-ஆசிரியர் குழு

நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் தொடங்க நிலங்களை அடையாளம் காணுமாறு அண்மையில் மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சில முக்கிய அம்சங்களை நாம் தெரிந்துகொள்வது அவசியம்.
ராஜீவ் காந்தியின் கனவுத் திட்டம்:
கடந்த 1985-ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி, நாடு முழுவதும் பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்கும் நோக்கத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பள்ளியைத் தொடங்கும் திட்டத்தை முன்வைத்தார். இது அவர்து கனவுத் திட்டமாகும்.
இந்தத் திட்டம், 1986-ஆம் ஆண்டின் தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றது. ஹரியாணாவின் ஜஜ்ஜரிலும் மகாராஷ்டிராவின் அமராவதியிலும் முதல் இரு நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டன.
‘ஜவஹர் நவோதயா வித்யாலயா’ என்று அழைக்கப்படும் இந்தப் பள்ளிகள் உண்டு- உறைவிடப் பள்ளிகளாகச் செயல்படுகின்றன. ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை மாணவர்கள் இதில் படிக்க முடியும். கல்வி, உறைவிட வசதிகள் அனைத்தும் இலவசம். அதனை மத்திய அரசு ஏற்கிறது. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் இப்பள்ளிகளில் அமலபடுத்தப்படுகிறது.
இந்தத் திட்டம் தொடங்கப்பட்டபோது தமிழ்நாடும் மேற்கு வங்கமும் மட்டும் இதை ஏற்கவில்லை. நவோதயா பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை பின்பற்றப்படுகிறது. அதாவது ஹிந்தி இங்கு கற்பிக்கப்படுகிறது. எட்டாம் வகுப்புக்குப் பிறகு ஆங்கிலம் அல்லது ஹிந்தி மொழியில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. எனவே இதனை தமிழக திராவிட அரசியல் கட்சிகள் எதிர்க்கின்றன.
மேற்கு வங்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு நவோதயா பள்ளிகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டில் இதுவரை அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.
நீதிமன்றங்களில் வழக்கு:
தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவஹா் நவோதயா வித்யாலயா பள்ளியை நிறுவ வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி ‘குமரி மகா சபா’ என்ற அமைப்பு சார்பில் சென்னை உயா்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை நவோதயா பள்ளிகளைத் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்க உத்தரவிட்டது.
அந்த உத்தரவை எதிர்த்து கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழகஅரசு (முந்தைய திமுக அரசு) உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
பின்னா் 15.12.2025 அன்று அந்தத் தடையை நீக்கிய உச்ச நீதிமன்றம், தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நவோதயா வித்யாலயாவை நிறுவுவதற்குத் தேவையான நிலங்களை அடையாளம் காணுமாறு உத்தரவிட்டது.
இந்த நிலையில், ஜவஹா் நவோதயா பள்ளிகள் வழக்கில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவைத் திரும்பப் பெறக் கோரி தமிழ்நாடு அரசு சார்பில் (தற்போதைய தவெக அரசு) கடந்த ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. 2025 டிசம்பர் 15-ஆம் தேதி, ஒவ்வொரு மாவட்டத்திலும் நவோதயா பள்ளிகளை அமைக்கத் தேவையான நிலத்தை அடையாளம் காணுமாறு தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டுமென தமிழ்நாடு அரசு கோரியது. புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள தவெக அரசு, முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் பிறப்பிக்கப்பட்ட அந்த உத்தரவைத் திரும்பப் பெறக் கோருவதாக மாநில அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா தெரிவித்தார்.
ஆனால், உச்ச நீதிமன்றம் அந்த உத்தரவைத் திரும்பப் பெற மறுத்தது. அதற்குப் பதிலாக, நிலத்தை அடையாளம் காண தமிழ்நாடு அரசுக்கு மேலும் மூன்று மாதங்கள் அவகாசம் வழங்கியது. “இது உடனடியாக நிலத்தைக் கையகப்படுத்த வேண்டுமென்ற உத்தரவு அல்ல, இதற்குப் பொருத்தமான நிலத்தை அடையாளம் காண வேண்டும் என்பதே உத்தரவு” என நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. அப்போது நடைபெற்ற விசாரணை விவாதம்:
“தமிழ்நாடு அரசு தங்களின் மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு மண்ணில் ஹிந்தி கற்பிக்கப்படவே கூடாது என்ற நிலைப்பாடு இருக்கக் கூடாது. உங்கள் மாநிலத்தில் நீங்கள் செய்துவரும் நல்ல விஷயங்களுடன் கூடுதலாக ஒன்றைச் சேர்த்துக்கொள்வது உங்கள் தரத்தைக் குறைத்துவிடாது. தில்லியிலிருந்து வரும் ஒரு விஷயம் சென்னையின் தரத்தைக் குறைத்துவிடாது. சென்னை மக்கள் தில்லியை அந்நியப்படுத்தக் கூடாது. அதேபோல, தில்லியும் சென்னையை அந்நியப்படுத்தக்கூடாது” என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், “இது மாநிலத்தின் கொள்கைக்கு எதிரானது. இது தமிழுக்கு மேலாக ஹிந்தியை முன்னிறுத்துகிறது. இத்தகைய ஒருங்கிணைப்பு அரசியலமைப்பின் நோக்கமல்ல. இது மத்திய அரசு நடத்தும் பள்ளி அல்ல. ஒரு சங்கத்தால் நடத்தப்படும் பள்ளி. இதில் ஹிந்திதான் மேலோங்கி இருக்க வேண்டும் என்பதில் பிடிவாதம் காட்டப்படுகிறது. ஒவ்வொரு விவகாரத்திலும் தனித்தனி கொள்கைகள் இருக்கின்றன, அதனடிப்படையிலேயே செயல்பட முடியும்” எனத் தெரிவித்தார்.
இருப்பினும், தமிழ்நாடு அரசின் வாதத்தை நிராகரித்த நீதிபதிகள், “ஹிந்திதான் பிரச்சினை என்றால் மத்திய – மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தலாம். எங்கள் முந்தைய உத்தரவை அமல்படுத்துங்கள். நிலத்தை கையகப்படுத்துமாறு நாங்கள் உங்களிடம் கேட்கவில்லை. இடத்தைக் கண்டறியுமாறு மட்டுமே கேட்கிறோம்…. நான் ஒரு கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று நீங்கள் கூற முடியாது. இன்று கல்வித் துறை என்றால், நாளை வேறொன்றாக இருக்கலாம். உங்கள் மனதிலிருக்கும் இந்த இறுக்கமான நிலையை நீங்கள் தளர்த்திக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் 15.12.2025 தேதியிட்ட உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மூன்று மாதத்துக்குள் செயல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு டிசம்பர் 14-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
$$$