நதிநீர் இணைப்புக்கு குரல் கொடுப்போம்!

-அர்ஜூன் சம்பத்

தாராபுரத்தில் செப். 8ஆம் தேதி நடைபெற்ற ’அமராவதி ஆரத்தி திருவிழா’வின் நிறைவு நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய இந்து மக்கள் கட்சியின் தமிழகத் தலைவர் திரு. அர்ஜூன். சம்பத் அவர்களது உரையின் சுருக்கமான தொகுப்பு…

நீரெல்லாம் கங்கை
நிலமெல்லாம் காசி
மண்ணெல்லாம் திருநீறு
கல்லெல்லாம் சிவலிங்கம்

என்று தமிழகத்தில் கூறப்படுவதுண்டு. இன்று அமராவதி நதியைக் காக்க துறவிகளின் முயற்சியால் நாம் இங்கு கூடி இருக்கிறோம்.

அகில பாரதிய சன்யாசிகள் சங்கத்தின் தலைவர் தவத்திரு. இராமானந்த மஹராஜ் சுவாமிகள் பல ஆண்டுகளுக்கு முன்னரே நதிநீர் இணைப்புக்காகவும் ஆன்மிக ஒருமைப்பாட்டை வலியுறுத்தியும் நாடு முழுவதும் பாதயாத்திரை சென்றவர்.

காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பாக தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே பூசல் இருந்த காலத்தில், காவிரி தொடங்கும் தலைக்காவிரி முதல், கடலில் கலக்கும் பூம்புகார் வரை பாதயாத்திரை சென்றார் அவர். சுவாமிஜி யாத்திரை சென்றதால் மழை பொழிந்து, நதிநீரை கர்நாடகம் தானாகவே திறந்துவிட வேண்டி வந்தது. போராட்டம் இன்றியே அப்போது பூசல் இயற்கை அன்னையால் தீர்க்கப்பட்டது.

காவிரி நதிநீர்ப் பிரச்னைக்கு சுமுகமாகத் தீர்வு கண்டவர் பிரதமர் அடல் பிகாரி  வாஜ்பாய். அவர் காலத்தில் இரு மாநில முதல்வர்களை அமரவைத்துப் பேசி, பிரச்னையை சுமுகமாகத் தீர்த்தார். காவிரி நதி எந்த ஒரு மாநிலத்திற்கும் சொந்தமானதல்ல; இந்த நாட்டு மக்களுக்கு சொந்தம் என்பதை அவர் நிலைநாட்டினார். அதே உணர்வுடன் ஆறுகளை நாம் காக்க வேண்டும்.

காவிரி புஷ்கரம், தாமிரபரணி புஷ்கரம், பவானி புஷ்கரம் போன்ற நிகழ்வுகளையும், நொய்யல், அமராவதி, திருமணிமுத்தாறு போன்ற நதிகளில் தீப ஆரத்தி விழாக்களையும் நடத்தி, மக்களிடையே நதிநீர்ப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அகில பாரதிய சன்யாசிகள் சங்கம் ஏற்படுத்தி வருவது மகிழ்ச்சிக்குரியது.

ஈஷா யோக மையமும், ‘காவிரியின் கூக்குரல்’ என்ற பெயரில் காவிரிக்காக பிரசார இயக்கம் நடத்தி இருக்கிறது. சின்மயா மிஷனின் துறவியான வணக்கத்திற்குரிய அஜித் சைதன்யா இங்கு உள்ளார். இவர், நொய்யலை மீட்கும் இயக்கத்தை கோவையில் நடத்தி வருகிறார். இவர்களும் நம் நன்றிக்குரியவர்கள்.

காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
கண்டதோர் வையை பொருனைநதி - என
மேவிய யாறு பலவோடத் - திரு
மேனி செழித்த தமிழ்நாடு.

-என்று மகாகவி பாரதி பாடி இருக்கிறார். தமிழகத்தின் வளத்திற்கு உறுதுணை புரிபவை இந்த நதிகள் தான். இந்த நதிகளை நமது அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பாக கையளித்துச் செல்வது நமது கடமை.

அடுத்து நாம் நதிநீர் இணைப்புக்காகவும் குரல் கொடுக்க வேண்டும். காவிரி- கோதாவரி- கங்கை இணைப்புக்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும். அதற்கான திட்டங்களைத் தீட்ட வேண்டும். குஜராத் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்ட சர்தார் சரோவர் திட்டத்தால் நர்மதை நதியின் நீரை ராஜஸ்தான் மக்களும் பயன்படுத்த முடிகிறது. அதுபோன்ற ஊக்கமளிக்கும் திட்டங்களில் கவனம் செலுத்துவோம்.

அதற்கு முன்னோடியாக, நமது முன்னாள் ஜனாதிபதி மேதகு அப்துல் கலாம் ஐயா, தமிழக நதிகளை இணைப்பதற்கு திட்டம் கொடுத்தார். அதுகுறித்து நாம் ஆராய வேண்டும். பருவமழைக் காலங்களில் காவிரியில் மட்டும் 400 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. அதனை வறண்ட நதிகளுக்குத் திருப்ப வேண்டும்.

இதுவரை இரண்டு உலகமகா யுத்தங்கள் நடந்துள்ளன. அடுத்த உலக மகா யுத்தம் தண்ணீருக்காகத் தான் வரும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனவே, நீராதாரங்களைப் பாதுகாப்பது நமது முழுமுதற் கடமையாகும்.

அமரவதி நதியைப் பாதுகாக்க ஓர் அற்புதமான வாய்ப்பு தாராபுரம் பகுதி மக்களுக்குக் கிடைத்துள்ளது. இங்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், “அமராவதி நதியைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன்” என்று வேட்பாளர்களிடம் உறுதிமொழியைப் பெற வேண்டும். அமராவதியைக் காப்பதாக தேர்தல் வாக்குறுதி அளிப்பவரையே தேர்ந்தெடுப்போம் என்று தொகுதி மக்கள் அறிவிக்க வேண்டும்.

அமராவதியால் தான் இந்த ஊருக்கு அழகு. அதனைக் காக்க நாம் அனைவரும் இந்த தீப ஆரத்தியின்போது உறுதியேற்போம்!

சு.வெ.ராமன்:

இந்நிகழ்வில் பேசிய விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தமிழக நிர்வாகி திரு. சு.வெ.ராமன் ஜி பேசியதாவது:

தாயை பழித்தாலும் தண்னீரைப் பழிக்கக் கூடாது என்பது பழமொழி. எனவே, தண்ணீர் மாசுபடாமல் காப்பதில் நம் அனைவருக்கும் பெரும்பங்கு இருக்கிறது. காவிரியில் தொடங்கி, தமிழகம் முழுவதும் உள்ள நதிகளுக்கு தீப ஆரத்தி விழாவை நடத்திவரும் சன்யாசிகள் சங்கத்தின் பணி போற்றுதலுக்குரியது. நதிநீரைக் காக்க வேண்டும் என்ற பெரும் பணியை துறவியர்கள் முன்னெடுத்துள்ளனர். அவர்களுடன் இணைந்து மக்களும் இயக்கமாகச் செயல்படுவோம்.

எஸ்.கே.கார்வேந்தன்:

தாராபுரத்தைச் சார்ந்த அரசியல் தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான திரு. எஸ்.கே.கார்வேந்தன் இந்நிகழ்வில் பேசியதாவது:

பிரதரமாக மோடி பொறுப்பேற்ற பின், தொழில் அபிவிருத்திக்காக அரசு ஏற்பாட்டில் தஜிகிஸ்தான் நாட்டிற்குச் சென்ற தொழில் முனைவோர் குழுவில் நானும் இடம் பெற்றிருந்தேன். அப்போது, அவர்களின் நாட்டில் பனியன் தொழிற்சாலை தொடங்க விரும்புவதாக நாங்கள் தெரிவித்தபோது, அதற்கு அவர்கள் உடன்படவில்லை. பனியன் தொழிற்சாலையால் எங்கள் நீராதாரங்கள் மாசுபடுவதை நாங்கள் விரும்பவில்லை என்றார்கள் அவர்கள். அந்த அளவிற்கு நதிநீர்ப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அவர்களிடம் இருப்பதைக் கண்டு வியந்தோம். அதேசமயம், நாம் எப்படி இருக்கிறோம் என்று ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

நதிகளைப் பாதுகாப்பதில் அரசுக்கும் மக்களுக்கும் சம அளவில் கூட்டுப் பொறுப்புகள் உள்ளன. நதிகளை இப்போது நாம் காத்தால்தான் மக்களைக் காக்க முடியும்.

$$$

Leave a comment