சாந்திக்கு மார்க்கம் – 4

-வ.உ.சிதம்பரம் பிள்ளை

4. சுயநயமற்ற அன்பை அனுபவித்தல்

கரடு முரடான ஒவ்வொரு கல் துண்டிலும் ஓர் அழகிய பொருளையும், அதனைக் காட்சிக்குக்கொண்டு வருவதற்குக் கைதேர்ந்த ஒரு கல்தச்சன் வரவையும், மிக்கேல் ஆங்கிளோ என்பவர் கண்டார். அவ்வாறே, ஒவ்வொரு மனிதனுள்ளும் தெய்வச் சொரூபம் இருக்கிறது. தன்னைக் காட்சிக்குக் கொண்டு வருவதற்கு நம்பிக்கையாகிய கைதேர்ந்த கல்தச்சனையும், பொறுமையாகிய கல்லுளியையும், அஃது எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அத் தெய்வ சொரூபம் குற்றமற்றதும் சுயநயமற்றதுமான அன்பாக வெளிப்பட்டு அனுபவிக்கப்படுகிறது. ஒவ்வொரு மனித ஹிருதயத்திலும் தெய்வ-அன்பின் சக்தி ஆழ்ந்து மறைந்திருக்கிறது; அஃது ஊடுருவிப் புக முடியாத திண்ணமான பல திரைகளால் மூடப்பட்டிருக்கிறது; அதனுடைய பரிசுத்தமான, குற்றமற்ற சாராம்சம் அழியாமையும் நித்தியத்துவமும் ஆகும். அது மனிதனிடத்துள்ள மெய்ப்பொருள். அது கடவுளுடைய அம்சம்; அஃது உண்மையானது; அழிவில்லாதது. மற்றைய பொருள்களெல்லாம் மாறுதல் அடைகின்றன. அழிந்து போகின்றன; இது மாத்திரம் மாறுதல் அடையாமலும் அழியாமலும் இருக்கின்றது; மிக மிக உயர்ந்த ஒழுக்கத்தை இடைவிடாது சுறுசுறுப்போடு அப்பியசித்து, இந்த அன்பை அனுபவித்தலும், அதில் வாழ்தலும், அதனைப் பூரணமாக அறிதலும், அழியாத் தன்மையுள் பிரவேசித்தலுக்கும். மெய்ப்பொருளோடு ‘ஒன்றாவதற்கும், கடவுளோடு ஐக்கியமாவதற்கும், எல்லாப்பொருள்களின் மத்திய ஹிருதயத்தோடு ஏகமாதற்கும், நம்முடைய சொந்தக் கடவுட்டன்மையையும் அழியாத் தன்மையையும் அறிவதற்கும் நெறிகளாம்.

இந்தத் தன்மை அடைதற்கும், அதனை அறிந்து அனுபவித்தற்கும் ஒருவன் பெரிய பிடிவாதத்தோடும் சுறுசுறுப்போடும் தனது ஹிருதயத்திலும் மனத்திலும் வேலை செய்ய வேண்டும். எப்பொழுதும் தனது பொறுமையைப் புதிதாக்கிக் கொண்டும், தனது நம்பிக்கையைப் பலப்படுத்திக் கொண்டும் இருக்க வேண்டும். ஏனெனில், தெய்வ சொரூபமும் தனது பூரண திவ்ய அழகுடன் வெளிப்படுவதற்கு முன்னர் நாம் விட வேண்டியவை பல உண்டு.

கடவுளைச் சேர்தற்கும் அடைதற்கும் முயற்சிக்கிற மனிதன் பூரணமாகப் பரீட்சிக்கப்படுவான்; இப்பரீட்சை இன்றியமையாதது. ஏனெனில், மெய்ஞானத்திற்கும் கடவுட்டன்மைக்கும் ஆதாரமான உயர்ந்த பொறுமையை ஒருவன் வேறு எவ்விதமாகவும் அடைய முடியாது, அவன் அபிவிருத்தி அடையும் காலத்தில் அவனுடைய வேலைகளெல்லாம் பயனற்றவையாகத் தோன்றும்; அவனுடைய முயற்சிகளெல்லாம் பிரயோஜனமற்றவையாகத் தோன்றும். அவசரமாக வேலை செய்தல் அவனுடைய சொரூபத்தைக் கெடுத்துவிடும். ஒருகால், அவன் தனது வேலை அநேகமாக முடிந்துவிட்டதென்று நினைக்கும்போது அவன் தெய்வ அன்பின் அழகிய உருவமென்று நினைத்துக் கொண்டிருந்த பொருளானது முழுவதும் அழிக்கப்பட்டிருக்கவும் அவன் தனது வேலையைத் தனது முந்திய கஷ்டத்தோடு திரும்பி ஆரம்பிக்க வேண்டுமென்றும் காண்பான். ஆனால், எவன் மேலான பொருளை அபரோக்ஷமாக அறிவதற்கு உறுதியாக முயற்சிக்கிறானோ, அவன் தோல்வி என்னும் ஒன்று உண்டென்று அங்கீகரிக்க மாட்டான். தோல்விகளெல்லாம் வெறுந்தோற்றமே தவிர, உண்மை அல்ல. ஒவ்வொரு தவறுதலும், ஒவ்வொரு வீழ்ச்சியும், ஒவ்வொரு சுயநயச் செயலும் படித்து முடிந்த ஒரு பாடமாம்; அனுபவித்து முடிந்த ஓர் அனுபவமாம். அதிலிருந்து ஞானமாகிய தங்கத் தானியம் ஒன்று உண்டாகும்; அஃது அவனுடைய உயர்ந்த இலட்சியத்தை அடைவதற்கு உதவி செய்யும்.

ஒவ்வொரு பாவச் செயலையும் நம் காலால் மிதித்து ஒழித்து மேல் ஏறும் ஓர் ஏணியை நாம் செய்து கொள்ளலாமென்று தெரிதல், நம்மைக் கடவுளிடத்துக் கொண்டு போய்ச் சேர்க்கும் வழியில் புகுதலாம். இவ்வுண்மையைத் தெரிந்துள்ள ஒருவனுடைய தவறுதல்கள் செத்துப் போன சுயநயக் குப்பைகளாம்; அவற்றினின்று அவன், படிக்கற்கள் மேல் ஏறுதல்போல, மேலான நிலைகளுக்கு ஏறுகிறான்.

உங்கள் தவறுதல்களை நீங்கள் மேல் செல்வதற்குரிய படிகளென்று அறிவீர்களானால், உங்கள் துக்கங்களும் துன்பங்களும் நீங்கள் எங்கெங்கே பலஹீனராய் இருக்கிறீர்கள் என்றும், தவறுகிறீர்கள் என்றும், நீங்கள் எங்கெங்கே மெய்ம்மைக்கும் தெய்வத்தன்மைக்கும் கீழே தாழ்கிறீர்கள் என்றும், உங்களுக்கு வெளிப்படையாகச் சொல்லுகின்ற ஆசிரியர்களாகும்; பின்னர், நீங்கள் இடைவிடாது உங்களையும், உங்கள் ஒவ்வோர் இழுக்கையும் கவனித்துக் காக்கத் தொடங்குவீர்கள்; ஒவ்வொரு துன்பத்தின் வேதனையும் பூரண அன்புக்குச் சமீபமாக உங்கள் உள்ளத்தைக் கொண்டு போவதற்கு, உங்கள் உள்ளத்திலிருந்து எவற்றை நீக்க வேண்டுமென்றும், நீங்கள் எவ்விடத்தில் வேலை செய்யத் தொடங்க வேண்டுமென்றும் உங்களுக்குக் காட்டும். உங்கள் அகத்தின் சுயநயத்திலிருந்து மேன்மேலும் பிரிந்து, நீங்கள் ஒவ்வொரு நாளும் முற்செல்லும் காலையில் சுயநயமற்ற அன்பு நாளடைவில் வெளிப்பட்டு உங்களுக்குத் தோன்றும். நீங்கள் பொறுமையிலும், அமைதியிலும் வளரும்போதும், உங்களுடைய கோபங்களும் வெடுவெடுப்புக்களும் படபடப்புக்களும் உங்களைவிட்டு நீங்கும்போதும், மிக்க வலிமையுள்ள காமங்களும் துரபிமானங்களும் உங்களை அடிமைப்படுத்தியாளுதலை விடும்போதும், உங்களுள் தெய்வத்தன்மை விழிக்கிறதென்றும், நித்திய ஹிருதயத்துக்குச் சமீபிக்கிறீர்கள் என்றும், சுயநலமற்ற அன்புக்கு நீங்கள் தூரத்தில் இல்லை என்றும் காண்பீர்கள். சுயநயமற்ற அன்பைக் கொண்டிருத்தல் சாந்தியும் மரணமின்மையுமாம்.

தெய்வ அன்புக்கும் மனித அன்புக்கும் வேற்றுமை மிக முக்கியமான ஒரு விஷயத்தில்தான் உண்டு. அஃதாவது, தெய்வ அன்பிற்குப் பக்ஷபாதம் கிடையாது. மனித அன்பு மற்றைய பொருள்களையெல்லாம் விட்டு, குறித்த ஒரு பொருளைப் பற்றிக் கொண்டிருக்கும்; அந்தப் பொருள் தன்னிடத்தினின்று நீக்கப்பட்ட பொழுது, அந்தப் பொருளிடத்து அன்பு செலுத்தியவனுக்கு உண்டாகும் துன்பம் பெரிதாயும் ஆழ்ந்ததாயும் இருக்கும். தெய்வ அன்பு பிரபஞ்சம் முழுவதையும் தழுவுகின்றது.; இது பிரபஞ்சத்தின் எந்தப் பாகத்தையும் பற்றிக் கொண்டிருக்கிறதில்லை; அப்படியிருந்தாலும், அது பிரபஞ்சம் முழுவதையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கிறது. தனது மனித அன்பிலுள்ள சகல சுயநல அசுத்த அம்சங்களையும் வெளிப்படுத்தி எரிக்கும் வரையில், அதனை நாளடைவில் சுத்தப்படுத்திக்கொண்டும், விசாலப்படுத்திக்கொண்டும் வந்து எவன் தெய்வ அன்பை அடைகிறானோ, அவன் துன்பம் அடைவதேயில்லை. மனித அன்பு சுருங்கியதாயும், அளவு பட்டதாயும், சுயநயத்தோடு சம்பந்தப்பட்டதாயும் இருக்கிறபடியால் அது துன்பத்தைத் தருகின்றது. தனக்கென ஒன்றை விரும்பாததாயும், முற்றிலும் தூயதாயும் இருக்கிற அன்பிலிருந்து துன்பமே வர முடியாது. அப்படியிருந்தாலும், தெய்வ அன்பை அடைவதற்கு மனித அன்புகளாகிய படிகள் இன்றியாமையாதவை. எந்த உயிரும் மிக மிக ஆழ்ந்ததும், மிக மிகக் கூரியதுமான மனித அன்பைக் கைகொள்ளாமல், தெய்வ அன்பை அடைய முடியாது. மனித அன்புகள் மூலமாகவும், துன்பங்கள் மூலமாகவும் சென்றால் மாத்திரம் தெய்வ அன்பை அடையவும் அனுபவிக்கவும் முடியும்.

மனித அன்புகளெல்லாம் அவை பற்றி நிற்கின்ற உருவங்களைப் போலவே அழியும் தன்மையன; ஆனால், உருவங்களைப் பற்றாததாயும், அழியாததாயும் இருக்கிற அன்பு ஒன்று இருக்கின்றது.

சகல மனித அன்புகளும் மனித வெறுப்புகளால் சம நிறையாக்கப்பட்டிருக்கின்றன. தனக்கு எதிரான பொருளையோ, செயலையோ, கொள்ளாத அன்பு ஒன்று இருக்கிறது; அது தெய்வத்தன்மை வாய்ந்ததாயும், சுயநய மாசற்றதாயும் இருக்கிறது.; அது தனது நல்வாசனையை சகல உயிர்களிடத்தும் ஒரே தன்மையாக வீசுகிறது.

மனித அன்புகள் தெய்வ அன்பின் பிரதிபிம்பங்கள்; அவை துக்கத்தையாவது, மாறுதலையாவது அறியாத மெய்ப்பொருளான அன்புக்குச் சமீபத்தில் ஆத்மாவை இழுக்கின்றன.

தனது தோளின்மீது படுத்திருக்கிற உதவியற்ற சிறு குழந்தையைத் தீவிரமான அன்போடு பற்றிக் கொண்டிருக்கிற தாயானவள், அந்தக் குழந்தை செத்து பூமியின் மீது கிடக்கிறதைப் பார்க்கிறபோது துக்கக் கண்ணீரில் ஆழ்தல் நல்லது. அவளுடைய கண்ணீர் பெருகுதலும், அவளுடைய உள்ளம் உடைதலும் நன்மை. ஏனெனின் அவள் தன் பொறிகளுக்குப் புலப்படும் பொருள்களுடைவும் இன்பங்களுடையவும் நிலையற்ற தன்மைகளை ஞாபகப்படுத்திக் கொள்ளக் கூடும். அவள் நித்தியமாயுள்ள அழிவில்லாத மெய்ப்பொருள்களுக்குச் சமீபமாக இழுக்கப்படுதல் கூடும்.

சகோதரனும், சகோதரியும், தலைவனும், தலைவியும், தங்களுடைய அன்புக்குப் பாத்திரமான பொருள் தத்தம்மினின்று பிடுங்கிக்கொள்ளப்பட்டபொழுது, ஆழ்ந்த துன்பத்தை அனுபவித்தலும் பெருந் துயருள் ஆழ்தலும் நன்மை; ‘அப்போதுதான் எல்லாவற்றிற்கும் மூலமாய்க் காட்சிக்குப் புலப்படாததாயிருக்கிற மெய்ப் பொருளிடத்துத் தங்களுடைய அன்பைச் செலுத்தக் கற்றுக்கொள்வார்கள். அந்த மெய்ப்பொருளிடத்துத்தான் நிலையான திருப்தியைக் காண முடியும்.

வீண் பெருமையும், பேராசையும், சுயலாப விருப்பமும் உள்ள மனிதர்கள் தோல்வியும் அவமானமும் வறுமையும் அடைதல் நல்லது; ஏனெனில், துன்பங்களாகிய எரிக்கிற நெருப்புக்கள் மூலமாக அவர்கள் செல்ல வேண்டும்; அப்படியானால்தான் அடங்காத ஆன்மாவானது வாழ்க்கையின் சிக்கல்களைப் பற்றிச் சிந்திக்கும்படி செய்யக்கூடும்; அவ்வாறுதான் மெய்ப்பொருளை அடைவதற்குத் தக்கபடி அகத்தை மென்மைப்படுத்தவும், தயாராக்கவும் கூடும்.

துன்பத்தின் கொடுக்கு மனித அன்பின் அகத்தில் புகும்பொழுது; வியாகூலமும் தனிமையும் பிரிவும், நட்பையும் நம்பிக்கையையுமுடைய ஆன்மாவை மறைக்கும்பொழுது, தங்குதற்கு நிழலைக் கொடுக்கும் மெய்ப்பொருளின் அன்பை நோக்கி மனம் திரும்புகின்றது. இந்த அன்பை அடையும் யாரும் சௌகரியக் குறைவை நோக்கித் திருப்பப்படுவதில்லை; துன்பத்தால் துளைக்கப்படுவதில்லை; கஷ்ட காலத்தால் விடப்படுவதில்லை. தெய்வ அன்பின் மகிமை தூக்கத்தில் சிட்சிக்கப்படுகிற அகத்தில் மாத்திரம் விளங்கக் கூடும்; அஞ்ஞானத்துடையவும் ‘யான்’ என்னும் அகங்காரத்துடையவும் உயிரும், உறவும் அற்ற வளர்ச்சிகள் நீக்கப்பட்டபொழுதில் மாத்திரம், துக்கத்தால் தண்டிக்கப்பட்ட அகத்தில் தெய்வ அன்பு வெளிப்படும்; அவ்வகத்தினர் முத்தி நிலையின் உருவத்தைக் கண்டு அனுபவிக்கக்கூடும்.

சுய திருப்தியையும் பிரதி பலனையும் விரும்பாததும், வேற்றுமைகள் பாராட்டாததும், மன வருத்தத்தைத் தராததுமான அன்பு ஒன்றே தெய்வத் தன்மை வாய்ந்தது என்று சொல்லப்படத்தக்கது.

‘யான்’ என்பதையும், தீமையின் சௌக்கியமற்ற நிழல்களையும் பற்றிக் கொண்டிருக்கிற மனிதர்கள் தெய்வ அன்பு கடவுளுக்குச் சொந்தமான ஒரு பொருளென்றும், தங்களுக்கு வெளியிலுள்ளதும், எப்பொழுதும் தங்களுக்கு வெளியில் இருக்க வேண்டியதுமான ஒரு பொருளென்றும் நினைக்கிற பழக்கமுடையவர்களாயிருக்கிறார்கள். உண்மையில் கடவுளுடைய அன்பு எப்பொழுதும் ‘யான்’ என்பதற்கு எட்டாததாயிருக்கிறது. ஆனால் ‘யான்’ என்பது அகத்தையும் மனத்தையும் விட்டு நீங்கிய பொழுது, சுயநயமற்ற அன்பு, உயர்ந்த அன்பு, கடவுள் அல்லது நன்மை வடிவமான அன்பு, அகத்தில் நிலையாயுள்ள உண்மைப் பொருள் ஆகின்றது.

இந்தப் பரிசுத்தமான அன்பை உள்ளூர அனுபவித்தலே, மிக அதிகமாகப் பேசப்படுவதும், மிகக் கொஞ்சமாக உணரப்படுவதுமான கிறிஸ்துநாதருடைய அன்பு. அஃது ஆன்மாவைப் பாவத்தினின்று காப்பது மாத்திரமின்றி, தீமை புரிய விரும்பும் மனோ நிலைக்கு மேற்பட்டதாக உயர்த்துகின்றது.

ஆனால் ஒருவன் இந்த மேலான அநுபவத்தை அடைவது எப்படி? இந்த வினாவுக்கு மெய்ப்பொருள் எப்பொழுதும் அளித்ததும் எப்பொழுதும் அளிப்பதுமான விடை:- ”உன் அகத்திலிருந்து உன்னை வெளியேற்று: உன் அகத்துள் நான் அமருகிறேன். ‘யான்’ என்பது இறக்கும் வரையில் தெய்வ அன்பைக் காண முடியாது. ஏனெனில், ‘யான் என்றால் அன்பு என்ற ஒன்று இல்லையென மறுத்தலாம். காணப்படுகிற பொருளை இல்லையென்று மறுத்தல் எப்படி? ‘யான்’ என்னும் மூடுகல் ஆன்மாவின் சமாதிக்குழியின் மேலிருந்து நீக்கப்படும் வரையில், சித்தரவதை செயல்பட்டும், செத்துப் புதைக்கப்பட்டும் இருந்த இறப்பற்ற கிறிஸ்து, அன்பின் பரிசுத்த ஆவி, அநியாத்தின் கட்டுகளை அவிழ்த்தெறிந்து, மறுபடி உயிர்த்தெழுந்து, பூரண மகிமையோடு வெளிவரல் முடியாது.

நாசரத்துக் கிறிஸ்துநாதர் கொல்லப்பட்டார் என்றும் மறுபடியும் அவர் உயிர்த்தெழுந்தார் என்றும் நீங்கள் நம்புகிறீர்கள். நீங்கள் அவ்வாறு நம்புதல் பிழை என்று நான் சொல்லவில்லை; ஆனால், அன்பு வடிவான மெல்லிய ஆன்மா உங்களுடைய சுயநய விருப்பங்களாகிய கொடிய சிலுவை மரத்தில் தினந்தோறும் சேர்க்கப்பட்டு ஆணி அடிக்கப்படுகிறதென்று நீங்கள் நம்புவதற்கு மறுப்பீர்களாயின், நீங்கள் அந்த அவநம்பிக்கையைக் கொள்வது பிழை என்றும், நீங்கள் கிறிஸ்து நாதரின் அன்பை மிகத் தூரத்தில்கூடப் பார்த்ததில்லையென்றும் நான் சொல்லுகிறேன்.

கிறிஸ்துநாதருடைய அன்பின் இரட்சிப்புச் சுவையை அறிந்ததாக நீங்கள் சொல்லுகிறீர்கள். உங்கள் கோபத்தினின்றும், உங்கள் வெடுவெடுப்பினின்றும், உங்கள் வீண் பெருமையினின்றும், உங்கள் சொந்த வெறுப்புகளின்றும். நீங்கள் பிறரைப்பற்றி அபிப்பிராயம் கூறுதலினின்றும், பிறரைக் குறை கூறுதலினின்றும் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்களா? இல்லையானால், நீங்கள் எதிலிருந்து இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள்? கிறிஸ்துநாதரின் பேரன்பை எதில் அநுபவித்திருக்கிறீர்கள்?

எவன் தெய்வ அன்பை அநுபவித்திருக்கிறானோ, அவன் ஒரு புதிய மனிதனாய்விட்டான்; சுயநயத்தின் அம்சங்களால் அசைக்கப்படுதலின்றும் ஆளப்படுதலினின்றும் நீங்கிவிட்டான். அவன் தனது பொறுமைக்கும், தனது தூய்மைக்கும், தனது அகத்தின் ஆழ்ந்த அறத்திற்கும், தனது மாறாத இன்பத்திற்கும் பெயர் பெற்றவன் ஆகிறான்.

தெய்வ அல்லது சுயநயமற்ற அன்பு, ஒரு வேறு மனோபாவனை அல்லது மனோவெழுச்சி அன்று. அது தீமையிலுள்ள நம்பிக்கையையும் தீமையின் ஆள்கையையும் ஒழித்து மேலான நன்மையைச் சந்தோஷமாக ஆன்மா அநுபவிக்கும்படி செய்யும் ஒரு ஞான நிலைமையாம். மெய்ஞ்ஞானிக்கு அறிவும் அன்பும் பிரிக்க முடியாத ஒன்றேயாம்.

இந்தத் தெய்வ அன்பைப் பூரணமாக அநுபவித்தலை நோக்கி உலகம் முழுவதும் சென்று கொண்டிருக்கிறது. இந்தக் காரியத்திற்காகவே பிரபஞ்சம் உண்டாயிற்று; ஒவ்வோர் இன்ப அநுபவமும், பொருள்களையும் கருத்துக்களையும் கொள்கைகளையும், பற்றும் ஆன்மாவின் ஒவ்வோர் வளர்ச்சியும், அத்தெய்வ அன்பை அடைவதற்குரிய ஒரு முயற்சியாம். ஆனால், உலகம் இந்த அன்பை இப்பொழுது அனுபவிக்கவில்லை. ஏனெனில், அது தன்னுடைய குருட்டுத் தனத்தால் அப்பொருளை விட்டுவிட்டு, அதன் ஓடுகிற நிழலைப் பிடித்துக்கொண்டிருக்கிறது. ஆதலால் துன்பமும் துக்கமும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன; உலகமானது தானே வருவித்துக்கொண்ட துன்பங்களால் கற்பிக்கப்பட்டு பூரணசாந்தியையும் அமைதியையும் அளிக்கும் ஞானத்தையும், சுயநயம் இழந்த அன்பையும் காணும் வரையில் அவை தொடர்ந்து கொண்டேயிருக்க வேண்டும். ‘யான்’ என்பதை விடுவதற்குச் சித்தமுடையவராகவும், விருப்பமுடையவராகவும், ‘யான்’ என்பதை விடுவதில் அடங்கியிருக்கிற எல்லாவற்றையும் தெரிந்துகொள்வதற்குத் தயாராகவும் இருக்கிற எல்லோரும், இந்த அன்பை, இந்த ஞானத்தை, இந்தச் சாந்தியை, இந்த மனோ அமைதியை அடையலாம்.

பிரபஞ்சத்தில் தனது இஷ்டப்படி நடக்கும் சக்தி ஒன்றும் இல்லை; மனிதரைக் கட்டுப்படுத்தியிருக்கிற விதியின் மிக மிக வலிய விலங்குகள் தத்தம்மாலேயே உண்டுபண்ணப் பட்டவை. மனிதர் துன்பத்தை உண்டு பண்ணுகிற பொருளோடு சேர்த்து விலங்கிடப்பட்டிருக்கின்றனர்; ஏனெனில், அவர் அவ்விலங்குகளை விரும்புகின்றனர்; ஏனெனில், அவர் ‘யான்’ என்னும் சிறிய இருட்டறை அழகாயும் இன்பகரமாயும் இருக்கிறதாக நினைக்கின்றனர். அச்சிறையை விட்டுவிட்டால் உண்மையான உடைமைகளையெல்லாம் இழந்து விடுவதாக அஞ்சுகின்றனர்.

உன்னால் நீ துன்பம் உறுகின்றாய்; வேறொருவன்
தன்னால் அஃதுன்னைச் சார்ந்ததில்லை- மன்னா! நீ
வாழ்வதும் சாவதுவும் மற்றொருவ னாலல்ல;
தாழ்வுயர்விங் கீவோன்நீ தான்.

விலங்குகளை உண்டுபண்ணித் தன்னைச் சுற்றிச் சிறு இருட்டறையைக் கட்டியதும், அகத்துள் வசிக்காநின்றதுமாகிய சக்தியானது, தான் அவாவும் போதும் விரும்பும் போதும் அந்தச் சிறையை இடித்து எறிந்துவிடக் கூடும். ஆன்மா தனது நெடுங்காலத் துன்ப அநுபவத்தால் அகண்ட ஒளியையும் அன்பையும் பெறுவதற்குத் தகுதியுள்ளதான பொழுது, தனது சிறையை இடித்தெறிய விரும்புகின்றது.

உருவத்தை நிழல் பின்பற்றுவது போலவும், நெருப்பிலிருந்து புகை வருவது போலவும், காரணத்தைக் காரியம் பின்பற்றுகிறது; மனிதருடைய நினைப்புக்களையும் செயல்களையும் துன்பமும் இன்பமும் பின்பற்றுகின்றன; நம்மைச் சுற்றியிருக்கிற உலகத்தில் மறைத்துள்ள, அல்லது வெளிப்பட்டுள்ள, காரணம் இல்லாமல் காரியம் இல்லை; அந்தக் காரண காரியம் முற்றிலும் நியாயமாக நிகழ்கின்றது. மனிதர் துன்ப மகசூலை அறுக்கின்றனர். ஏனெனில், அவர் சமீபமான அல்லது தூரமான சென்ற காலத்தில் தீமையாகிய வித்துக்களை விதைத்திருக்கின்றனர். அவர் இன்பமாகிய மகசூலை அறுக்கின்றனர்; ஏனெனில், அவர் சென்ற காலத்தில் நன்மையாகிய வித்துக்களை விதைத்திருக்கின்றனர். இதைப்பற்றி ஒரு மனிதன் சிந்திக்கட்டும்; இதனை அறிவதற்கு அவன் முயற்சிக்கட்டும்; பின்னர் அவன் நன்மையாகிய வித்துக்களை மாத்திரம் விதைக்கத் தொடங்குவான்! தனது உள்ளமாகிய தோட்டத்தில் அவன் முன் விதைத்திருந்த களைமுளைகளைப் பிடுங்கி எரித்து விடுவான்.

உலகம் சுயநயமற்ற அன்பை அறிகிறதில்லை; ஏனெனில் அது தனது சொந்த இன்பங்களைத் தேடுவதில் ஈடுபட்டும், தனது மடமையினால் அழிந்து போகக்கூடிய இன்பங்களையும் பலன்களையும் நிலையான இன்பங்களாகவும் பலன்களாகவும் கருதி அழியும் பொருள்களைப் பற்றிக் கொண்டும் இருக்கிறது. கொழுப்பினால் உண்டாகும் காமத் தீ பிடித்து, துன்பத்தால் எரிந்து வருந்துவதால், உலகம் மெய்ப்பொருளின், தூய சாந்தியின், அழகைப் பார்க்கிறதில்லை. பிழையும் பிரமையுமாகிய பயனற்ற உமியை உண்டுகொண்டிருப்பதால், அஃது எல்லாவற்றையும் காணும்படியான அன்பு மாளிகைக்குள் புகாத வண்ணம் தடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த அன்பைக் கொள்ளாமலும், அதனை அறியாமலும் மனிதர் அகத்தின் தியாகமில்லாத எண்ணிறந்த சீர்திருத்தங்களை உண்டு பண்ணுகின்றனர்; தனது அகத்தில் தீமையைத் தான் வளர்த்து விருத்தி செய்துகொண்டே, ஒவ்வொரு மனிதனும் தனது சீர்திருத்தமான உலகத்தை நிலையாகத் திருத்தப்போவதாக நினைக்கிறான். மனித அகத்தைச் சீர்திருத்தும் தன்மையுள்ள சீர்திருத்தம் எதுவோ, அதுவே சீர்திருத்தம் என்று சொல்லப்படத் தக்கது; ஏனெனில், எல்லாத் தீமைகளும் மனித அகத்திலிருந்தே உண்டாகின்றன. உலகம் தனது சுயநயத்தையும் கட்சிச்சண்டையையும் விட்டுத் தெய்வ அன்பின் பாடத்தைக் கற்றக்கொள்ளும் வரையில், அது சர்வ வியாபகமான பேரின்பத்தை அனுபவிக்கும் நல்ல காலத்தைக் காண முடியாது.

எளியவரை இகழ்தலை வலியவர் நிறுத்தட்டும்! வலியவரை நிந்தித்தலை எளியவர் நிறுத்தட்டும்! பேராசைக்காரர் எப்படி ஈவது என்றும், காமிகள் எப்படித் தூயர் ஆகலாம் என்றும் அறியட்டும்! கட்சிக்காரர் சண்டையிடுவரை நிறுத்தட்டும்; கருணையில்லாதவர் மன்னிக்கத் தொடங்கட்டும்! பொறாமைக்காரர் மற்றவரோடு சேர்ந்து சந்தோஷிக்க முயற்சிக்கட்டும்! பிறரை நிந்திப்போர் தமது நடத்தையைப் பின்பற்றி நாணம் அடையட்டும்! ஆடவர்களும் மகளிர்களும் இந்த வழியைப் பற்றட்டும்! நல்ல காலம் இதோ வந்துவிட்டது. ஆதலால், எவன் தனது அகத்தைச் சுத்தப்படுத்துகிறானோ, அவனே உலக உபகாரி.

உலகமானது சுயநயமற்ற அன்பை அனுபவிக்கும் நல்ல காலத்தை இப்பொழுது அடையவில்லை; இன்னும் அனேக நூற்றாண்டுகள் வரையிலும் அடையப் போவதுமில்லை; நீங்கள் உங்கள் சுயநயத்திற்கு மேற்பட்டால், அந்த நல்ல காலத்தை இப்பொழுதே அடையலாம்; நீங்கள் பக்ஷபாதம், வெறுப்பு, நிந்தனை இவற்றைக் கடந்து, எவரையும் மன்னிக்கும் இனிய அன்புக்குச் செல்வீர்களானால், அந்த நல்ல காலத்தை அடையலாம்.

எவ்விடத்தில் துவேஷம், வெறுப்பு, நிந்தனை இருக்கின்றனவோ, அவ்விடத்தில் சுயநயமற்ற அன்பு இராது. அது சகல நிந்தனைகளையும் விட்டுவிட்ட அகத்தில் மாத்திரம் இருக்கிறது.

“நான் குடிகாரனையும், ஏமாற்றுகிறவனையும், நீசனையும், கொலைகாரனையும் எவ்வாறு நேசிக்கக்கூடும்? நான் அத்தகைய மனிதர்களை வெறுக்கவும் நிந்திக்கவுமே முடியும்” என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். நீங்கள் அத்தகைய மனிதரை உற்சாகத்தோடு நேசிக்க முடியாதென்பது உண்மை; ஆனால் நீங்கள் அத்தகைய மனிதரைக் கட்டாயம் வெறுக்கவும் நிந்திக்கவும் வேண்டுமென்று சொல்லும்போது எல்லாவற்றையும் ஆள்கிற பெரிய அன்புடன் நீங்கள் பழகினதில்லை என்பதைக் காட்டுகின்றீர்கள்; ஏனெனில், அம் மனிதர் மிகுந்த துன்பங்களுள் பிரவேசித்து முடிவில் அகத் தூய்மையை அடைவது நிச்சயமென்று தெரிந்துகொள்வதற்காகவே, அவர் அவருடைய தற்கால நிலையில் இருக்கிறனரென்றும், தகுதியான காரணங்களினாலே தான் அவர் அந்நிலையில் இருக்கின்றனரென்றும் தெரிந்து கொள்ளும்படியான அகஞானத்தை நீங்கள் அடைய முடியும். அந்த அகஞானத்தை நீங்கள் அடைந்தபொழுது, அவரை வெறுக்கவாவது நிந்திக்கவாவது உங்களால் ஒருசிறிதும் முடியாது; நீங்கள் அவரைப்பற்றி எப்பொழுதும் பூரண அமைதியோடும் ஆழ்ந்த இரக்கத்தோடும் நினைப்பீர்கள்.

ஜனங்கள் உங்களுக்கு எந்த வழியிலாவது இடையூறு செய்யும் வரையில், அல்லது நீங்கள் விரும்பாத ஒன்றைச் செய்யும் வரையில், நீங்கள் அவர்களை நேசித்துக்கொண்டும் உயர்வாகப் பேசிக்கொண்டும் இருந்து, அவர்கள் அவற்றைச் செய்த பின்னர் நீங்கள் அவர்களை வெறுத்து தாழ்வாக பேசுவீர்களாயின் நீங்கள் கடவுளுடைய சொரூபமாகிய அன்பால் ஆளப்படவில்லை. உங்கள் அகத்தில், நீங்கள் பிறரை இடைவிடாது குற்றம் சாற்றிக்கொண்டும், நிந்தித்துக்கொண்டும் இருப்பீர்களாயின், சுயநயமற்ற அன்பு உங்களினின்று மறைக்கப்பட்டிருக்கிறது.

அன்பு எல்லா உயிர்களுடைய அகத்திலும் இருக்கிறதென்று எவன் தெரிகின்றானோ, எல்லா உயிர்களையும் ஆளும் அன்பின் வலிமையை எவன் உணர்கின்றானோ, அவனுடைய அகத்தில் பிறரை நிந்தித்தலுக்கு இடம் இல்லை.

மனிதர் இந்த அன்பைத் தெரிந்துகொள்ளாமல், பிறரை விசாரித்துச் சிட்சிக்கும் நித்திய நீதிபதி ஒருவன் இருக்கிறான் என்பதை மறந்து, பிறரை விசாரித்துச் சிட்சிப்பதற்குத் தாமே நீதிபதிகள் ஆகின்றனர். மனிதர் தம்முடைய கொள்கைகளினின்றும், தம்முடைய சீர்திருத்தங்களினின்றும். வழிகளினின்றும் பிறர் விலகும்போது, அவரை மதோன்மத்தர் என்றும், சமநிலையற்றவர் என்றும், அறிவு, உண்மை யோக்கியதை இல்லாதவர் என்றும் கூறி வருந்துகின்றனர். பிறர் தம்முடைய நிலைக்குச் சற்றேறக்குறைய ஒத்திருக்கும்போது அவரை நன்கு மதித்துப் பேசி மகிழ்கின்றனர். அத்தகைய மனிதரே ‘யான்’ என்னும் அகங்காரத்தைக் கொண்டிருக்கிறவர். ஆனால் எவனுடைய அகத்தில் மேலான அன்பு வேர் ஊன்றியிருக்கிறதோ, அவன் பிறரை அவ்வாறு வருத்தி வகுக்கிறதில்லை; தன்னுடைய கொள்கைகளைப் பிறர் கொள்ளும்படி நாடுகிறதில்லை; தன்னுடைய வழிகளின் மேம்பாட்டைப் பிறருக்கு எடுத்துக் கூறுவதில்லை. அன்புச் சட்டத்தைத் தெரிந்து, அதனைப் பிறர்பால் செலுத்தி, எல்லாரிடத்திலும் ஒரேவித அமைதியான மனப்போக்கையும் அகப்பிரியத்தையும் கொண்டிருக்கிறான்.

தீய ஒழுங்கினரும் நல்ல ஒழுங்கினரும், மடையரும் அறிஞரும், கற்றாரும் கல்லாரும், சுயநயக்காரரும் பரநயக்காரரும் ஒரே தன்மையாக அவளுடைய அமைதியான நினைப்பின் வாழ்த்தைப் பெறுகின்றார்கள்.

நீங்கள் உங்களைச் சீர்திருத்துவதில் இடைவிடாது முயற்சிப்பதாலும், உங்கள்மீது வெற்றிமேல் வெற்றி அடைவதாலும், இந்த மேலான ஞானத்தை, இந்தத் தெய்வ அன்பை அடையக்கூடும். எவன் தூய்மையான அகத்தைக் கொண்டிருக்கிறானோ, அவன்தான் கடவுளைக் காண முடியும். உங்களுடைய அகமானது போதிய அளவு தூயதான காலையில், நீங்கள் புதிய பிறப்பை அடைவீர்கள், ஒரு போதும் அழியாததும், மாறாததும், துன்பத்தையாவது துக்கத்தையாவது தராததுமான அன்பு உங்கள் உள்ளத்தில் ஒளிரும். நீங்கள் சாந்தியாய் இருப்பீர்கள்.

எவன் தெய்வ அன்பை அடைவதற்கு முயற்சிக்கிறானோ, அவன் பிறரைக் குறைகூறும் தன்மையை ஒழிப்பதற்கு நாடிக் கொண்டிருக்கிறான்; ஏனெனில், எவ்விடத்தில் தூய ஆன்மஞானம் இருக்கிறதோ, அவ்விடத்தில் பிறர்பால் குறைகாணும் தன்மை இருக்க முடியாது; பிறர்மீது குற்றம் காண முடியாத அகத்தில் மாத்திரமே அன்பு பூரணமாகி முற்றிலும் உணரப்படுகிறது.

கிறிஸ்தவர் நாஸ்திகரை நிந்திக்கின்றனர்; நாஸ்திகர் கிறிஸ்தவரைப் பரிகசிக்கின்றனர்; துவைதிகளும் அத்துவைதிகளும் இடைவிடாது வாய்ச் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். சாந்தியும் அன்பும் தங்கியிருக்க வேண்டிய அவர்களுடைய உள்ளங்களில் பகைமையும் வெறுப்பும் தங்கியிருக்கின்றன.

”தனது சகோதரனை வெறுக்கிறவன் ஒரு கொலைஞன்; தெய்வ அன்பாகிய ஆத்மாவைச் சிலுவையில் இடுகின்றவன், நீங்கள் சகல மதத்தினர்களையும் மதமற்றவர்களையும் ஒரே பக்ஷபாதமற்ற தன்மையில் மதிக்கும் வரையில், ஒரு சிறிதும் துவேஷம் இல்லாமலும் முற்றிலும் சமத்துவமாகவும் நேசிக்கும் வரையில், தன்னைக் கொண்டிருக்கிறவனுக்கு விடுதலையையும் மோக்ஷத்தையும் கொடுக்கும் அன்பை அடைவதற்கு நீங்கள் முயற்சிக்க வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். தெய்வ ஞானத்தையும், சுயநயமற்ற அன்பையும் அடைந்திருந்தல் பிறர்பால் குற்றம் காணும் தன்மையை அடியோடு ஒழிக்கின்றனது; எல்லாத் தீமைகளையும் போக்குகின்றது. அஃது அன்பும், நன்மையும், நீதியுமாகவும், பிரபஞ்ச முழுவதும் வியாபித்ததாகவும், எல்லாவற்றிற்கும் மேம்பட்டதாகவும், எல்லாவற்றையும் வெல்வதாகவும், அழிக்கப்படாததாகவும் காணப்படும் தூய காட்சியின் உன்னத ஸ்தானத்திற்கு உயர்த்துகின்றது.

உங்களுடைய மனத்தை உறுதியான, பக்ஷபாதமற்ற, சாந்தமான நினைப்புக்களிற் பழக்குங்கள்; உங்களுடைய அகத்தைத் தூய்மையிலும் கருணையிலும் பழக்குங்கள்; உங்களுடைய நாவை மௌனத்திலும், உண்மையான குற்றமற்ற பேச்சிலும் பழக்குங்கள்; நீங்கள் பக்தியும் சாந்தியுமாகிய வழியில் பிரவேசித்துக் கடைசியில் அழியாத அன்பை உணர்வீர்கள். அவ்வாறு வாழுங்கால், பிறரை உங்கள் மதத்தில் சேர்க்க நாடாமல், பிறருக்கு உங்கள் மதஉண்மையை விளக்குவீர்கள். தர்க்கம் செய்யாமல் நீங்கள் போதிப்பீர்கள். ஆசையை வளர்க்காமல் நீங்கள் ஞானிகள் ஆவீர்கள். மனிதருடைய அபிப்பிராயங்களைப் பெற முயலாமல், நீங்கள் அவர்களுடைய அகங்களை ஆள்வீர்கள். ஏனெனில், அன்பு சர்வ வல்லமை உள்ளது; எல்லாவற்றையும் வெல்லத்தக்கது. அன்பின் நினைப்புக்களும், செயல்களும், சொற்களும் ஒரு காலத்திலும் அழிய மாட்டா.

அன்பு சர்வ வியாபகமும், சர்வ மேம்பாடும், சர்வ ஆள்கையும் உள்ளதென்று தெரிந்துகொள்ளுதல், தீமையின் வலைகளிலிருந்து விடுபடுதலாம்; அகக் கலக்கத்தினின்று விடுபடுதலாம். எல்லா மனிதர்களும் தத்தம் சொந்த வழியில் மெய்ப்பொருளைக் காண்பதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர் என்று தெரிந்துகொள்ளுதல், திருப்தியையும், தூக்கமின்மையும் அமைதியையும் அடைதலாம். இதுதான் சாந்தி; இதுதான் சந்தோஷம்; இதுதான் மரணமின்மை; இதுதான் தெய்வத்தன்மை; இதுதான் சுயநயமற்ற அன்பை அனுபவித்தல்!

கடற்கரை நின்றேன்; திடக்கடல் தாக்கலை
மலைகளை எதிர்க்கும் மாட்சியைக் கண்டேன்;
எண்ணில் தாக்கற் கிடையில் எப்படி
மலைநிற் கிறதென மனத்தெண்ணுங்கால்
''மலையைக் கரைப்பதற் கலையின் இடைவிடா
முயற்சிகள் பயனில'' என மொழிந் தேன்காண்.
ஆனால் மலைகளை அலைகள் எப்படி
உடைத்ததென் றெண்ணினேன்; உடனென் தாட்கீழ்
மலையுதிர் கல்மணல் அலையுடன் ஓடலைக்
கண்டேன்; பின்னர்க் கடலலை யின்கீழ்
பழைய புவிநில அடையாளம் கண்டேன்!
அலைக்குக் கற்கள் அடிமையென் றறிந்தேன்.
பொறுமை மென்மைசார் இடைவிடாஓட்டத்தான்
நீர்செய் மாபெரும் வேலையைக் கண்டேன்;
அவை எவ்வாறு பெரியகல் மலைகளைத்
தாட்கீழ்ப் படுத்தித் தரையாக் கினவோ?
மெல்லிய துளிகள் கல்லின் மலைகளை
எப்படி வென்றவோ? எவ்வா றழித்தவோ?
மனித உயிர்களின் எதிர்க்கும் இயல்புள
துனிமிகு பாவமாம் நனிபெரு மலைகள்
சென்றுவந் துருண்டகன் றென்றும் பாயும்
அன்பின் மெல்லிய அலைநீர்க் கிடங்கொடுத்
தெதிர்ப்பின் வலியெலாம் இழந்தும் விடுத்தும்
உளம்ஒவ் வொன்றுளும் செலுமா றறிந்தேன்.

(தொடர்கிறது)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s