நூல்வெளி-2

முதல் பக்கம்

13. Phiosopher Saint 

நடராஜ குருவின் மூலமாக தான் ஜான் ஸ்பியர்ஸுக்கு நாராயண குரு பற்றித் தெரியவந்தது. அவர் இந்தியா வருவதற்கு இரண்டு ஆண்டுகள் முன்னமே நாராயண குரு சித்தி அடைந்து விட்டார். ஆனால் மிகச் சரியாக நாராயண குருவைப் புரிந்துகொண்டார். பலரும் சொல்வது போல நாராயண குருவை ஆன்மிக  மறுமலர்ச்சிக்கு வித்திட்டவராகவோ சமூக சீர்திருத்தவாதியாகவோ கருதாமல், அத்வைத நெறியில் வாழ்ந்து, வழிகாட்டிய குரு மகான்களின் வரிசையில் ஒருவராகக் கண்டார். 1952இல் நடராஜ குருவினால் துறவறம் அளிக்கப்பட்டு ஜான் ஸ்பியர்ஸ் காவி உடை தரித்த ‘சுவாமி ஜான் ஸ்பியர்ஸ்’ ஆனார். 1955 இல் நாராயண குருகுலம் சார்பில் ‘வேல்யூஸ்’ என்ற மாத இதழ் தொடங்கப்பட்டது. சுவாமி ஜான் ஸ்பியர்ஸ் அதன் ஆசிரியரானார். அதில் சுவாமி ஜான் ஸ்பியர்ஸ் எழுதிய பத்து கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். கட்டுரைகளைத் தொகுத்தவர் பி.ஆர்.ஸ்ரீகுமார். 

பலர் நாராயண குருவை சமூக சீர்திருத்தவாதி என்கிறார்கள்; அதுவும் சரியல்ல என்கிறார் சுவாமி ஜான் ஸ்பியர்ஸ். குரு ஒருபோதும் தலைவர் அல்ல. தலைவர் என்பவர் கூட்டத்தைச் சேர்த்தாக வேண்டும். குரு கூட்டத்தைச் சேர்க்க மாட்டார் என்பது மட்டுமல்ல, அவர் கூட்டத்தை விரட்டுபவர். பறக்கத் தெரிந்தவுடன் பறவைக்குஞ்சு கூட்டில் இருந்து வெளியேற்றப்படுவதைப் போல போதுமான ஞானம் பெற்றவர்களை குரு தன்னிடமிருந்து விலக்கி விடுவார்….

நாராயண குருவின் வாழ்க்கையையும் தத்துவத்தையும் சொல்வதென்பது, சுவாமி ஜான் ஸ்பியர்ஸ் வார்த்தையில் சொல்வதென்றால், கடலைக் குவளையால் அளப்பது போலத் தான்.

14. பாரத வரலாற்றின் ஆறு பொற்காலங்கள்

சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கர் எழுதிய வரலாற்று நூல் இது. இந்த நூல் அவரது கடைசிக் காலத்தில் வெளியானது என்பதனால், ஆங்காங்கே பொருத்தமான தனது இதர நூல்களையும் பற்றி அவர் குறிப்பிடுகிறார். இதனால் சாவர்க்கரின் பிற படைப்புகள், அவற்றின் குறிக்கோள் ஆகியவை பற்றி அவர் வாயிலாகவே அறிய இந்த நூலைப் படிப்பது உதவுகிறது. உதாரணமாக – அவரது சுயசரிதை, 1857ஆம் ஆண்டின் இந்திய விடுதலைப் போர், ஹிந்து பத பாதஷாஹி ஆகிய நூல்களைக் கூறலாம்….

மேற்கத்திய, மார்க்சீய தாக்கத்துடன் சரித்திரத்தைப் பார்க்கும் வரலாற்றாசிரியர்கள் திரிக்கும், மறைக்கும் வரலாற்றுப் பகுதிகளுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டுவது இந்த நூலின் தலையாய குறிக்கோள். முக்கியமாக – பாரதத்தின் /ஹிந்துக்களின் வரலாறு தோல்வியின் வரலாறு, பல நூற்றாண்டு அடிமைத்தனத்தின் வரலாறு என்ற தவறான கண்ணோட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. பாரத/ஹிந்து வரலாறு இடைவிடாத போராட்டத்தின் வரலாறு. நம் நாட்டின் அரசர்கள், மக்கள், வீரர்கள், தலைவர்கள், போராடி இன்றும் வெற்றி பெற்ற நாகரீகமாக வேத, ஹிந்து, பாரத நாகரீகத்தையும், கலாச்சாரத்தையும் திகழச்செய்துள்ளார்கள் எனும் கருத்தை நூலாசிரியர் ஒவ்வொரு கட்டத்திலும் ஆழமாக பதியவைக்கிறார்….

15. இந்துத்துவ அம்பேத்கர்

இன்று அம்பேத்கரை உரிமை கொண்டாடாதவர்கள் இல்லை. அம்பேத்கரை அவரது வாழ்நாளில் எதிர்த்த காங்கிரஸாரும், கம்யூனிஸ்டுகளும் இன்று அவரது பெயரை உச்சரிப்பதுதான் அம்பேத்கரின் வெற்றி. அதேசமயம், இந்து மதத்தை கடுமையாக நிராகரித்த அம்பேத்கரை இந்துத்துவர்கள் மிகவும் போற்றுவது எப்படி?

அம்பேத்கரியலில் தீவிர ஆராய்ச்சியாளரான ம.வெங்கடேசனின் இந்நூல் இக்கேள்விக்கு விளக்கமளிக்கிறது. புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? என்ற நூலை எழுதி ஏற்கெனவே தமிழுலகில் புதிய சிந்தனை அலைகளை உருவாக்கியவர் இவர்.

22 அத்தியாயங்களில் அம்பேத்கரின் கருத்துகளைக் கொண்டே கட்டி எழுப்பப்பட்ட ஆராய்ச்சி நூலாக இந்நூல் விளங்குகிறது. எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டனின் அறிமுக உரையும் சிறப்பாக உள்ளது. நூலாசிரியரின் கடின உழைப்பு வியக்க வைக்கிறது. இந்துத்துவர்களின் சிந்தனைப் போருக்கு ஒரு கருவியாக இந்நூல் வெளியாகி இருக்கிறது.

16. பாகிஸ்தான்: இந்தியப் பிரிவினை

டாக்டர் அம்பேத்கர் 1945-ல், பிரிவினைக்கு முன்பாக எழுதிய புத்தகம் THOUGHTS ON PAKISTAN. இதனை எழுத்தாளர் பி.ஆர்.மகாதேவன் தமிழில் மொழிபெயர்த்து வழங்கி இருக்கிறார்.

இந்தப் புத்தகத்தில் பாகிஸ்தான் என்ற தனி நாடு தேவையா என்பது தொடர்பாக இந்துத் தரப்பு, முஸ்லிம் தரப்பு என இரண்டுக்குமான வாதங்களை மிக விரிவாக, மிக அழுத்தமாக முன்வைத்திருக்கிறார். பிரிவினை தொடர்பான விவாதங்களில் இந்தப் புத்தகத்தை காந்தியும் மேற்கோள் காட்டிப் பேசியிருக்கிறார். ஜின்னாவும் மேற்கோள் காட்டிப் பேசியிருக்கிறார். இதிலிருந்தே இந்த நூல் எந்த அளவுக்கு ஆழமாக எழுதப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

இந்திய வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலும், தேசப் பிரிவினை ஒரு மாறாத ரணம். அன்று நடந்து முடிந்த இப்பேரழிவை எப்படித் தடுத்திருக்கலாம் என்பதைச் சொல்லும் புத்தகம் மட்டுமல்ல, இனி அப்படி ஒன்று நடக்காமல் தற்காத்துக் கொள்வது எப்படி என்பதையும் சொல்லித் தருகிறது இந்நூல். 

16. எனக்கு நிலா வேண்டும்

குறிப்பிட்ட ஒரு துறையை மையமாகக் கொண்ட புதினம் எழுதுவது புதிய விஷயமல்ல. ஆனால் அந்தத் துறையில் மூழ்கி முத்தெடுப்பது என்பது ஒரு கலை. இதை மிக அற்புதமாகச் சாதித்திருக்கிறார் ஹிந்தி எழுத்தாளர் சுரேந்திர வர்மா.

வாழ்க்கையின் எதிர்பாராத சிக்கல்களையும், தான் சார்ந்த நாடகத் துறையின் பலம்- பலவீனங்கள், உள்ளரசியலையும், தனிமனித குணாதிசயங்களையும் ஒன்றாகக் கலக்கி, தெளிவான நீரோடை போன்ற கதையுடன் அவர் 1993-இல் படைத்த  ‘முஜே சாந்த் சாஹியே’ புதினம், ஹிந்தி எழுத்துலகில் பெரும் பரபரப்பை உருவாக்கியதுடன் முன்னுதாரணமான புதினமாகவும் மாறியது. 1996-இல் இதற்கு சாஹித்ய அகாதெமி விருது கிடைத்தது.

இப்புதினத்தை தடையற்ற தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் எம்.சுசீலா.

முத்ரா ராட்சஸஸும், மேகதூதமும், சாகுந்தலமும் இந்தியக் கலையுலகின் அடிப்படை என்பதை இப்புதினத்தில் உணர்கிறோம். இதேபோல, தமிழின் காப்பிய வர்ணனைகளுடன் இயல்பான ஒரு தமிழ்ப் புதினம் உருவாக முடியுமா என்ற ஏக்கம் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.

17. ஸ்ரீ அரவிந்தரின் எரிக்கன்

விடுதலைப் போராட்ட வீரரும், புரட்சியாளராக இருந்து ஆன்மிகவாதியாக மலர்ந்தவருமான மகரிஷி அரவிந்தகோஷ், மிகச் சிறந்த இலக்கியவாதி என்பது பலரும் அறியாத தகவல். வங்கம், ஹிந்தி. சமஸ்கிருதம் மட்டுமின்றி, ஆங்கிலம், பிரெஞ்சு, லத்தீன், ஜெர்மன் ஆகிய வெளிநாட்டு மொழிகளிலும் மிகுந்த தேர்ச்சி பெற்றவர் அவர். புதுவையில் வசித்தபோது அவரது எழுத்தாற்றல் வடிவம் பெற்றது. அவர் எழுதிய கவிதைகள், நாடகங்கள், உரைநடை நூல்கள், காவியங்கள், தத்துவ விளக்கங்கள், கடிதங்கள் போன்றவை அவரது மேதைமையை வெளிப்படுத்துகின்றன.

அரவிந்தர் எழுதிய ‘எரிக்’ என்ற கவிதை நாடகம், ஸ்காண்டிநேவிய நாட்டுக் கதையின் செம்மை வடிவம். அவரது ஆங்கில நடை, ஆங்கிலேயர்களே வியந்த தனித்தன்மை கொண்டதாகப் போற்றப்படுகிறது.  இதன் மூலம் எதுவென்று அவர் குறிப்பிடவில்லை. எனினும், நார்வே தேச மன்னன் எரிக் பற்றிய சித்திரம் இதுவென்பது நாடகத்திலிருந்து தெரிய வருகிறது.

இதனை, அழகுத் தமிழில், இனிய யாப்புச் செய்யுள்களில் அரவிந்தரின் மூலத்துக்கு தகுந்த வகையில்,  ‘எரிக்கன்’ என்ற கவிதை நாடகம் ஆக்கி இருக்கிறார் வங்கி மேலாளராகப் பணிபுரிந்த சிவ.சூரியநாராயணன். அரவிந்தரின் ஆங்கில நடையில் தனது மனதைப் பறிகொடுத்த எழுத்தாளர், அதனை உள்வாங்கி தமிழுக்கேற்ற செம்மாந்த நடையிலும், நமது பண்பாட்டுக்கேற்ற இன்சொற்களிலும், மூலமா, மொழிபெயர்ப்பா என்று  புலப்படாதவாறு தமிழாக்கி இருக்கிறார்.