-ஆசிரியர் குழு
கரப்பான் பூச்சி கட்சியின் (சி.ஜே.பி.) தொடர் போராட்டம் ஜூலை 20ஆம் தேதி, தில்லியில் பெரும் அமளியுடன் முடிந்திருக்கிறது. போராட்டக்காரர்களின் வன்முறை, காவல்துறையில் தடியடி, தேசதுரோக கோஷங்கள், நாடாளுமன்றம் முற்றுகை, மாணவர்களுடன் தேசவிரோதிகள் கைகோர்ப்பு என போராட்டத்தின் திசை மாறியதில் இந்திய ஜனநாயகம் திக்கித் திணறியது. இது தொடர்பான சில முகநூல் பதிவுகள் இங்கே ஆவணப்பதிவாக (தொகுப்பு- 2)….

1. ராஜரிஷி பற்றற்ற நிலையில் இருக்கக் கூடாது
-காலச்சக்கரம் நரசிம்மா
சில கேன்சர் வளர்ச்சிகளுக்கு ‘கீமோதெரபி’ கொடுத்துதான் தீர வேண்டும். சில கடுமையான அரசியல் சட்டங்களை கொண்டுதான் சில தேவை இல்லாத காளான்களின் வளர்ச்சியை அழிக்க முடியும் .
இந்திரா காந்தி போல Article 356 பிரிவை துஷ்பிரயோகம் செய்து ஆட்சியை கலைக்க மாட்டோம் என்றெல்லாம் வறட்டு ஜம்பம் பேசி என்ன பயன்?
மம்தாவின் ஆட்சியில் வங்காளம் ஏறக்குறைய நம் நாட்டில் இருந்து நழுவிக் கொண்டிருந்தது. அப்போதே கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருந்தால், இப்போது வேலி அமைக்கும் பணிகள் உட்பட பல பிரச்சினைகளை சமாளித்து இருக்கலாம் .
தலைநகரம் தில்லியில் இன்று நாடாளுமன்றம், ஜனாதிபதி மாளிகையைச் சுற்றி போராட்டக்காரர்கள் குவிந்துவிட்டனர். தில்லியில் பதட்டம் நிலவுகிறது .
நாடு எப்படி போனாலும் போகட்டும், நான் கடுமையான சட்டங்களைப் பிரயோகிக்க மாட்டேன் என்று அழிசாட்டியம் செய்வது தவறு.
தற்போது துணை ராணுவம் அழைக்கப் பட்டுள்ளது என்று தகவல் வந்துள்ளது .
கேன்சர் வலி குறைக்க Palliative Care கொடுப்பது நிரந்தரச் சிகிச்சை அல்ல. அது வலி குறைக்கும் ஒரு இடைக்கால நிவாரணம் தான். அறுவைச் சிகிச்சை செய்து கேன்சரை நீக்குவதுதான் முறையான செயல்.
கடுமையான சட்டங்களை, அதிகாரங்களை நம் மூதாதையர் அரசியல் சட்டத்தில் வழங்கி இருப்பது இம்மாதிரி கட்டுப்பாடற்ற, இக்கட்டான நிலைகளை சமாளிக்கத் தான். இரும்புக்கரம் கொண்டு போராட்டங்களை ஒடுக்குவதில் என்ன தயக்கம்?
தேவை அதிரடி நடவடிக்கைகள்.
ஒரு பிரதான் ராஜினாமா செய்வதால் இன்னொரு ‘பிரதான்’ நிம்மதியாக இருக்க முடியும் என்றால், அந்த பிரதான் ராஜினாமா செய்வதில் தவறில்லை .
பிரதான் மந்திரி தர்மேந்திர பிரதானை உடனடியாக நீக்க வேண்டும் .
தில்லி யில் normality விரைவில் திரும்ப வேண்டும் .
துறவி பற்றற்ற நிலையில் இருப்பது முறை!
ராஜரிஷி பற்றற்ற நிலையில் மௌனம் கடைபிடிப்பது , முறையல்ல.
$$$

2. சும்மா இருப்பதே தீர்வா?
-பி.ஆர்.மகாதேவன்
பெரும் போராட்டங்களை அரசு ஏன் அனுமதிக்கிறது?
இதற்கு மூன்று காரணங்கள் இருக்க வாய்ப்பு உண்டு.
‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ என்ற நூலில் மசனோபு ஃபுகுவோகா ஓர் அழகான அணுகுமுறையை முன்வைத்திருப்பார்.
ஒன்றும் செய்யாமல் இருப்பதே ஆகச் சரியான செயல்.
விவசாயத்தில் அவர் இதை நடைமுறைப்படுத்திக் காட்டி மிகப் பெரிய விளைச்சலை சாதித்துக் காட்டியிருப்பார்.
பயிர்களுக்குத் தாமாகவே களைகளை மீறி வளரும் பலம் இருக்க வேண்டும். களைகளை வளராமல் தடுக்க எளிய மூடு பயிர்கள் போதும்.
தாமாகவே மண்ணில் இருந்து உரங்களை உறிஞ்சிக்கொள்ளும் பலம் பெருக வேண்டும்.
நல்ல பூச்சிகளே கெட்ட பூச்சிகளை அழித்துவிடும்.
நிலத்தடியிலிருந்து மழையிலிருந்து நீர் எடுத்துக் கொள்ளட்டும். விவசாயி மண்ணைக் கிளறிக்கூடத் தர வேண்டாம்.
இப்படி வளரும் பயிரே மிகவும் வலிமையானதாக இருக்கும். அதுவே அதிக விளைச்சலைத் தரும். இதுவே அவரின் விவசாயக் கோட்பாடு.
ஒருவகையில் நம் மரபான மருத்துவமும் இப்படியானதுதான். அது உடம்புக்குள்ளேயே நோய் எதிர்ப்பு சக்தி பெருக வேண்டும் என்று சொல்லும்.
அலோபதி மருந்துகள் உடனடி நிவாரணம் தரலாம். ஆனால் அதன் பின்விளைவுகள் அதிகமாக இருக்கும். அதோடு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து உடல் வலிமையைக் காலப்போக்கில் மழுங்கடித்துவிடும்.
வேதி உரங்கள், பூச்சிக்கொல்லிகள் எல்லாம் அடித்தால் மண் ஓரு சில வருடங்களில் மலடாகிவிடும்.
அரசியல் விழிப்புணர்வு சார்ந்தும், பாஜகவும் இந்து அமைப்புகளும் இப்படியான உள்ளார்ந்த வலுவை தாமாகவே பெருகச் செய்தல், ஒன்றும் செய்யாமல் இருத்தல் என்ற வழிமுறையைப் பின்பற்றுவதாகத் தோன்றுகிறது.
இதுவே முதலாவதும் முக்கியமானதுமான காரணமாக இருக்கும் என்று (நம்பத்) தோன்றுகிறது.
ஒருவேளை வேறு என்னென்ன காரணங்கள் இருக்கலாம்?
சர்வதேச மாஃபியா மற்றும் உள்ளூர் பிளாக்மெயிலர்களிடம் மாட்டிக் கொண்டிருப்பதால் நம் தலைவர்கள் எதுவும் செய்யாமல் / செய்ய முடியாமல் இருக்கிறார்களா என்று யோசித்தால் மனச்சோர்வுதான் மிஞ்சும்.
நம் தலைவர்களின் முதுகுக்குப் பின்னால் ஒரு துப்பாக்கி முனை அழுத்திக் கொண்டிருக்கிறது என்று நாம் நம்பினால், அதன் பின் எப்படித்தான் அவருக்குப் பின்னால் அணிவகுத்துக் கோஷமிடமுடியும்? கோஷங்களை விடுங்கள். குடிமகனாகக் கூட வாழ முடியாமல் போய்விடும்.
வெளியிடமொன்றில் வந்த வேலையை முடித்துவிட்டு ஒரு வாய்ச் சோற்றை உண்கையில் இதில் மயக்க மருந்து கலந்திருக்குமோ என்ற அச்சம் வந்தால் எதைத்தான் சாப்பிடமுடியும்? எங்குதான் போக முடியும்?
மயங்கிய நம்மை ‘ஹை ரெசொல்யூஷன் கேமரா’ கண்கள் மட்டமான செயல்களைச் செய்யவைத்துப் பதிவுசெய்துகொண்டால் என்ன ஆகும் என்ற பயம் வந்தால் வீட்டில்கூடத் தூங்கமுடியாமல் ஆகிவிடுமே?
பள்ளத்தில் விழவைத்து பட்டினி போடப்பட்டு அங்குசத்தில் உச்சந்தலையில் குத்தி அடிபணிய வைத்ததைப் பற்றி ஒன்றுமே தெரியாததுபோலப் பிச்சையெடுக்கும் யானையை, ஏதோ அதுவாகவே தன்னை மலினப்படுத்திக் கொள்வதுபோல அது அயோக்கியமானது; அல்பமானது என்றெல்லாம் கூடி நின்று கேலி செய்யும் உலகில் நிம்மதியாக வாழ முடிந்த இடம் தான் எது? செய்ய முடிந்த செயல்தான் எது?
சொற்ப அதிகாரம் நம் கையில் இருந்தாலே சுற்றி வளைத்துவிடுவான்கள். நம் தலைவர்களோ மாபெரும் ஜனநாயக தேசத்தின் மகத்தான மக்கள் பிரதிநிதிகள்.
ஒரு மன்னருக்கு ஸ்கெட்ச் போட்டால் ஒரு ராஜ்ஜியத்துக்கே போட்டமாதிரி! ஒரு இளவரசனுக்கு ஸ்கெட்ச் போட்டால் இளைய தலைமுறைக்கே போட்டமாதிரி.
ஆனால், நம்மவர்களின் விளக்க முடியாத செயல்களை வேறுவகையாகத்தான் புரிந்துகொள்ளவேண்டும்.
பிளாக் மெயில் செய்யப்படவில்லையென்றால், உண்மையில் செய் நேர்த்தி அற்ற மழு மட்டிகளாக இருக்கக்கூடும். ஊழல்வாதிகளாக இருக்கக்கூடும். இப்படி நினைப்பதும் மிகுந்த வேதனையையும் தலைக்குனிவையுமே தரும்.
எனவே இந்த மூன்று காரணங்களில், ஒன்றும் செய்யாமல் இருந்தே அனைத்தையும் செய்கிறார்கள் என்று நம்புவதே நல்லது.
உண்மையில் அதற்கான அத்தனை நல் வாய்ப்புகளும் இருக்கத்தான் செய்கின்றன.
கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக மாபெரும் ரெளடித்தனத்தை பல மாதங்கள் கட்டமைத்தான்கள். தமிழகமே அழிந்துவிடும் என்றான்கள். தான் உண்டு, தன் எழுத்து உண்டு என்று மானுட மேன்மை மேகங்களில் சஞ்சரிக்கும் இலக்கியவாதிகள் தொடங்கி அத்தனை நியாயவான்களும் ஓடிப் போய் ஆதரவு தெரிவித்தான்கள். சுற்று வட்டார மக்களுக்கு 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தொகையோடு பேட்டாவும் கொடுத்து கோஷம் போடவைத்தான்கள்.
கடைசியில் என்ன ஆனது?
அணு மின் நிலையம் வந்தது. அவரவர் வேலையைப் பார்க்கப் போனார்கள்.
இதுபோல, 100 போராட்டங்களைச் சொல்லிக் காட்டமுடியும். அரசு எதுவுமே செய்யாமல் இருந்தால் போதும். தானாகவே தெரு நாய் வாய் வலிக்கக் கத்தியபின் சுருண்டு விழுவதுபோல விழுவான்கள்.
உண்மையில் இந்த ‘தன்னெழுச்சி’ ’ஜனநாயகக்’ குரல்களை இப்படித்தான் கையாள வேண்டும்.
பாஜக உண்மையில் சரியாகவே செய்கிறது.
மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் – புதிய தலைமுறை கட்சியினர் இணைந்து முன்னெடுத்த போராட்டத்தை ஜெனரல் கருணாநிதியின் அரசு ஓட ஓட விரட்டிக் கொன்றது. பச்சிளம் குழந்தையைக் கூட தாமிரபரணியில் எறிந்து கொன்றது.
ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதும் துப்பாக்கிச் சூடு நடந்தது.
அப்பாவி கரசேவகர்களைக்கூட பாபரி கும்மட்ட இடிப்புக்கு பல மாதங்கள் முந்தைய அமைதிப் பேரணியில் சுட்டுக் கொன்றான்கள்.
பாஜக ஒருபோதும் இப்படியான அடக்குமுறையைக் கையில் எடுத்ததே இல்லை. எடுக்காமலேயேதான் எல்லாவற்றையும் அடக்கியும் இருக்கிறது.
தேசம் பாதுகாப்பான கரங்களில்தான் இருக்கிறது.
கோவணம் கட்டிக் கொண்டு போராடினால் கோரிக்கைகள் எல்லாம் நியாயம் என்று ஆகிவிடாது.
உண்ணாவிரதம் இருந்தால் உண்மையான போராட்டமாகி விடாது.
மாதக் கடைசியானால் அந்த மாதக் கோட்டாவுக்கு கணக்குக் காட்டியாக வேண்டுமென்று, நாலு பேரை ஹெல்மெட் போடவில்லை, இண்டிகேட்டர் எரியவில்லை என்று கேஸ் பதிவு செய்வதுபோல போராளிகள் ஆண்டுக்கு ஒருமுறை வாங்கிய காசுக்கு கூவ வேண்டுமே என்று இதுபோல ஏதேனும் உரிமைப் போராட்டங்களில் ஈடுபடத்தான் செய்வான்கள்.
கண்டுகொள்ளாமல் விட்டால் தானாக ஓயும்.
போராட்டங்களைக் கையாளும் விஷயத்தில் மட்டுமல்ல; ஊழல்வாதிகளைக் கைது செய்வதில்லை; இந்து, இந்திய, இந்துத்துவம் தொடர்பான அவதூறுப் பேச்சுகளைத் தடுப்பதில்லை; ஊடகங்கள், திரைப்படங்கள் என எங்கும் இந்துவுக்கு எதிராக எதை வேண்டுமானாலும் எழுதலாம்; பேசலாம்; காட்டலாம் என்ற அவலம் நடந்து கொண்டிருக்கிறது.
எல்லாவற்றையுமே ஒன்றுமே செய்யாமல் சமாளித்து வருகிறது அரசு.
நோய் எதிர்ப்பு சக்தி உடம்புக்குள் தானாகப் பெருக வேண்டும்; பயிர்களுக்கு பூச்சிகளை மீறி வளரும் பலம் வேண்டும்.
இந்து உணர்வு இந்துக்களுக்குத் தாமாகவே பெருக வேண்டும்.
பெருகும். பெருகியாக வேண்டும்.
இன்னொரு வகையில் பார்த்தால், நம் தேசம் பொன்முட்டையிடும் வாத்து. சர்வதேச எஜமான்கள் முட்டாள்கள் அல்ல; ஒரு நாளும் ஒரேயடியாக அறுத்துப் போட மாட்டான்கள். எனவே நாம் முட்டையிட்டுக் கொண்டே இருக்கும்வரை நிச்சயம் போஷாக்கான உணவு கிடைத்துக் கொண்டே இருக்கும். போதிய பாதுகாப்பு நிச்சயம் கிடைக்கும். உண்ணலாம்; உறங்கலாம்; புணரலாம்; பெருகலாம். அவ்வப்போது அவன் தான் எஜமான் என்பதைக் காட்ட முள் கம்பால் ஒரு விளாறு விளாறுவான். சில இறகுகள் பிய்த்தெறியப்படும். பறக்கத் தெரியாத பறவைக்கு உதிரும் இறகுகள் பற்றி என்ன கவலை… இல்லையா?
பொன்முட்டைகள் இட்டுக் கொண்டே இருக்கும்வரை மூட வாத்துகளுக்கு ஒரு பயமும் தேவையில்லை.
நம் எஜமானர்களின் எஜமானர் எல்லையற்ற கருணை கொண்டவர். நம் கூர் அலகுகளால் புழுவுக்கு மேல் எதையும் கொல்லமுடியாதென்பது அவருக்குத் தெரியும் (அதைக்கூட கவ்வி முழுங்கத்தான் முடியும்).
நம்மை சுதந்தரமாக மேய விட்டிருக்கிறார். நம் சிறகுகள் பறப்பதற்கானதல்ல என்பது அவருக்குத் தெரியும்.
ஒன்றுமே செய்யாமலே எல்லாவற்றையும் செய்யும் கடவுள்களின் உலகில், ஏதாவது செய்ய வருபவர்களிடம்தான் நாம் எச்சரிக்கையாக இருந்தாகவேண்டும் இல்லையா..?
$$$

3. கரப்பான்கள் ஒரு முனை மட்டுமே!
-வெங்கட்ராமன் ஸ்ரீநிவாசன்
இது மிகவும் நுணுக்கமாக திட்டமிட்டுத் தொடுக்கப்பட்டுள்ள யுத்தம். டீப் ஸ்டேட் தனது முழு பலம் கொண்டு இதனை நடத்துகிறது. பல முனைகளில் இருந்தும் தாக்குதல் நடத்தும். நிச்சயமாக கரப்பான்கள் அதன் ஒரு முனை மட்டுமே.
கடந்த சில வருடங்களாகவே ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு வகையில் நீட் தேர்வில் குழப்பங்கள் நடந்து கொண்டே இருக்க, அந்த துறை மந்திரியோ ‘கடுமையான நடவடிக்கைகளை’ எடுப்பதாக தொடர்ந்து உறுதி மட்டுமே அளித்து வந்தார். அது மட்டுமா, புதிது புதிதாக ஏதோ ஒரு சர்ச்சை அவர் தொடர்பான துறையில் உருவாகிக் கொண்டே இருந்ததும் உண்மை தான். இதை சரியான தருணத்தில் மிகவும் கச்சிதமாக பயன்படுத்தி, ஒருங்கிணைந்து செயல்பட்டு ஒரு கலவர சூழலை உருவாக்குவதில் ஓரளவு வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதும் உண்மை தான்.
இது சீக்கிரம் பிசுபிசுத்து விடும் என்று தோன்றவில்லை. நீண்ட காலமாக எந்தவொரு பிடிப்பும் இல்லாதிருந்த எதிர்க்கட்சிகளுக்கு இது மிகப் பெரிய வாய்ப்பாக அமைந்து விட்டது.
கடைசியாக ஒரு விஷயம். தங்களுக்கு எதிரான சூழல்கள் வலுவடையும் நேரங்கள் அனைத்திலும் இரட்டையர்களின் மிகவும் வலுவான, ஆனால் நுணுக்கமான எதிர்த் தாக்குதல்கள் இருக்கும். ஊமைக்குத்தாக இருந்து எதிரியை நிலைகுலைய வைப்பதில் மிகுந்த சமர்த்தர்கள். எங்கே அடி விழுந்தது என்பதை வெளிப்படையாகச் சொல்ல முடியாத அளவில் அது அமையும். சில மாதங்களுக்குப் பிறகு அப்படியான எதிர்த் தாக்குதலைப் பார்ப்போம்.
இந்த விஷயத்தில் பல அரசியல் இயக்கங்கள் மற்றும் அரசியல் சாரா இயக்கங்களின் நிலைப்பாடுகளையும் உற்று கவனிக்க வேண்டும்.
$$$