சியாம பிரசாத் முகர்ஜி என்னும் மகத்தான தேசபக்தர்

-பேரா. ப.கனகசபாபதி

பாரதிய ஜனதா கட்சியின் முந்தைய வடிவமான பாரதிய ஜனசங்கத்தை நிறுவியவர் டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி. அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு (ஜூலை 6), இக்கட்டுரை வெளியாகிறது...

இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னரும் தொடர்ந்து பல ஆண்டு காலமாக நமது வரலாறும் நிகழ்வுகளும் மேற்கத்திய மற்றும் இடதுசாரி நோக்கிலேயே பதிவு செய்யப்பட்டு வந்துள்ளன. அதனால் நமது தேசத்தின் அசாத்தியமான ஆளுமைகளும் அவர்களின் பெரும் சாதனைகளும் கூட நம்மிடமிருந்துமறைக்கப்பட்டு வந்துள்ளன. அப்படி மறைக்கப்பட்ட ஒரு மாபெரும் ஆளுமைதான் டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி அவர்கள்.

1901 ஆம் வருடம் ஜூலை மாதம் 6 ஆம் தேதி வங்கப் பகுதியில் பிறந்த அவர், இங்கிலாந்து சென்று சட்டத்துறையில் பட்டம் பெற்றுத் திரும்பி வந்து வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கினார். தனது இருபத்தெட்டாவது வயதில் கல்கத்தா பட்டதாரிகள் தொகுதியில் சட்ட மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முப்பத்து மூன்றாவது வயதிலேயே கல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இரண்டு முறை அந்தப் பொறுப்பு வகித்த அவர், உயர்கல்வித் துறையில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே முக்கியமான மாற்றங்களைக் கொண்டு வந்தார். நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்தரநாத் தாகூரை அழைத்து பல்கலைக்கழகத்தில் முதன்முதலாக தாய்மொழியான வங்க மொழியில் பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்த வைத்தார்; தேசத்தின் பண்டைய வரலாறு, பண்பாடு குறித்த பாடங்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். உண்மையான வரலாற்றை மாணவர்கள் ஆய்ந்து அறிந்து கொள்ளும் நோக்கில் அகழ்வாராய்ச்சித் துறையைக் கொண்டு வந்தார்.

1930 களில் ஆங்கிலேய அரசு கொண்டுவந்த சட்டத்தின் விளைவாக வங்காளத்தில் முஸ்லிம் லீக் அரசு பதவிக்கு வந்தது. அப்போது தகுதி வாய்ந்தவர்களாக இருந்தும் அரசுத் துறைகளில் இந்துக்களுக்கு வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டன; பல  வகைகளிலும் பெரும்பான்மை மக்கள் துன்புறுத்தப்பட்டனர். அப்போது அங்கிருந்த  முக்கியஸ்தர்கள்  டாக்டர் முகர்ஜியை அரசியலுக்கு வருமாறு அழைத்தனர்.

அவர் ஆரம்பத்தில் இந்து மகாசபையில் இணைந்து பணியாற்றினார். அதை காந்திஜி வரவேற்று,  ‘மதன்மோகன் மாளவியாவுக்குப் பிறகு இந்துக்களுக்குத் தலைமை தாங்கி நடத்த முகர்ஜி வந்திருப்பது நல்லது’ எனக் கூறினார். பின்னர் அவர் அகில இந்திய இந்து மகாசபைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடு முழுவதும் பிரயாணம் செய்தார். பின்னர் வங்காளத்தில் கூட்டணி ஆட்சி ஏற்பட்டபோது நிதி அமைச்சராகப் பணியாற்றி சமூக நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கினார்.

1940 களில்  வங்காளத்தின் பல பகுதிகளில் இந்துக்களுக்கு எதிராக வன்முறைகள் நடந்த போது பிற அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லாம் அங்கு செல்லத் தயங்கினர். முகர்ஜி அங்கெல்லாம் முதல் ஆளாகச் சென்று உண்மைகளை வெளிக்கொணர்ந்தார். 1946 ஆகஸ்டு மாதம் முஸ்லிம் லீக் கட்சி நேரடி நடவடிக்கை நாள் என அனுசரித்தது. அப்போது கல்கத்தா பகுதிகளில் இந்துக்கள் குறி வைத்துத் தாக்கப்பட்டனர்; ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள்  கொல்லப்பட்டனர்; நூற்றுக் கணக்கான குடும்பங்கள் வீடுகளை இழந்தன; பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டனர். அங்கு முகர்ஜி பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் போராடினார்.

பின்னர் 1946இல் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார். 1947இல் சுதந்திரத்துக்குப் பின்னர் அமைந்த மந்திரி சபையில் இந்தியாவின் முதல் தொழில் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். அவர் காலத்தில் தான் 1948 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் தொழில் கொள்கை வெளியிடப்பட்டது;  சித்தரஞ்சன் தொழிற்சாலை உள்ளிட்ட பல பெரிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டன; தொழில்களுக்கு நிதி உதவி செய்யும் நோக்கில் இந்திய நிதி அமைப்பு தொடங்கப்பட்டது. 

அந்தக் காலகட்டங்களில் பாகிஸ்தானில் இந்துக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைத் தடுத்து நிறுத்த போதிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் நேருவுக்கு அவர் பலமுறை வேண்டுகோள் விடுத்தார். நேரு பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலி கானுடன் ஒரு ஒப்பந்தம் மட்டுமே செய்தார். அது  போதுமானதல்ல என எதிர்ப்புத் தெரிவித்து அமைச்சரவையிலிருந்து முகர்ஜி பதவி விலகினார்.

காங்கிரஸ் கட்சியால் நாட்டு மக்களின் நலன்களைப் பாதுகாக்க முடியாது என அவர் உறுதியாக நம்பினார். நேருவின் போலி மதச்சார்பின்மை, வெளியுறவுக் கொள்கைகள் மூலம் நாட்டைச் சரியாக வழி நடத்த முடியாது எனக் கருதினார். அதனால் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக, நமது நாட்டின் பண்பாட்டு அடிப்படையில் அமைந்த ஒரு தேசியக் கட்சி தேவை எனக் கருதி, 1951 ஆம் வருடம்  ‘பாரதிய ஜன சங்கம்’ கட்சியைத் தொடங்கினார்.

சுதந்திரத்துக்குப் பின்னர் 1952 இல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் பாரதிய ஜன சங்கம்  சார்பில் டாக்டர் முகர்ஜி உள்ளிட்ட மூன்று பேர் வெற்றி பெற்றனர். அப்போது நாடாளுமன்றத்தில் பிற சிறிய கட்சிகளைச் சேர்த்துக் கொண்டு நேருவின் தவறான கொள்கைகளைக் கடுமையாக எதிர்த்தார்.

முன்னதாக பிரதமர் நேரு ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு 370 மற்றும் 35ஏ பிரிவுகள்மூலம் சிறப்பு அங்கீகாரம் கொடுக்க முடிவு செய்த போது, டாக்டர் முகர்ஜி, டாக்டர் அம்பேத்கர் உள்ளிட்டோர் தீவிரமாக எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால் நேரு அவர்களின் கருத்துக்களைப் புறந்தள்ளி அவற்றைச் சட்டமாக்கினார்.  “ஒரே நாட்டில் எப்படி இரண்டு கொடிகள், இரண்டு வித சட்டங்கள், இரண்டு பிரதமர்கள் இருக்க முடியும்?’’ என முகர்ஜி கேள்வி எழுப்பினார்.

மேலும் அந்த மாநிலத்துக்குள் நுழைவதற்கு மற்ற மாநில மக்கள் அனுமதிச் சீட்டு வாங்க வேண்டும் என நடைமுறை வந்தது. எனவே அவற்றுக்கெல்லாம் எதிர்ப்புத் தெரிவித்து 1953 ஆம் ஆண்டு மே மாதம் அனுமதிச் சீட்டுப் பெறாமல் அவர் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்குள் சென்றார். அங்கு கைது செய்யப்பட்டு வீட்டுக் காவல் சிறையில் வைக்கப்பட்டார். முறையான சிகிச்சைகளின்றி, சில வாரங்களில் உடல்நிலை மோசமாகி ஜூன் 23 ஆம் தேதி காலமானார்.

முகர்ஜியின் தாயார் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் அவரது மரணம் குறித்து உரிய விசாரணை செய்ய வேண்டும் என பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் நேரு அதற்குச் செவி சாய்க்கவில்லை.

ஐம்பத்து இரண்டு வருடங்கள் கூட நிரம்பும் முன்னரே உயிரிழந்த டாக்டர் முகர்ஜியின் வாழ்க்கை பன்முகச் சாதனைகள் நிறைந்தது. சட்டம், கல்வி, பொது வாழ்க்கை, அரசியல் என வெவ்வேறு துறைகளிலும் அவர் தனது அடையாளங்களைப் பதித்துள்ளார். ஆனால் அவை எல்லாவற்றிலும் ஓர் அளப்பரிய தேசபக்தராக அவர் ஆற்றிய மூன்று முக்கிய பணிகள் என்றும் நிலைத்து நிற்பவை.

முதலாவது ஜம்மு – காஷ்மீர் மாநிலம் நமது தேசத்துடன் முழுமையாக ஒருங்கிணைய அவர் தொடங்கி வைத்த  நடவடிக்கைகள். நேரு அரசு அந்த ஒரு மாநிலத்தை மட்டும் மிக வித்தியாசமானதாகப் பாவித்து அதற்கு சிறப்புச் சலுகைகளை வழங்கியது. அது பிரிவினைக்கு வழி வகுக்கும் என உணர்ந்துஆட்சியாளர்களை எதிர்த்து போராட்டத்தில் இறங்கினார். அதற்காக தன்னுடைய உயிரையே காணிக்கையாக்கினார். அப்போது அவர் தொடங்கி வைத்த முயற்சி, 2019 ஆவது வருடம் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, சம்பந்தப்பட்ட (370, 35ஏ) பிரிவுகளை நீக்கியதன் மூலம் முழுமையடைந்தது. அதன்மூலம் டாக்டர் முகர்ஜி மட்டுமன்றி, சர்தார் படேல், அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட பலரின் கனவுகளும் நனவாகின. இப்போது  ஜம்மு- காஷ்மீரில் தீவிரவாதம் குறைந்து, வளர்ச்சி அதிகரித்து மக்கள் அமைதியாக வாழத் தொடங்கி விட்டனர்.

இரண்டாவதாக அவரது முக்கிய பங்களிப்பு இன்றைய மேற்கு வங்க மாநிலம் பற்றியது. 1940 களில் பிரிவினையின் போது, முஸ்லிம் லீக் கட்சி மேற்கு வங்கப் பகுதியையும் பாகிஸ்தானுடன் (அன்றைய கிழக்கு பாகிஸ்தான் – தற்போதைய வங்க தேசம்) இணைக்க முயற்சிகளை மேற்கொண்டது. அந்தப் பகுதி இந்தியாவுடன் தான் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் முகர்ஜி மக்களைத் திரட்டிப் போராடினார். ஏனெனில் தற்போதைய வங்கதேச நாடு உள்ளிட்ட அந்தப் பகுதிகளில் ஏற்கெனவே இந்துக்கள் பெரும் துன்பங்களை எதிர்கொண்டு சிரமங்களுடன் வாழ்ந்து வந்தனர். எனவே மேற்கு வங்கப் பகுதியும் இணைக்கப்பட்டால் இந்துக்கள் அங்கு அமைதியாக வாழ முடியாது என்பதை அவர் உணர்ந்திருந்தார். அவர் எடுத்த நடவடிக்கைகளால் தான் கல்கத்தா உள்ளிட்ட மேற்கு வங்கம் இன்று நம்முடன் உள்ளது. இல்லையெனில் பகவான் ராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர் உள்ளிட்ட பல மாமனிதர்கள் தோன்றி வளர்ந்த அந்தப் பகுதி நம்மை விட்டுப் போயிருக்கும்.

முகர்ஜியின் மூன்றாவது முக்கிய பங்களிப்பு, அவர் பாரதிய ஜனசங்கத்தை நிறுவியது. நேருவின் போக்கும் காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறையும் நாட்டுக்குப் பொருந்தாது என்பதை அப்போதே  உணர்ந்தார். அது நாட்டின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல எனத் தீர்மானித்தார். எனவே அதற்கு மாற்றாக நமது தேசியக் கூறுகளின் அடிப்படையிலமைந்த கட்சி அவசியம் எனத் தீர்மானித்து தேசபக்தர்களுடன் ஆலோசித்து பாரதிய ஜன சங்கத்தைத் தொடங்கினார். அப்போது முதல் கட்சியின் அகில பாரத பொதுச்செயலாளராக இருந்த தீனதயாள் உபாத்யாயஅவர்களின் அமைப்பு பணி மற்றும் திறமை வாய்ந்த பொறுப்பாளர்களின் அர்ப்பணிப்பு ஆகியவற்றால் 1967 ஆம் வருடம் நடந்த சட்டமன்றத் தேர்தலிலேயே பல மாநிலங்களில் ஜன சங்கம் கூட்டணி ஆட்சியைப் பிடித்தது.  இந்திரா காந்தியின் அடக்குமுறைகளை எதிர்த்து உருவாக்கப்பட்ட ஜனதா கட்சியில் ஜனசங்கம் முக்கிய பங்கு வகித்தது. 1977இல் பொதுத் தேர்தலில் ஜனதா கட்சி பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் சிறப்பாக ஆட்சி நடத்தியது.

பின்னர் 1980 ஆம் வருடம் ஜனசங்கம் பாரதிய ஜனதா கட்சியாக மாற்றம் பெற்றது. அதன்பின் கட்சி தொடர்ந்து வளர்ச்சி பெற்று பல மாநிலங்களில் தனியாக ஆட்சியைப் பிடித்தது. 1996 ஆம் வருடம் தொடங்கி 2004 வரை மத்தியில் வாஜ்பாய் அவர்கள் தலைமையில் மூன்று முறை பாஜக கூட்டணி ஆட்சியில் அமர்ந்தது. 2014 ஆம் வருடம் முதன் முதலாக பாஜக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. நரேந்திர மோடி அவர்கள் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பிரதமராகி கடந்த பன்னிரெண்டு வருடங்களுக்கு மேலாக மோடி தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. நாடு பல்வேறு துறைகளிலும் வேகமாக முன்னேறி, உலக அளவில் தனது முத்திரைகளைப் பதித்து வருகிறது.

முகர்ஜி அவர்கள் விரும்பியபடி தேச நலன், கலாசாரம், பாதுகாப்பு, அனைவருக்குமான வளர்ச்சி ஆகிய கொள்கைகளை மையமாகக் கொண்டு வளர்ந்து, இன்று உலகின் மிகப்பெரிய ஜனநாயக கட்சியாக பாரதிய ஜனதா உருவெடுத்துள்ளது;  நாட்டிலுள்ள 22 மாநிலங்களில் தனியாகவும், கூட்டணியாகவும் ஆட்சி செய்து வருகின்றது. அதனால் நாடு முழுவதும் கலாச்சார மறுமலர்ச்சியும், அனைவரின் வாழ்விலும் முன்னேற்றமும், தேச நோக்கும் ஏற்பட்டு வருகின்றன.  ‘வளர்ச்சியடைந்த பாரதம்’ என்னும் இலக்கை நோக்கி நாடு சென்று கொண்டுள்ளது.

அதற்கெல்லாம் டாக்டர் முகர்ஜி போட்ட அடித்தளங்கள்  காரணமாக அமைந்துள்ளன. அவர் தன்னுடைய வாழ்க்கையையே தேசத்துக்காக ஆகுதியாக்கிக் கொண்ட ஒரு மாமனிதர்;  வரலாற்றில் நிலைத்து நிற்கும் ஒரு மகத்தான தேச பக்தர்.

  • (கட்டுரையாளர், புதுதில்லியிலுள்ள டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி ஆய்வு நிறுவனத்தின் அறங்காவலர் மற்றும் செயலாளர்; தமிழக பாஜகவின் துணைத் தலைவர்).

$$$

Leave a comment