கீதையின் பாதையில்… 

-கருவாபுரிச் சிறுவன்

ஹிந்துக்களின் புனித நூற்களில் முதன்மையான வேதக் கருத்துக்களை வெளிநாட்டினர்  ஏற்கத் தொடங்கிவிட்டனர் என்று, சங்கரன்கோவில் சிவத்தொண்டர்  மா.பட்டமுத்து அவர்களின் கட்டுரை உதவியுடன் கூறுகிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்...

விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும் 
    வேழமும் பாகனும் வீழச் 
செற்றவன் தன்னை புரமெரி செய்த 
   சிவனுறு துயர்களை தேவை 
பற்றலர் வீயக்கோல் கையில் கொண்டு 
   பார்த்தன் தன்தேர் முன் நின்றானை 
சிற்றவை பணியால் முடி துறந்தானை 
   திருவல்லிக்கேணி கண்டேனே!

         -திருமங்கையாழ்வார்

நான்கு வேதம், இருபத்தெட்டு ஆகமங்களின் சாராம்சக் கருத்துக்களை விளக்கமாக விரித்துச் சொல்லும் இருபெரும் இதிகாசங்கள் வான்மீகியின் ராமாயணம். வியாசரின் மகாபாரதம். இவை பாரத நாட்டின் ஞானப் பொக்கிஷங்கள். 

வியாசபகவான் சொல்ல சொல்ல விநாயகப்பெருமானால் எழுதப்பெற்ற சிறப்பினை உடையது மகாபாரதம்.

ஹிந்துக்களுக்குக் கிடைத்த மாபெரும் பொக்கிஷங்களான ராமாயணத்தில் இடம் பெற்றுள்ள ஆதித்ய ஹிருதயமும், பாரதத்தில் இடம் பெற்றுள்ள பகவத்கீதையும் இன்றும் பலராலும்  பாராயணம் செய்யப்படுகின்றன. 

பகவத்கீதை, பார்த்தனாகிய அர்ச்சுனனின் தேர் முன் நின்று கிருஷ்ண பகவான்  உபதேசம் செய்த அருள்மொழிகள். 

ஒவ்வொரு மதத்திற்கும் புனித நூல்கள் இருப்பது போல ஹிந்து மதத்திற்குரிய புனித நூல் ‛பகவத்கீதை’.

இதற்கு ஆதிசங்கரர், மத்வர், ராமானுஜர், நிம்பர்க்கர், வல்லபர், ஞானதேவர் போன்ற மகான்களும், பாலகங்காதர திலகர், மகாகவி பாரதி, மகரிஷி அரவிந்தர், மகாத்மா காந்தி,   வினோபா பாவே, ராஜாஜி,  முன்னாள் குடியரசுத்தலைவர் ராதாகிருஷ்ணன் போன்ற தலைவர்களும், சித்பவானந்தர், சின்மாயனந்தர்,பக்த வேதாந்த சுவாமி போன்ற துறவிகள் பலராலும் விரிவுரை எழுதப் பெற்றுள்ளது. 

இந்நூலின் சிறப்பினை, வாரன் ஹேஸ்டிங்ஸ் எனும் ஆங்கில ஆட்சியாளர்  “இந்தியாவில் தோன்றிய பகவத்கீதையின் கொள்கை கோட்பாடுகளை இங்கிலாந்து நடைமுறைக்குக் கொண்டு வருமானால் இங்கிலாந்து என்றென்றும் மேன்மையுற்று விளங்கும்” என அன்றே குறிப்பிட்டுள்ளார் என சுவாமி சித்பவானந்தர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

ஹிந்துக்களின் புனித நூற்களில் முதன்மையான வேதக் கருத்துக்களை வெளிநாட்டினர்  ஏற்கத் தொடங்கிவிட்டனர் என்று சங்கரன்கோயில் சிவத்தொண்டர்  மா.பட்டமுத்து அவர்கள் ‘வழிகாட்டும் வெளிநாடு’ என்ற தலைப்பில் வழங்கிய கட்டுரை  உங்களது சிந்தனைக்கு… 

***

வழிகாட்டும் வெளிநாடு

பாரதமே திருநாடு பரசிவமே பரமபதி 
ஆரணமே ஆகமமே அருள்தருநூ லதில் சுரக்கும் 
சாரமதே சைவமெனும் சற்சமய மெனநீயேன் 
தேர அருள் செய்தனையே சீராசைக் கோமதியே!

  -பேட்டை ஆ.ஈஸ்வரமூர்த்தி பிள்ளை

பரமசிவப்பிரபுவின் திருவாக்காகிய 4 வேதங்களும் 28 சிவாகமங்களும் சைவ சமய உயிர்நாடி. இவற்றின் செம்பொருள் வாய்மை வைத்த சீர்திருத்தேவாரமும், திருவாசகமும் முதலான 12 திருமுறைகளும் 14 சாத்திர நூல்களும் சைவ சமயப் பிரமாண நூல்கள். முன்னையவை வடமொழியிலும், பின்னையவை தமிழிலும் உள்ளன. வடமொழியும் தென்தமிழும் நமக்கு இரு கண்கள். 

வடமொழி பிராமணர்களின் மொழி என்ற பழமையான கருத்தினால் அதனை வெறுத்து ஒதுக்கிறது இன்றைய  ‘நவீன சைவக்கூட்டம்’. வேத மந்திரங்கள் தேவையில்லை என்று கூறி, தமிழ் மந்திரங்களைக் கொண்டு கும்பாபிஷேகம், திருமணம் முதலியவற்றை நடத்தும் தீவிர முயற்சியில் அக்கூட்டம் தமிழ்நாட்டில் ஈடுபட்டுள்ளது.

வடமொழியைப் புறக்கணிக்கும் நவீனர்களே! அமெரிக்க பார்லிமென்ட் கூட்டத்தொடர் இந்து மத பிரார்த்தனைகளுடன் தொடங்கிய அதிசயத்தைப் பார்த்தீரா?

நீங்கள் வெறுக்கும் ரிக் வேத கீதமும், உபநிஷத மந்திரங்களும் ராஜன் ஜேட் என்ற பெருந்தகையார் திருவாக்கினால் அமெரிக்க செனட்சபை மாளிகையில் முழங்கியதை அறிவீரா?

நவேடா என்ற மாகாண சட்டசபைக் கூட்டத் தொடரிலும் காயத்ரி மந்திர அருள் ஒலி இடம் பெற்றதை நீங்கள் உணர்வீரா? 

கிறிஸ்தவ நாட்டின் பார்லிமென்ட் நமது வேத கீதத்தைப் பாராட்டுகிறது. வணங்குகிறது (THE HINDU 14.07.2007). ஆனால் நமது தமிழகமோ வேதகீதங்களை வேண்டாம் என ஒதுக்குகிறது.

உலக நாடுகளின் யுனெஸ்கோ என்ற நிறுவனம் 2005-க்கான  ‘MEMORY OF THE WORLD’ என்ற அரிய பொக்கிஷமாக பாண்டிச்சேரியில் வெளியிடப்பட்ட சைவசமய நூல்களைப் பதிவு செய்துள்ளது. 

2007-க்கான அவ்விருது வடமொழியில் உள்ள ரிக்வேதத்திற்குக் கிடைத்திருக்கிறது. (THE HINDU 21.06.2007) எதிர்கால சந்ததிகளுக்கு இப்பொக்கிஷங்களை அறிமுகப்படுத்தும் அற்புத முயற்சியில் யுனெஸ்கோ இறங்கியுள்ளது. ஆனால் தமிழகமோ சமஸ்கிருத வேதமந்திரங்கள் அர்ச்சனை வேண்டாம் என ஒதுக்குகிறது! கொடுமையிலும் கொடுமை!

நமது பாரதத்தின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர். அப்துல் கலாம் அவர்கள் கிரேக்க நாட்டிற்கு விஜயம் செய்த போது அந்த நாட்டின் ஜனாதிபதி சமஸ்கிருத மொழியில் வரவேற்பு மடலை நமது ஜனாதிபதிக்கு வழங்கியதை தமிழக நவீன சைவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

கிரேக்க மொழியில் கொடுக்காமல் சமஸ்கிருத மொழியில் மடல் மலர்ந்த செய்தி மூலம் கிரேக்க நாடு நல்லதுக்கு  வழிகாட்டுகிறது.

“லண்டனில் ஒரு இந்துக் கோயிலில் நோய்வாய்ப்பட்டிருந்த ‘சம்போ’ என்ற பசுவினைக் கொல்ல வேண்டும் என்ற வெலஷ் அசெம்பிளி தீர்மானத்தை பிரிட்டிஷ் நீதி மன்றம் சட்ட விரோதம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. (The Hindu 17.07.2007) நூற்றுக்கணக்கான பசு மாடுகளைக் கொன்று உண்ணும் தமிழகமே இச்செய்தியைப் படித்துப் பார்.

தமிழும் சமஸ்கிருதமும் பசுவும் நமது சமயப் பாரம்பரியம் என்ற பேருண்மையைப் புறக்கணிக்கும் தமிழகத்திற்கு வெளி நாடுகள் வழிகாட்டும் அதிசயத்தைப் பாரீர். 

***

-என்று எழுதி தன் ஆசிரியர் எழுதிய முதற்பாடல் கோமதி சதரத்ன மாலைக்கு  புகழஞ்சலி செய்து விரிவுரை ஆற்றியுள்ளதைக் கவனித்தீர்களா…  

வெளிநாட்டினர்  பலரும் பாரதத்தின் தொன்மை கலாச்சாரத்திற்கு திரும்பிக் கொண்டு இருக்கிறார்கள். சநாதன தர்மத்தை நிலைநிறுத்திக் கொண்டு இருக்கிறார்கள் அதுமட்டுமல்ல… வேதத்தின் சாரமான பகவத்கீதையை  கையில் வைத்துக் கொண்டு இன்று பலரும் சத்தியப் பிரமாணம் எடுக்கிறார்கள்.

2013 இல் அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஹிந்து அமெரிக்கரான துளசி கபார்ட்டும்,  2025இல் அமெரிக்கா பிரதிநிதிகள் சபைக்கு தேர்தெடுக்கப்பட்ட இரண்டாவது ஹிந்து அமெரிக்கரான சுஹாஸ் சுப்ரமணியமும், பகவத்கீதை மீது சத்தியப் பிரமாணம் செய்து வரலாறு படைத்தார்கள். (தினமலர் 2025, ஜன.7 நாளிதழ் செய்தி).

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ரிஷி சுனக். கடந்த 2015இல் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது பகவத்கீதை மீது சத்தியப் பிரமாணம் செய்து பதவி ஏற்றுக்கொண்டார்.

கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள நாடு கென்யா. இந்நாட்டிலுள்ள மிகப்பெரிய நகரம் மொம்பாசா. இங்கு 60 சதவீதம் கிறிஸ்தவர்கள், 38 சதவீதம் முஸ்லீம்கள், 0.5 சதவீதம் ஹிந்துக்கள் வாழ்கிறார்கள். இங்கு 2026 பிப்ரவரியில் நடந்த தேர்தலில் கென்யா மொம்பாசா மாகாணத்தில் இளைஞர் பேரவை சார்பாக வெற்றி பெற்றவர் கெல்லி காலேப். இவர் பகவத்கீதை மீது சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

ஹிந்து மதத்தின் மந்திரச்சொற்களில் ஒன்றான ‘கடமைச்செய், பலனை எதிர்பாராதே’ என்ற தத்துவக் கோட்பாட்டை உலகத்திலுள்ள உள்ள பிற மதத்தினரும் ஏற்றுக்கொள்ள தயாராகி விட்டனர் என்பதற்கு மேற்க்கண்ட செயல்கள் யாவும் உதாரணம்.

இந்திய தேசமாகிய பாரத்தில்… நவ. 3., 1947இல் பாரதத்துடன் இணைந்துவிட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஊடுருவ பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டிருந்தது. 

பட்காம் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த ராணுவத்தின் மூன்றில் 2 பிரிவினர் முகாமுக்குத் திரும்பி விட்டனர். மதியம் 3 மணிக்கு புறப்பட நினைத்த மேஜர் சோம்நாத் சர்மா தலைமையிலான மூன்றாவது பிரிவு படையினர் மீது, ஊடுருவல்காரர்கள் திடீர்த் தாக்குதல் நடத்தினர். எதிர்த் தரப்பின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், ஸ்ரீநகரைப் பாதுகாக்க பாரத வீரர்கள் தீரத்துடன் போரிட்டனர்.

எங்கிருந்தோ வந்த வெடிபொருளில் சிக்கி பலத்த காயங்களுடன் மேஜர் மரணம் எய்தினார்.‘எதிரிகளுக்கும் நமக்கும் 50 அடிகளே வித்தியாசம். ஆனால் கடைசி வீரன் உயிரிழக்கும் வரை, கடைசி தோட்டா தீரும் வரை பின்வாங்க மாட்டோம்’ என்பது தான் தலைமையகத்துக்கு அவர் கடைசியாக அனுப்பிய தகவல்.

மேஜருடன் சேர்ந்து 21 ராணுவ வீரர்கள் மரணம் எய்தினர். 3 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட அவரின் உடலை அடையாளம் காண உதவியது, அவரது துப்பாக்கி வைக்கப்பட்டிருந்த தோலுறையும் சட்டைப்பையில் வைத்திருந்த பகவத்கீதை புத்தகம் தான்.  உயரிய விருதான  ‘பரம்வீர் சக்ரா’ விருது மேஜர் சோம்நாத் சர்மாவுக்கு முதல் முறையாக வழங்கப்பட்டது. 

வெளிநாட்டவர்களுக்கு வேத வாக்கியமாக விளங்கும் பகவத்கீதை பாரத ராணுவ வீரர்களுக்கு உயிர்ப்பாக விளங்குகிறது என்பதை , பாரத தேசத்தின் பாதப்பகுதியில் அமைந்திருக்கும்  தமிழகத்தில் வாழும் தமிழக அரசியல்வாதிகளுக்கும் உயிர்ப்பாகவும் பாதுகாப்பாகவும்  இருக்கிறது என்பதை புரிந்து கொள்வார்களா?

நிறைவாக, 

தமிழக அரசு, கோயில்களில் தமிழில் குடமுழுக்கு, மாநில அரசிற்கு இருமொழிக் கொள்கை போதும் என்கிற ஆரோக்கியமற்ற அரசியலை முன்னெடுக்காமல் முன்னோர் காட்டிய வழியில்  தமிழகத்தை வழிநடத்துமா  என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

ஜெய்ஹிந்த்!

வாழ்க பாரதம்! வாழ்க மணித்திருநாடு!

$$$

Leave a comment