-மகாகவி பாரதி

பக்திப் பாடல்கள்
18. ஓம் சக்தி
நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர்மணிப் பூண்.
பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம், இவள்
பார்வைக்கு நேர் பெருந்தீ.
வஞ்சனை யின்றிப் பகையின்றிச் சூதின்றி
வையக மாந்த ரெல்லாம்,
தஞ்சமென் றேயுரைப்பீர் அவள் பேர்,சக்தி
ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம். 1
நல்லதுந் தீயதுஞ் செய்திடும் சக்தி
நலத்தை நமக்கிழைப் பாள்;
அல்லது நீங்கும் என்றே யுலகேழும்
அறைந்திடுவாய் முரசே!
சொல்லத் தகுந்த பொருளன்று காண்! இங்கு
சொல்லு மவர் தமையே,
அல்லல் கெடுத்தம ரர்க்கிணை யாக்கிடும்
ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம். 2
நம்புவ தேவழி யென்ற மறைதன்னை
நாமின்று நம்பி விட்டோம்
கும்பிட்டெந் நேரமும் ‘சக்தி’ யென் றாலுனைக்
கும்பிடுவேன் மனமே!
அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்
அச்சமில் லாத படி
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும்பதம்
ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம். 3
பொன்னைப் பொழிந்திடு, மின்னை வளர்த்திடு,
போற்றி உனக்கிசைத் தோம்.
அன்னை பராசக்தி என்றுரைத் தோம்; தளை
அத்தனையுங் களைந்தோம்;
சொன்ன படிக்கு நடந்திடு வாய், மன
மே தொழில் வேறில்லை, காண்,
இன்னு மதே யுரைப்போம், சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம். 4
வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு
ளாக விளங்கிடு வாய்!
தெள்ளு கலைத் தமிழ் வாணி! நினக்கொரு
விண்ணப்பஞ் செய்திடுவேன்;
எள்ளத் தனைபொழுதும் பயனின்றி
இரா தென்றன் நாவினிலே
வெள்ள மெனப்பொழி வாய்சக்தி வேல், சக்தி
வேல், சக்தி வேல், சக்தி வேல்! 5
$$$
19. பராசக்தி
கதைகள் சொல்லிக் கவிதை எழுதென்பார்;
காவி யம்பல நீண்டன கட்டென்பார்;
விதவி தப்படு மக்களின் சித்திரம்
மேவி நாடகச் செய்யுளை மேவென்பார்;
இதயமோ எனிற் காலையும் மாலையும்
எந்த நேரமும் வாணியைக் கூவுங்கால்,
எதையும் வேண்டில தன்னை பராசக்தி
இன்ப மொன்றினைப் பாடுதல் அன்றியே. 1
நாட்டு மக்கள் பிணியும் வறுமையும்
நையப் பாடென் றொரு தெய்வங் கூறுமே;
கூட்டி மானுடச் சாதியை ஒன்றெனக்
கொண்டு வையம் முழுதும் பயனுறப்
பாட்டிலே யறங் காட்டெனு மோர்தெய்வம்;
பண்ணில் இன்பமுங் கற்பனை விந்தையும்
ஊட்டி எங்கும் உவகை பெருகிட
ஓங்கும் இன்கவி ஓதெனும் வேறொன்றே. 2
நாட்டு மக்கள் நலமுற்று வாழவும்
நானி லத்தவர் மேனிலை எய்தவும்
பாட்டி லேதனி யின்பத்தை நாட்டவும்
பண்ணிலே களி கூட்டவும் வேண்டி, நான்
மூட்டும் அன்புக் கனலொடு வாணியை
முன்னு கின்ற பொழிதி லெலாங்குரல்
காட்டி அன்னை பராசக்தி ஏழையேன்
கவிதை யாவுந் தனக்கெனக் கேட்கின்றாள். 3
மழைபொ ழிந்திடும் வண்ணத்தைக் கண்டு நான்
வானி ருண்டு கரும்புயல் கூடியே
இழையு மின்னல் சரேலென்று பாயவும்
ஈரவாடை இரைந்தொலி செய்யவும்
உழைய லாம்இடையின் றிஇவ் வானநீர்
ஊற்றுஞ் செய்தி உரைத்திட வேண்டுங்கால்
“மழையுங் காற்றும் பராசக்தி செய்கைகாண்!
வாழ்க தாய்!” என்று பாடுமென் வாணியே. 4
சொல்லி னுக்கெளி தாகவும் நின்றிடாள்
சொல்லை வேறிடஞ் செல்ல வழிவிடாள்,
அல்லி னுக்குட் பெருஞ்சுடர் காண்பவர்
அன்னை சக்தியின் மேனி நலங்கண்டார்,
கல்லி னுக்குள் அறிவொளி காணுங்கால்
கால வெள்ளத் திலேநிலை காணுங்கால்,
புல்லி னில்வயி ரப்படை காணுங்கால்
பூத லத்தில் பராசக்தி தோன்றுமே! 4
$$$
20. சக்திக் கூத்து
ராகம் – பியாக்
பல்லவி
தகத் தகத் தகத் தகதகவென் றோடோமோ? – சிவ
சக்தி சக்தி சக்தி சக்தியென்று பாடோமோ? (தகத்)
சரணங்கள்
அகத்தகத் தகத்தினிலே உள்நின்றாள் – அவள்
அம்மை யம்மை எம்மைநாடு பொய்வென்றாள்
தகத்தக நமக் கருள் புரிவாள் தாளொன்றே
சரண மென்று வாழ்த்திடுவோம் நாமென்றே. (தகத்)
புகப்புகப் புக வின்பமடா போதெல்லாம்
புறத்தினிலே தள்ளிடுவாய் சூதெல்லாம்.
குகைக்கு ளங்கே யிருக்குதடா தீபோலே – அது
குழந்தையதன் தாயடிக்கீழ் சேய்போலே. (தகத்)
மிகத்தகைப்படு களியினிலே மெய்சோர – உன்
வீரம்வந்து சோர்வை வென்று கைதேர
சகத்தினிலுள்ளே மனிதரெல்லாம் நன்றுநன்றென -நாம்
சதிருடனே தாளம் இசை இரண்டு மொன்றேன (தகத்)
இந்திரனா ருலகினிலே நல்லின்பம்
இருக்கும் தென்பார் அதனை யிங்கே கொண்டெய்தி
மந்திரம் போல வேன்ம்டுஅடா சொல்லின்பம் – நல்ல
மதமுறவே அமுதநிலை கண்டெய்தித் (தகத்)
$$$
21. சக்தி
துன்ப மங்லாத நிலையே சக்தி,
தூக்க மிலாக்கண் விழிப்பே சக்தி;
அன்பு கனிந்த கனிவே சக்தி,
ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி;
இன்ப முதிர்ந்த முதிர்வே சக்தி,
எண்ணத் திருக்கும் எரியே சக்தி;
முன்புநிற் கின்ற தொழிலே சக்தி,
முக்தி நிலையின் முடிவே சக்தி. 1
சோம்பர் கெடுக்கும் துணிவே சக்தி,
சொல்லில் விளங்கும் சுடரே சக்தி;
தீம்பழந் தன்னில் சுவையே சக்தி,
தெய்வத்தை எண்ணும் நினைவே சக்தி;
பாம்பை அடிக்கும் படையே சக்தி,
பாட்டினில் வந்த களியே சக்தி;
சாம்பரைப் பூசி மலைமிசை வாழும்
சங்கரன் அன்புத் தழலே சக்தி. 2
வாழ்வு பெருக்கும் மதியே சக்தி,
மாநிலங் காக்கும் மதியே சக்தி;
தாழ்வு தடுக்குஞ் சதிரே சக்தி,
சஞ்சலம் நீக்குந் தவமே சக்தி;
வீழ்வு தடுக்கும் விறலே சக்தி,
விண்ணை யளக்கும் விரிவே சக்தி;
ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி,
உள்ளத் தொளிரும் உயர்வே சக்தி.
$$$
22. வையம் முழுதும்
கண்ணிகள்
வையம் முழுதும் படைத்தளிக் கின்ற
மஹாசக்தி தன்புகழ் வாழ்த்து கின்றோம்!
செய்யும் வினைகள் அனைத்திலுமே வெற்றி
சேர்ந்திட நல்லருள் செய்க வென்றே. 1
பூதங்கள் ஐந்தில் இருந்தெங்குங் கண்ணிற்
புலப்படும் சக்தியைப் போற்று கின்றோம்,
வேதங்கள் சொன்ன படிக்கு மனிதரை
மேன்மையுறச் செய்தல் வேண்டுமென்றே. 2
வேகம் கவர்ச்சி முதலிய பல்வினை
மேவிடும் சக்தியை மேவு கின்றோம்,
ஏக நிலையில் இருக்கும் அமிர்தத்தை
யாங்கள் அறிந்திட வேண்டு மென்றே. 3
உயிரெனத் தோன்றி உணவுகொண் டேவளர்ந்
தோங்கிடும் சக்தியை ஓது கின்றோம்,
பயிரினைக் காக்கும் மழையென எங்களைப்
பாலித்து நித்தம் வளர்க்க வென்றே. 4
சித்தத்தி லே நின்று சேர்வ துணரும்
சிவசக்தி தன்புகழ் செப்பு கின்றோம்,
இத்தரை மீதினில் இன்பங்கள் யாவும்
எமக்குத் தெரிந்திடல் வேண்டு மென்றே. 5
மாறுத லின்றிப் பராசக்தி தன்புகழ்
வையமிசை நித்தம் பாடு கின்றோம்,
நூறு வயது புகழுடன் வாழ்ந்துயர்
நோக்கங்கள் பெற்றிட வேண்டு மென்றே. 6
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி
ஓம்சக்தி என்றுரை செய்திடு வோம்,
ஓம்சக்தி என்பவர் உண்மை கண்டார், சுடர்
ஒண்மை கொண்டார், உயிர் வண்மை கொண்டார். 7
$$$
23. சக்தி விளக்கம்
ஆதிப் பரம்பொருளின் ஊக்கம் – அதை
அன்னை எனப்பணிதல் ஆக்கம்,
சூதில்லை காணுமிந்த நாட்டீர்! – மற்றத்
தொல்லை மதங்கள் செய்யும் தூக்கம். 1
மூலப் பழம்பொருளின் நாட்டம் – இந்த
மூன்று புவியுமதன் ஆட்டம்!
காலப் பெருங்களத்தின் மீதே – எங்கள்
காளி நடமுலகக் கூட்டம். 2
காலை இளவெயிலின் காட்சி – அவள்
கண்ணொளி காட்டுகின்ற மாட்சி,
நீல விசும்பினிடை இரவில் – சுடர்
நேமி யனைத்துமவள் ஆட்சி. 3
நாரண னென்று பழவேதம் – சொல்லும்
நாயகன் சக்திதிருப் பாதம்,
சேரத் தவம் புரிந்து பெறுவார் – இங்கு
செல்வம் அறிவு சிவபோதம். 4
ஆதி சிவனுடைய சக்தி – எங்கள்
அன்னை யருள் பெறுதல் முக்தி;
மீதி உயிரிருக்கும்போதே – அதை
வெல்லல் சுகத்தினுக்கு யுக்தி. 5
பண்டை விதியுடைய தேவி – வெள்ளைப்
பாரதி யன்னையருள் மேவி
கண்ட பொருள் விளக்கும் நூல்கள் – பல
கற்றலில் லாதவனோர் பாவி. 6
மூர்த்திகள் மூன்று பொருள் ஒன்று – அந்த
மூலப் பொருள் ஒளியின் குன்று,
நேர்த்தி திகழும் அந்த ஒளியை – எந்த
நேரமும் போற்று சக்தி என்று. 7
$$$