்சரித்துள்ளார் திருவள்ளுவர். உணவு விளைச்சலுக்கு மட்டுமின்றி உயிர் வாழ்தலுக்கும் நீர் அவசியம்.
ஆனால் புவியின் ரத்தவோட்டம் போன்ற நன்னீர் பாய்கின்ற ஆறுகளையும், நீரைத் தேக்கிவைக்கும் இயற்கைப் பைகளான குளம், ஏரிகளையும் சுயநலத்துக்காக மனிதராகிய நாம் அழித்து வருகிறோம். நீர்நிலைகள் சுருங்குவதும் வறள்வதும் வறட்சிக்கு மட்டுமின்றி, பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றத்துக்கும் காரணமாக அமைகின்றன.
ஆகையால் நீர்சேமிப்பு அகங்களான ஆறு, குளம், ஏரி, கால்வாய் போன்றவை காப்பாற்றப்பட வேண்டும். அவ்விதம் இருந்தால் ஊர் ஊராக இருக்கும். இல்லையேல் பாலையாய்த் திரிந்து வேறாகும். இதுபோன்ற வறண்ட நிலம், மக்கள் போன்ற தோற்றத்தில் உள்ள மாக்களையே உருவாக்கும். மனித சமுதாயத்துக்கு அதனால் விளையும் இன்னல்கள் பல.
புவியின் ஈரம் காய்ந்தால் மானுட நெஞ்சின் ஈரமும் மாயும். ஊருக்கு நீரகம் பொருந்தி இருக்க வேண்டுமானால், நாம் அதற்குப் பொருத்தமாக வாழ்ந்தாக வேண்டும்.
ஆகையால்தான் நீர்நிலைகளைக் காப்பாற்றிக் கொண்டு நலமாக வாழ வேண்டும் என்பதை உணர்த்தவே ‘நீரகம் பொருந்திய ஊரகத்திரு’ என உபதேசிக்கிறார் ஔவையார்.
$$$
கொன்றைவேந்தன்- 52
நுண்ணிய கருமமும் எண்ணித் துணி
விளக்கம்:
மிகச் சிறிய செயலாக இருந்தாலும்கூட அதுபற்றி முழுமையாக ஆராய்ந்து பார்த்த பிறகே அச்செயலில் இறங்க வேண்டும் என்கிறார் ஔவையார்.
நுண் என்பது அளவில் மிகச் சிறியது. ஆனால் அதில்தான் நுட்பங்கள் பொதிந்திருக்கும். மிகப் பெரிய கல்லைக்கூட கையால் எளிதில் செதுக்கி, கலை வேலைப்பாடுகளைக் காட்டிவிட முடியும். ஆனால் சிறிய அளவுள்ள காதணியில், கலை வேலைப்பாடுகளைச் செதுக்குவது எளிதல்ல. ஆகையால் செயல் சிறியது என எதையும் அலட்சியமாகக் கருதிவிடக் கூடாது.
சிறிய நூல்கண்டும் காலை இடறிவிடும். சிறிய துரும்பும் பெரிய உறுத்தலைக் கொடுக்கும். ஒற்றைத் தாள்முனையும் ஒழுங்காகக் கையாளாவிடில் கையைக் கிழித்துவிடும். ஆகையால் செயலில் சிறியது – பெரியது என்று பாகுபாடு இன்றி அவற்றைச் செயலாற்றுவது குறித்து முறையாகச் சிந்திப்பது அவசியம்.
எண்ணுதல் என்றால் பலவாறாக யோசித்துப் பார்த்தல், ஆழமாக ஆராய்தல் என்று பொருள். துணிதல் என்பது திடமாகவும் உறுதியாகவும் முடிவெடுத்தல் ஆகும்.
இதைத்தான் ‘எண்ணித் துணிக கருமம்’ என்றுரைக்கிறார் திருவள்ளுவர். துணிந்தபின் எண்ணுவோம் என்பது இழுக்கைத் தந்துவிடும் என்றும் எச்சரிக்கிறார்.
பெரிய செயல்களை மலைப்பின் காரணமாகவே நாம் சரியாக ஆராய்ந்து திட்டமிட்டுச் செயலாற்றி விடுவோம். ஆனால் சிறிய செயல்களில்தான் அலட்சியம் காரணமாக, வாமனனிடம் மகாபலி தோற்றதைப் போல மண்டியிட்டு விடுவோம்.
எனவேதான் சிறிய செயலாக இருந்தாலும்கூட அதுபற்றி முறையாக எண்ணிப் பார்த்து, உறுதி செய்துகொண்டு, காரியத்தில் இறங்கு என அறிவுறுத்துகிறார் ஔவையார்.
$$$
கொன்றைவேந்தன்- 53
நூன்முறை தெரிந்து சீலத் தொழுகு
விளக்கம்:
நல்ல நூல்கள் கூறும் நெறிமுறைகளைத் தெரிந்துகொண்டு அவை கூறும் ஒழுக்கத்தைக் கடைபிடித்து வாழ் என்று அறிவுறுத்துகிறார் ஔவையார்.
நூல்களைப் படித்துத் தெரிந்து கொள்ளுதல் என்பது அதில் உள்ள நல்ல விஷயங்களைக் கற்றுக் கொள்வதற்காகவே. நூல் என்றால் நூற்பது. அணியும் துணியை உருவாக்குவதற்காக எப்படி பஞ்சை இழைத்து நூல் தயாரிக்கப்படுகிறதோ, அதுபோல அறிவைப் பெற்றுப் பயனுறுவதற்காக சொற்களை இழைத்து நூற்கப்படுவதே நூல். ஔவையார் இங்கே நூல் எனக் குறிப்பிடுவது வாழ்க்கைக்குப் பயன்படுவதும் வழிநடத்துவதுமான நூல்களையே.
நூன்முறை தெரிதல் என்றால் அத்தகைய நூல்களைக் கற்கும்போது முறையாகக் கற்க வேண்டும் எனப் பொருள். சந்தேகம், குழப்பம், தவறான புரிந்துகொள்ளல் ஆகியன இல்லாமல் கற்பதே முறையாகக் கற்றலாகும். முறையாகக் கற்கும்போது நூல்காட்டும் வழிமுறைகளையும் நெறிமுறைகளையும் நன்கு தெரிந்துகொண்டவர்கள் ஆகிறோம்.
அந்த நூல்களைக் கற்பதன் நோக்கம் அதுகாட்டும் நல்வழியில் நிற்பதே. கற்றதைக் காற்றில் விடுவதற்காக கற்கக் கூடாது; கடைபிடித்து ஒழுகுவதற்காகக் கற்க வேண்டும். அதைத்தான் சீலத்து ஒழுகு என்று குறிப்பிடுகிறார் ஔவையார்.
கற்கக் கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக
-என்று ஈரடியில் திருவள்ளுவர் இதனையே (திருக்குறள்- 391) வலியுறுத்தியுள்ளார். அவர் கூறிய குறளை இன்னும் சுருக்கமாகவும் நுட்பமாகவும் ஓரடியில், ‘நூன்முறை தெரிந்து சீலத் தொழுகு’என்று மொழிந்துள்ளார் ஔவை மூதாட்டியார்.
$$$
கொன்றைவேந்தன்- 54
நெஞ்சை ஒளித்தொரு வஞ்சகம் இல்லை
விளக்கம்:
தனக்குத் தெரியாமலேயே எவர் ஒருவருக்கும் நாம் வஞ்சனை செய்துவிட முடியாது, மனசாட்சி சுடும் என்கிறார் ஔவையார்.
தவறு என்பது வேறு, வஞ்சனை என்பது வேறு. நம்மை அறியாமலேயே தவறு செய்துவிட முடியும். ஆனால் வஞ்சகம் என்பது அறிந்தே செய்வது.
துரோகம், கபடம், ஏமாற்றுதல், தெரிந்தே பொய் சொல்லுதல், ஊழல், பழி பாவங்களைச் செய்தல், திட்டமிட்டுக் குற்றம் இழைத்தல் போன்றவை வஞ்சகம் ஆகும். இவற்றை அறியாமலேயே எப்படிச் செய்துவிட முடியும்?
ஆத்திரம் கண்ணை மறைக்கச் செய்திடும் குற்றத்தைக்கூட வஞ்சகம் அல்ல என்று ஒதுக்கிவிடலாம். ஆனால், இவை குற்றம், பாவம் என்று நன்கு தெரிந்திருந்தும் அவற்றைச் செய்வதுதான் வஞ்சகம்.
இத்தகைய வஞ்சகச் செயலுக்கு முதல் சாட்சி நமது நெஞ்சே, அதாவது மனமே. யாருக்கும் தெரியாமல் ஒரு வஞ்சனையைச் செய்தாலும் தன் மனத்துக்குத் தெரியாமல் ஒளித்துவிட முடியுமா? அது வஞ்சகம் செய்தோரைக் குடைந்துகொண்டே இருக்கும்.
இதைத்தான்
தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும்
-என்று எச்சரிக்கிறார் திருவள்ளுவர் (திருக்குறள்- 293).
அந்த எச்சரிக்கையையே சற்றே கிண்டலாக, ‘நெஞ்சை ஒளித்தொரு வஞ்சகம் இல்லை’ என்று உரைத்துள்ளார் ஔவையார்.
$$$
கொன்றைவேந்தன்- 55
நேரா நோன்பு சீராகாது
விளக்கம்:
மனம் ஒன்றி மேற்கொள்ளப்படாத விரதம் சிறப்புடையதாக அமையாது.
நோன்பு என்பது உறுதியுடன் ஈடுபடுகின்ற விரதம் ஆகும். குறிப்பிட்ட நேரம் வரை சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருத்தல், ஒரு வார்த்தையும் பேசாமல் மௌன விரதம் இருத்தல், குறிப்பிட்ட காலம் வரை புலனடக்கத்துடன் இருத்தல், தவம் மேற்கொள்ளுதல் போன்றவை நோன்பு ஆகும்.
நோன்புக்கு அடிப்படைத் தகுதி, எடுத்துக்கொண்ட விரதத்தை உறுதியோடு கடைபிடித்தல் ஆகும். இதற்கு, அந்த நோன்புச் செயலிலே நமக்கு பூரண உடன்பாடு இருக்க வேண்டும். மனம் ஒப்பிச் செய்ய வேண்டும்; ஒப்புக்காகச் செய்யக் கூடாது.
நோன்புக்கு மனத்தூய்மையும் மனபலமும் மிகவும் அவசியம். நோன்பின் போது ஏற்படும் இடையூறுகளையும் கஷ்டங்களையும் வென்றெடுத்து, மேற்கொண்ட நோன்பை சிறப்புடன் நிறைவு செய்ய வேண்டும். அதற்கு அந்த நோன்போடு நாம் நேர்ப்பட வேண்டும். முறையாக அதற்கு உடன்பட வேண்டும்.
மனம் ஒன்றிச் செய்வதே நோன்பு என்பதால்தான் இறைவனிடம் வேண்டுதலின் பொருட்டு நாம் கூறுகின்ற உறுதிமொழி நேர்ச்சை, நேர்ந்து கொள்ளுதல் என்று அழைக்கப்படுகிறது. ஆக நோன்புக்கு மனம் ஒன்றுதல் மிக மிக அவசியம்.
எனவே, மனம் ஒன்றாமல் செய்கின்ற நோன்பு சீராக, அதாவது நேர்த்தியாக நிறைவடையாது. அதனைத்தான் ‘நேரா நோன்பு சீர் ஆகாது’ என எச்சரிக்கிறார் ஔவையார்.
$$$
2 thoughts on “கொன்றைவேந்தன் (51-55)”