-உ.வே.சாமிநாதையர்

இரண்டாம் பாகம்
கணபதி துணை
1. என்னை ஏற்றுக்கொண்டது
எனது இளமைக் கல்வி
என்னுடைய இளமைக் காலந்தொடங்கி எனக்குத் தமிழ் படிக்க வேண்டுமென்ற விருப்பமே மிகுதியாக இருந்து வந்தது. என் தந்தையாரே எனக்கு முதலில் தமிழாசிரியராக இருந்து நிகண்டு, சதகம் முதலிய கருவி நூல்களைக் கற்பித்து வந்தனர்.
பின்பு அரியிலூர்ச் சடகோபையங்கார் முதலிய சில வித்துவான்களிடத்திற் கற்றுக்கொள்ளவுஞ் செய்வித்தனர். சில தமிழ்ப் பிரபந்தங்களையும் இலக்கணங்களையும் நான் அந்த வித்துவான்கள்பால் முறையே கற்றுக்கொண்டேன். பின்பு செங்கணமென்னும் ஊரிலிருந்த விருத்தாசல ரெட்டியாரென்ற கனவானிடம் பாடங்கேட்கத் தொடங்கினேன். அவர் பல நூல்களிலிருந்து அநேக விஷயங்களை அப்பொழுதப்பொழுது சொல்லிவந்தார். அதனால் நான் தமிழ்நூல்களின் பரப்பை அறிந்துகொண்டதன்றி மேலும் மேலும் பல நூல்களிற் பயில வேண்டுமென்னும் விருப்பத்தை அதிகமாகக் கொண்டேன்.
அதனைக் கண்ட அவர், “என்னாற் சொல்லக்கூடிய நூல்களையெல்லாம் நான் சொல்லிவிட்டேன். இனி என்னாற் பாடஞ்சொல்ல இயலாது; திருவாவடுதுறை யாதீன வித்துவானாக விளங்கிவரும் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடம் உங்கள் குமாரரை அழைத்துச் சென்றால் பல தமிழ் நூல்களை நன்றாகக் கற்று விருத்தியடைதற்கு அனுகூலமாகும்” என்று என் தகப்பனாரிடம் அடிக்கடி சொல்லி வந்தார். முன்பே பிள்ளையவர்களைப்பற்றிப் பலர் வாயிலாகக் கேள்வியுற்று, ‘அப் புலவர்பிரானிடம் படிக்குங்காலம் எப்போது கிட்டுமோ!’ என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த என்னுடைய விருப்பத்தை முற்றுவித்தற்கு அவர் சொல்லிய வார்த்தை மிகவும் உபயோகமாக இருந்தது. என் பிதாவும் அவ்வாறே செய்விக்கவேண்டுமென்று எண்ணி அதற்குரிய முயற்சியுடனிருந்தார். அப்போது எனக்குப் பிராயம் 17.
நான் பிள்ளையவர்களைக் கண்டது
இறைவன் திருவருள் கூட்டினமையால் என் தந்தையாரின் முயற்சியும் எனது விருப்பமும் பயன்பெறும் காலம் வந்து வாய்த்தது. பிரஜோற்பத்தி வருஷம் சித்திரை மாதமுதலில் (1871 ஏப்ரலில்) என்னை உடனழைத்துக்கொண்டு தந்தையார் மாயூரம் சென்று நல்ல நாளொன்றன் பிற்பகலில் பிள்ளையவர்களுடைய வீட்டிற்குப் போனார். அப்பொழுது அவ்வீட்டின் முதற் கட்டில் குற்றாலம் (திருத்துருத்தி) தியாகராச முதலியாரென்பவரும் சிவசின்னந் தரித்த வேறொருவரும் இருந்தார்கள்.
சிவசின்னந்தரித்துக் கொண்டிருந்தவரையே பிள்ளையவர்களாக என் தந்தையார் பாவித்து, “இவர்கள்தாம் மகாவித்துவான் பிள்ளையவர்களோ?” என்று அம்முதலியாரை மெல்ல வினாவினார். முதலியார், “அல்ல; இவர்கள் திருவாவடுதுறை மகாலிங்கம் பிள்ளையவர்கள்” என்றார். மகாலிங்கமென்ற சப்தத்தைக் கேட்டவுடன் என் தந்தையார் மகிழ்ச்சியுற்று, ‘நாம் வந்த காரியம் நிறைவேறுவதற்குரிய நற்சகுனமாகுமிது’ என்று நினைத்தனர். அப்பால், “மகாவித்துவான் பிள்ளையவர்கள் எங்கே இருக்கிறார்கள்?” என்று முதலியாரைக் கேட்கவே அவர், “இந்த வீட்டின் பின்புறத்திலுள்ள தோட்டத்தில் வேலை நடப்பதால் அதைக் கவனித்துக்கொண்டு அங்கே இருக்கிறார்கள்” என்று விடையளித்தார். உடனே தந்தையார் மகாலிங்கம் பிள்ளையைப் பார்த்து, “திருவாவடுதுறைக் கந்தசாமிக் கவிராயரை உங்களுக்குத் தெரியுமா? அவர் செளக்கியமாக இருக்கிறாரா?” என்று கேட்டனர். “அவரை நான் நன்றாக அறிவேன்… சில தினங்களுக்கு முன்புதான் அவர் சிவபதம் அடைந்தார்” என்று அவர் சொன்னார். கவிராயர் தம்முடைய நண்பராதலாலும் அவரிடமாவது சிலகாலம் என்னை வைத்துப் படிப்பிக்க வேண்டுமென்று முன்னம் எண்ணியிருந்தமையாலும் என் தந்தையாருக்கு அவர் இறந்த செய்தியைக் கேட்டபோது மிக்க வருத்தமுண்டாயிற்று. சிறிது நேரம் மௌனமாக இருந்துவிட்டுப் பின்பு அவருடைய குண விசேடத்தைப் பற்றிப் பாராட்டி இருவரும் பேசிக்கொண்டே இருந்தார்கள். அப்பொழுது அங்கே பிள்ளையவர்களுடைய தவசிப் பிள்ளை ஒருவர் வரவே அவரைப் பார்த்து என் தந்தையார், “எங்களுடைய வரவைப் பிள்ளையவர்களுக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்டுக்கொண்டனர். அவர் சென்று தெரிவித்தவுடன் பிள்ளையவர்கள் நாங்கள் இருந்த இடத்துக்கு வந்தார்கள்.
நெடுநாளாக இப் புலவர் பெருமானைக் காண வேண்டுமென்ற ஆவல் மிகுதியாக இருந்து வந்தமையால் இவரைக் கண்டவுடன் என்னையறியாமலே ஒருவகை மகிழ்ச்சியும் அன்புணர்ச்சியும் உண்டாயின. இவருடைய தோற்றப் பொலிவும் முகமலர்ச்சியும் என்னுள்ளத்தைக் கவர்ந்தன. ‘இவரைப் பார்த்தல் கூடுமோ கூடாதோ!’ என்று ஏங்கியிருந்த எனக்கு அந்தச் சமயத்தில் உண்டான இன்பத்திற்கு எல்லையில்லை. இவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். தந்தையாரும் மகிழ்ச்சியுற்றனர்.
வந்த புலவர்பிரான் நின்றுகொண்டிருந்த எங்களையும் பிறரையும் இருக்கச் செய்து விட்டுத் தாமும் இருந்து எங்களைப் பார்த்து, “நீங்கள் யார்? வந்த காரியம் என்ன?” என்று அன்புடன் விசாரித்தனர். என் பிதா, “நாங்கள் இருப்பது பாபநாசத்தைச் சார்ந்த உத்தமதானபுரமென்பது; தங்களிடத்தில் தான் வந்தோம். இவன் என்னுடைய குமாரன்; என்னிடம் முதலில் சில காலம் ஸங்கீதத்தை, அப்பியசித்து வந்தான். அப்பால் நிகண்டு, சதகம் முதலியவற்றைக் கற்று வந்தான். தமிழ்ப் பாஷையிலேயே மிக்க பிரீதியுள்ளவனாக இருக்கிறான்; சில நூல்களை வித்துவான்கள் சிலரிடமிருந்து முறையே பாடங் கேட்டிருக்கிறான்; அந்த வித்துவான்களுக்கும் எனக்கும் தங்களிடத்திலேயே இவனைச் சேர்ப்பித்துப் படிப்பிக்க வேண்டுமென்ற விருப்பம் மிகுதியாக இருக்கிறது. இவனுக்கும் அப்படியே இருந்து வருகிறது. ஸம்ஸ்கிருதம், இங்கிலீஷ் முதலிய பாஷைகளில் இவனுக்குச் சிறிதும் மனம் செல்லவில்லை. ஆதலால் இவனுடைய விருப்பத்தையும் என்னுடைய ஆவலையும் தயை செய்து தாங்களே தணிக்க வேண்டும். எப்பொழுதும் இவன் தங்கள் ஞாபகமாகவே இருந்து வருகிறான். தங்களிடம் இவனைக்கொண்டு வந்து சேர்ப்பித்தலையன்றி நான் செய்யக் கூடியது வேறொன்றும் இல்லை. தங்கள் சமுகத்திற் சேர்ப்பித்தமையால் இவன் விஷயமாக இருந்த என்னுடைய கவலை அடியோடு நீங்கிவிட்டது. இப்படி நேர்ந்ததற்குக் காரணம் *1 ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசருடைய திருவருளே. இவனைத் தயை செய்து அங்கீகரிக்கும்படி கேட்டுக்கொள்ளுகிறேன்” என்றார்.
இவர் என் தந்தையாரைப் பார்த்து, “உங்கள் பெயரென்ன?” என்று கேட்டார். அவர், “வேங்கடஸுப்பன் என்று சொல்வார்கள்” என்றார். உடனே இவர் உடனிருப்பவர்களை நோக்கி, “இப்பெயர் திருவேங்கடமலையில் முருகக் கடவுள் எழுந்தருளியிருத்தலையும் அது முருகக் கடவுளுக்குரிய ஸ்தலங்களுள் ஒன்றென்பதையும் புலப்படுத்துகின்றதன்றோ? ஸுப்பனென்பது சுப்பிரமணியனென்பதன் மரூஉத்தானே” என்று சொன்னார்; அவர்களும் “ஆம்” என்றார்கள். நான், ‘சாதாரணமாகப் பேசும்பொழுதே இத்தகைய அருமையான விஷயம் இவர்கள் வாக்கிலிருந்து வருகிறதே. இனி இவர்களிடத்தில் நன்றாகப் பழகினால் எவ்வளவோ விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாமே’ என்று நினைத்தேன்.
அப்பால் என்னைப் பார்த்து, “முன்பு யார் யாரிடத்தில் என்ன என்ன நூல்களைப் பாடங் கேட்டிருக்கிறீர்?” என்று கேட்டார். “முதலில் தந்தையாரிடத்தும் சிறிய தகப்பனாரிடத்தும் சங்கீதத்தை முறையே கற்றுவந்தேன். அதனோடு சூடாமணி நிகண்டின் பன்னிரண்டு தொகுதியும், மணவாள நாராயண சதகமுதலிய சில சதகங்களும், இரத்தின சபாபதிமாலை முதலிய சில மாலைகளும், நன்னூல் மூலமும் மனனம் செய்து நாள்தோறும் முறையே தந்தையாரிடம் ஒப்பித்து வந்தேன். அப்பால் பாபநாசம் பிரதம பாடசாலையில் உபாத்தியாயராக இருந்த *2 இராகவைய ரென்பவரிடம் முதலில் மகாலிங்கைய ரிலக்கணமும் பின்பு நன்னூற் காண்டிகையுரையில் முதல் இரண்டு இயல்களும் கேட்டேன்; பின்பு *3 அரியிலூர் ஜமீன் பரம்பரை வித்துவானாகிய சடகோப ஐயங்காரென்பவரிடத்துத் திருவேங்கடமாலை முதலிய சில பிரபந்தங்களுக்குப் பொருள் கேட்டேன்; அவ்வூருக்கு வடபாலுள்ள *4 குன்றம் (குன்னம்) என்னுமூரிலுள்ள சிதம்பரம் பிள்ளை யென்பவரிடத்துத் திருவிளையாடற் புராணத்திலும் நைடதத்திலும் சிலசில படலங்களுக்குப் பொருளும், அவ்வூருக்கு அப்பாலதாகிய *5 கார்குடியென்னு மூரிலுள்ள கஸ்தூரி ஐயங்காரென்பவரிடம் நன்னூற் காண்டிகையுரையில் எஞ்சிய பாகமும், அவ்வூரிலுள்ள ஸாமி ஐயங்காரிடத்துக் கம்பராமாயணத்திற் சுந்தர காண்டத்திற்குப் பொருளும் கேட்டேன்; பெரும்புலியூரைச் சார்ந்த செங்கணமென்னும் ஊரிலுள்ள சின்னப் பண்ணையாராகிய விருத்தாசல ரெட்டியாரென்பவரிடம் காரிகை தண்டியலங்காரங்களின் உரையும் நவநீதப்பாட்டியல் முதலிய பொருத்த இலக்கணங்களும் வேறு சில நூல்களும் பாடங்கேட்டதுண்டு; ரெட்டியாராலேதான் எனக்குத் தமிழில் விருப்பம் அதிகமாயிற்று. அவரிடம் காரிகைப்பாடம் மிகச் செவ்வையாக நடந்தது; இடையிடையே சந்தித்த வித்துவான்களிடத்துச் சில பிரபந்தங்களிற் சில சில பாகங்களும் பல தனிப்பாடல்களும் பொருளுடன் கேட்டுச் சிந்தித்திருக்கிறேன்” என்றேன்.
பிறகு இவர் என் தகப்பனாரைப் பார்த்து, “இசையில் எந்த மட்டும் பயிற்சி பண்ணி வைத்திருக்கிறீர்கள்?” என்றார். அதற்குத் தந்தையார், “முறையாகவே இவன் கற்றிருக்கிறான்; அதன் அடிப்படைகள் எல்லாம் செவ்வையாக இவனுக்கு ஆகியிருக்கின்றன; ஸரளி வரிசை, அலங்காரம், கீதங்கள், வர்ணங்கள் ஆகிய இவைகளில் இவன் நல்ல பயிற்சியடைந்திருப்பதுடன் கனம் கிருஷ்ணையர் முதலிய ஸங்கீத வித்துவான்களிற் சிலரியற்றிய சில கீர்த்தனங்களும் இவனுக்குப் பாடமுண்டு” என்றார்.
பின்பு தந்தையாரை நோக்கி இவர், “நீங்கள் யாரிடத்தே இசையைக் கற்றுக்கொண்டீர்கள்?” என்று விசாரித்தார். அவர், “உடையார்பாளையம் ஸமஸ்தானத்தில் ஸங்கீத வித்துவானாக இருந்த கனம் கிருஷ்ணையரென்பவர் என்னுடைய அம்மான் பாட்டனார்; பன்னிரண்டு வருஷம் பணிவிடை செய்து கொண்டேயிருந்து அவரிடம் ஸங்கீதத்தை முறையே கற்றுக்கொண்டதன்றி அவரும் பிறரும் இயற்றிய சில கீர்த்தனங்களையும் பாடம் பண்ணிக் கொண்டேன்” என்றார். பின்பு இவர், “இவ்வூரிலுள்ள முடிகொண்டான் கோபாலகிருஷ்ண பாரதியாரை அறிவீர்களா?” என்று வினவவே என் தந்தையார், “அவர் எனக்கு முக்கியமான நண்பர் ” என்றார்.
என்னைப் பரீட்சித்தது
அப்பால் இவர் என்னைப் பார்த்து, “நைடதத்தில் ஏதேனும் ஒரு பாடலை இசையுடன் சொல்லும்” என்றார். அவ்வாறு கேட்டவுடன் இவர் முன் எவ்வாறு சொல்வது என்று முதலில் அஞ்சினேன். பின்பு ஒருவாறு துணிந்து அந்நூலிலுள்ள விநாயகர் காப்பை கல்யாணி ராகத்தில் மெல்லச் சொன்னேன். சொல்லிவிட்டு இவர் நான் சொல்வதை எவ்வாறு கேட்கிறாரென்று கவனித்தேன். இவருடைய முகத்தில் வெறுப்புக் குறிப்பில்லாமையால் எனக்குக் கொஞ்சம் தைரியம் பிறந்தது. அப்பொழுது இக்கவிஞர்பிரான் , “இன்னும் ஒரு பாடலை இசையுடன் சொல்லும்” எனவே, நான் அந்நூலின் சிறப்புப்பாயிரமாகிய “நிலவுபொழி தனிக்கவிகை” என்னும் செய்யுளை ஸாவேரி ராகத்தில் மிக்க விநயத்துடன் சொன்னேன். அந்த இரண்டு செய்யுட்களையும் மறுமுறை சொல்லச் செய்ததுடன் பொருள் சொல்லும்படியும் சொன்னார். சொல்லும்பொழுது நாக்குத் தழுதழுத்தது. அதனை யறிந்து இவர், “அதைரியம் வேண்டாம்; தைரியமாகச் சொல்லலாமே” என்று சொல்லி விட்டு, “நிகண்டு முதலியவற்றில் உள்ள செய்யுட்களை இப்பொழுது பாராமற் சொல்லக்கூடுமா?” என்று கேட்டார். “கூடும்” என்றேன். ஒரு பொருட் பல்பெயர்ச் செய்யுட்களிற் சிலவற்றையும் பலபொருளொருசொற் பாடல்களிற் சிலவற்றையும் குறிப்பிட்டுக் கேட்டார். மெல்லச் சொன்னேன். பின்பு இவர், “நிகண்டு முதலியவை பாடமாக இருப்பது நல்லதே. இக்காலத்தில் அவற்றை எங்கே நெட்டுருப் பண்ணுகிறார்கள்? அந்த வழக்கமே போய்விட்டது. படிக்கும்படி சொன்னாலும் கேட்கின்றார்களில்லை” என்றார்.
இங்ஙனம் சிலநேரம் அளவளாவிக் கொண்டிருந்த பின்பு தந்தையார், “எப்போது இவன் இங்கே பாடங்கேட்க வரலாம்?” என்று கேட்டார். அதற்கு இவர் சிறிது நேரம் வரையில் யாதொன்றும் சொல்லாமற் சும்மா இருந்தனர்; அப்பால், “படிப்பதற்கு அடிக்கடி சிலர் வந்துகொண்டேயிருக்கிறார்கள். முறையே படித்தும் வருகிறார்கள். குறிப்பறிந்து மிக்க வணக்கத்துடன் நடக்கிறார்கள். அவர்களுக்குப் பாடஞ்சொல்லி வருவதில் எனக்கும் திருப்தியாகவேயிருக்கிறது. ஆனாலும் சில மாதங்கள் இருந்து சிலவற்றைக் கேட்ட பின்பு அவர்களிற் சிலர் தாமே திருப்தியுற்று இங்கே இருப்பவர்களையும் கலைத்துவிட்டுத் திடீரென்று என்னுடைய அனுமதியின்றியே போய்விடுகிறார்கள். வேறு சிலர், ‘ஊர் போய்ச் சில தினங்களில் வருகிறோம்’ என்று சொல்லிவிட்டுப்போய் அப்பால் வாராமலே இருந்து விடுகிறார்கள். அங்ஙனம் போகிறவர்கள், என்னிடம் அநேக நூல்களைப் படித்ததாக வெளியே சொல்லிக்கொண்டு அங்கங்கேயிருந்து வருகிறார்கள். அதில் எனக்குச் சிறிதும் திருப்தியில்லை. சில வருஷங்களேனும் இருந்து முறையாகப் பல நூல்களைப் பாடங்கேட்டு நல்ல பயிற்சியைப் பெற்று அப்பாற் சென்றால் அவர்களுக்கும் எனக்கும் பயனுண்டு. குறைந்த நிலையிலும் நல்ல பயிற்சியையடைகிற காலத்திலும் பிரிந்து விடுகிறார்களேயென்ற வருத்தம் எனக்கு இடைவிடாமல் இருந்து வருகிறது. நூதனமாக வருபவர்களுக்கு ஆரம்பப்பாடம் முதலியவற்றை அடிக்கடி சொல்லி வருவதனால் எனக்கு மிக்க துன்பமுண்டாகிறதென்பதை நான் சொல்ல வேண்டுவதில்லை; ஆதலால், இவர் சில வருஷங்களாவது இருந்து படித்தால் எனக்குத் திருப்திகரமாக இருக்கும்; இவரும் நல்ல பயனை அடையலாம். சமீப காலத்தில் தருமபுர மடத்திலிருந்து வந்து சில மாதங்கள் படித்துக்கொண்டிருந்து எனக்கு உவப்பை விளைவித்து வந்த ஆறுமுகத் தம்பிரானென்பவர் நல்ல சமயத்தில் என்னிடம் சொல்லாமலே போய்விட்டார். அப்படியே பின்பு இராகவாசாரி யாரென்ற ஸ்ரீ வைஷ்ணவர் ஒருவர் சில வருஷம் படித்துக்கொண்டிருந்துவிட்டு நல்ல தருணத்திற் பிரிந்து போய்விட்டார். திரிசிர புரத்திலிருந்து நான் இந்தப் பக்கத்திற்கு வந்தபின்பு சீகாழி முதலிய இடங்களிற் சில காலம் படித்துக்கொண்டேயிருந்து விட்டுப் பிரிந்து சென்றவர்கள் பலர். பின்னும் சில வருஷம் இருந்து படித்துச் சென்றால் அவர்கள் நல்ல பயனை அடையலாமே யென்று நான் அவர்கள் ஞாபகமாகவே இருந்து வருகிறேன். படிக்கவருபவர்களால் அடிக்கடி இப்படிப்பட்ட துன்பம் நேருதலால் நூதனமாக வருபவர்களுக்குப் பாடம் சொல்லுவதில் எனக்கு ஊக்கம் உண்டாகிறதில்லை. வருபவர்களை யோசித்துத் தான் அங்கீகரிக்க வேண்டியிருக்கிறது” என்று சொன்னார்.
இவர் இவ்வாறு சொல்லி வருகையில் இவருடைய சொற்களிற் காணப்படும் அன்பின் தன்மை, ‘நம்மை ஏற்றுக் கொள்வார்’ என்ற நம்பிக்கையை எனக்கு உண்டாக்கினாலும் பிரிந்து போன மாணவர்களைப் பற்றிச் சொன்ன வார்த்தைகள், ‘நம்மை இவர் ஏற்றுக் கொள்வாரோ மாட்டாரோ’ என்ற சந்தேகத்தை எனக்கு விளைவித்தன.
என் தந்தையாரது வேண்டுகோள்
அப்பொழுது தந்தையார், “எவ்வளவு காலம் தாங்கள் படிப்பித்தாலும் ஜாக்கிரதையாக இருந்து பாடங்கேட்க இவன் ஸித்தனாக இருக்கிறான். தங்களுக்குத் தோற்றுகிறபடி எவ்வளவு காலம் வேண்டுமானாலும் வைத்திருந்து இவனைப் படிப்பிக்கலாம். அழைத்துச் செல்லலாமென்று தாங்கள் சொன்னபின்பே இவனை அழைத்துச் செல்வேன். இதிற் சிறிதும் சந்தேகம் கொள்ள வேண்டாம். இவனைத் தங்கள்பால் அடைக்கலப் பொருளாக ஒப்பித்து விட்டேன், இவனைப் பற்றி இனி ஒன்று சொல்வதற்கு எனக்கு உரிமையில்லை. இதற்குமுன் இவனுக்குப் பாடம் சொல்லிய ஆசிரியர்கள் எல்லோரும், ‘பிள்ளையவர்களிடம் சேர்ப்பித்தால் தான் இவனுடைய குறையும் ஆசையும் தீரும்; சீக்கிரத்தில் அவர்களிடம் கொண்டுபோய் விடுங்கள். இனிச் சும்மா வைத்திருத்தல் தருமமன்று’ என்று வற்புறுத்திச் சொன்னமையால்தான் இங்கே அழைத்து வந்தேன். இவ் விஷயத்திற் சிறிதும் ஆலோசனை பண்ண வேண்டாம்” என்று சொல்லிப் பின்னும் என்னை அங்கீகரித்துக்கொள்ளும்படி பலவிதமாகக் கேட்டுக் கொண்டார். அவரைப் பின்பற்றி நானும் விநயத்துடன் இயன்றவரையில் வேண்டிக்கொண்டேன்; எங்கள் கவலையை அறிந்து உடனிருந்தவர்களும் அங்கீகரிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள்.
மீ: ஆகாராதிகள் விஷயத்தில் இவருக்கு இவ்வூரில் ஏதேனும் செளகரியமான இடமுண்டா?
தந்தையார்: இல்லை; அதையும் தாங்களே கவனித்துக் கொள்ள வேண்டும். அங்ஙனம் செய்வித்தற்கு எனக்கு இப்பொழுது சௌகரியமில்லை.
மீ: திருவாவடுதுறை, பட்டீச்சுரம் முதலிய இடங்களிலே நான் இருப்பதாயிருந்தால் இவருக்கு என்னால் சௌகரியம் செய்வித்தல் கூடும். இவ்வூரில் மட்டும் அங்ஙனம் செய்வித்தற்கு இயலாது. நீங்களே அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். சைவராயிருந்தாலும் வேறு வகையினராக இருந்தாலும் என்னுடைய வீட்டிலேயே உணவளிக்கலாம். இவர் விஷயத்தில் அங்ஙனம் செய்வித்தற்கு இயலவில்லையேயென்று வருத்தமடைகிறேன்.
தந்தையார்: இவ்வூரில் இருக்கும் வரையில் ஆகாராதிகளுடைய செலவுகளுக்கு நானே எப்படியாவது முயன்று பணம் அனுப்பிவிடுகிறேன். எப்பொழுது இவன் இங்கே பாடங்கேட்க வரலாம்? தெரிவிக்க வேண்டுகிறேன்.
மீ: ஒரு நல்ல தினம் பார்த்துக்கொண்டு வந்தால் ஆரம்பிக்கலாம்.
இங்ஙனம் இவர் கூறியது எனக்கு மிக்க ஆறுதலை அளித்தது.
அடிக்குறிப்பு மேற்கோள்கள்:
1. மீனாட்சி சுந்தரேசரென்பது என் தந்தையாருடைய பூஜையில் எழுந்தருளியிருக்கும் சிவலிங்கப் பெருமானது திருநாமம்.
2. இவர் மதுரைக் காலேஜில் தமிழ்ப் பண்டிதராக இருந்து பிற்காலத்தில் ஸன்னியாசம் வாங்கிக்கொண்டார்; ஆந்திரர்.
3, 4, 5 இவ்வூர்கள் திருச்சிராப்பள்ளி ஜில்லாவிலுள்ளன.
$$$