கொன்றைவேந்தன் (16-20)

-பத்மன்

கொன்றைவேந்தன் – மூலம்

கொன்றைவேந்தன் (11-15)

கொன்றைவேந்தன்- 16

கிட்டாதாயின் வெட்டென மற 


விளக்கம்:

ஒரு பொருள் அல்லது விஷயம் நமக்குக் கிடைக்காது என்ற பட்சத்தில் அதனை உடனடியாக அப்படியே மறந்துபோய் விட வேண்டும் என்கிறார் ஔவையார்.

இது மிகப்பெரிய மனோதத்துவ அறிவுரை. நமக்கு அது கிடைக்கவில்லையே என்ற நினைப்பு ஏக்கமாகி, அதுவே தன்னிரக்கமாக மாறி, நமது தன்னம்பிக்கையையே சிதைத்துவிடும். வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நம்மை நகரவிடாமல் முடக்கும். ஆகையால், கிடைக்காது என உறுதியான ஒன்றில் மனத்தைப் போட்டு அலட்டிக்கொள்ளாமல் இதுவும் கடந்துபோகும் என அடுத்த விஷயங்களில் மனத்தைச் செலுத்த வேண்டும். அதற்கு, கிட்டாத ஒன்றை நம் மனத்தில் இருந்து ஒரேவெட்டாக வெட்டி வீழ்த்தியெறிந்து விட வேண்டும்.

இது,

‘அருமை உடைத்தென்று அசவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்’

-என்ற திருக்குறளுக்கு (குறள்- 611) முரணாக இருக்கிறதே எனக் கருத வேண்டாம். எந்தவொரு விஷயத்திலும் வெற்றி பெற சோம்பல் இல்லாத முயற்சி அவசியம். அதையே இக்குறள் வலியுறுத்துகிறது. ஆயினும், கடும் முயற்சிகளுக்குப் பிறகும் ஏதோ ஒரு காரணத்தால் இது நமக்கு இல்லை எனப் புலப்பட்ட ஒரு விஷயத்தில் வீணே கிடந்து உழலுவதில் என்ன பயன்? அதை மறந்துவிட்டு உற்சாகமாக வேறு முயற்சிகளில் இறங்கவேண்டியது தான். அதைத்தான் ஔவையார் அறிவுறுத்துகிறார்.

இதையே வேறுவகையில் ’கர்மண்யே அதிகாரஸ்ச நபலந்தேஸு பார்த்திப:’ என்று பகவத்கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசித்துள்ளார். “பார்த்திபனே, உனது செயல்பாட்டில்தான் உனக்கு அதிகாரம் உள்ளது; அதனுடைய பலன்கள் பல்வேறு காரணங்களால் மாறுபடும் என்பதால் பலனைப்பற்றி அலட்டிக் கொள்ளாமல் செயல்படு” என்கிறார். நமது செயல்பாட்டுக்கு நாம் நினைக்கும் பலன் கிடைக்கவில்லை எனில், எல்லாம் ஈசன் செயல் என நினைத்து அடுத்த முயற்சிகளில் இறங்கு என்பது தானே இதன் பொருள்?

செயலாற்றும் போது பலனையே கருத்தில் கொண்டிருந்தாலும் நமது கவனம் சிதறும், நடந்த செயலுக்கு உரிய பலன் கிடைக்கவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தாலும் நம் கவனம் சிதறுவதோடு செயல்திறனும் மழுங்கும்.

ஆகையால்தான் கிடைக்காத ஒன்றை வெடுக்கென மறந்துபோவதே மனத்துக்கு மாமருந்து என மொழிகிறார் ஔவையார்.

$$$

கொன்றைவேந்தன்- 17

கீழோராயினும் தாழ உரை


விளக்கம்: 

ஒருவர் நம்மைவிட ஏதேனும் ஒருவகையில் கீழ்நிலையில் இருப்பவர் என்ற போதிலும் அவர் போன்றோரிடமும் மென்மையாகப் பேசு என்கிறார் ஔவையார்.

கல்வி, செல்வம், பதவி, தகுதி, சமூகநிலை போன்ற பல்வேறு காரணங்களால் நம்மைவிடப் பிறர் கீழ்நிலையில் இருந்தபோதிலும் கூட, அத்தகையோரிடமும் நாம் நல்லதன்மையாகப் பேச வேண்டும். நாம் உயர்ந்தோர் என்ற ஆணவப்பேச்சு கூடாது. உத்தரவிடும் எஜமானராக இருந்தாலும் காட்டுக்கத்தல் வேண்டாமே! கறாராகப் பேசினாலும் குரூரமாகப் பேச வேண்டாமே!

கர்வத்தை தலைக்கு ஏற்றிக் கொள்ளாமல் சகமனிதர் என்ற பண்போடு பேசுதல் நலம்தானே! நாவடக்கத்துடன் பேசுதல் மிகச் சிறந்த காப்பு அல்லவா?

ஆகையால்தான் கீழோராயினும் தாழ உரை என்கிறார் ஔவையார்.

‘பணியுமாம் என்றும் பெருமை’ என திருவள்ளுவர் கூறியிருப்பதையும் ஒப்புநோக்க வேண்டும். எனவே பேச்சில் கடுமையும் கசப்புமின்றி, இனிமையும் தண்மையும் எப்போதும் வேண்டும்.

$$$

கொன்றைவேந்தன்- 18

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை 


விளக்கம்: 

பிறரது குற்றங்களையே பெரிதுபடுத்திப் பார்த்துக் கொண்டிருந்தால் சுற்றத்தார் என நமக்கு யாருமே இருக்க மாட்டார்கள் என எச்சரிக்கிறார் ஔவையார்.

இங்கே குற்றம் என்பது குறையைக் குறிக்கிறது. கடுகளவுகூட குறைஇல்லாதவர் என உலகிலே யாருமே இருக்க முடியாது. ஒருகோணத்தில் நிறையாகவோ, சரியாகவோ படுவதுகூட மறுகோணத்தில் குறையாகத் தெரியும். நிறைகுறைகளை அலசுவது முறையானது. ஆயினும் குறைகளை மட்டுமே நோண்டி, நுணுகிப் பார்த்துக் கொண்டிருப்பது முறையன்று. அப்படிப் பார்க்கத் தொடங்கினால் எல்லோருமே குற்றவாளிகளாகத் தென்படுவார்கள். அந்த நினைப்போடு பழகுவோரை யாரும் நெருங்கத் தயங்குவார்கள். அத்தகையோருக்கு நட்பு, சுற்றம் என எதுவும் அமையாது. இருக்கின்ற உறவும் ஏனோதானோ என இருக்கும்.

‘குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்’

-என்றுதான் வள்ளுவப் பெருந்தகை (குறள்- 504) கூறியிருக்கிறார். குற்றத்தை மட்டுமே காண் என்று கூறவில்லை.

குற்றத்தை மட்டுமே காண்போர் காலப்போக்கில் அனைவரின் கண்களுக்கும் குற்றவாளியாகவே தென்படுவர். இவரது கண்களுக்கும் அனைவரும் குற்றவாளிகளாகவே தோன்றுவார்கள். இதனால் பரஸ்பர அன்பு, நம்பிக்கை சிதையும். பின்னர் எப்படி அவர்களுக்கு சுற்றம் அமையப் பெறும்?

குற்றத்தை மட்டுமே காண்பது ஒருவித மனோவியாதி. குரங்கு கையிலே புண்வந்தால் ஆறட்டும் என விடாமல் நோண்டி நோண்டிப் பெரிதாக்கி நோகும். அதேபோல குற்றம்காணும் மனப்பான்மை சிறியதைப் பெரிதாக்கி நம்மையும் பிறரையும் ரணப்படுத்தும்.

ஆகையால்தான் குற்றத்தை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தால் சுற்றமின்றித் தவிக்க நேரிடும் என்கிறார் ஔவையார்.

$$$

கொன்றைவேந்தன்- 19

கூரம்பு ஆயினும் வீரியம் பேசேல் 


விளக்கம்:

ஆயுதபலம் இருக்கின்ற போதிலும் ஆணவப் பேச்சு பேசாதே, அழிவைத் தேடிக் கொள்ளாதே என்று அறிவுறுத்துகிறார் ஔவையார்.

அம்பின் கூர்மை பற்றிய ஆணவப்பேச்சு வீண்வம்பை வரவழைத்து அழிவுக்கு வழிவகுக்கும் என்கிறார்.

இன்றைய சில வல்லரசுகளுக்கும் ஆயுதபலத்தால் அச்சுறுத்த நினைக்கும் வேறு சில அரசுகளுக்கும் தீவிரவாத அமைப்புகளுக்கும் மிகப் பொருத்தமான எச்சரிக்கை இது.

அதேநேரத்தில் சாதாரண மக்கள் வாழ்விலே இதைப் பொருத்திப் பார்த்தால், ஒருவர் எவ்வளவுதான் பலசாலியாக இருந்தாலும், பணிவின்றி அகந்தையாகப் பேசக் கூடாது என்கிறார் ஔவையார்.

‘காரியம் பெரிதா, வீரியம் பெரிதா எனில் காரியமே பெரிது’ என கிராமப்புறங்களில் ஒரு சொல்வழக்குஉண்டு. ஒருவரிடம் என்னதான் பலம், திறமை, அறிவு, செல்வாக்கு உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தாலும் அவற்றின் சக்தி குறித்து வீண்ஜம்பப் பேச்சு பேசுதல் கூடாது. இந்த அலட்டல் ஆணவப்பேச்சு தேவையின்றி பல எதிரிகளை உருவாக்கி அவரது செயலைச் சிதைத்துவிடும். கர்வத்தைத் தலைக்கு ஏறவிட்டால் தலைக்கனத்தால் அறிவு தடுமாறி, நாமே அழிவைத் தேடிக் கொள்வோம்.

பல்வேறு சக்திவாய்ந்த அரக்கர்களும் வரலாற்று நாயகர்களும் தங்கள் ஆணவத்தாலேயே அழிய நேர்ந்ததை புராணங்களிலும் வரலாற்று நூல்களிலும் படித்திருப்போம்.

அதனால்தான் எத்தனை வலிமை இருந்தாலும் கர்வம் கொள்ளாதே என்கிறார் ஔவையார்.

$$$

கொன்றைவேந்தன்- 20

கெடுவது செய்யின் விடுவது கருமம்


விளக்கம்:

யாராவது ஒருவர் நமக்கு கெடுதல் செய்தால் அதை மன்னித்து விட்டுவிடுதல் நற்செயல் என்று பொதுவாக இதற்குப் பொருள் கொள்ளப்படுகிறது.

ஆனால் அதிமேதையான ஔவையார் மிக நுட்பமாக இந்தப் பாடலைப் பாடியுள்ளார். பல கோணத்தில் ஆராய்ந்து பார்க்க வேண்டிய கருத்து இது.

வேறு பொருள்களையும் இப்போது பார்ப்போம்.

நாம் கெடுதலான, அதாவது தீயசெயல் ஒன்றைச் செய்ய நேர்ந்தால், நல்வினையாற்றும் அறக்கடமையில் இருந்து விட்டுவிலகிப் போக நேரிடும்.

இதையே முரணாகப் பார்த்தால், நாம் அறிந்தும் அறியாமலும் ஏதேனும் தவறு செய்ய நேர்ந்தால், அதையே மனத்துக்குள் அழுத்தும் பாரமாக வைத்துக் கொண்டிராமல், அதற்குரிய பிராயச்சித்தங்களைச் செய்துவிட்டு, போகட்டும் கருமம் என்று விட்டுவிட வேண்டும். இந்தப் பிழைநீக்கச் செயல்களில் தண்டனையை உவந்து ஏற்றலும் அடங்கும். இதனால் மனம் சீரடைகிறது.

வேறுவகையில் பார்த்தால், நமக்குத் தெரிந்தவர்கள் கெடுதி செய்பவர்களாக இருந்தால் அவர்கள் தொடர்பைக் கைவிடுதல் சிறந்த செயலாகும்.

நமது நாட்டுக்கோ சமுதாயத்துக்கோ பகைவர் கெடுதி செய்தால் அவர்களை அழித்துவிடுதல் சிறந்த நற்செயலாகும்.

இப்படி நுணுகிப் பார்த்தால் பல்வேறு உள்ளர்த்தங்கள் பொதிந்தவகையில் கெடுவது செய்யின் விடுவது கருமம் என மொழிந்துள்ளார் ஔவையார்.

$$$

2 thoughts on “கொன்றைவேந்தன் (16-20)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s