விஜய் ரசிகர்கள் தற்குறிகளா?

-பி.ஆர்.மகாதேவன்

தமிழக அரசியல் களத்தில் திரைத்துறையும் ஊடகங்களும் திமுக சார்புடன் செயல்பட்டு வருவது ரகசியமான ஒன்றல்ல. இதற்குத் தீர்வு காணாமல், ‘தற்குறி’ கலாசாரத்தைத் தடுக்க முடியாது என்கிறார் திரு. பி.ஆர்.மகாதேவன்.

விஜய் ரசிகர்கள் தற்குறிகளா?

ஆமாம்.

விஜய் ரசிகர்கள் மட்டும் தற்குறிகளா?

இல்லை. காமராஜரைத் தோற்கடித்து தேசிய சிந்தனைகளையும் தர்ம சிந்தனைகளையும் அழிக்க ஆரம்பிக்கப்பட்ட திராவிட இயக்கமே தற்குறிக்கூட்டம் தான்.

‘நான் சாமி கும்பிடுவேன். இந்து சாமியை மட்டும் அழிக்க நினைக்கறவனுக்கு ஓட்டும் போடுவேன்’ என்பதுதான் ஆகப் பெரிய தற்குறித்தனம்.

ஒரே ஒரு வார்த்தை அல்லாவுக்கு எதிராகவோ கிறிஸ்துவுக்கு எதிராகவோ பேசினால் ஒரே ஒரு வார்டில் திமுக வெற்றி பற்றுவிடமுடியுமா? எனவே தற்குறிகள் புதிதாகப் பிறக்கவில்லை. வெற்றி பெற்று ஆட்சி (?)  அமைத்தால், விஜய் கூட்டத்தை ‘தற்குறி 2.0’ என்று சொல்லலாம். வென்றால் மகிழ்ச்சி; தோற்றால் பயிற்சி என்று சொல்லும்படியாக நிலைமை வந்தால் ‘தற்குறி 3.0’ என்று சொல்லலாம்.

ஆக, இப்படி தலைமுறை தலைமுறையாக தற்குறிக் கூட்டங்களை உருவாக்கும் தமிழக மக்கள்தான்  ‘நம்பர் ஒன்’ தற்குறி.

அவரையை நட்டால் அவரை தான் முளைக்கும். அவரை முளைத்திருக்கிறதென்றால் அவரையைத்தான் நட்டிருக்கிறோம் என்றே அர்த்தம். தற்குறிகள் தானாகப் பிறப்பதில்லை. ஐயிரண்டு திங்கள் அரும்பாடுபட்டுப் பெற்றெடுக்கப்படுகிறார்கள். தாயைப் போலப் பிள்ளை… திராவிட இயக்கத்தைப் போல தற்குறி.

நாளையே ஜோசஃப், ‘என்ன பிரதமர் அங்கிள்’ என்று அசட்டு நெளிவுகளுடன் பேச ஆரம்பிப்பார். ஏன் எடப்பாடி கூட, ‘ரொம்ப தப்பு ஜி’ என்று ஆரம்பிப்பார்.

தமிழகத்தின் இந்தத் தற்குறித்தனம் அரசியல் மற்றும் திரைப்படத் துறைகளில் மிக மிகத் தெளிவாக வெளிப்படுகின்றன.

ஆன்மிகம், கல்வி, மருத்துவம், தொழில் முனைவு, வர்த்தகம், உள் கட்டமைப்பு மேம்பாடு போன்ற மற்ற துறைகளில் பல குறைகள் உண்டு என்றாலும், நிச்சயம் தமிழகம் தற்குத்தனத்துடன் அவற்றில் இல்லை. இந்திய அளவில் ஒப்பிட்டால் பல மடங்கு மேலான நிலையில் இருக்கிறார்கள்.

விஷயம் மிகவும் எளியது. போலி திராவிடத்தின் கைகளில் இருப்பவை கந்தரகோலமாக இருக்கின்றன. மற்றவை -அதாவது இந்துப் பெரும்பான்மையின் கைகளில் இருப்பவை- மேலானவையாக இருக்கின்றன.

அரசியல் அறிவு பூஜ்ஜியம். திரைப்பட ரசனை ஃபெயில் மார்க். ஆனால் பிற அம்சங்களில் 60 % க்கு மேல் மதிப்பெண்கள் பெறும் மக்கள்.

கேரளாவைப் பொருத்த வரையில் திரைப்பட ரசனை பல மடங்கு மேல். அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுப்பதில் தற்குறித்தனத்தைவிட கம்யூனிஸ்ட் + இஸ்லாமிய + கிறிஸ்தவ லாபிகள்  செய்யும் தந்திர, அராஜக அரசியல் அம்சமே அதிகம். மற்றபடி அரசியல் தலைவர்கள் மீதான அளவுகடந்த மயக்கம் கிடையாது,

கர்நாடகாவில் திரைப்பட ரசனை உயர்ந்தது என்றும் சொல்லமுடியாது;  படு மோசம் என்றும் சொல்ல முடியாது. அரசியல் விஷயத்தில் நல்ல அறிவு உண்டு.

ஆந்திராவைப் பொருத்த வரையில் திரைப்பட மசாலா தமிழகத்தைவிடத் தூக்கலானது. அரசியல் விழிப்புணர்வும் கணிசமாக உண்டு.

ஆக தென் மாநிலங்களில் தமிழகம் போல அரசியல் – திரைப்பட ஞான சூன்யங்கள் – தற்குறிகள் – அடிமைக்கூட்டம் எங்குமே கிடையாது.

வட இந்தியா, வட மேற்குப் பகுதிகளை எடுத்துக்கொண்டு பார்த்தால் விவசாயத்தைப் பிரதானமாகக் கொண்ட பிகார், ஒடிஸா, உத்தரப்பிரதேசம் போன்ற பகுதிகளில் திரைப்பட ரசனை சுமாராகவே இருக்கிறது. ஆனால், அரசியல்ரீதியாக தெளிவான சிந்தனை இருக்கிறது. மகாராஷ்டிரா, குஜராத் போன்ற தொழில் வளர்ச்சி கொண்ட மாநிலங்களில் திரைப்பட ரசனை பரவாயில்லை ரகத்தைச் சேர்ந்தது; அரசியல் விழிப்புணர்வு மிகுதியாக இருக்கவும் செய்கிறது.

வட கிழக்குப் பகுதிகள் திரைப்பட ரசனையில் பலவீனமானவை. அரசியல் ரீதியாக பெரிதும் அதிக அக்கறையோ எதிர்ப்பார்ப்போ இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுடைய எண்ணிக்கையும் செல்வாக்கும் குறைவு என்பதால், அவர்களுடைய குரல் மற்றும் அதன் தன்மை பெரிய தாக்கத்தை எதிலும் ஏற்படுத்த முடிந்ததாக இதுவரை பலம் பெறவில்லை.

திரைப்படம் என்பது நவீனக் கலை வடிவம் என்பதால் அதை ஒப்பிட எடுத்துக் கொண்டு பார்த்தால், கலை ரசனைக்கும் அரசியல் விழிப்புணர்வுக்கும் இடையில் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. அதாவது இரண்டுமே ஒருசேர ஏற்படும் விழிப்புணர்வாக இருக்கிறது. கட் அவுட் கலாசாரம் மற்றும் பாலாபிஷேக தமிழகம் அதன் கலைத் தற்குறித்தனத்தை அப்படியே அரசியலிலும் வெளிப்படுத்துகிறது.

நிச்சயம் தமிழர்களில் கலை ரசனை மேம்பட்டவர்கள் கணிசமாக உண்டு. ஆனால், அரசியல் மற்றும் திரையுலகம் இரண்டிலும் அபரிமிதமான செல்வாக்கு செலுத்தும் கும்பல் இரண்டிலும் தற்குறி என்பதே உண்மையாக இருக்கிறது.

இந்த திரைப்பட ஊடகத்தைக் கைப்பற்றியதால் திராவிட அரசியல் தரத்திலேயே மக்கள் முடங்கினார்களா? இந்த திரைப்பட மிகை மற்றும் உள்ளீடற்ற தன்மையே தமிழக அரசியலை முடக்கிப் போட்டிருக்கிறதா?

இரண்டிலும் ஒரே நேரத்தில்தான் மாற்றம் வர முடியுமா?

ரசனை உணர்வு மிகுந்த படைப்பாளிகள் திரை உலகில் புது வெள்ளமாகப் பாய்ந்து ஒரு மாபெரும் திருப்புமுனையை மாபெரும் இயக்கத்தை முன்னெடுத்தால்தான் அது அரசியல் களத்திலும் அடிப்படை அறிவு பெற்ற மக்கள் திரளை உருவாக்குமா?

அரசியல் களத்தில் ஒரு மாபெரும் மாற்றமும் எழுச்சியும் வந்தால்தான் திரையுலகச் செயல்பாடுகளிலும் மாற்றம் வருமா?

அப்படித்தான் நடக்கும்; நடக்க முடியும் என்று தோன்றுகிறது.

திரையில் தம் தலைவர்களைத் தேடும் மக்களிடம் விழிப்புணர்வை உருவாக்குவதென்றால் அதன் மூலம் தானே எதையும் செய்ய முடியும்? ஆடற மாட்டை ஆடித்தானே கறக்க முடியும்?

திராவிட இயக்கம் மக்களிடையே செல்வாக்கு பெற முக்கிய காரணம் திரைப்பட ஆக்கிரமிப்புதான். அதிமுக முழுவதும் திரைப்படக் கவர்ச்சியால் ஆட்சியைப் பிடித்த இயக்கம். 2000க்குப் பின்னர் திமுக மெள்ள மெள்ள ஊடகங்களை முழுக்கக் கைப்பற்றிய பின்னரே 2019-2021-2024 என சர்வாதிகார சக்தியாக ஆகியிருக்கிறது. இன்று திமுகவின் பிரசார பீரங்கிகளாக திரையுலகமும் ஊடகங்களும் தான் இருக்கின்றன.

தமிழகத்தில் பாஜக மிக மிக மோசமாகத் தோற்கும் இடம் இதுவே.

திறமைசாலியான படைப்பாளிகளை திட்டமிட்டெல்லாம் உருவாக்க முடியாது. ஆனால், தேவையான நிதி, பிற வசதி வாய்ப்புகள், வெளியீட்டு வெளிகள் ஆகியவற்றை உருவாக்கித் தர முடியும்.

பாஜகவும் இந்து அமைப்புகளும் கோடிகளைக் கொட்டத்தான் செய்கின்றன. அவை பெரிதும் தவறான கைகளுக்கே சென்று சேர்கின்றன. அல்லது வெள்ளையானைக்கு உணவிடும் செலவுகளாக, நதியில் பத்தாயிரம் லிட்டர் பாலைக் கொட்டுகிறேன் என்பதுபோல வீணாகிக் கொண்டிருக்கின்றன.

இது, இந்த வாய்க்காலையும் எதிரியே கட்டுப்படுத்துகிறான் என்பதற்கான எளிய எடுத்துக்காட்டு.

சன் டிவி போன்ற செல்வாக்குள்ள ஊடகங்களை முதலில் கைப்பற்ற வேண்டும். தூர்தர்ஷன், ஜனம் போன்று கைவசம் இருக்கும் ஊடகங்களை செல்வாக்கு உள்ளதாக ஆக்க வேண்டும்.

ஊடகங்களைக் கைப்பற்ற வேண்டும் என்று சொல்வதென் முக்கிய காரணம்: மக்களுக்கு உண்மை நிலையை எடுத்துச் சொல்ல அது ஒன்றே ஒரே வழி என்பதால்தான்.

மக்கள் விழிப்புணர்வு அடையாமல் கிடைக்கும் வெற்றிகள் எல்லாம் நிலையானதாக இருக்காது. மேலும் அவை திரை மறைவு பேரங்களால் கிடைப்பவையாகவே இருக்கும்.

திராவிட இயக்கத்தின் வெற்றி திரைப்படங்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் மக்கள் மனதை  கறை படிய வைத்துப் பெற்ற வெற்றியே. அந்தக் கறையைப் போக்கினாலே உண்மையான வெற்றி கிடைக்கும்.

மேலும் ஊடகத்துறை என்பது வளம் கொழிக்கும் தொழில் துறை. ஏராளமான வேலை வாய்ப்புகளைக் கொண்ட துறை. தமிழகத்து இளைய தலைமுறைக்கு வாழ்வாதாரம் தரும் துறையும் கூட. தமிழக ஊடகத் துறையில் இந்து உணர்வு கொண்ட இந்துக்களுக்கு இடம் கிடையாது என்பது இந்துக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி. ஆன்மிக நிகழ்ச்சிகள், ஜோதிடங்கள், வழவழ கொழகொழ அரசியல் அசடுகளின் பேட்டிகள், மூன்று பேனலிஸ்ட்களும் நெறியாளனும் சேர்ந்து ரவுண்ட் கட்டி அடிக்கும் ஷோக்கள் இவையெல்லாம் மாறாமல் கிடைக்கும் வெற்றி என்பது மிக மிக தற்காலிகமானது;  மிக மிக அபாயகரமானது.

ஆன்மிக நிகழ்ச்சிகளைப் பொருத்தவரையில் இந்துவுக்கு ஆன்மிகத்துக்குப் பஞ்சமே இல்லை. ஜாதி நல்லிணக்கம், மத நல்லிணக்கம், வர்க்க நல்லிணக்கம் ஆகியவையே ஆன்மிகத்தின் அடிப்படை. அது இந்துக்களுக்கு அபரிமிதமாக இயல்பாகவே உண்டு. எனவே ஆன்மிகம், ஜோதிடம் போன்றவை மீதான பார்வை என்பது நிரம்பிய குடத்தில் மேலும் மேலும் நீர் ஊற்றுவதற்கு சமம். அதிலும் எதிர் மதங்கள் அரசியல் உணர்வு ஊட்டுவதில் மட்டுமே கவனம் செலுத்தும் நிலையில், நாம் ஆன்மிகம், ஜோதிடம் என்றெல்லாம் கூடுதல் கவனம் செலுத்துவதென்பது தினமும் மூன்று வேளை மூக்கு முட்டச் சாப்பிடுபவனுக்கு அன்ன தானம் போடுவது போன்றதுதான்.

வெற்று பேப்பருக்கு 60 மார்க் கிடைத்தால் அது கொண்டாடப்படவேண்டிய வெற்றியாக இருக்காது. மக்கள் மனதில் மாற்றம் வராமல் கிடைக்கும் வெற்றி உண்மையானதாக இருக்காது.

திரை அரங்கின் இருட்டுக்குள் தலைவனைத் தேடுபவர்களை மாற்ற வேண்டுமென்றால் திரையில் நம் படம் ஓடவேண்டும். ஊடகங்களால் மயக்கப்படுபவர்களை மீட்க வேண்டுமென்றால் ஊடகங்கள் நம் கைக்கு வர வேண்டும்.

நாம் நமக்கு சாதகமாக எதையும் திரிக்கவெல்லாம் வேண்டாம். உண்மையைச் சொன்னாலே போதும். அதுவும் நான்கு பேர் கேட்கும் மேடையில் ஒலிபெருக்கிக்கு அருகில் சென்று சொல்ல வேண்டும். நம் காதுக்குக் கூட கேட்காத வகையில் நமக்குள்ளாகவே முனகிக் கொண்டிருக்கக் கூடாது.

வெற்றி பெற முயற்சி செய்ய வேண்டும். முயற்சி செய்வதுபோல பாவலா காட்டக் கூடாது.

$$$

Leave a comment