தேவாரத் தலமா கருவையம்பதி?

-கருவாபுரிச் சிறுவன்

தென்தமிழகத்தில் புகழ் பெற்ற தலங்களிலும், இலக்கியத்தில் என்றும் நீங்கா இடம் பெற்ற தலங்களின் வரிசையில் அணி செய்யும் சங்கரன்கோவிலுக்கு அருகே உள்ளது கரிவலம் வந்த நல்லூர் என்ற  திருக்கருவையம்பதி.  இத் தலம் தேவார மூவரால் பாடல் பெற்ற தலமா  என்ற கேள்விக்கு தீர்க்கமான விடை தெரிய வேண்டும் என்றால், சில அடிப்படை வரலாற்றுச் செய்திகளைத் தெரிந்து கொள்வது அவசியம்.  

ஏத்திய மூவர் தமிழ்மாலை சாத்தும் இணையடிகென் 
நாத்தரும் புன்சொற்றொடை புனைவாய்செம்பொனாட்டிலைந்து 
காத்தரு நாண்மலர் சூடும் புரிசடைக்காட்டெருக்கம் 
பூத்தரு மாலை புனை களவீச புராந்தகனே!

                                 -வரதுங்க ராம பாண்டியர் 

திக்கெல்லாம் புகழுறும் தலம் திருநெல்வேலி. இத்தலத்தின் ஒரு பிரிவு இன்றைய தென்காசி மாவட்டம். இது பண்டைய காலத்தில் பாண்டிய மன்னர்களின் தலைநகராக விளங்கியுள்ளது. 

பொதுவாகவே, தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்கள் பாண்டி பதினான்கில் இந்த தென்பகுதியில் இடம் பெறுபவை: 1. திருநெல்வேலி. 2. திருக்குற்றாலம். 

தென்பகுதியில் இருக்கும் மற்ற ஏனைய தலங்கள் எல்லாம் தேவார மூவருக்குப் பின்னர் வந்த அருளாளர்கள் தரிசித்து பாடியருளிய தலங்களாகும். 

தென்தமிழகத்தில் புகழ் பெற்ற தலங்களிலும், இலக்கியத்தில் என்றும் நீங்கா இடம் பெற்ற தலங்களின் வரிசையில் அணி செய்யும் சங்கரன்கோவிலுக்கு அருகே உள்ளது கரிவலம் வந்த நல்லூர்.  இதன் புராண இலக்கிய  சிறப்புடைய பன்னிரு  பெயர்களில் ஒன்று  திருக்கருவையம்பதி. 

இத் தலம் தேவார மூவரால் பாடல் பெற்ற தலமா…. என்ற கேள்விக்கு தீர்க்கமான விடை தெரிய வேண்டும் என்றால்… சில அடிப்படை வரலாற்றுச் செய்திகளை தெரிந்து கொள்வது அவசியம்.  அப்போது தானாகவே வினாவிற்கான தெளிவு கிடைக்கும். 

திருமுறையின் சிறப்புகள்: 

தொட்டவரை திருவாக்கும் தன்மை கொண்டது ‛திருமுறைகள்’.  திருஞானசம்பந்த சுவாமிகளில் தொடங்கி தெய்வச் சேக்கிழார் வரையிலும் அருளிச் செய்யப்பட்ட நூற்தொகுதிகள் பன்னிரெண்டு.  இதன் ஆசிரியர்கள் மூவா முதலிகளோடு சேர்த்து இருபத்தி ஏழு பேர்.  இவற்ரில் முதல் ஏழு திருமுறைகள் தேவரமாகும்.

ஆலவாயண்ணலில் தொடங்கி அடிமட்டத்தொண்டர் வரையிலும் பாடிய பாடல்களின் தொகுப்புப் பெட்டகம் இது. சைவப்பெரியவர்களால் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்கள் 274 என வரையறுக்கப்பட்டு விட்டன. 

சென்ற நூற்றாண்டில் இரண்டு தேவாரப் பதிகங்களின் கல்வெட்டுகள் புதிதாகக் கிடைத்துள்ளன என தமிழறிஞர் பெருமக்களால் ஆதினங்களுக்கு விண்ணப்பம் செய்து அதையும் தேவாரப் பாடல் பெற்ற தலமாக ஏற்றியும் போற்றியுள்ளார்கள்.   

பல காலம் தொட்டே, தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களின் புனிதத்தன்மை அறிந்துணர்ந்த சிவநேயர்கள் பலரும் அவரவர்கள் ஆத்ம திருப்திக்காக, பாடல் பெற்ற தலங்களைத் தேடிச் சென்று தரிசனம் செய்கிறார்கள். நாடிச் சென்று திருப்பணியும் மேற்கொள்கிறார்கள். 

சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்பு,  பாடல் பெற்ற  தலங்களுக்கு திருப்பணி செய்வதை கௌரவமாகவும், பெரும் பேறாகவும்  கருதிய காலம் இருந்தது.  அப்போது கரிவலம் வந்த நல்லுார் திருத்தல திருப்பணி தொடர்பான இரு நிகழ்வுகளை அறிந்துணர்ந்து  கொள்வது நல்லது.  

தரிசிக்க ஆயத்தமாவோமா?

பனையூர் ஆண்டவர்களின் கொடிவழி  குரு சிஷ்ய பரம்பரையில் எழுந்தருளிய குன்றக்குடி மேலமடத்தலைவர் ஸ்ரீ கணபதி சுவாமிகளிடம் 1920 – 1925 ஆம் ஆண்டுகளில்  விட்டுப் போன பால்வண்ணநாதர் கோயில் கற்திருப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என ஊரார் விண்ணப்பித்தார்கள். 

திருவருள் சித்தமும் குருநாதரின் ஆணையும் ஒருங்கே அமைந்தது என்றெண்ணிய மேலமடத் தலைவர் பெரும் வணிகரான நாட்டுக்கோட்டை நகரத்தார்களைக் காண ஆயத்தமானார்கள். 

அவர்களோ,  தேவார மூவர் பாடல் செய்திருப்பின் அக்கோயிலுக்கு நாங்கள் விலாசமாக திருப்பணி செய்வோம் என சுவாமிகளிடம் பணிந்தும் சிரமேற்கொண்டும் நகரத்தார்களில் செல்வந்தராகத் திகழ்ந்த மாநகரி லெ. அருணாசலம் செட்டியார் அவர்கள் தெரிவித்தார்கள். 

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி மேலமடக் கருவூலத்தில் இருந்து வேடுபறி என்ற ஓலைச் சுவடி மற்றும் அச்சுப்புத்தகம் இரண்டையும் சாட்சியாகக் கொண்டு  “கருவையம்பதி பால்வண்ண நாதர் நம் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு இத்தலத்திற்கு வந்து திருப்பாட்டு  பாடுவதற்கு முன்பே பரிசு கொடுத்துள்ளார்” என்ற செய்தி சான்றோர்களால் போற்றத் தகுந்ததாக உள்ளது என செட்டியாரிடம் தெரிவித்தார்கள். பின்னர்  மாநகரி அருணாசலம் செட்டியார் அவர்களை ஒரு வழியாக, கரிவலம் வந்த நல்லூருக்கு அழைத்து வந்தார்கள். 

ராஜ ரிஷியாகிய கணபதி சுவாமிகளின் திருவாக்கினை மறுத்தருளக் கூடாது என நூற்றிற்கு ஒரு சதவீதம் குறை மனதோடு கருவை மாநகருக்கு வந்த சமயம், பங்குனி பிரமோற்சவ உற்ஸவத் திருநாள் கொடியேறி நடைபெற்றுக் கொண்டிருந்தன. 

திருக்கோயிலின் முகப்பில் வீதியுலா வருவதற்கு கம்பீரமாய் ரிஷப வாகனத்தில் சுவாமியம்பாளை அன்றைய நிர்வாகத்தினர் எழுந்தருளச் செய்திருந்தனர்.  இதையறிந்த மாநகரி லெ. அருணாசலம் செட்டியார் சுவாமி தரிசனம் செய்ய வில்வண்டியில் இருந்து கீழே இறங்கினார். 

அப்போது வானில் பட்சிகளுக்கெல்லாம் ராஜாவான கருட பகவான் சுவாமியம்பாள் எழுந்தருளி அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தை வலமாக மும்முறை சுற்றி வந்த திசை நோக்கிச் சென்று மறைந்தது. 

இதைக் கண்ணுற்ற செட்டியார் அவர்கள் பூரண மன நிறைவோடு திருப்பணி செய்யப் போகிறோம் என்ற ஆனந்தத்தில் கொடவர  வாசலில் அடியெடுத்து வைத்து உள்ளிருக்கும் சதாசிவ மூர்த்தியை தரிசிக்க ஆயத்தமானார்கள். 

(இந்தச் செய்தியை சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு திருக்கோயிலின் முன்னாள் மணியம் ஹரிஹர ஐயரின் திருமகனார் ஜானகி ராமன் அவர்கள் பி.ஆர்.பி. பேரன்  அண்ணன் செ.சுப்பையா அவர்களுடைய நாட்டுமருந்துக்கடையில் வைத்து  சொன்ன போது அடியேன் உடன் இருந்தேன்).

பவித்திர ரூபம் பால்வண்ணர்: 

சற்குரு குன்றக்குடி மேலமடம் கணபதி சுவாமிகள் கரிவலம் வந்த நல்லூர் பால்வண்ண நாதர் கோயில் திருப்பணியை முழுமையாக கையில் எடுப்பதற்கு முன்பாக, இவ்வூரில் வாழ்ந்த அன்றைய பெரியவர்களும், ஆஸ்திக அன்பர்களும் சிருங்கேரி மடத்தின் வாயிலாக திருக்குற்றாலத்தில் திருமடம் அமைத்திருக்கும் ஸ்ரீ சித்தேஸ்வரி பீடம் தத்தாத்ரேய மந்திர மெளனந்த சுவாமிகளை தரிசிக்கச் சென்றார்கள். 

பால்வண்ணநாதரின் மகத்துவத்தை  சுவாமிகள் வாயிலாக நாமும் உணர்ந்து அனுபவிப்போம்.  அந்நிகழ்வு அவர்களின் நூலில் உள்ள படி….

திருநெல்வேலி ஜில்லாவில்  சங்கரன்கோவிலுக்கு அடுத்து கரிவலம்வந்த நல்லூர் என்ற ஓர் ஊர் உள்ளது.  அக்கிராமத்தில் பாடல் பெற்ற புராதனமான சிவஸ்தலம் ஒன்று உளது. இவ்வாலயத்திலுள்ள சிவலிங்கத்திற்கு ஷீரவர்ணேஸ்வரர் எனற நாமம் வழங்கப்படுகிறது. 

லிங்கம் பார்வைக்கு கம்பீரமாயும், உயரமாயும் பால் போன்ற வெண்மை நிறமுமுள்ளது. இந்த லிங்கமானது ஆதி காலம் முதலே நேர் நிலையில் இராமல் சற்று வடபுறமாகச் சாய்ந்தே இருக்கும். 

சில வருங்களுக்கு முன் அவ்வூர் பக்தர்களில் சிலர் லிங்க மூர்த்தியை நேராக வைத்து அஷ்ட பந்தனம் செய்ய விரும்பி, இது விஷயமாய் ஆலோசனை செய்ய குற்றாலத்திற்கு வந்த நமது ஸ்வாமிகளை தரிசித்து , விஷயங்களைத் தெரிவித்து ஸ்வாமிகளை கூட்டிக் கொண்டு லிங்க மூர்த்தியை தரிசிக்க கரிவலம் வந்த நல்லூர் வந்தார்கள். ஸ்வாமிகள் ஷீரவர்ணேசுவர் சன்னிதிக்கு வந்ததும் நிஷ்டையில் இருந்து விட்டு இந்த லிங்க மூர்த்திக்கு அஷ்ட பந்தனமே தேவையில்லையென்றும் லிங்கமானது ஸ்வயம்பு என்றும், பாதாளத்தில் இருந்தே ஆவர்பவித்திருப்பதாயும் , இதை அசைக்க முடியாதென்றும் மஹாசக்தி வாய்ந்த லிங்கம் என்றும் சொல்லி யாவரையும் திருப்தி அடையும்படிச் சொல்லிவிட்டு மீண்டும் குற்றாலம் வந்து சேர்ந்தார்கள். 

நடந்தது நடக்கப்போவது  என முக்காலத்தையும் உணர்ந்த சற்குரு குன்றக்குடி மேலமடம் கணபதி சுவாமிகள், “பாடல் பெற்ற தலம் தான் இது. ஆனால் பாடல்கள் கிடைக்கவில்லை” என்பதை மாநகரி லெ. அருணாசலம் செட்டியார் அவர்களுக்கு வேடுபறி என்ற பனுவல் மூலம் புரிய வைத்து திருப்பணியை மேற்கொண்டு மாபெரும் கும்பாபிஷேகத்தை நிகழ்த்தினார்கள் என்பதை யூகித்து உணர்ந்து கொள்ளலாம். 

 இப்பெருமான் மீது மூவர் முதலிகளும் ஏனையோரும் பாடல் பாடி இருக்கலாம். அது விதி வசத்தால் கிடைக்காமல் போயிற்று என்று, தான் பதிப்பித்த குட்டித்திருவாசகம் (எ) திருக்கருவை அந்தாதிகள் நூலில் விளக்கமாக ஐயம் தெளிவித்து இருப்பார்கள்  எங்கள் ஊர் மூத்த சிவனடியார் பி.ஆர்.பாலசுப்பிரமணியஞ் செட்டியார் அவர்கள்.  

ஆக, பால்வண்ணநாதர் புராதனமானவர் என்றும், பழமைக்குப் பழமையானவர், புதுமைக்குப் புதுமையானவர் என்றும், அதீத தெய்வீக தன்மையுடையவர் என்பதும் இதன் மூலம் மேலும் தெரிந்து கொள்ளலாம்.

சித்ஸபேசா சிவ சிதம்பரம். ஹர ஹர  மகாதேவா. 

அருளாளர்கள் போற்றும் அரன்: 

எட்டு அட்டக நூற்களின் ஆசிரியரான கொற்றவன் குடி உமாபதி சிவாசாரிய சுவாமிகள் சிவசேத்திர சிவநாமக் கலி வெண்பாவில்… 

                                         “….துன்பம் அகற்றும் 
வான்மியூர் மேவும் வளர் சுந்தர மாதின் 
பான் மேவிய மருந்தே பால்வண்ணா!”

 -என்று திருவாய் மலர்ந்தருளினார். 

திருவான்மியூர் தலத்து சிவபெருமானின் திருநாமங்களில் ஒன்று பால்வண்ண நாதர். 

அவரைக் குறித்து, அவரே அப்பகுதி வாழ் மக்களுக்கு துன்பம் அகற்றும் அருமருந்தாக இருக்கிறார் என போற்றிய  சிவாசாரிய சுவாமிகள் பாடிய பாடலின்  செய்யுள் அடிகள் இவை. 

அதற்காக திருவான்மியூரில் இருந்துகொண்டு கரிவலம் வந்த நல்லுார்  சுவாமியைத்தான் பாடினார் எனச் சொல்லுவதாகக் கருதலாகாது. 

நேரிடையாகவோ, வைப்புப்பாடலாகவோ, தேவார மூவர்கள் பாடிய பாடல்கள் எதுவும் கரிவலம் வந்த நல்லூர் தலத்திற்கு கிடைக்கவில்லை. ஆனால் தேவார மூவரும் வேறு தலத்தில் பாடிய பாடல்களில் பால்வண்ணர்   திருநாமத்தை உச்சரித்திருக்கும்  தேவாரப் பாடல்களில் சில பாடல்கள் இன்று நமக்கு கிடைக்கிறது. 

அதற்காக இத்தலத்தினை வைப்புத்தலமாகவும் ஏற்றுப் பாடினார்கள் என்றும் சொல்லி விட  முடியாது.

இருப்பினும், தெய்வீகம், உயர் ஞானம், உத்தமோத்தமம் நிறைந்த இத்தலத்திலுள்ள பரம்பொருளாகிய பால்வண்ணரை தேவார மூவரின் அடிச்சுவட்டில் அடியொற்றி வாழ்ந்த அருளாளர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள், புலவர்கள், கவிஞர்கள், வித்துவான்கள் பாடிய பாடல்கள், அவர்களது கட்டுரைகள், கருத்துரைகள் கிடைக்கின்றன. அதில்  ‘பால்வண்ணர்’ என வாய்நிறைய புகழ்ந்து போற்றுகிறார்கள். 

திருக்கருவை தலபுராணம், மற்றும் திருத்தலசிற்றிலக்கியங்கள் பலவற்றிலும்  ‘பால்வண்ணன்’ என்ற சொல்லாட்சியும், அவரது மகத்துவங்களும் இடம் பெற்றுள்ளது. 

மேலும் குட்டித்திருவாசகம் என்று கல்லல் குக மணிவாசக சரணாலய சுவாமிகள் மற்றும் ஆன்றோர் பெருமக்களால்  போற்றப்படும் திருக்கருவை அந்தாதியே இந்தத் தலத்தில் நித்திய மங்களமாய் எழுந்தருளியிருக்கும் பால்வண்ணருக்குரியது தான். 

இருப்பினும், இவ்வந்தாதிகளில்  எண்ணிரு இடங்களில்  ‘பால்வண்ணா’ என்று திருவாய் மலர்ந்து போற்றுகிறார் மன்னர் பிரான். 

திருமுறைப் பாடல்களில் பால்வண்ணர்:

திருபிரமபுரம், திருவானைக்கா, திருமழபாடி,  திருச்சிக்கல் , திருக்கடவூர் வீரட்டம், திருவேகம்பம், திருக்கஞ்சனுார் போன்ற தலங்களில் அருளிச் செய்த திருமுறைப்பாக்களில், ஞானக்கன்றும் ஞானஅரசும்,   ‘பால்வண்ணன், பால்வணன்’ என்ற திருநாமத்தை திருவாய் மலர்ந்து அருளிச் செய்துள்ளார்கள். 

சைவத்திருமுறைகளில் திருக்கருவை நாயகனின் திருநாமமாகிய பெயர் இடம் பெற்றிருப்பது கரிவலம் வந்த நல்லூர் வாழ் மக்களுக்குக் கிடைத்த பெரும் பேறு. அத்தகைய தல பாக்களை தொகுத்துக் காண்பதே இச்சிந்தனையின் உயிர்ப்பாகும்.

திருப்பிரமபுரம் (பல்பெயர்பத்து)

சோழநாட்டு காவிரி வடகரைத்தலம். ஞானக்கன்றாகிய திருஞானசம்பந்த நாயனாரின் பூர்வீகத்தலமான சீர்காழிக்கு பெயர்கள் பன்னிரெண்டு என்கிறார் சற்குரு தெய்வச் சேக்கிழார் சுவாமிகள். 

அதைப்போல ஞானஅரசராகிய வரதுங்கராம பாண்டியரின் ஆத்மார்த்த தலமான திருக்கருவைக்கும் பெயர்கள் பன்னிரெண்டு என்கிறார் இத்தலத்தின் புராண ஆசிரியர் எட்டிசேரி. ச. திருமலைவேற்கவிராயர். 

ஞானக்கன்றாகிய திருஞானசம்பந்த நாயனார்,   தன் தலத்தின் திருநாமங்களை எல்லாம் சொல்லி கற்றோர்கள் வாழும் ஊர் பால்வண்ணன் இருக்கும் ஊர் என ஏகாரத்தில் அப்பாடலை முடிக்கிறார்.

 கரிவலம் வந்த நல்லுார் உண்மையிலேயே ஞானம் விளைந்த தான். அதனால் தான் முக்காலமும் உணர்ந்த முனி புங்கவர் இவ்வாறு அன்றே பாடி இருக்கிறார் போலும்.  நாமும் ஒரு தரம் அப்பாடலை பாடுவோமா…  

வண்மை வளர் வரத்து அயனூர் வானவர்
   தம் கோனுார் வண் புகலி இஞ்சி
வெண் மதி சேர் வெங்குரு மிக்கோர் 
   இறைஞ்சு சண்பை வியன் காழி கொச்சை
கண் மகிழும் கழுமலம் கற்றோர் 
   புகழும் தோணிபுரம் பூந்தராய் சீர்
பண் மலியும் சிரபுரம் பார் புகழ் 
   புறவம் பால்வண்ணன் பயிலும் ஊரே!

    (2 ஆம் திருமுறை)

திருவானைக்கா

சோழ நாட்டு காவிரி வடகரைத்தலம். திருவானைக்காவல் பஞ்சபூத  தலங்களில் நீர் தலம். திருநீற்றான் மதில் சுவர்  இத்தலத்தில் தான் உள்ளது. மதியம் நேரம் அம்பிகையே நேரில் வந்து பூஜிக்கும் உச்சிக்கால தரிசனம் காண்பது உயிர்களாகிய நமக்கு உத்தமம். பல்வேறு அருளாளர்களும், ஞானிகளும் சேவித்த புண்ணிய பதி இது. 

திருஞானசம்பந்த நாயனாரைப் போல இனி ஒரு சற்குரு நாதரைக் கண்பது அரிது. திருவானைக்காவல்  பெருமான் மீது தாயின் கூற்றாக தனது மகளுக்குச் சொல்லும் பாங்கில் அமைந்த பதிகம் ஒன்று உள்ளது. அதில்…

காலனையே அன்று தன் அடியவருக்காக உதைத்தவனே! பால், நெய் முதலான ஐந்து வகையான அபிஷேகங்களை விரும்பி உவப்பவனே! வெண்ணாவல் மரத்தின் கீழ் கையில் வேலோடு அமர்ந்து உயிர்களை காக்கும் பால்வணனே  என்று பாடிப்பரவுகிறார் திருஞானசம்பந்த நாயனார்: 

காலால் உயிர் காலனை வீடுசெய்தாய்
பாலோடு நெய் ஆடிய பால்வணனே
வேலாடு கையாய் எம் வெண்ணாவல் உளாய்
ஆலார் நிழலாய் எனும் ஆயிழையே!

    (2 ஆம் திருமுறை)

திருமழபாடி 

காவேரியின் வட கரையில் இருக்கும் திருத்தலம். சோழ மன்னர்கள் திருப்பணி செய்த தலம். தேவார மூவராலும் பாடல் பெற்ற தலம். அரியலுார் மாவட்டத்திலுள்ள திருமழபாடி. இது திருவையாற்று ஸப்த தலத்துடன் தொடர்புடையது. மார்கண்டேய மகரிஷிக்கு திருக்காட்சி நல்கிய தலம். புருஷா மிருகம் ஸ்தாபித்த சிவலிங்கம். பிரம்மதேவர் பெயர்த்தெடுக்க முயற்சித்த போது வஜ்ஜிரத் தூண் போல் இருக்கிறது என்றாராம்.  பங்குனி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் நடக்கும் நந்தீஸ்வரர் கல்யாணம் காணக் கிடைக்காத வைபவம். 

உங்களுடைய ஞானம், தெளிவு, அறிவு எது என்று தெரியவில்லையா… முதலில் கவலையை விடுங்கள். சித்தர்கள் முதல் தேவாதி தேவர்கள் வந்து நித்தம் பால் நெய்யுடன் பல விதமான அபிஷேகங்களைச் செய்து பால்வணனாகிய வைத்திய நாதரை கை தொழுது வணங்குகிறார்கள்.  அவர்கள் எழுந்தருளி இருக்கும் தலமான மாமழபாடி என்னும் தலத்துப் பெருமானை நீங்களும்  வழிபடுங்கள். உங்கள் குறிக்கோள் நிறைவேறும் என்கிறார் ஆளுடைய பிள்ளையார்: 

தேனுலாம் மலர் கொண்டு மெய் தேவர்கள் சித்தர்கள்
பால் நெய் அஞ்சுடன் ஆட்ட முன் ஆடிய பால்வணன்
வானநாடர்கள் கைதொழு மா மழபாடி எம்
கோனை நாள்தொறும் கும்பிடவே குறி கூடுமே!

    (3ஆம் திருமுறை)

சிக்கல்

சோழநாட்டு காவிரி தென்கரைத்தலம். சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம் செய்தார் முருகப்பெருமான்  என்பது கந்தன் அடியவர்கள் கூறும் கட்டுரை. 

கந்த சஷ்டி திருநாளில் முருகப்பெருமான் வேல் வாங்கும் நிகழ்ச்சி இத்தலத்தில் மிகவும் பிரபலம். அவருடைய முகத்தில் முத்து முத்தாய் வியர்ப்பதும் இங்கு தான். 

சிக்கல் என்னும் தலம் கோட்செங்கசோழ மன்னனால் கட்டப்பட்டது.  எண்டோள் ஈசருக்கு எழுபது மாடக் கோயில்கள் என புகழராம் சூட்டுகிறது திருமுறை. 

இத்தலத்திலுள்ள பால் தடாகத்தில் கிடைத்த  வெண்ணெயால் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டு  சாபம் நீங்கப் பெற்றது காமதேனு. அதனால் சுவாமிக்கு நவநிதீஸ்வரர், பால்வெண்ணெய் நாதர், பால்வெண்ணெய் நயினார் என்ற பெயர்கள் உண்டாயின.

 இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் பால்வண்ணன் திருவடியைப் பணிந்து ஏத்தினால் பாவம் அனைத்தும் காணாமல் போய் விடும் என்று பறை அறிவிக்கிறார் நற்றமிழ் ஞானசம்பந்தர்.  நமது பாவமும் பறந்தோடட்டுமே. பறை அறிவிப்போம், வாருங்கள்:

நீலம் நெய்தல் நிலவி மலரும் சுனை நீடிய
சேலும் ஆலும் கழனி வளம் மல்கிய சிக்கலுள்
வேல் ஒண் கண்ணியினாளை ஓர்பாகன் வெண்ணெய் பிரான்
பால்வண்ணன் கழல் ஏத்த நம் பாவம் பறையுமே!

திருக்கடவூர் வீரட்டானம்

சோழநாட்டு காவிரி தென்கரைத்தலம். திருக்கடவூர் வீரட்டானம் என்னும் திருகடவூர் திருத்தலம். இத்தலத்தினை பூர்வீகமாகக் கொண்டவர் சற்குரு அபிராமிபட்டர். இவரே தன்னுடைய காலத்தில் இத்தலத்து பூஜைப் பணியை ஏற்று நடாத்தியவர்;  அம்பாள் உபாசகர்களின் முதன்மைத் தலைவர்;  அபிராமியம்மையையும் அமிர்தகடேஸ்வரப் பெருமானையும் நெஞ்சில் சுமந்தவர். இவர் அருளிச் செய்த  ‘அபிராமி அந்தாதி’ சகல நலன்களையும் அளிக்க வல்லது. சாஸ்திர தோத்திர வேத ஆகம நுாற்களின் பிழிவாக இந்நூல் திகழ்கிறது. 

ஆண்டு அறுபதினை எட்டியவர்கள் திருக்கடவூரில் மீண்டும் திருமாங்கல்ய தாரணம் செய்து கொண்டு இரண்டாம் வட்டத்திற்குள் நுழையத் தயாராவார்கள். அவர்களுக்கு ஆயுள் நூறு. 

எட்டு அட்ட வீரட்டத் தலங்களில் இது எட்டாவது தலம். அதனால் தான் இத்தலத்தில் உள்ள அமிர்த கடேஸ்வரர் கருப்பு மனம் கொண்டவர்களுக்கு எட்டாதவர். ஆனால் அவரை எட்டிப்பிடித்த காமனை நெற்றிக்கண்ணால் எரித்தவர். பரந்து விரிந்த சடையில் பாம்பையும் கங்கையையும் சூடிய பெருமான். 

முன்னொரு காலத்தில் தன் பக்தனுக்காக, இடப்பாக திருவடியினால் எமனையே எட்டி உதைத்தவர் இந்த பால்வண்ணர் என்கிறார் திருநாவுக்கரசு சுவாமிகள். 

இப்பாடல் இடம் பெற்ற பதிகத்தில் பத்தாவது பாடலைத் தவிர மற்ற எல்லா பாடல்களிலும்  எமனைப் பற்றி பேசுகிறார்.  இப்பாடலை தொடர்ந்து படிப்பவர்களுக்கு எம பயம் நீங்கும் என்பது உறுதி. 

கரப்புறு சிந்தையர் காண்டற்கரியவன் காமனையும்
நெருப்புமிழ் கண்ணினன் நீள்புனல் கங்கையும் பொங்கரவும்
பரப்பிய செம்சடை பால்வண்ணன் காலனை பண்டொருகால்
உரப்பிய சேவடியான் கடவூருறை உத்தமனே!

    (4 ஆம் திருமுறை)

திருவேகம்பம்

முக்திச் சேத்திரங்களில் ஏழில்  ஒன்று காஞ்சிபுரம். காசிக்கும் காஞ்சிபுரத்திற்கும் என்ன வித்தியாசம் என்றால், ஒரு இஞ்சு தான் வித்தியாசம் என்பார் காஞ்சி மகா பெரியவர்.  இம் மகான் அலங்கரித்த  ஸ்ரீ மடமும், மேலும் தொண்டை மண்டல ஆதினமும் இங்கு தான் உள்ளது. 

சாக்கிய நாயனார், திருக்குறிப்புத்தொண்ட நாயனார், ஐயடிகள் காடவர் கோன் ஆகியோரின் பூர்விகமும் இத்தலமே. சாணக்கியர், பரிமேழலகர், சிவஞான யோகிகள், கச்சியப்பமுனிவர், கச்சியப்ப சிவாசாரியார், வண்ணக்களஞ்சியம் நாகலிங்க முனிவர், பொய்கையாழ்வார், வேதாந்த தேசிகர், இன்னும் பல சைவ, வைணவப் பெரியோர்களும் இத்தலத்திற்குரியவர்களே. 

தேவார மூவரும், திருவாசகப் பெரியோரும், பட்டினத்து சுவாமிகளும், தெய்வச்சேக்கிழாரும், அருணகிரி நாதரும், இன்னும் பல்வேறு அருளாளர்களும் பாடிய அருளிய திருத்தலம் இந்த காஞ்சி மாநகரம். 

இத்தலத்துப் பெருமானைப் பாடியருளிய அப்பர் சுவாமிகள் தனது திருவிருத்தத்தில், “இரு கைகளையும் தலை மேல் துாக்கி சரணம் அடைந்த அடியார்களுக்கு இரங்கி அருள் செய்வான் இந்த கச்சித்தல கம்பன்: என்கிறார். 

மேலும், படந்து விரிந்த சடைமுடியில் பாம்பினை அணிந்து இருப்பவன் இந்த பால்வண்ணனே என்கிறார்.  ஒரு தரம் பாடலை நன்றாக அனுபவித்து பாருங்கள். பால்வண்ணன் கண்களுக்குத் தெரிவார்.  

பாம்பரை சேர்த்தி படரும் சடை முடி பால்வண்ணனே
கூம்பலை செய்த கரதலத்து அன்பர்கள் கூடி பல் நாள்
சாம்பலை பூசி தரையில் புரண்டு நின் தாள் சரண் என்று
ஏம்பலிப்பார்கட்கு இரங்குகண்டாய் கச்சி ஏகம்பனே!

     (4 ஆம் திருமுறை: திருவிருத்தம்)

திருக்கஞ்சனூர் 

கருவை சைவ சிரோண்மணி  வரதுங்க ராமபாண்டியரும், திருக்கஞ்சனூர் ஹரத்த சிவாச்சாரிய சுவாமிகளும்  அவரவர் காலத்தில்  சிவபரத்துவம், சைவ மகத்துவம் சாதித்தார்கள் என்பது சத்திய வரலாறு. 

மேலும், நவக்கிரகங்களில் ஒருவரான சுக்கிர பகவான், கரிவலம் வந்த நல்லூர்  சிவபெருமானை  வழிபாடு செய்துள்ளார். அவர் உருவாக்கிய  பால்தடாகத்தில் சிவபெருமான், சிறுவனாக எழுந்தருளி மூழ்கி எழுந்து களாவனத்திற்குள் மறைந்தார். விரட்டிச்சென்ற சுக்கிர பகவானுக்கு சிவலிங்க ரூபமாகக் காட்சியளித்தார் களாவனத்தான். அதனால் இத்தல சிவபெருமான்  ‘பால்வண்ண நாதர்’ என்ற திருநாமம் பெற்றார். 

இவற்றையெல்லாம் ஞான திருஷ்டியால் அறிந்தார் சற்குரு திருநாவுக்கரசு சுவாமிகள். சோழ நாட்டிலுள்ள சுக்கிரன் பூஜித்த கஞ்சனுார்  தலத்திலுள்ள சுவாமி  பால்வண்ணராக  நாவரசருக்கு காட்சி கொடுத்துள்ளார் போலும்.  

அதனால் தான் பால்வண்ணர் திருநாமத்தையும் பொதித்த வைத்து பாடும் பாங்கு எண்ணி எண்ணி மகிழத்தக்கது. நாமும் அத்தேவாரப் பாடலை பாடி திருக்களாநாயகனின்  திருவருளைப் பெறுவோமாக:

நாரணனும் நான்முகனும் அறியாதானை 
    நால் வேதத்துருவானை நம்பிதன்னை
பாரிடங்கள் பணி செய்ய பலி கொண்டுண்ணும் 
    பால்வணனை தீவணனை பகலானானை
வார் பொதியும் முலையாள் ஓர்கூறன் தன்னை 
    மானிடங்கை உடையானை மலிவார் கண்டம்
கார் பொதியும் கஞ்சனூர் ஆண்ட கோவை 
     கற்பகத்தை கண்ணார கண்டுய்ந்தேனே!

    (6ஆம் திருமுறை: திருத்தாண்டகம்)                          

பால்வண்ணர் நாமம் பெற்ற தலங்கள்:

* தென்காசி – கரிவலம் வந்த நல்லூர் 

தென்காசி மாவட்டத்தின் பஞ்ச பூத தலங்களில் அக்னித்தலமாக மிளிர்வது கரிவலம் வந்த நல்லூர்.  இத்தலத்திலுள்ள சுவாமியின் திருநாமம் பால்வண்ணநாதர் என்பதாகும். அம்பிகையின் திருநாமம் ஒப்பனையம்பாள். 

இத்தலத்துடைய சிறப்பினை பலரும் அறிந்துணரவே இக்கட்டுரை தொகுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  

* திருநெல்வேலி – பேட்டை 

திருநெல்வேலிக்குத் தெற்கே மூன்று கி. மீ. தொலைவில் உள்ளது பேட்டை என்னும் கிராமம். இதன் பழைய பெயர் திருமங்கை நகர்.  நமது சைவ பூஷணம் ஈஸ்வர மூர்த்தியா பிள்ளையவர்களின் பூர்வீகத் தலம் இது. இத்தலத்திலுள்ள சுவாமியம்பாளின் திருநாமம் ஒப்பனையம்பாள் சமேத பால்வண்ணநாதர்.

* தேனி – தர்மாபுரி 

கரிவலம் வந்த நல்லூர் பால்வண்ணநாதர், தேனி மாவட்டத்திலுள்ள தர்மாபுரி கிராம மக்களுக்கு குல தெய்வம்.  

அப்பெருமக்கள் கரிவலம் வந்த நல்லூர் மூலஸ்தான  பால்வண்ண நாத சுவாமியிடம் அனுக்கை பெற்று தன் கிராமத்தில் அவர் பெயரிலேயே ஒரு கோயிலை எழுப்பி நித்திய பூஜை வழிபாடு செய்து வருகிறார்கள். 

* கடலுார் – திருக்கழிப்பாலை

கடலுார் மாவட்டம், சிதம்பரத்திற்குத் தெற்கே ஐந்து கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம். 

தேவார மூவராலும் பாடல் பெற்ற திருத்தலம் இது. இங்குள்ள பைரவரின் திருமேனி முழுவதும் எட்டு நாகங்கள் அலங்கரிக்கின்றன. இருபத்து ஏழு தலையுடைய நாகத்தினை பூணுலாக அணிந்துள்ளார்.  இத்தலத்தின் சுவாமியின் திருநாமம் பால்வண்ணநாதர். அம்பிகையின்  திருநாமம் வேத நாயகி. 

*சென்னை – திருவான்மியூர் 

சென்னை மாநகரின் இதயப்பகுதிகளில் முக்கியமானது திருவான்மியூர். இத்தலத்தில் எழுந்தருளியுள்ள சுவாமியின் திருநாமம் மருந்தீஸ்வரர். இவரின் மற்றொரு திருநாமம் பால்வண்ணர். இவருடைய அருளிச் செயல்களை தமிழில் தல புராணமாகத் தந்தவர் பூவை. கல்யாணசுந்தர முதலியார் அவர்கள். 

தான் இயற்றிய தலபுராணத்தில் பால்வண்ணருக்கு தனியாக துதிப்பாடல் ஒன்றை இயற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அப்பாடல்:

மால்வண்ண மாலயன் ஆதியமரர் 
    முனிவரர் கண்மயங்கி வேத 
நுால்வண்ணமே உணர் ஆகமத்தின் 
    வழியே ஏத்து நோன்மைக்காகச்
சேல்வண்ண விழியுமையாளோடு 
    அமர்ந்து நாணாளும் சீர்த்தி மல்கும் 
பால்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ண 
    மேனியனைப் பரவுவாமால். 

பல தல புராணங்களை இயற்றியவர் தஞ்சாவூர் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர். அவர்களது பேரன் தான் அரித்துவார மங்கலம் ப. சோமசுந்தர தேசிகர். இவருடைய  ‘தமிழ்ப் புலவர் வரலாறு’ தமிழ் இலக்கியத்தினை நாடும் அன்பர்களுக்கு பெரிதும் துணையாக இருக்கும். 

அன்னார் ‘சிவாலய மான்மியக்கோவை’ என்றொரு நுால் ஒன்றை இயற்றியுள்ளார்கள். அதில் திருவான்மியூர் தலத்தைச் சிறப்பிக்கும் விதமாக பாடிய பாடலில்… நமது பால்வண்ணரின் நாமம் வருகிறதே. 

வான்மிகி ரிஷிக்கு நடனம் காண்பித்து
      வான்மியூர் வாழ்ந்திடும் வாழ்வே
மான்மறி கரத்தாய் சுந்தர நாயகியை 
     மருவிய பால்வண்ணநாதர் 
ஆனையினுரிய மரும்புலித்தோலும் 
     அணிந்திடும் அப்பனே அருள்வாய்
தேன்மண நிறைந்த மலர்த்தொடை
     முடியாய் செ ல்வமே! கருணை வாரிதியே! 

இத்தலத்திலுள்ள சுவாமியின் மீது   ‘மருந்தீசர் சதகம்’ என்று ஒரு அழியாக் காவியம் படைத்தவர் காஞ்சிபுரம் சபாபதி முதலியார். சைவ நெறியில் தோய்ந்த அப்பெருமான் இயற்றிய பாடல் ஒன்றில்  ‘பால்வண்ணம்’ என்ற சொல்லாட்சி இடம் பெறுகிறது. இதோ அந்தப் பாடல்… 

பால்வண்ணமுன் திருமேனிசெம் பவளஞ்
    சடைமுடி வண்ணநன் 
நீல் வண்ணமே களமோர் புறநிகழும் 
    மரகத வண்ணமே
கால்வண்ணமும்புயவண்ணமே காணக்
   கடையேனச் சுவெண்
மால் வெள்விடையாய் வான்மீயூர் 
    மருந்தீசனே மருந்தீசனே!

மேலும், இத்தலத்திலுள்ள சுவாமியின் மீது கலித்துறை அந்தாதி ஒன்று பாடியுள்ளார் வரதராஜய்யர்; இவர் உ.வே.சாமிநாதர் நூலகத்தில் நூலகராகப் பணியாற்றியவர்; தொல்காப்பியம் பொருளதிகாரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் என்ற பெருமைக்குரியவர். இறையருளைப் பெற்ற அனுபூதி மான். இவர் பாடிய பாடல்களில் பால்வண்ணர் என்ற சொல் ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் இடம் பெறுகிறது. இதோ அப்பாடல்கள்:

தவத்தாற் சிறந்த நல்வான்மீகன் 
   பேர் கொள் தலமதில்வாழ் 
சிவத்தாணுவினைத்  திரிதரை 
   சேர்த்து திகழொளியைப் 
பவத்தா னிகழிடர்ப் பாட்டினைப் 
   போக்கும்பராபரனை 
நவதாண்டவம் செயும் 
  பால்வண்ணனைத் துதித் தாடுமினே. 11

பித்தன் வனத்து முனி மனையார்
    மனம்பேதுறச்செய்
கத்தன் முயலகன் தன்னை 
   வதைத்துக் கரியுரிகொள்
நித்தன் மழுக்கையன் வான்மித் 
 தலத்து நிலவுமரன் 
பக்தர்கருள் தரு பால்வண்ணன் 
  பேர் கொள்பரம்பரனே 70

மின்னேரிடையும் விரிபூங்குழலும் 
    விழை நுதலும்
தன்னேரிலாத கருணையும் கொன் 
    சுந்தரியுடனே 
பொன்னேர் திருமேனி வான்மிப் 
   பெருநகர்ப் பூரண்வென் 
முன்னேயெழுந்தருள் பால்வண்ணப் 
   பேர் கொண்ட முன்னவனே 82

வண்ணத் திரிபுரை வாமன்
    திருவான்மி வள்ளலொரு
வண்ணமும் பேரூரு மில்லாதவன் 
    எழிற் பால்வண்ணா நம்
அண்ணல்  தனைவரதன் புனைந்து 
    ஏத்தும் அந்தாதி இது
பெண்ணொடு பாகன் மருந்தீசனார் 
    புகழ் பேசுவதே. 100  

நிறைவாக,

இத்தலத்திற்கு நேரில் வந்து தரிசனம் செய்த சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தேவாரப்பாடல்கள் இன்று வரை சைவத்தமிழ் இலக்கிய உலகிற்கு கிடைக்கப்பெறவில்லை.  ஆனால் ஆளுடைய நம்பிகள் பாடுவதற்கு முன்பே பரிசினைப் பெற்றார் என்ற செய்தி  சைவத்தமிழ் ஆர்வலர்களால் கூர்ந்து கவனிக்கத்தக்கது. 

ஞானக்கன்றும் ஞான அரசும்  பாடிய தேவாரங்களில் பால்வண்ணர் என்ற சொல்லாட்சி இடம் பெறுவது நயந்து போற்றத்தக்கது.  மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்திலும் இத்தலம் இடம் பெறவில்லை. ஆனால் இத்தலத்தின் முதல் அடியவரும் அரசருமான வரதுங்க ராம பாண்டிய மன்னரின் திருக்கருவை அந்தாதிகள் குட்டித்திருவாசகம் என்னும் சிறப்புப் பெயரை கொண்டது என, கல்லல் குக மணிவாசக சரணாலய சுவாமிகள்  போற்றி வெளியுலகிற்குப் பிரகடனப்படுத்தியுள்ளார் என்பது கூர்ந்து சிந்திக்கதக்கது.

தேவார, திருவாசகப் பாடல்கள் கிடைக்கவில்லை. ஆனால் அக்கருத்துகளை அப்படியே  பிரதிபலிக்கும்  பல புலவர்களின் சிவ தோத்திரப் பாடல்கள் கிடைக்கின்றன.  சான்றாக, பிற்காலத்தில் தோன்றிய சிவஞானயோகிகளின் முதன்மைச்சீடர்களில் தொடங்கி தற்காலத்தில் வாழ்ந்த வயலி அம்பிகை தாசன் வரை பல புலவர்கள் பால்வண்ணருக்கு வாடாத அருட் பாமாலைகளை இயற்றிப் போற்றி பணிந்துள்ளார்கள் என்பது நுணுகிய வரலாறு.

சீர்காழி, திருவானைக்கா, திருமழபாடி, திருக்கடவூர், சிக்கல், காஞ்சிபுரம், கஞ்சனுார், கழிப்பாலை, திருவான்மியூர் ஆகிய ஒன்பது தலங்கள் தேவாரப் பாடல் பெற்ற தலங்கள்.  இவற்றில் முதலில் உள்ள ஏழு தலப் பாடல்களில் பால்வண்ணர் திருநாமம் வருகிறது.  மீதுள்ள இரண்டு தலங்களில் மூலஸ்தான சதாசிவ மூர்த்தத்திற்கு பால்வண்ணர் என்ற திருநாமம் சிறப்பு பெற்றுள்ளது. 

மற்றுள்ள பேட்டை, தர்மாபுரியில் எழுந்தருளியுள்ள சுவாமியின் திருநாமங்கள் பால்வண்ணர் என்பதாகும். ஆக, கரிவலம் வந்த நல்லூரையும் சேர்த்து பன்னிரெண்டு தலங்களில் பால்வண்ணர் என்ற திருநாமம் சிறப்பு பெற்றுள்ளது என்பதை அறிந்துணர்வோம்.

சைவத்தமிழ் இலக்கிய உலகில் தனக்கென தனியிடத்தைக் கொண்டு திகழ்வது திருக்கருவையம்பதி என்னும் கரிவலம்வந்த நல்லூர். எப்படி இருப்பினும் திருக்கருவையம்பதி என்னும் கரிவலம் வந்த நல்லூர் ஞான பூமியாகவும், உத்தமோத்தமத் தலமாகவும் திகழ்கிறது. 

$$$

Leave a comment