-திருநின்றவூர் ரவிகுமார்
ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் வட இந்திய மாநிலங்கள் குறித்த ஞானம் பிற மாநில மக்களுக்கு குறைவாகவே உள்ளது. சவாலான பண்பாட்டுச் சூழலில் தவித்த இம்மாநிலங்களை ஆர்எஸ்எஸ் சார்பு அமைப்புகள் மீட்டெடுத்த வரலாற்றின் மூன்றாம் பகுதி இது…

நாகாலாந்து
நாகா மலைப்பகுதிக்கு 1832 இல் பிரிட்டிஷ்காரர்கள் வந்தார்கள். முதல் உலகப் போரின் போது 3,000 நாகர்களைக் கொண்ட நாகா உழைப்பாளர்கள் படையை உருவாக்கினார்கள். பதுங்கு குழிகள் வெட்டவும், பொருட்களைச் சுமந்து செல்லவும் அந்தப் படையை அவர்கள் பயன்படுத்தினர். போர் முடிந்து இந்தியாவுக்குத் திரும்பிய பின்னர் அந்தப் படையினரில் பலர் ஒன்று சேர்ந்து ‘நாம் தனித்தனி பழங்குடியினர் அல்ல, நாகர்கள்’ என்ற அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு 1918 கொஹிமாவில் ‘நாகர் மனமகிழ் மன்றம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தினர். அந்த அமைப்பின் மூலம் பிரிட்டிஷார் வெளியேற வேண்டும் என பிரசாரம் செய்தனர்.
17 நாகர் இனக்குழுக்களும் 20க்கும் மேற்பட்ட கிளை இனக்குழுக்களும் சேர்ந்து 1947 இல் நாகா தேசிய கவுன்சிலை ஏற்படுத்தினர். 1947 ஆகஸ்ட் 14 நாகாலாந்து சுதந்திரம் அடைந்ததாக அறிவித்தனர். 1954 இல் இந்திய ராணுவம் நாகா மலைப்பகுதிக்குச் சென்றது. அஸ்ஸாமின் ஒரு பகுதியாக இருந்த நாகாலாந்து 1963 இல் தனி மாநிலமாக ஆனது. நாகாலாந்து பிரச்சினை – பழங்குடி அடையாளம், அந்நிய நாட்டு சக்திகளால் தூண்டப்படும் பிரிவினைவாதம், இந்திய அரசு அந்த மாநிலத்தின் மீது காட்டிய அலட்சியம் என பல பிரச்சினைகளின் மொத்த உருவமாக வடிவெடுத்தது . பிரிவினைவாதிகள் தனி அரசமைப்பு, தனிக் கொடி வேண்டுமெனக் கோரினர்.
நேஷனல் சோஷியலிஸ்ட் கவுன்சில் ஆஃப் நாகாலாந்து (ஐசக் – மூவா ) என்ற அமைப்பு பிரிவினைவாதத்தை தீவிரமாக முன்னெடுத்தது. அதற்கு இந்தியாவுக்கு உள்ளும் வெளியிலும் இருந்து உதவிகள் கிடைத்தன. ஆயுதங்கள், வெடிபொருட்கள், ஆயுதப் பயிற்சி, பாதுகாப்பாகப் பதுங்கிக் கொள்ள இடங்கள், அதற்கான வாகன வசதிகள், பணம் ஆகியவை கிழக்கு பாகிஸ்தான் (இன்றைய வங்கதேசம்) மூலம் வழங்கப்பட்டன. 1971 வரை அமெரிக்கா அவர்களுக்கு ஆயுதமும் பணமும் கொடுத்து, உளவுத் தகவல்களை அளித்து வந்தது. பிறகு 1990 வரையில் சீனா அவர்களுக்கு பின்புலமாக இருந்தது. அதன்பிறகு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ. மியான்மரில் இருந்து செயல்பட்ட அந்த பிரிவினைவாதக் குழுவுக்கு போதைப்பொருள் கடத்தல் மூலம் பணம் தரப்பட்டது என்று தெற்காசிய பயங்கரவாத கண்காணிப்பு வலைதளம் குறிப்பிடுகிறது.
“நான் பாஜகவில் சேர்ந்ததற்கு காரணம் வாஜ்பாய்தான்” என்கிறார் ஜேம்ஸ் வைசோ. அவர் 2000ஆம் ஆண்டில், பாஜக இளைஞர் அணியில் சேர்ந்தார். பிறகு படிப்படியாக மாவட்டத் தலைவர், மாநில இளைஞரணி தலைவர், மாநில செய்தி தொடர்பாளர் என்று வளர்ந்து, இப்போது பாஜகவின் தேசிய செயலாளர்களில் ஒருவராக உள்ளார். அவருடைய வளர்ச்சியையும் நாகாலாந்தில் பாஜகவின் வளர்ச்சியையும் இணையானதாகச் சொல்லலாம் . இருபது, முப்பது உறுப்பினர்களை கொண்டதாக இருந்த கட்சி இப்போது முன்னூறு முழு நேர ஊழியர்களைக் கொண்டதாக வளர்ந்துள்ளது.
“இந்த வளர்ச்சி சாதாரணமாக வந்து விடவில்லை. கடினமான உழைப்பினால் வந்தது . பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்ற பிம்பத்தை உருவாக்கினார்கள். அதை வலுவான ஆயுதமாகப் பயன்படுத்தினார்கள். காரியகர்த்தர்களான எங்களுக்கு உண்மை என்னவென்று தெரியும். முன்பெல்லாம் எங்களை அருவருப்போடு பார்ப்பார்கள் . நாங்கள் கிறிஸ்தவத்தில் உறுதியாக இல்லாமல் பாஜகவுக்காக சமரசம் செய்து கொண்டதாக குற்றம் சாட்டுவார்கள். சர்ச்சுகள் மூலம் ‘பாஜகவில் சேர வேண்டாம், பணிபுரிய வேண்டாம்’ என்று வற்புறுத்தல்கள் வந்தன. 2018 இல் எனது நண்பர் பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட்டார். எதிர்க்கட்சியினர் சர்ச் சுவற்றில் ஹிந்து தெய்வ படங்களை ஒட்டி விட்டு பழியை எங்கள் மீது போட்டனர்” என்று கடந்து வந்த கடினமான பாதையை விளக்குகிறார் ஜேம்ஸ் வைஸோ.
“மன்மோகன் சிங் ஒரு முறை கூட நாகாலாந்து வந்ததில்லை. ஆனால் வாஜ்பாய் வந்திருக்கிறார். மாநிலத்தின் சிதிலமான சாலைகளின் பயணித்திருக்கிறார். அவரது ஆட்சியில்தான் கொஹிமாவிலிருந்து திமாப்பூர் வரை நான்கு வழி சாலை அமைக்கப்பட்டது. அதனால் மூன்று மணி நேரப் பயணம் வெறும் ஒன்றரை மணி நேரமாகக் குறைந்துவிட்டது. 2014 இல் மோடி பிரதமரான பிறகு ஆறே மாதத்தில் நாகாலாந்து வந்தார் . சர்வதேசப் புகழ்பெற்ற ‘ஹார்ன்பில்’ விழாவை தொடங்கி வைத்தார். அவர் பிரதமரான பிறகு மாற்றமும் வளர்ச்சியும் வேகமெடுத்தது . மக்களுக்கு அரிசி, சமையல் எரிவாயு, மருத்துவக் காப்பீடு போன்றவை மத்திய அரசின் திட்டங்களாகக் கிடைத்தன. குறிப்பாக சாலைப் பணிகள் விரிவாகவும் வேகமாகவும் நடந்தன” என்கிறார் ஜேம்ஸ் வைஸோ.
நாகாலாந்து மக்களிடையே ஆர்எஸ்எஸ் அமைப்பு, ராணி கைடின்லியூவை முன்னிறுத்தியது . அவர் நாகா மக்களின் ஆன்மிக, அரசியல் தலைவராக இருந்தவர். பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடியவர். அதனால் 16 வயதிலேயே அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது ஆங்கிலேய அரசு. 1947 இல் அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். நேரு அவருக்கு ‘ராணி’ என்ற பட்டத்தைக் கொடுத்தார். பின்னர் அவருக்கு பத்ம விபூஷண் விருதும் வழங்கப்பட்டது; தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ மதமாற்றத்திற்கு எதிராக அவர் ‘ஹிராகா’ இயக்கம் என்ற பெயரில் பாரம்பரிய சமயத்தை மீட்டெடுத்தார். அவரது மறைவுக்குப் பிறகு வலுவிழந்த அந்த சமய இயக்கத்திற்கு ஆர்எஸ்எஸ் புத்துயிர் ஊட்டியது. கிறிஸ்தவராக மதம் மாறிப் போயிருந்தவர்கள் மீண்டும் தாய் மதம் திரும்பினர். ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் அஜெய்லியூ நைமை என்பவர் சமர்ப்பித்த முனைவர் பட்ட ஆய்வேட்டின் தலைப்பு ‘ராணி கைடின்லியூ: வடகிழக்கு இந்தியாவின் கதாநாயகி’. அந்த ஆய்வேட்டில், “அவர் ஹிராகா சமயத்தை கச்சிதமாக அரசியலுடன் இணைத்து பிரிட்டிஷாருக்கு எதிர்ப்பை கூர்மைப்படுத்தினார். கண்ணுக்குத் தெரியாதபடியே விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த பெண்களை சமூக – அரசியல் தலைவர்களாக்கினார் . பழங்குடியினரை, குறிப்பாக அவர் சார்ந்த நாகா பழங்குடியினரை, மைய இந்திய நீரோட்டத்தில் இணைக்க முடியும் என்பதற்கு அவரே சிறந்த சான்று. நாகா சமய இயக்கத்தையும் இந்திய தேசிய இயக்கத்தையும் பின்னிப் பிணைந்து அவர் வளர்த்தார்” என்று குறிப்பிடுகிறது.
ஊடுருவல் பிரச்சினை இன்னமும் அங்கு உள்ளது. 2021 இல் இந்திய ராணுவம், தவறுதலாக, நிற்காமல் சென்ற வாகனத்தைச் சுட்டனர். அதில் ஆறு பேர் உயிரிழந்தனர். அடுத்த ஒரு மணி நேரத்தில் கிராம மக்கள் பதில் தாக்குதல் நடத்த, அதில் ஒரு ராணுவ வீரரும் ஏழு பொதுமக்களும் கொல்லப்பட்டனர். இது தேசிய சக்திகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. ஜேம்ஸ் வைஸோ சொல்கிறார்: “முன்பெல்லாம், அனேகமாக, எல்லோரும் பிரிவினை பேசுவார்கள். இப்போது வெகுவாகக் குறைந்துவிட்டது. பிரிவினைவாதத்தை எதிர்த்து பேசாமல் இருக்க காரணம் பிரிவினைவாதிகளிடம் இருக்கும் துப்பாக்கிதான். தேசியம், தேசபக்தி வளர்ந்து விட்டது என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் யாரும் சீனாவுடனோ பங்களாதேஷுடனோ இணைவதை விரும்பவில்லை என்பதை உறுதியாகக் கூற முடியும்”.
***

அஸ்ஸாம்
வங்கதேச முஸ்லிம்களின் சட்ட விரோத ஊடுருவல், குடியேற்றத்தால் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முன்னணியில் இருப்பது அஸ்ஸாம். கடந்த நூற்றாண்டில் அந்த மாநில மக்கள் தொகையில் 12. 4 சதவீதமாக இருந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை 1951 கணக்கெடுப்பின்போது 24.7 சதவீதமாகவும் 2011 இல் 34.2 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. இப்போது அது 40 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்து இருக்கும் என நம்பப்படுகிறது. பார்பேடா, பாங்காய் காவான், தாராங், துப்ரி, கோல்பாரா, ஹைலகந்தி, கரீம்கஞ்ஜ், மோரிகாவான், நாகான், ஓஜாய் , தெற்கு சால்மாரா போன்ற மாவட்டங்களில் முஸ்லிம் மக்கள் தொகை 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
முஸ்லிம் மக்கள் தொகைப் பெருக்கம் இயல்பானதாகவோ உள்ளூர் சார்ந்ததாகவோ ஏற்பட்டது அல்ல; வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக ஊடுருவியர்களால் நிகழ்ந்தது. பிரம்மபுத்ரா நதியோரத் தீவுகளில் முதலில் ஆரம்பித்தது. எல்லையோர மாவட்டமான துப்ரியில் தொடங்கி தாராங் வரையிலும் அதற்கு அப்பாலும் பரவியது. படகுமூலம் நதி வழியாக ஆயிரக்கணக்கான வங்கதேச முஸ்லிம்கள் ஊடுருவி, மாநிலத்தின் நகரங்கள், கிராமங்கள், போடோலாந்து, தைவா, கைசிங் போன்ற பழங்குடியினர் பகுதிகளுக்குள்ளும், கார்பி – ஆங்லாங் , வடக்கு கச்சார் மலைப்பகுதிகளிலும் குடியேறி உள்ளனர்.
காங்கிரஸின் வாக்கு வங்கி அரசியல், ஆட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறையில் உள்ள ஊழல், பொதுமக்களின் அலட்சியம் ஆகியவை, இந்த கலாச்சார, பொருளாதார, சமூக, புவியியல் ஆக்கிரமிப்புக்கு காரணங்களாகும்.
அஸ்ஸாமில் கடைசியாக நடந்த தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (NRC) கணிசமான அளவு உள்ளூர்க்காரர்கள் வெளியேற்றப்பட்டு சந்தேகத்துக்குரிய குடியுரிமை கொண்டவர்கள் ஆயிரக்கணக்கில் சேர்க்கப்பட்டனர். இதனால் அஸ்ஸாமின் அரசியல் களமே மாறியது. மாணவர்கள் போராட்டம் வெடித்தது. 1970 – 80 களில் நடந்த அந்தப் போராட்டத்தின் மையமாக இருந்தவை மூன்று விஷயங்கள். ‘அன்னியர்களை அடையாளம் காண், அவர்களை தனிமைப் படுத்து, வெளியேற்று’ என்பதே அந்த மூன்று விஷயங்கள். சுமார் ஆறாண்டு காலம் அஸ்ஸாம் மாநிலம் கொதித்துக் கொண்டு இருந்தது. 1985 இல் அஸ்ஸாம் ஒப்பந்தம் – ராஜீவ் காந்தியின் நடுவண் அரசுக்கும் அஸ்ஸாம் மாணவர் அமைப்புக்கும் இடையே ஒப்பந்தம் – ஏற்பட்டது. அந்த ஒப்பந்தம் அஸ்ஸாம் மக்களின் கலாச்சாரம் , பொருளாதார, அரசியல் உரிமைகளைப் பாதுகாப்பதாக உறுதி கூறியது.
காங்கிரஸ் பிரதமர் ராஜீவ் காந்தி கொண்டுவந்த, சட்ட விரோதமாக ஊடுருவல் செய்தவர்களை அடையாளம் காணும் தீர்ப்பாய சட்டம் (ஐ.எம்.டி.டி ) மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது. அது ஊடுருவல் காரர்களை அடையாளம் காணவே முடியாத நிலையை ஏற்படுத்தியது. ஏனெனில் புகார் அளிப்பவர்தான் சம்பந்தப்பட்டவர் சட்டவிரோதமாகக் குடியேறியவர் என்பதை நிரூபிக்க வேண்டும். 2006 டிசம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் இது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கும் போது, ‘ராஜீவ் காந்தி கொண்டுவந்த சட்டம் மிக மோசமானது. எந்த அதிகாரமும் இல்லாதது. அது மட்டுமின்றி ஊடுருவல் காரர்களை அடையாளப்படுத்துவதற்கு பதிலாக அதற்கு தடையாக இருக்கிறது’ என்று சாடியுள்ளது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி ஐஎம்டிடி நீக்கப்பட்டதும், பதுருதீன் அஜ்மல் அஸ்ஸாம் அரசியலில் புகுந்ததும் எதேச்சையாக நடந்த விஷயம் அல்ல. அஸ்ஸாமிய இந்துக்களும் முஸ்லிம்களும் எதை வெறுத்தார்களோ அதன் அடையாளமாக அஜ்மல் விளங்கினார். வாசனைத் திரவிய வியாபாரியான அவர் வங்கதேசத்திலிருந்து சட்ட விரோதமாக ஊடுருவிய முஸ்லிம்களின் குரலாக ஓங்கி ஒலித்தார். கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இப்போது அஸ்ஸாம் சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார்.
அஸ்ஸாமில் ‘அஹோம் லச்சித் போர்புக்கான்’ என்றவொரு அரசர் இருந்தார். பிரம்மபுத்திரா நதியில் படகுகளைக் கொண்ட படையை ஏற்படுத்தி முகலாயர்களை வென்றார். அஸ்ஸாம் மக்களின் மனம் கவர்ந்த அந்த தேசபக்த அரசரின் பதாகையை முன்னிருத்தி ஆர்எஸ்எஸ் அஸ்ஸாம் மக்களிடையே தேசபக்திக் கனலை எழுப்பியது. விளைவாக காங்கிரஸ் முதல்வர் கோயிலுக்கு சென்று பூஜை செய்வது தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. சர்பானந்த சோனோவால், ஹேமந்த் பிஸ்வ சர்மா போன்ற இளம் தலைவர்கள் காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் இணைந்து பின்னாளில் முதல்வர்களாகினர்.
சோனோவால் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர். 2016 இல் பாஜகவின் முதல்வரானார் . அதனால் பல பழங்குடியினர் தேசிய சிந்தனை கொண்டவர்களாக மாறினர். பழங்குடியினரின் நிலங்களும் வங்கதேச முஸ்லிம்களால் அபகரிக்கப்படுவதால் அவர்கள் மற்ற அஸ்ஸாமிய இந்து, முஸ்லிம்களுடன் இணைந்து போராடத் தொடங்கினர். ஆனால் அரசின் செயல்பாடுகள் மெத்தனமாக இருந்தன. 2020 வரையிலும் ஊடுருவல் செய்த அந்நியர்கள் என்று அடையாளம் காணப்பட்ட 1.43 லட்சம் பேர்களில் வெறும் 329 பேர் மட்டுமே நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
2021 இல் அஸ்ஸாம் மாநில அரசு புதியதொரு குழுவை அமைத்தது. அஸ்ஸாம் ஒப்பந்தம் நடந்த பிறகு 36 ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட நான்காவது குழு இது. இந்தக் குழுவின் பரிந்துரைகள் பலவும் சிறப்பாக இருந்தன. அஸ்ஸாமின் உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் 80 லிருந்து 100 சதவீதம் ‘அஸ்ஸாமியர்கள் மட்டுமே’ வேட்பாளராக முடியும். மத்திய ,மாநில அரசு வேலைகள் அஸ்ஸாமியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். நில உரிமை அஸ்ஸாமியர்களுக்கு மட்டுமே. பெருவாரியான மக்கள் பேசும் மாநில மொழியான அஸ்ஸாமி மாநில அரசின் மொழியாகும். இதெல்லாம் அந்த குழுவின் பரிந்துரைகள். இவை மெதுவாக நடைமுறைக்கு வர தொடங்கின. இதனிடையே நில உரிமை தகராறுகள் / மோதல்கள் மாநிலம் முழுவதும் வேகமாக ஏற்பட்டு வருகின்றன.
***
15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ மகான் ஸ்ரீ சங்கர தேவ். அஸ்ஸாமிய மக்களின் தந்தையாகக் கருதப்படும் அவர் சமுதாய, சமயத் தலைவர். நாகாவூனில் அவரது அவதார ஸ்தலம் முஸ்லிம்களின் ஆக்கிரமிப்புக்குள்ளாகி இருந்தது. சர்பானந்த சோனோவால் முதல்வராக இருந்தபோது அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினார்.
அவருக்குப் பிறகு 2021 இல் ஹேமந்த் பிஸ்வ சர்மா முதல்வரானார். பதவிக்கு வந்தவுடன் தாராங்கில் உள்ள புகழ்பெற்ற சிவன் கோயிலைச் சுற்றி இருந்த வங்கதேச முஸ்லிம்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றினார். நதியோரம் உள்ள அந்தப் பகுதி முழுக்கவும் வங்கதேச ஊடுருவல்காரர்களால் கைப்பற்றப்பட்டிருந்தது. அதன் பிறகு காருகுந்தி பகுதி. அந்தப் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அரசு அகற்றும் போது அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
மேஜர் அவினாஷ் உபாத்தியாயா என்ற இந்திய ராணுவ அதிகாரி கூறுகிறார்: “பிரம்மபுத்ரா நதியில் வெள்ளம் வரும்போதெல்லாம் அத்துடன் சேர்ந்து வங்கதேசத்திலிருந்து படகுகள் மூலம் ஊடுருவல் நடக்கிறது. நீர் மட்டம் உயர்ந்து விடுவதால் எல்லை காவல் படையினரால் அதைக் கண்காணிக்கவோ கட்டுப்படுத்தவோ முடிவதில்லை. ஊடுருவல் காரர்கள் நதியோர வளமையான இடங்களில் மக்காச்சோளம் விளைவிக்கிறார்கள். அந்தத் தட்டைகளையே அடுப்பெரிக்கப் பயன்படுத்துகிறார்கள். ஒரு இடத்தில் அவர்கள் வந்து அமர்ந்தால் பிறரை எதிர்பார்க்காமல் தங்களுக்குள் தற்சார்பு வாழ்க்கையை பின்பற்றுகிறார்கள்”.
மங்கால்டோய் என்ற பகுதியில் 85 சதுர கி.மீ. அளவுக்கு வங்கதேச முஸ்லிம்கள் ஆக்கிரமித்து உள்ளார்கள். உள்ளூர்வாசிகளுக்கு தங்கள் நிலத்தின் மதிப்பைப் பற்றியும் அது தங்கள் வசமே வைத்திருக்க வேண்டிய அவசியம் பற்றியும் சொல்லிக் கொடுக்க வேண்டியுள்ளது. உபாத்யாயா உள்ளூர் விவசாயிகளுக்கு போர்த் தொழில் பழக்கினார். விவசாயிகள் அரசின் உதவியுடன் விவசாய திட்டங்களை அமல்படுத்தவும், அதே வேளையில் தங்கள் நிலத்தை பாதுகாக்கப் போராடவும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 1980 களில் அஸ்ஸாம் மாணவர் அமைப்பைச் சேர்ந்த பத்மா ஹசாரிகா இதை முயற்சி செய்தார்.
“எங்கள் நிலப்பரப்பு வளமானது. வெள்ளம் வடிந்ததும் விவசாயத்திற்குத் தயாராகிவிடும். உரமே தேவையில்லை. ஆனால் இப்போது எங்கள் நிலங்களை மியாக்கள் (வங்க மொழி பேசும் முஸ்லிம்கள்) ஆக்கிரமித்து விட்டார்கள்” என்கிறார் இஸ்லாம். அஸ்ஸாமிய முஸ்லிம்களுக்கும் பிரச்சினை உருவாகி வருகிறது. இதை கல்லூரி மாணவரான ஹபீசூர் சரியாக சொல்லுகிறார். “நாங்கள் அவர்களுடன் தான் (வங்க மொழி பேசும் முஸ்லிம்கள்) வளர்ந்தோம். ஆனால் எங்களுக்கு எங்கள் நிலம் வேண்டும். எங்கள் மொழி, எங்கள் அடையாளம், எங்கள் பழக்க வழக்கங்களை நாங்கள் பின்பற்றினால் அவர்கள் எங்களை இஸ்லாத்திற்கு முரணானவர்களாகச் சித்தரிக்கிறார்கள். ஊடகங்களை எங்களுக்கு எதிராக திருப்பி விடுகிறார்கள்” என்கிறார் ஹபீசூர்.
மியாக்கள் நன்கு ஒருங்கிணைக்கப் பட்டுள்ளார்கள். அவர்களுக்கு பண பலமும் ஆதிக்க சக்திகளின் ஆதரவும் உள்ளது என்று கூறும் ஹபீசூர், “எங்கள் முன்னோர் இந்தப் பகுதியில் சுதந்திரமாக வாழ்ந்தார்கள். இந்த நிலங்களை தங்கள் பெயருக்கு ஆவணப்படுத்த வேண்டும் என்று அவர்கள் நினைத்து கூட பார்த்ததில்லை. அவர்களது அறியாமைக்கு நாங்கள் விலை கொடுக்க வேண்டியுள்ளது” என்று புலம்புகிறார்.
நாகாவூர் பகுதியில் பல வைணவ மடங்கள் இருந்தன. அவற்றையும் அதன் சொத்துக்களையும் வங்கதேச முஸ்லிம்கள் ஆக்கிரமித்து அபகரித்துக் கொண்டுள்ளனர். ஊடுருவல் காரர்கள் சட்டவிரோதமான ஆக்கிரமிப்பு செய்வது மட்டுமல்ல, சட்டபூர்வமாகவே நிலங்களை பதிவு செய்கிறார்கள். போலி ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன. அதற்கு அரசியல்வாதிகள், அதிகாரிகள், காவல்துறையினரும் உடந்தை. லஞ்சம், ஊழல் வெளிப்படையாக நடக்கிறது.
இந்துக்களுக்கு எதிரான பாகுபாடு பரவலாக நடைமுறையில் உள்ளது. அஸ்ஸாமிய முஸ்லிம்கள் அரசு ஒப்பந்தப் பணிகளை எடுப்பார்கள். அதை வங்கதேச முஸ்லிம்களுக்கு துணை ஒப்பந்தம் மூலம் கொடுத்து விடுவார்கள். அஸ்ஸாம் மற்றும் இந்தியப் பொருளாதாரத்தில் ஊடுருவல்காரர்களால் பல கோடி மதிப்பில் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
“பிரம்மபுத்திராவின் கிளை நதிகளில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். இதனால் படகு மூலம் நடக்கும் ஊடுருவலைத் தடுக்க முடியும். தடுப்பணைப் பகுதிகளில் மீன் வளர்ப்புத் தொழிலை ஊக்குவிக்க வேண்டும். பன்றிப் பண்ணைகளை வைத்து, பன்றி எச்சங்களை மீனுக்கு உணவாக பயன்படுத்தி லாபம் அடையலாம். இதனால் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். பொருளாதாரமும் மேம்படும்” என்கிறார் உபாத்தியாயா. அந்தப் பணியில் முன்னாள் ராணுவ வீரர்களை ஈடுபடுத்தலாம் என்ற ஆலோசனையையும் அவர் முன்வைக்கிறார்.
1946 அக்டோபர் 27 ஆம் தேதி அஸ்ஸாம் தலைநகரான கௌஹாத்தியில் முதல் ஆர்எஸ்எஸ் ஷாகா துவங்கப்பட்டது. 1975க்குள் அஸ்ஸாமில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் ஷாகா செயல்பட ஆரம்பித்துவிட்டது. பிரிவினைவாத அமைப்பான உல்பாவுக்கு தேச ஒற்றுமைப் பணி செய்யும் ஆர்எஸ்எஸ்.ஸின் வளர்ச்சி சவாலாக இருந்தது ஆச்சரியமல்ல.
உல்பா பிரிவினைவாதிகள், முரளி மனோகர், ஓம் பிரகாஷ் சதுர்வேதி, பிரமோத் நாராயணன் போன்ற சங்க பிரசாரகர்களைக் கொன்றுள்ளனர். அவர்கள் அஸ்ஸாமிய பிரசாரகர்களையும் விட்டு வைக்கவில்லை. மதுமங்கள் சர்மா போன்ற அஸ்ஸாமிய பிரசாரகர்களையும் கொன்றுள்ளனர். இவற்றையெல்லாம் 1961இல் அஸ்ஸாம் மாநிலத்திற்கு பிரசாரக்காக வந்த சசிகாந்த் சௌதாய்வாலி என்ற மூத்த முழு நேர ஊழியர் ‘பிரச்சாரக்காக எனது பயணம்’ என்ற நூலில் பதிவு செய்துள்ளார்.
அஸ்ஸாமில் ஆர் எஸ் எஸ் கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று அந்த அமைப்பின் ஆண்டறிக்கை கூறுகிறது. வித்யா பாரதி மூலமாக அந்த மாநிலத்தில் 121 ஆரம்பப் பள்ளிகளும் 115 நடுநிலைப் பள்ளிகளும் 341 மேல்நிலைப் பள்ளிகளும் நடத்தப்படுகின்றன. சுமார் இரண்டு லட்சம் மாணவர்கள் இதன்மூலம் பயன் பெறுகின்றனர். இது தவிர 540 ஓராசிரியர் பள்ளிகளை வித்யா பாரதி நடத்துகிறது. சேவா பாரதி, வனவாசி கல்யாண் ஆசிரமம், விஎச்பி போன்ற அமைப்புகள் இந்த மாநிலத்தில் பல தசாப்தங்களாகப் பணியாற்றி வருகின்றன.
(தொடர்கிறது)
$$$