-பி.ஆர்.மகாதேவன்
நாட்டிலேயே அதிகமான கோயில்கள் இருந்தும், அற்புதமான சமய இலக்கியங்கள் கொண்டதாக இருந்தும், தமிழகம் ஏன் கானல் நீரை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது? எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன் தனது பார்வையில் இதற்கு தீர்வு கூறுகிறார்…

தமிழகத்தில் இந்துக்களின் பிரச்னை, இன்று நேற்று தொடங்கியது அல்ல. அது 100 ஆண்டுகளுக்கு முந்தையது. ஆழ வேரூன்றியது. அகலக் கிளை விரித்திருப்பது. எளிதில் கிள்ளி எறிய முடியாதது.
பிரிட்டிஷ் ஆட்சி நடந்த இருண்ட காலத்தில் இந்து – இந்திய மரபுக்கு எதிரான விஷ வித்துகள் தமிழகத்தில்(லும்) ஊன்றப்பட்டன.
போலி எஜமான மாற்றம் நடந்த சுதந்தரத்துக்குப் பிந்தைய காலகட்டத்தில் திராவிடர் கழகம், வெள்ளி மயிர்க் கிழட்டு நரி – தொட்டில்/கட்டில் திருடன் என்றெல்லாம் கண்ணியமாக அழைக்கப்படும் விவகாரத்தினால் தலைக்குனிவைச் சந்திக்க நேர்ந்த தறுதலை வாரிசுகளின் கூட்டம், சமூக நீதி காக்கப் புறப்படுகிறேன் என்ற போர்வையில் திமுக என்ற வெறுப்பு அரசியல் இயக்கமாக மறு வீழ்ச்சி அடைந்தபோது அந்த விஷ மரம் ஆழமாக வேரூன்றத் தொடங்கியது.
சொல்வதற்கு தயக்கமாக இருந்தாலும் தேசிய சக்தியாக இருந்த (செல்வாக்கில் மட்டுமே; கொள்கையில் அல்ல) அன்றைய காங்கிரஸ் இந்த காலனிய சிந்தனைகளுக்கு நீர் ஊற்றவே செய்தது. அது இந்து மதத்தின் ஜாதிக் கொடுமைகளைக் களைகிறேன் என்ற மிகை குற்ற உணர்ச்சி மற்றும் சுய குழி பறித்தல் மனநிலையில் இந்துத்தன்மையை எதிர்மறையாகவே முன்வைத்து அரசியல் செய்தது.
திராவிடக் கழகங்கள் ஆட்சிக் கட்டில் ஏறியதென்பது காலனிய விஷ வித்து – திக, காங்கிரஸ் என நீரூற்றி வேலியிட்டு உரமிட்டு வளர்க்கப்பட்ட விஷத் தோட்டத்தின் விரிவாக்கமாகவே நடந்தேறியிருக்கிறது.
இந்த முள் மரத்தின் கனியை எந்தப் பறவையும் தின்று பரப்புவதில்லை என்றாலும், இது வெட்டப்படாவிட்டாலோ தீவைத்து எரிக்கப்படாவிட்டாலோ எப்படியோ எல்லா இடங்களிலும் படர்ந்து தொலைத்துவிடும் வலிமையும் தந்திரமும் மிகுந்தவை.
எப்படிப் பகுத்தறிந்து பார்த்தாலும் புரிந்துகொள்ள முடியாத இந்த மூட நம்பிக்கைப் பரவலை அதாவது, ’நம் மரபு பிழையானது; காலனிய நவீனத்துவம் உயர்வானது’ என்ற மூட நம்பிக்கையானது பக்தி மரபில் வந்த பாரம்பரியத்தினருக்கு பழகிய உணர்வாகவே இருந்திருக்கிறது. தெய்வத்தைத் தொழுது பழகியவர்கள் சாத்தானையும் தொழப் பழகுவதுபோல் ஆகிவிட்டது. அவர்களுக்கு பக்தியும் விசுவாசமும் பழகிப் போன ஒன்று. யாரேனும் ஒரு அர்ச்சகர் ஞான தீபம் ஏற்றி, கும்பிட வேண்டிய தெய்வம் எது என்று நல்வழிப்படுத்தாவிட்டால் எளிய பக்தர் கூட்டம், மண்டியிடச் சொல்பவர் முன்னால் எல்லாம் மண்டியிட்டு நிற்கும்.
பக்தியும் விசுவாசமும் அதனளவிலேயே நல்ல குணங்களல்ல; எந்த தெய்வத்தின் மீது பக்தி; எந்த தர்மத்துக்கு விசுவாசம் என்பதுதான் முக்கியம்.
இந்து சமூகம் தமிழகத்தில் தோற்றுப்போயிருக்கும் விஷயம் இது.
நவீன தொழில்கள், வேலைகள், வசதி வாய்ப்புகள், கட்டமைப்புகள், நிர்வாக மாற்றங்கள், சமூக மாற்றங்கள் எல்லாமே வரவேற்கப்படவேண்டியவையே. ஆனால் மரபான வாழ்க்கையை இழிவுபடுத்தியும் கைவிட்டும்தான் அடையவேண்டியவையா?
நிச்சயமாக இல்லை.
ஆனால் தமிழ் இந்து சமூகம் அப்படித்தான் செய்துவருகிறது.
இந்த மனநிலைப் பிறழ்வு சரி செய்யப்படாமல், தமிழக இந்துக்களுக்கு எந்தப் பொருளாதார, அரசியல் செல்வாக்கு கிடைத்தாலும் அது எந்த நன்மையையும் தராது.
சுருக்கமாகச் சொல்வதென்றால், ‘திராவிட இயக்கம் தமிழகத்துக்கு நன்மையே செய்திருக்கிறது. திராவிட பிளஸ் தான் தமிழகத்துக்கான அரசியல் வியூகம்’ என்று யார் நினைத்தாலும் எந்த சக்தி இதை முன்னெடுத்தாலும், அவர்களால் தமிழகத்தில் வெற்றி பெறவும் முடியாது. வெற்றி பெறவும் தேவையில்லை.
இதற்கான இரண்டு காரணங்கள் : திராவிட இயக்கத்தை ஆக்கபூர்வ சக்தியாகப் பார்ப்பவர்களின் சிந்தனையை என்ன செய்தாலும் மாற்ற முடியாது. அது நாய் வாலை நிமிர்த்த முயற்சி செய்வதைவிட முட்டாள்த்தனமானது. முடியவே முடியாத காரியம்.
இரண்டாவதாக, இந்த இயக்கத்தை அழிவு சக்தியாகப் பார்ப்பவர்கள் மத்தியிலும் திராவிட பிளஸ் என்று சொல்லிக்கொண்டு வருபவர்களுக்கு நிச்சயம் ஆதரவு கிடைக்காது. நாயகன் என்றால் வில்லனை அடிக்க வேண்டும்; வில்லனுடைய நண்பனாக இருந்தபடியே வில்லனை வீழ்த்துவேன் என்று சொன்னால் மக்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
பாஜக நிச்சயமாக திமுகவையும் திராவிட கட்சிகளையும்விட இந்திய தேசியம், இந்து மறுமலர்ச்சி ஆகியவற்றில் அக்கறை காட்டத்தான் செய்கிறது. ஆனால், அதை மேலோட்டமாகவே செய்துவருகிறது.
உதாரணமாக பிரதமர் கோயில் கோயிலாக ஏறி இறங்குகிறார். ஆனால், அற நிலையத் துறையின் பிடியில் இருக்கும் கோவில்களை விடுவிக்க எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அந்தத் துறையின் இருப்பும் செயல்பாடுகளும் எல்லாமும், இந்திய அரசியல் சாசனத்துக்கும் அது வகுத்திருக்கும் சட்ட திட்டங்களுக்கும் முற்றிலும் எதிரானவை.
பிரதமர் இந்து தர்மத்தின் புனித நூலான பகவத் கீதையைவிட அரசியல் சாசனத்தையே பெரிதாக மதிப்பதாகச் சொல்கிறார். அப்படியென்றால் அவர் முதலில் தமிழக அற நிலையத் துறையை முடக்க வேண்டும். அதற்கு முன் அதில் நடந்திருக்கும் அத்தனைவகை ஊழல்களையும் அம்பலப்படுத்தவேண்டும்.
இதைச் செய்ய ஒரு கட்சி முன்னுக்கு வந்தால் அதாவது அறநிலையத் துறையில் இருந்து போலி திராவிட சக்திகளை அகற்றினால் அவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? அத்தனை கோயில்களிலும் ஜாதிய மோதலைத் திட்டமிட்டு அரங்கேற்றுவார்கள். ஏற்கெனவே ‘ஆலயங்களில் நிலவும் சமூக அநீதியை அகற்றத்தான் அரசு ஆலயங்களைக் கையகப்படுத்தியிருப்பதாக’ ஒரு கட்டுக்கதையை வரலாறாகவே எழுதி வைத்திருக்கிறார்கள். ஆக அதை மீண்டும் அரங்கேற்றுவார்கள். ஆக தீய சக்தியை எதிர்க்கத் தொடங்கினால் அது மேலும் தீய சக்தியாக ஆகும்.
இதுதான் இந்துக்களின் பெரிய பிரச்னை. அதாவது, ஆலயங்களை இந்த நாற்பது திருடர்களும் (எவ்வளவு பொருந்திவருகிறது பாருங்கள்) கொள்ளையடிக்க அனுமதிக்க வேண்டும். அவர்களை எதிர்த்தால் ஆலயங்களை கலவர பூமியாக ஆக்குவார்கள்.
ஆக, முன்னால் போனால் கடிக்கும். பின்னால் போனால் உதைக்கும். இப்படியான கழுதையை குதிரை என்று மதித்துப் போற்றுவதே இந்துக்கள் முன்னால் இருக்கும் ஒரே வழியாக இருக்கிறது. காலனிய சிந்தனையின் நீட்சியான திராவிட இயக்கம் என்பது குதிரை அல்ல. கழுதை என்பதை நாம் முதலில் புரிந்துகொண்டாக வேண்டும். அதற்கான மாற்று என்பது நிஜக் குதிரையைக் கொண்டுவந்து நிறுத்துவதுதான். முடிந்தால் இதைக் கட்டிப் போடு என்று சவால் விடவேண்டும்.
‘திராவிட பிளஸ் அல்ல; இந்து மறுமலர்ச்சியே நம் கொள்கை’ என்று முழங்க வேண்டும்.
இதில் இருக்கும் இன்னொரு பெரிய பிரச்னை, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், தலித் கட்சிகள் என திராவிட இயக்கத்தை வீழ்த்தியாக வேண்டிய சக்திகள் எல்லாமுமே இந்து எதிர்ப்பு மனநிலையில் மூழ்கிக் கிடக்கின்றன. அறிவுஜீவித் தளத்திலும் எளிய மக்கள் அளவிலும் இந்த நேச சக்திகள் அனைத்துமே இந்து விரோத, இந்திய விரோத மனநிலையில் இருக்கின்றன. திராவிட இயக்கம் திராவிடக் கட்சிகளை மட்டுமல்ல; அதன் எதிரிகளையுமே மயக்கி முடக்கிப் போட்டிருக்கிறது. எனவே ஒரு இந்து, எதிரிகளை மட்டுமல்ல; நேசப் படைகளையுமே எதிர்த்தாக வேண்டியிருக்கிறது. ஏற்கெனவே இந்து சக்தி பல மைய அதிகாரங்களைக் கொண்டது. தன்னளவிலேயே அது பிரிந்து நிற்கும் குணம் கொண்டது. அதை இணைக்கும் சரடாக ஒரு தர்மம் இருந்தாக வேண்டும். அது பலப்பட்டால்தான் இந்து சக்திகளின் பலம் ஓரிடத்தில் குவியும். அது நடந்தால்தான் நேச சக்திகள் நம் பக்கம் திரும்பும். அதன் பின்பே எதிரியை வீழ்த்த முடியும்.
ஆக இந்துக்களுக்கு முதலில் தம் மரபின் மீதான நம்பிக்கையும் மதிப்பும் மீண்டுவர வேண்டும். அந்த ஆதார மாற்றம் நிகழாமல் எது நடந்தாலும் எந்தப் பலனும் இல்லை.
இந்துக்கள் ஓரணியில் திரள வேண்டுமென்றால் முதல் கட்டமாக காலனிய அடிமை அடையாளங்களை அப்புறப்படுத்த முன்வர வேண்டும். இது பாதுகாப்பான எதிரியை எதிர்க்கும் ராஜ தந்திரம்.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், தலித் அமைப்புகள், இஸ்லாமிய அமைப்புகள் அனைவருமே பிரிட்டிஷ் அடையாளங்களை எதிர்ப்பவர்களே. ஓர் இந்து, இந்து சீர்திருத்தம் என்று நமக்குள்ளான விஷயங்களிலேயே அல்லது நம் நேச சக்திகளுடன் முரண்படும் விஷயங்களிலேயே கவனம் செலுத்திவந்தால், இந்துக்களிலும் ஒற்றுமை வராது; நேச சக்திகளிடமும் ஒருங்கிணைப்பு வராது. உண்மையில் அப்படியான ஒன்று உருவாகிவிடக் கூடாதென்றுதான் காலனிய அடிமைகள் மிகத் தெளிவாக அந்தப் பக்கம் நம் கவனம் திரும்பவிடாமல் தடுக்கிறான்.
ஆக, அவன் எதை மறைக்கிறானோ, அதைப் பாதுகாக்க நினைக்கிறானோ, அங்குதான் நம் முதல் தாக்குதல் நடந்தாக வேண்டும். நாமும் அதையே மறைக்கவும் பாதுகாக்கவும் விரும்புபவராக இருந்தால் நமக்கான மீட்சி கானல் நீராகவே இருக்கும். நமது வெற்றி என்பது ஆகச் சிறந்த அடிமையாக ஆவதாகவே ஆகிவிடும்.
தமிழகத்தில் இருக்கும் பிரிட்டிஷ் அடையாளங்கள், மதிப்பீடுகள், சிந்தனைகள் அனைத்தையும் அகற்றுவோம் என்பதே ஒரே, முதல் இலக்காக இருக்க வேண்டும்.
தேவை இன்னொரு சுதந்தரப் போர்.
பிரிட்டிஷாரை விரட்டியது போதாது; காலனிய அடிமைத்தனத்தை விரட்ட வேண்டும்.
உடம்பால் பாரதவாசி/இந்தியர்; சிந்தனையால் இந்து.
$$$