காளி மீதான பாடல்கள்-1

-மகாகவி பாரதி

பக்திப் பாடல்கள்

30. காளிப்பாட்டு

யாதுமாகி நின்றாய் – காளி! எங்கும் நீநி றைந்தாய்,
தீது நன்மை யெல்லாம் – காளி! தெய்வ லீலை யன்றோ?
பூத மைந்தும் ஆனாய் – காளி! பொறிக ளைந்தும் ஆனாய்
போத மாகி நின்றாய் – காளி! பொறியை விஞ்சி நின்றாய். 1

இன்பமாகி விட்டாய் – காளி! என்னுளே புகுந்தாய்!
பின்பு நின்னை யல்லால் – காளி! பிறிது நானும் உண்டோ?
அன்ப ளித்து விட்டாய் – காளி! ஆண்மை தந்துவிட்டாய்,
துன்பம் நீக்கி விட்டாய் – காளி! தொல்லை போக்கிவிட்டாய். 2

$$$

31. காளி ஸ்தோத்திரம்

யாது மாகி நின்றய் – காளி! எங்கும் நீநி றைந்தாய்,
தீது நன்மை யெல்லாம் – நின்றன் செயல்க ளன்றி யில்லை.
போதும் இங்கு மாந்தர் – வாழும் – பொய்ம்மை வாழ்க்கையெல்லாம்!
ஆதி சக்தி, தாயே! – என்மீது – அருள் புரிந்து காப்பாய். 1

எந்த நாளும் நின்மேல் – தாயே! இசைகள் பாடி வாழ்வேன்;
கந்தனைப்ப யந்தாய் – தாயே! கருணை வெள்ளமானாய்!
மந்த மாரு தத்தில் – வானில் – மலையி னுச்சி மீதில்
சிந்தை யெங்கு செல்லும் – அங்குன் – செம்மை தோன்றும் அன்றே! 2

கர்ம யோகமென்றே – உலகில் – காக்கு மென்னும் வேதம்,
தர்ம நீதி சிறிதும் – இங்கே – தவற லென்ப தின்றி,
மர்ம மான பொருளாம் – நின்றன் – மலர டிக்கண் நெஞ்சம்,
செம்மை யுற்று நாளும் – சேர்ந்தே – தேசு கூட வேண்டும். 3

என்ற னுள்ள வெளியில் – ஞானத் – திரவி யேற வேண்டும்;
குன்ற மொத்த தோளும் – மேருக் – கோல மொத்த வடிவும்,
நன்றை நாடு மனமும் – நீயெந் – நாளு மீதல் வேண்டும்;
ஒன்றை விட்டு மற்றோர் – உழலும் நெஞ்சம் வேண்டா. 4

வான கத்தி னொளியைக் – கண்டே – மனம கிழ்ச்சி பொங்கி,
யானெ தற்கும் அஞ்சேன் – ஆகி – எந்த நாளும் வாழ்வேன்,
ஞான மொத்த தம்மா! – உவமை நானு ரைக்கொ ணாதாம்.
வான கத்தி னொளியின் – அழகை வாழ்த்து மாறி யாதோ? 5

ஞாயி றென்ற கோளம் – தருமோர் – நல்ல பேரொ ளிக்கே
தேய மீதோர் உவமை – எவரே – தேடி யோத வல்லார்?
வாயி னிக்கும் அம்மா! – அழகாம் – மதியின் இன்ப ஒளியை
நேயமோ டுரைத்தால் – அங்கே – நெஞ்சி ளக்க மெய்தும். 6

காளி மீது நெஞ்சம் என்றும் – கலந்து நிற்க வேண்டும்;
வேளை யொத்த விறலும் – பாரில் – வெந்த ரேத்து புகழும்,
யாளி யொத்த வலியும் – என்றும் – இன்பம் நிற்கும் மனமும்,
வாழி யீதல் வேண்டும் – அன்னாய் – வாழ்க நின்றன் அருளே! 7

$$$

32. யோக சக்தி

வரங் கேட்டல்

விண்ணும் மண்ணும் தனியாளும் – எங்கள்
      வீரை சக்தி நினதருளே – என்றன்
கண்ணும் கருத்தும் எனக்கொண்டு – அன்பு
      கசிந்து கசிந்து கசிந்துருகி – நான்
பண்ணும் பூசனை கள்எல்லாம் – வெறும்
      பாலை வனத்தில் இட்ட நீரோ, – உனக்
கெண்ணுஞ் சிந்தை யொன்றிலையோ? – அறி
      வில்லா தகிலம் அளிப்பாயோ? 1

நீயே சரணமென்று கூவி – என்றன்
      நெஞ்சிற் பேருறுதி கொண்டு – அடி
தாயே! எனக்கு மிக நிதியும் -அறந்
      தன்னைக் காக்கு மொருதிறனும் – தரு
வாயே என்றுபணிந் தேத்திப் – பல
      வாறா நினது புகழ்பாடி – வாய்
ஓயே னாவதுண ராயோ? – நின
      துண்மை தவறுவதோ அழகோ? 2

காளீ வலியசா முண்டி – ஓங்
      காரத் தலைவியென் னிராணி – பல
நாளிங் கெனையலைக்க லாமோ, – உள்ளம்
      நாடும் பொருளடைதற் கன்றோ? – மலர்த்
தாளில் விழுந்தபயங் கேட்டேன் – அது
      தாரா யெனிலுயிரைத் தீராய் – துன்பம்
நீளில் உயிர்தரிக்க மாட்டேன் – கரு
      நீலியென் னியல்பறி யாயோ? 3

தேடிச் சோறுநிதந் தின்று – பல
      சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
      வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
      கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
      வீழ்வே னென்று நினைத் தாயோ? 4

நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் – அவை
      நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் – இன்னும்
      மூளா தழிந்திடுதல் வேண்டும் – இனி
என்னைப் புதியவுயி ராக்கி – எனக்
      கேதுங் கவலையறச் செய்து – மதி
தன்னை மிகத்தெளிவு செய்து – என்றும்
      சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய். 5

தோளை வலியுடைய தாக்கி – உடற்
      சோர்வும் பிணிபலவும் போக்கி – அரி
வாளைக் கொண்டுபிளந் தாலும் – கட்டு
      மாறா வுடலுறுதி தந்து – சுடர்
நாளைக் கண்டதோர் மலர்போல் – ஒளி
      நண்ணித் திகழுமுகந் தந்து – மத
வேளை வெல்லுமுறைகூறித் – தவ
      மேன்மை கொடுத்தருளல் வேண்டும். 6

எண்ணுங் காரியங்க ளெல்லாம் – வெற்றி
      யேறப் புரிந்தருளல் வேண்டும் – தொழில்
பண்ணப் பெருநிதியம் வேண்டும் – அதில்
      பல்லோர் துணைபுரிதல் வேண்டும் – சுவை
நண்ணும் பாட்டினொடு தாளம் – மிக
      நன்றாவுளத் தழுந்தல் வேண்டும் – பல
பண்ணிற் கோடிவகை இன்பம் – நான்
      பாடத் திறனடைதல் வேண்டும். 7

கல்லை வயிரமணி யாக்கல் – செம்பைக்
      கட்டித் தங்கமெனச் செய்தல் – வெறும்
புல்லை நெல்லெனப் புரிதல் – பன்றிப்
      போத்தைச் சிங்கவே றாக்கல் – மண்ணை
வெல்லத் தினிப்புவரச் செய்தல் – என
      விந்தை தோன்றிட இந்நாட்டை – நான்
தொல்லை தீர்த்துயர்வு கல்வி – வெற்றி
      சூழும் வீரமறி வாண்மை. 8

கூடுந் திரவியத்தின் குவைகள் – திறல்
      கொள்ளுங் கோடிவகைத் தொழில்கள் – இவை
நாடும் படிக்குவினை செய்து – இந்த
      நாட்டோர் கீர்த்தியெங்கு மோங்கக் – கலி
சாடுந் திறனெனக்குத் தருவாய் – அடி
      தாயே! உனக்கரிய துண்டோ? – மதி
மூடும் பொய்மையிரு ளெல்லாம் – எனை
      முற்றும் விட்டகல வேண்டும். 9

ஐயம் தீர்ந்துவிடல் வேண்டும் – புலை
      அச்சம் போயொழிதல் வேண்டும் – பல
பையச் சொல்லுவதிங் கென்னே! – முன்னைப்
      பார்த்தன் கண்ணனிவர் நேரா – எனை
உய்யக் கொண்டருள வேண்டும் – அடி
      உன்னைக் கோடிமுறை தொழுதேன் – இனி
வையத் தலைமையெனக் கருள்வாய் – அன்னை
      வாழி! நின்ன தருள் வாழி! 10

ஓம் காளி! வலிய சாமுண்டீ!
ஓங்காரத் தலைவி! என் இராணி!

$$$

33. மஹாசக்தி பஞ்சகம்

கரணமுந் தனுவும் நினக்கெனத் தந்தேன்,
      காளி நீ காத்தருள் செய்யே;
மரணமும் அஞ்சேன்; நோய்களை அஞ்சேன்;
      மாரவெம் பேயினை அஞ்சேன்;
இரணமுஞ் சுகமும், பழியுநற் புகழும்
      யாவுமோர் பொருளெனக் கொள்ளேன்;
சரணமென் றுனது பதமலர் பணிந்தேன்;
      தாயெனைக் காத்தலுன் கடனே. 1

எண்ணிலாப் பொருளும், எல்லையில் வெளியும்,
      யாவுமாம் நின்றனைப் போற்றி
மண்ணிலார் வந்து வாழ்த்தினுஞ் செறினும்
      மயங்கிலேன், மனமெனும் பெயர்கொள்
கண்ணிலாப் பேயை எள்ளுவேன்; இனியெக்
      காலுமே அமைதியி லிருப்பேன்;
தண்ணிலா முடியிற் புனைந்துநின் றிலகும்
      தாயுனைச் சரண்புகுந் தேனால். 2

நீசருக் கினிதாந் தனத்தினும், மாதர்
      நினைப்பினும், நெறியிலா மாக்கள்
மாசுறு பொய்ந்நட் பதனினும், பன்னாள்
      மயங்கினேன்; அவையினி மதியேன்;
தேசுறு நீல நிறத்தினாள், அறிவாய்ச்
      சிந்தையிற் குலவிடு திறத்தாள்,
வீசுறுங் காற்றில் நெருப்பினில் வெளியில்
      விளங்குவாள் தனைச்சரண் புகுந்தேன். 3

ஐயமுந் திகைப்புந் தொலைந்தன; ஆங்கே
      அச்சமுந் தொலைந்தது; சினமும்
பொய்யுமென் றினைய புன்மைக ளெல்லாம்
      போயின உறுதிநான் கண்டேன்.
வையமிங் கனைத்தும் ஆக்கியும் காத்தும்
      மாய்த்துமே மகிழ்ந்திடு தாயைத்
துய்யவெண் ணிறத்தாள் தனைக்கரி யவளைத்
      துணையெனத் தொடர்ந்தது கொண்டே. 4

தவத்தினை எளிதாப் புரிந்தனள், யோகத்
      தனிநிலை ஒளியெனப் புரிந்தாள்,
சிவத்தினை இனிதாப் புரிந்தனள், மூடச்
      சித்தமும் தெளிவுறச் செய்தாள்;
பவத்தினை வெறுப்ப அருளினள் நானாம்,
      பான்மை கொன்றவள் மயம் புரிந்தாள்;
அவத்தினைக் களைந்தாள், அறிவென விளைந்தாள்;
      அநந்தமா வாழ்க யிங்கவளே! 5

$$$

34. மஹா சக்தி வாழ்த்து

விண்டு ரைக்க அறிய அரியதாய்
      விரிந்த வான் வெளியென – நின்றனை;
அண்ட கோடிகள்வானில் அமைத்தனை;
      அவற்றில் எண்ணற்ற வேகஞ் சமைத்தனை;
மண்ட லத்தை அணுவணு வாக்கினால்,
      வருவ தெத்தனை அத்தனை யோசனை,
கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை,
      கோலமே! நினைக் காளியென் றேத்துவேன். 1

நாடு காக்கும் அரசன் தனையந்த
      நாட்டு ளோர்அர சென்றறி வார்எனில்,
பாடு தண்டைக் குழந்தை தனக்கிதம்
      பண்ணும் அப்பன் இவனென் றறிந்திடும்;
கோடி யண்டம் இயக்கி யளிக்கும்நின்
      கோலம் ஏழை குறித்திட லாகுமோ?
நாடி யிச்சிறு பூமியிற் காணுநின்
      நலங்கள் ஏத்திட நல்லருள் செய்கவே! 2

பரிதியென்னும் பொருளிடை யேய்ந்தனை;
      பரவும்வெய்ய கதிரெனக் காய்ந்தனை;
கரிய மேகத் திரளெனச் செல்லுவை;
      காலு மின்னென வந்துயிர் கொல்லுவை;
சொரியும் நீரெனப் பல்லுயிர் போற்றுவை;
      சூழும் வெள்ள மெனவுயிர் மாற்றுவை;
விரியும் நீள்கட லென்ன நிறைந்தனை;
      வெல்க காளி யெனதம்மை வெல்கவே. 3

வாயு வாகி வெளியை அளந்தனை,
      வாழ்வெ தற்கும் உயிர்நிலை ஆயினை,
தேயு வாகி ஒளியருள் செய்குவை,
      செத்த வற்றைக் கருப்பொருள் ஆக்குவை;
பாயு மாயிரஞ் சக்திக ளாகியே
      பாரிலுள்ள தொழில்கள் இயற்றுவை;
சாயும் பல்லுயிர் கொல்லுவை, நிற்பன
      தம்மைக் காத்துச் சுகம்பல நல்குவை. 4

நிலத்தின் கீழ்பல் லுலோகங்கள் ஆயினை;
      நீரின் கீழெண் ணிலாநிதி வைத்தனை;
இதலத்தின் மீது மலையும் நதிகளும்,
      சாருங் காடுஞ் சுனைகளும் ஆயினை;
குலத்தி லெண்ணற்ற பூண்டு பயிரினம்
      கூட்டி வைத்துப் பலநலந் துய்த்தனை;
புலத்தை யிட்டிங் குயிர்கள் செய்தாய், அன்னே!
      போற்றி! போற்றி! நினதருள் போற்றியே! 5

சித்த சாகரஞ் செய்தனை, ஆங்கதிற்
      செய்த கர்மபயனெனப் பல்கினை;
தத்து கின்ற திரையுஞ் சுழிகளும்
      தாக்கி யெற்றிடுங் காற்றுமுள் ளோட்டமுஞ்
சுத்த மோனப் பகுதியும் வெண்பனி
      சூழ்ந்த பாகமும் கட்டவெந் நீருமென்று
ஒத்த நீர்க்கடல் போலப் பலவகை
      உள்ளமென்னும் கடலில் அமைந்தனை. 6

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s