பதிப்புலகில்  திருக்கருவையந்தாதிகள்:  பகுதி-1

-கருவாபுரிச் சிறுவன்

வரதுங்க ராம பாண்டிய மன்னர் இயற்றிய ‘திருக்கருவை அந்தாதிகள்’ நூற்கள் இதுவரை யார் யாரால் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன என்று ஆராய்கிறார், திரு. கருவாபுரிச் சிறுவன். இது கட்டுரையின் முதல் பகுதி…

அணியார் பூங்களவின் நறுங்கனியே! தேனே!
    அமுதே! சுவேத நிறத் தப்பனே! மா
மணியே! மாணிக்கமே! குணக்குன்றே! என் 
   வாழ்வே அம்பலத்தரசே! அமரர் யாரும்
பணியானந்தக் கடலே! கண்ணே! என் கற்பகமே!                                

தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில் வட்டத்திலுள்ள  கரிவலம் வந்த நல்லூர் என்னும் தலத்தில் எழுந்தருளி அருள் செய்பவர் பால்வண்ண நாதர்.  இவர் சுயம்பு மூர்த்தியாவார். இவருக்கு முகலிங்க நாதர் என்றொரு திருநாமமும் உண்டு. 

இவர் மீது பிற்காலப் பாண்டிய மன்னர்களில் ஒருவரான வரதுங்க ராம பாண்டிய மன்னர் என்னும் சிவபக்தர் என்றும் வாடாத பாமாலைகளாக, காப்புச் செய்யுள் நீங்கலாக 300 பாமாலைகளைப் பாடியுள்ளார்.  அப்பாடல்களை   ‘திருக்கருவை அந்தாதிகள்’ என்பர். 

வரதுங்க ராம பாண்டிய மன்னரால் பாடப்பெற்ற, 

  • திருக்கருவை கலித்துறை அந்தாதி, 
  • திருக்கருவை வெண்பா அந்தாதி,
  • திருக்கருவை பதிற்றுப்பத்து அந்தாதி,

இந்த மூன்று அந்தாதிகளும் அவர்  காலத்திலேயே,  ஓலைச்சுவடிகளில் பதிப்பிக்கப் பட்டிருக்கலாம். ஆனால் கால வெள்ளத்தில் அவை நமக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. என்றபோதும், மூன்று அந்தாதிகளும் முழுமையாக கரிவலம் வந்த நல்லூர் மக்களுக்கு இன்றும் கிடைக்கிறது என்றால்,  அது  பால்வண்ண நாதரின் தயவு. வரதுங்க ராம பாண்டிய மன்னரின் காருண்யம். 

மன்னர் காலத்திற்குப் பிறகு திருக்கருவையந்தாதிகளை கற்றறிந்த சான்றோர்களும், ஆன்றோர்களும் குட்டித்திருவாசகம் என அழைத்து வரலாயினர்.

அந்தாதி சிறப்புகள் 

வாழ்நாள் முழுவதும் வேதம், ஆகமம், திருமுறை, சித்தாந்தம், புராணம், தமிழ் என பலவாறாக தொண்டு செய்த ஞானியாகவும், மறக்குலத்தில் உதித்த மாணிக்கமாகவும் திகழ்ந்தவர் குன்றக்குடி மேலமடத் தலைவர் எங்கள் சற்குரு கணபதி சுவாமிகளின் முதன்மைச் சீடர்களில் ஒருவராகிய  கல்லல் குக மணிவாசக சரணாலய சுவாமிகள் ஆவார். 

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள செங்கோட்டையில் மறவர்களுக்கு ஒரு மாநாடு நடத்த வேண்டும் என பல முயற்சிகளை எடுத்தவர். அம்பலக்காரரான இவர், தினந்தோறும் திருவாசகப் பாடல்கள் முழுவதையும்  பாராயணம் செய்த  பின்னரே உணவருந்தும் நியமம் உடையவர். இப்பிரபுவே, மரபு இலக்கியங்கள் புனைவதில் வல்லவர் என நா.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள் தனது சுய சரிதையில் குறிப்பிட்டுள்ளார்.  

திருக்கருவை அந்தாதிகளுக்கு  ‘குட்டித்திருவாசகம்’ என்னும் சிறப்பு அடைமொழியை சைவத்தமிழ் இலக்கியமாகிய இவ்வுலகிற்குப் பிரகடனப்படுத்தியவர்  கல்லல் குக மணிவாசக சரணாலய  சுவாமிகளே என்பதை, விரிவாகவும், தெளிவாகவும்  ‘கருணைக்கடலும் கல்விக்கடலும்’ என்ற நூலில் கண்டு மகிழலாம்.

கரிவலம் வந்த நல்லூருக்கு மேற்கே 2 கி.மீ. தொலைவில் இருப்பது செண்பகாபுரம், இராமச்சந்திராபுரம் என்னும் கிராமங்கள்.  இக்கிராமத்தில் மாவீரர் பூலித்தேவரின் புகழ் பாடும் மறவர்கள் கூட்டம் அதிகம். இங்கு ஒருவர் இறந்தால் திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி பாடும் மரபு இருந்து வருகிறது. மேலும், திருக்கருவை அந்தாதி பாடல்கள் பாடினால் மரத்திலுள்ள கூவை இறந்து விடும் என்ற சொல்லாட்டு வழக்கும் இப்பகுதி மக்களிடையே காணப்படுகிறது. 

இதில் இருந்து  அடியேனுக்கு தெரிந்த உண்மை யாதெனில் கூவை பறவையை அறியாமைக்கு நிகராகச் சொல்லுவர். ஆக திருக்கருவை அந்தாதி பாடல்களை ஒருவர் மனமுருகிப் பாடினால் அறியாமை நீங்கும் என்பது இப்பகுதி மக்களிடையே மறை பொருளாக உள்ள ரகசியமாகும்.   

இது போன்ற பல்வேறு சிறப்புகளை உடைய இந்நூற்களை யாரெல்லாம் அச்சுவாகனம் ஏற்றி அழகு பார்த்தார்கள்,  பதிப்பித்துப் பாதுகாத்தார்கள் என்பதை கரிவலம் வந்த நல்லூரில் பிறந்த ஆஸ்திக அன்பர்களும், தமிழர்வலர்களும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். அதுவே நாம் வரதுங்க ராம பாண்டிய மன்னருக்கு செய்யும் கைம்மாறாகும். 

குறிப்பாக, கரிவலம் வந்த நல்லூரைச் சார்ந்தவர்கள், இவ்வூரைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் திருக்கருவை அந்தாதிகளை அருளிச் செய்தது வரதுங்கராம பாண்டியர் தான் என பதிப்பித்து உள்ளார்கள்.  இந்த விஷயம் தெரியாத அன்பர்கள் சிலர் திருக்கருவை அந்தாதிகளை பதிப்பித்தது அதிவீர ராம பாண்டியர் தான் என குறிப்பிடுகிறார்கள்.

ஆகஸ்டு  3., 1835 ஆம் நாள் இந்தியர்கள் அச்சகம் வைத்துக் கொள்ளும் தடைச்சட்டத்தை நீக்கினார் அன்றைய ஆளுநர் சார்லஸ் மெட்காப். அதனால் தமிழகத்திலும் பிற இடங்களிலும் அச்சுக்கூடங்கள் வைத்து நமது பாரம்பரிய திருநெறிய தமிழ்  நூற்களைப் பேணி புரந்தருளும் பணியில் ஈடுபட்டார்கள் நம்மவர்கள். 

அதில் முதன்மையானவர்களாக யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுக நாவலர், வையாபுரிப் பிள்ளை, தமிழ்த்தாத்தா உ.வே.சுவாமிநாதய்யர் என்னும் மூவரும் அனைவருக்கும் தெரிந்தவர்கள். 

இவர்களைப் போல அயராது உழைத்து தமிழைக் காத்து நின்றவர்கள் பலர். அவர்களுள், திருக்கருவையந்தாதிகளை ஆண்டுவாரியாக  அச்சிட்டவர்களைப் பற்றி சுருக்கமாக அறிந்து கொள்வதே இக்கட்டுரையின் முதன்மை நோக்கம். இலங்கை வாழ் அன்பர்களும் திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதியை பதிப்பித்தார்கள் என்பது தான் ஆச்சரியமான தகவல்.

இருக்கினும் நிற்கும் போதும் 
     இரவுகண் துயிலும் போதும் 
பொருக்கென நடக்கும் போதும்
     பொருந்தியே ஊண் துய்க்கும் போதும்
முருகிதழ்க் கனிவாயாரை 
     முயங்கி நெஞ்சழியும் போதும்
திருக்களாவுடைய நம்பா 
     சிந்தை உன்பால் தாமே. 

    -வரதுங்க ராம பாண்டியர்   

க.சரவணப்பெருமாளையர் (1936): 

திராவிட மாபாஷ்ய கர்த்தாவாகிய ஸ்ரீமத் சிவஞான யோகிகளின் முதன்மைச் சீடராகத் திகழ்ந்தவர் திருத்தணிகை கச்சியப்ப முனிவர். சுவாமிகளை கவிரக்ஷகர் என்பர். திருத்தணிகையில் வாழ்ந்த காலத்தில் இப்பெருமானுக்கு  அனுக்கைத் தொண்டு புரிந்து வந்தவர் ச.கந்தப்பையர் என்னும் அன்பர். சங்கம வகுப்பினைச் சார்ந்த வீர சைவர்.  தணிகை வாழ் தலைவன் மீது அதீத பக்தி கொண்டு வாழ்ந்த இவர் திருத்தணிகை தலத்தின் மீது பல்வேறு இலக்கியங்களை இயற்றிய பெருமைக்குரியவர். 

கந்தைப்பையருக்கு நீண்ட நாள்களாக மகப்பேறு இல்லை. அக்குறையைப் போக்க அன்னாரின் துணைவியார் திருவேங்கடநாதரிடம் வேண்டிக் கொண்டார்; இரட்டை ஆண் குழந்தைக்கு திருவருட் சித்தம் கூட்டி வைத்தது. அதனால் பெருமாள் பெயரையும் சேர்த்து விசாகப்பெருமாளையர், சரவணப்பெருமாளையர் என்ற திருநாமங்களை சூட்டி அப்பிள்ளைகளை வளர்த்து வந்தார்கள். 

அவர்கள் பெரியவர்களாக வளர்ந்து தன் முன்னோர்களைப் போலவே சைவத்தமிழில் பல்வேறு பணிக்களைச் செய்துவந்தனர். நல்வழி, நறுந்தொகை, நன்னெறி, நான்மணிமாலை, வாக்குண்டாம், கொன்றை வேந்தன், திருவள்ளுவர் மாலை, நைடதம், திருவெங்கைக்கோவை போன்ற நூற்களுக்கு உரை எழுதியுள்ளார்கள். மேலும், திருவிளையாடல்புராணம், திருவாசகம், திருக்குறள் பரிமேலழகர் உரை போன்ற நூற்களையும் பதிப்பித்துள்ளார்கள். 

சென்னை மாநிலக் கல்லுாரியில் ஆசிரியராகப் பணியாற்றிய சரவணப்பெருமாளையர் அவர்கள் பூம்பாவை அண்ணாசாமி குமாரர் சிங்கார முதலியார் கேட்டுக் கொண்டதன் பேரில்  திருக்கருவை வெண்பாவந்தாதி, திருக்கருவை பதிற்றுப்பத்து அந்தாதி ஆகியவற்றின்  மூலத்தை மட்டும்   பதிப்பித்து வெளியீடு செய்தார்கள். இது சைவ மக்களுக்கு கிடைத்த பெரும் பேறாகும். 

சி.எஸ்.சபாபதி முதலியார் (1837):

சி.எஸ்.சபாபதி முதலியார், காஞ்சிபுரத்தில் பிறந்து திருவாரூர் சென்று அங்குள்ள சைவப்பெரியவர்களிடம் இலக்கண, இலக்கியங்களை முறையே கற்றார்.  காஞ்சிபுரம், பச்சையப்பன் முதலியார் கல்லூரியில் சில காலம் தமிழ்ப்புலவராகப் பணிபுரிந்தார். பின்னர் சென்னையிலுள்ள பச்சையப்பன் கல்லுாரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி செய்தார். 

இவரிடம் பாடம் கேட்டு புலமை பெற்று பண்டிதராக ஆகியவர்கள் பலர்.  இப்பெரியார் பல சைவ நூற்களையும் சிற்றிலக்கியங்களையும் தொகுத்தும் பதிப்பித்தும் உரை எழுதியும் வெளியீடு செய்துள்ளார்; சில கோயில்களுக்கு ஸ்தல புராணங்களையும் இயற்றியுள்ளார். சிறந்த கல்வியாளரான இவர், திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதியையும் அச்சிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊ.புட்பரத செட்டியார்  (1884):

‘சைவத்தின் மேற்சமயம் வேறில்லை’ என்று சைவ எல்லப்ப நாவலர் பெருமான் பாடினார் என்பதை  புட்பரத செட்டியார் அச்சிட்ட திருவருணைக்கலம்பகத்தைப் பார்த்த பிறகே  பலருக்கும் தெரியும். எதையும் எதிர்பார்க்காமல்  பல சைவ நன்னூல்களை அச்சிட்ட பெருமை புட்பரத செட்டியார் அவர்களையே சாரும். 

திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி ஆகிய மூல நூலை மட்டும் சென்னை கலாரத்ன அச்சுக்கூடத்தில் இவர் பதிப்பித்துள்ளார்.  மீண்டும்  1869 ஆம் ஆண்டு திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி மூல நூலை மட்டும் அச்சிட்டு வெளியீடு செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

ஊ. புட்பரத செட்டியார் (1891): 

 திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி நுாலுக்கு அரும்பதவுரையும், எளிய பொழிப்புரையை சென்னை கவர்மெண்ட் நார்மல் பாடசாலை அன்றைய  தமிழ் புலவர் தி.க. சுப்பராய செட்டியார் எழுதி,  ‘சின்ன திருவாசகம்’ என்ற அடைமொழிப்பெயருடன் எட்டு ஆண்டு கழித்து புட்பரத செட்டியார் அவர்கள் அச்சிட்டு வெளியீடு செய்துள்ளார்கள். 

பல்கலைக்கழகப் பதிப்பு (1891):

தமிழக பல்கலைக்கழகங்களில் மிகவும் பழமையானது, தொன்மையானது சென்னை பல்கலைக்கழகம்.  இப்பல்கலைக்கழகம் செய்த அரும் பெரும் சாதனைகள் அனைத்தும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.  இக்கழகத்தின் வாயிலாக, திருக்கருவை கலித்துறை அந்தாதி அச்சிட்டு வெளியீடு செய்துள்ளனர். 

நாவலர் பெருமான் பதிப்பு (1901):

1901ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி மூலநூல் மட்டும் நாவலர் பெருமான் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட பல பதிப்புகளைக் கண்டுள்ளது. 

பெயர் தெரியாத பதிப்பு (1902):

திருக்கருவை வெண்பாவந்தாதி மூல நூலை மட்டும், சென்னை, சூளை, நிரஞ்சன விலாச அச்சுயியந்திர சாலையில் பதிப்பிக்கப்பட்டது என்ற குறிப்பு மட்டும் அதில் உள்ளது. 

யாழ்ப்பாணம் பிள்ளை பதிப்பு (1902 – 03):

திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி மூல நூல் மட்டும் சென்னை வித்தியாஞானபானு யந்திரசாலையில் யாழ்ப்பாணம் நல்லூர் சதாசிவ பிள்ளை பெயரில் அச்சிட்டு வெளியீடு செய்யப்பட்டுள்ளது . 

வைணவர்கள் பதிப்பு (1905):

வை.மு.கோ.வும், சே. கிருஷ்ணமாச்சாரியாரும் திருக்கருவை கலித்துறையந்தாதிக்கு உரை செய்து வெளியீடு செய்தார்கள். 

சுவாமி நாத பண்டிதர் பதிப்பு (1910):

நல்லூர் ஆறுமுக நாவலரின் எண்ணம், சொல், செயல் இம்மூன்றையும் செயல்படுத்திக் காட்டிய பெருமக்களில் வண்ணை நகர் சுவாமிநாத பண்டிதரும் ஒருவர்.  இவர் தமிழகத்தில் திக்கெல்லாம் புகழ் பெற்ற திருச்செந்தூர் தலத்தில் ஒரு தமிழ்ப் பாடசாலை நிறுவி சமயத்தொண்டு புரிந்தார் என்பது சிறப்பான தகவல். மேலும், பல திரு நூற்களைப் பதிப்பித்தும் அச்சிட்டும் வெளியீடு செய்துள்ளார். 

சென்னை சைவ வித்தியாஞானபானுஅச்சுயியந்திர சாலையில் திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி மூல நூலை மட்டும் அச்சிட்டு வெளியீடு செய்தார் என்பது  குறிப்பிடத்தக்கது. 

திருவாவடுதுறை ஆதினம் (1914):

பழம்பெரும் ஆதினங்களின் ஒன்றான திருவாவடுதுறை ஆதினத்தின் 17வது பட்டம் அம்பலவாண சுவாமிகள். இவர்களது ஆட்சிக்காலத்தில் திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி  மூலம் மட்டும் அச்சிட்டு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. 

வைணவர்கள் உரை (1915):

திருவல்லிக்கேணி சே.கிருஷ்ணமாச்சாரியார், வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார் இருவரும் இணைந்து திருக்கருவை வெண்பாவந்தாதி, திருக்கருவை கலி்த்துறை அந்தாதிக்கு உரை எழுதியுள்ளார்கள். இந்நூல் நன்முறையில் அச்சிட்டு வெளிவந்துள்ளது. 

இன்டர் மீடியட் (1916):

கம்ப ராமயணம், மகாபாரதம், வைணவ நூற்கள் ஆகியவற்றிற்கு முழுமையாக நுட்பமாகவும் திட்பமாகவும் உரை எழுதியவர் திருவல்லிக்கேணி சே. கிருஷ்ணமாச்சாரியார்.  மேலும், வில்லிபுத்துாரர் பாரதம், திருக்கருவை வெண்பாவந்தாதி,  நன்னுால் பாயிரம் ஆகிய மூன்றிற்கும் தெளிவான முறையில் உரையெழுதி அச்சிட்டுள்ளார். 

அன்றைய காலகட்டத்திலுள்ள பள்ளிக்கூடங்களில் பத்தாம் வகுப்பிற்கு பிறகு புதுமுக வகுப்பு என்று ஒன்று உண்டு. தற்போது இருக்கும்  ‘என்ட்ரன்ஸ் எக்ஸாம்’  எழுதி மேற்படிப்பிற்குச் செல்வது போல. அதற்குரிய தமிழ்பாட நூற்களைத் தொகுத்தும் பதிப்பித்தும் வழங்கும் பணியைச் செய்து வந்தார். அதனை  ‘இன்டர்மீடியட்’ படிப்பு என அழைப்பார்கள். 

அதற்கு 1918 ஆம் ஆண்டு திருக்கருவை வெண்பாவந்தாதியையும் பாடமாக வைத்திருந்தார் என்பது தெரிய வருவது,கரிவலம் வந்த நல்லூருக்குக் கிடைத்த பெருமையாகும். 

பூண்டவராவும் புலித்தோலுடையும் புவனமுட்ட 
நீண்டவராலும் அறியாச் சரணமும் நீள் முடியும் 
தாண்டவராயர் முகலிங்கநாதர் தமியனுக்கோர் 
ஆண்டவராகி வந்தே திருக்காட்சி அளித்தனரே!

-வரதுங்க ராம பாண்டியர்

நாவலர் பெருமான் பதிப்பு (1918):

‘சைவம், தமிழ் எனது இரு கண்கள். அவற்றை ஒளி குன்றாமல் என் இறுதி உயிர் உள்ளவரை காப்பேன்’ என்றார் தவத்திரு ஆறுமுக நாவலர். இப்பெரியாரால் சைவ சமயம் தழைத்தோங்கியது. இவரை ஐந்தாம் சமயக்குரவர் என புகழாரம் சூட்டி மகிழ்வர். அன்னாருடைய பால பாடம் மிகவும் படித்துணரத்தக்கது. ஆஸ்திக அன்பர்களுக்கு சைவ சமய நூற்களை அச்சில் பதிப்பித்து வெளியீடு செய்தும் உவந்து வந்தார். 

நாவலர் காலத்திற்குப் பிறகு அவருடைய மருகர் பொன்னம்பலப்பிள்ளையவர்கள் அப்பணியை சிரமேற்கொண்டு செய்தார்.  எப்போதும் சீடர்கள் குழாம் பிள்ளையவர்களைச் சுற்றி நிறைந்து காணப்படுமாம். அதனால் தான் அன்னாரை  ‘தேன்குடம்’ என்று பழகிய சான்றோர்கள் வாஞ்சையோடு அழைப்பார்கள் என  சி.கணேசப்பிள்ளையவர்கள் பதிவு செய்கிறார். அவர்களுடைய பதிப்புகளில் ஒன்று திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி. இதனை இன்றும் நாவலர் பதிப்பு என்றே சைவ மக்கள் அன்போடு அழைக்கிறார்கள்.

அந்தாதி மூல நூற்கள், புட்பரத செட்டியார் பதிப்புகள், இரு வைணவர்கள் எழுதிய அந்தாதி உரைகள், யாவும் ஒன்று மேற்பட்ட பல பதிப்புகளைக் கண்டுள்ளது. கிடைத்த நூற்களின் குறிப்பே இங்கு இடம் பெற்றுள்ளன. மேலும் அச்சு நூற்களின் விபரம் கிடைக்கப்பெறுமாயின் பட்டியலின் வரிசை மாறுபடும்.  

ஆ.மருதப்பன் செட்டியார் (1919):

கரிவலம் வந்த நல்லூருக்கு  வடக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது எட்டிசேரி என்னும் கிராமம். இங்கு வாழ்ந்த பெரும் புலவர், மலை சாயப்பாடிய சங்குப்புலவர். இவர் சிவகிரி, சேத்துார் ஜமீனில் அரசவைக் கவிஞராக இருந்தவர். இவருடைய திருமகனார் திருமலை வேற் கவிராயர். இவர்களே நெற்குன்ற நகர் சொ.வீரப்ப முதலியார் பாடி விட்டுச் சென்ற திருக்கருவை தல புராணத்தை முழுமையாக இயற்றி நிறைவு செய்த சைவத்தமிழ் புலவர் ஆவார்.   

கரிவலம் வந்த நல்லூர் பால்வண்ண நாதருக்கு தமிழில் தல புராணம் இல்லாத குறையை நீக்கிய புலவருக்கு சகல  வசதிகளையும் செய்து கொடுத்தவர்கள்,  இவ்வூரில் வாழ்ந்த ஆ.மருதப்பன் செட்டியார், வ.மருதப்பன் செட்டியார் என்னும் இருவர். இவர்களே திருக்கருவை தல புராண நூலை  1919 ஆம் ஆண்டு அச்சிட்டு வெளியீடு செய்தார்கள். 

இப்புலவரே, பால்வண்ண நாதர் மீது வெண்செந்துறைப்பாமாலை பால்வண்ண நாதர் மீது சந்தப்பா, பால்வண்ண நாதர் மீது வண்ணம், மற்றும் தனிப்பாடல்களும் பாடியுள்ளார். 

ஆ.மருதப்பன் செட்டியார் மேற்கண்ட புராண, சிற்றிலக்கிய பனுவல்களுடன் திருக்கருவை அந்தாதிகள் மூல நூல் மூன்றையும் முதன்முதலாக அச்சிட்டு வெளியீடு செய்துள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது. 

இத்தல புராணம் வெளியாகி சுமார்  108 ஆண்டுகள் ஆகி விட்டன. இந்நூலுக்கு வயலி அம்பிகை தாசன் அவர்களிடம் ஒரு எளிய உரை ஒன்றை எழுதி வாங்கி வைத்துள்ளோம்.  அவை யாவும் அச்சிட்டு வெளிவரும் நன்னாளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். 

தென்னிந்திய சைவ சித்தாந்த நுாற்பதிப்புக் கழகம் (1921):

பதிப்புத் துறையில் அளப்பரிய சாதனைகளைப் புரிந்து வருவது தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம். இச்சொல் மக்களிடம் வழக்காற்றில் மிகுதியாகத் தொடங்கியதே இக்கழகம் தொடங்கிய பிறகுதான் என்றால் அது மிகையாகாது. 

மறைமலை அடிகளாரின் மருமகனார் தோற்றுவித்ததே இக்கழகம். 1920 ஆம் ஆண்டில் இருந்து தொல்காப்பியம் தொடங்கி சங்க, பக்தி, நீதி, இக்கால இலக்கியங்கள் வரை இன்றளவும் தன் நூற்றாண்டினைக் கடந்தும்  நூற்பணியை  பிசிறு தட்டாமல் செய்து வருகிறது. 

தனித்தமிழ் இயக்கத் தந்தை அடிகளாரின் மாணவர் நாகை சொ.தண்டபாணியா பிள்ளையைக்  கொண்டு விளக்கவுரை  செய்யப்பட்டு பலவித மேற்கோள் செய்யுளுடன் கழகம் வெளியிட்ட முதல் அந்தாதி  என்ற பெருமைக்குரியது  திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி. இந்நூல் 1961, 1972, 1974 ஆகிய ஆண்டுகளில் மீண்டும் மறுபதிப்பினைக் கண்டது. இதனையே நகலெடுத்து பலர் மறுபதிப்பு செய்துள்ளதையும் காண முடிகிறது.

(தொடர்கிறது)

$$$

One thought on “பதிப்புலகில்  திருக்கருவையந்தாதிகள்:  பகுதி-1

Leave a comment