வையத் தலைமை கொள்!- 7

-சேக்கிழான்

புதிய பார்வையில் புதிய ஆத்திசூடி

7. புதிய பார்வையும் புதிய பாதையும்…

காலந்தோறும் இலக்கியங்கள் பிறக்கின்றன. காலம் மாறுவதற்கேற்ப இலக்கியங்களிலும் காட்சிகள் மாறுகின்றன. எனினும் அவற்றின் அடிநாதம் மானுடகுல உயர்வே.

பழையன கழிதலும் புதியன புகுதலும் 
வழுவல, கால வகையினானே

என்பது நன்னூல் நூற்பா (462) கூறும் இலக்கணம். அதன்படியே பாலர் வகுப்பில் பயிலும் ஆத்திசூடியை புதிய பார்வையில் மீண்டும் படைத்திருக்கிறார் மகாகவி பாரதி. இதில் பெரும்பாலான பகுதிகளில் அவர் ஔவையுடன் ஒரே பாதையில் தான் பயணிக்கிறார்.

சோம்பித் திரியேல் (ஔவை- 54)- கெடுப்பது சோர்வு (பாரதி- 19); நூல் பல கல் (ஔவை- 71)- நூலினைப் பகுத்துணர் (பாரதி- 59); இளமையில் கல் (ஔவை- 29)-, கற்றது ஒழுகு (பாரதி- 13); நயம்பட உரை (ஔவை- 17)- சொல்வது தெளிந்து சொல் (பாரதி- 34); கீழ்மை அகற்று (ஔவை- 35)- கீழோர்க்கு அஞ்சேல் (பாரதி- 16); நோய்க்கு இடங்கொடேல் (ஔவை- 76)- மூப்பினுக்கு இடங்கொடேல் (பாரதி- 80); நெற்பயிர் விளை (ஔவை-72)- மேழி போற்று (பாரதி- 82).

-என, ஔவையும் பாரதியும் ஒத்த கருத்துடன் ஒரே பாதையில் பயணிக்கும் இடங்கள் மிகவே உள்ளன.

எனினும், அடிமைப்பட்ட நாட்டில் இருந்த பாரதியின் காலம் சில இடங்களில் ஔவையுடன் அவரை மாறுபடச் செய்வதையும் காண்கிறோம்.

ஆறுவது சினம் (ஔவை- 2)- ரௌத்திரம் பழகு (பாரதி- 96); தையல் சொல் கேளேல் (ஔவை- 63)- தையலை உயர்வு செய் (பாரதி- 50); மீதூண் விரும்பேல் (ஔவை- 91)- ஊண் மிக விரும்பு (பாரதி- 6); தொன்மை மறவேல் (ஔவை- 64)- தொன்மைக்கு அஞ்சேல் (பாரதி- 51); போர்த்தொழில் புரியேல் (ஔவை- 87)- போர்த்தொழில் பழகு (பாரதி74); முனை முகத்து நில்லேல் (ஔவை- 92) – முனையிலே முகத்து நில் (பாரதி- 79).

மேற்கண்டவாறு ஔவைப்பாட்டியுடன் பேரன் பாரதி கருத்து மாறுபடும் இடங்கள் எண்ணி மகிழத் தக்கன. அதேபோல, ஔவை சொன்னதைவிட ஒருபடி மேலாக பாரதி செல்லும் இடங்களும் உள்ளன.

தேசத்தோடு ஒட்டி வாழ் (ஔவை- 62)- தேசத்தைக் காத்தல் செய் (பாரதி- 49); தெய்வம் இகழேல் (ஔவை- 61)- தெய்வம் நீயென்று உணர் (பாரதி- 48). ஆகிய வரிகளில் இருவரின் உயர்ந்த நோக்கம் ஒன்றுடன் ஒன்று போட்டியிடுவதைக் காண முடிகிறது.

ஔவையின் ஆத்திசூடி, தமிழ்ப் பேரரசுகளின் வீழ்ச்சிக் காலத்தில் எழுதப்பட்டது. சமுதாயத்தில் ஒரு கட்டமைப்பையும் ஒழுங்கையும் உருவாக்கவே நீதிநூல்கள் எழுதப்பட்டன. அக்காலத்தில் அதனை ஆத்திசூடி முழுமையாக செய்தது.

பாரதியின் காலம், தாய்நாடு மிலேச்சர்தம் கொடுங்கரங்களில் சிக்கித் தவித்த காலம். எனவே, சில இடங்களில் அவர் முந்தைய கட்டுக்களைத் தகர்க்கத் துணிகிறார். இதுவே பாரதி சில இடங்களில் ஔவையுடன் மாறுபடக் காரணம். இது அவரது புதிய பார்வை. அதனால் தமிழ் இலக்கியத்தில் விளைந்தது புதிய பாதை.

பாரதியின் முதல் இலக்கு அச்சம் தவிர்ப்பது. அதன் இறுதி இலக்கு வையத் தலைமை கொள்வது. அதற்கான கருவிகளை மிகத் தெளிவாக வரையறுத்திருக்கிறார் மகாகவி.

பாரத பூமி பழம்பெரும் பூமி.
நீரதன் புதல்வர், இந்நினைவு அகற்றாதீர்!

என்று ‘சிவாஜி’ கவிதையில் பாரதப் புதல்வர்களுக்கு நினைவுறுத்தும் மகாகவி பாரதி,

“எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்”
என்றுரைத்தான் கண்ண பெருமான்;
எல்லாரும் அமரநிலை எய்து நன்முறையை
இந்தியா உலகிற்கு அளிக்கும்- ஆம்
இந்தியா உலகிற்கு அளிக்கும்- ஆம் ஆம்
இந்தியா உலகிற்கு அளிக்கும்!

என்று ‘பாரத சமுதாயம்’ கவிதையில் முழங்குகிறார். இதுவே அவரது இதயகீதம். உலகில் அமைதி தவழ வேண்டுமானால், பாரதம் உலகத் தலைமை கொள்ள வேண்டும் என்பதே பாரதியின் அடிநாதம். வையத் தலைமை கொள் என்று பாரத இளைஞனுக்கு அவர் ஆணையிடுவதன் தாத்பரியம் அதுவே.

இதனையே சுவாமி விவேகானந்தரும் தீர்க்கதரிசனமாக உரைத்திருக்கிறார்:

எனது வீர இளைஞர்களே! செயலில் ஈடுபடத் தொடங்குங்கள். தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள்….

நம்புங்கள்! உறுதியாக நம்புங்கள்! இந்தியா கண்விழித்து எழுந்திருக்க வேண்டும் என்று ஆண்டவன் கட்டளை பிறந்துவிட்டது. இந்தியா எழுச்சி பெற்று முன்னேற்றப் பாதையில்தான் செல்ல வேண்டும் என்று இறைவன் ஆணை பிறப்பித்தாகிவிட்டது.

இப்போதிருக்கும் இந்தக் குழப்பத்திலிருந்தும், போராட்டத்திலிருந்தும் மகிமை பொருந்திய பரிபூரண எதிர்கால இந்தியா கிளம்பி எழுவதை நான் என் மனக்கண்ணால் பார்க்கிறேன். அது எவராலும் வெல்ல முடியாததாகக் கிளம்பி எழும்புவதை நான் என் மனக்கண்ணால் பார்க்கிறேன்…

புராதன பாரத அன்னை மீண்டும் ஒரு முறை விழிப்படைந்துவிட்டாள். தனது அரியணையில் அவள் அமர்ந்திருக்கிறாள். புத்திளமை பெற்று, என்றுமே இல்லாத அரும்பெரும் மகிமைகளோடும் அவள் திகழ்கிறாள். இந்தக் காட்சியைப் பட்டப்பகல் வெளிச்சத்தைப் போல் நான் தெளிவாகப் பார்க்கிறேன். அமைதியும் வாழ்த்தும் நிறைந்த குரலில் இந்த பாரத அன்னையை உலகம் முழுவதிலும் பிரகடனப்படுத்துங்கள்!

மகான்களின் வாழ்த்துகள் பொய்ப்பதில்லை. மகாகவியின் கவிதை வரிகளோ, மந்திரம் போன்றவை. எனவே, சுவாமி விவேகானந்தரின் அடியொற்றி, மகாகவி பாரதியின் வழிகாட்டுதலில் பாரத இளைஞன் நடையிடட்டும்! அவனுக்காக ஒளிபொருந்திய காலம் உறுதியாகக் காத்திருக்கிறது. ஏனெனில் அதை உருவாக்கப் போவதே அவன்தான்!

பாரத அன்னை வெல்க!

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s