-பேரா. பூ.தர்மலிங்கம்
தீனதயாள் உபாத்யாயாவின் வாழ்க்கை பல எளிய உண்மைகளை நமக்குக் கற்றுத் தருகிறது. எளிமையாக வாழலாம். நேர்மையாகப் பணியாற்றலாம். அதிகாரத்தைத் தேடாமல் பொதுப்பணி செய்யலாம். உள்ளூர் திறமைகளுக்கு மதிப்பளிக்கலாம். உழைப்பை மரியாதையுடன் பார்க்கலாம். வளர்ச்சியின் விளிம்பில் இருப்பவர்களை முன்னேற்றத்தின் மையத்துக்கு அழைத்து வரலாம். அவரது ‘ஒருங்கிணைந்த மனிதநேயம்’ மனிதனை முழுமையாகப் பார்க்கச் சொல்கிறது.

பண்டித தீனதயாள் உபாத்யாயா பிறந்தநாள்: செப். 25
எளிமையான வாழ்க்கை, ஆழமான சிந்தனை, இடைவிடாத உழைப்பு, சமூகத்தின் கடைசிமனிதன் மீதான அக்கறை. இந்த நான்கு அம்சங்களும் பண்டித தீனதயாள் உபாத்யாயாவின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள உதவுகின்றன.
இந்தியாவின் அரசியல் மற்றும் சமூகசிந்தனை வரலாற்றில் பல தலைவர்கள் தங்கள் பதவிகளாலும், பேச்சுகளாலும், செயல்பாடுகளாலும் நினைவுகூரப்படுகிறார்கள். தீனதயாள் உபாத்யாயா அவர்களில் தனித்துவமானவர். நீண்டகாலம் வாழாத போதிலும், இந்தியாவின் அரசியல், பொருளாதாரம், சமூகம், பண்பாடு, கிராம வாழ்க்கை ஆகியவற்றைப் பற்றி அவர் எழுப்பிய கேள்விகள் இன்றும் விவாதிக்கப்படுகின்றன.
ஒரு நாட்டின் வளர்ச்சி என்றால் என்ன? அதன் பயன் யாரைச் சென்றடைய வேண்டும்? பொருளாதார முன்னேற்றத்துடன் மனிதநேயத்தை எவ்வாறு இணைப்பது? இந்தக் கேள்விகளுக்கான அவரது அணுகுமுறையைப் புரிந்துகொள்ள அவரது வாழ்க்கையை அறிந்துகொள்வது அவசியம்.
துன்பத்தில் தொடங்கிய வாழ்க்கை:
1916 செப்டம்பர் 25 அன்று உத்தரப்பிரதேசத்தின் மதுராமாவட்டத்தில் உள்ள நக்லாசந்திரபான் என்ற கிராமத்தில் தீனதயாள் உபாத்யாயா பிறந்தார். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தார். வாழ்க்கையின் தொடக்கத்திலேயே பல சோதனைகளை எதிர்கொண்டார். ஆனால் அவை அவரது கல்வி ஆர்வத்தையும் முன்னேறும் எண்ணத்தையும் தடுக்கவில்லை. கல்வியில் சிறந்து விளங்கிய அவர், தனக்குக் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறினார். அதேநேரத்தில், வசதி குறைந்த மாணவர்களுக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இருந்ததாக அவரது வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
இது அவரது குணத்தின் ஒரு முக்கிய அம்சத்தை வெளிப்படுத்துகிறது: தனக்குக் கிடைத்த வாய்ப்பு பிறருக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம். பிற்காலத்தில் சமூகத்தின் பின்தங்கிய மக்களைப் பற்றிய அவரது அக்கறைக்கான ஆரம்பத் தடயங்களை இதிலேயே காண முடிகிறது.
எளிமையை வாழ்வாக்கியவர்:
தீனதயாள் உபாத்யாயாவின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க அம்சம் அவரது எளிமை. அவர் உயர்ந்த பொறுப்புகளில் இருந்தபோதும் ஆடம்பரமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கவில்லை. எளிய உடை, எளிய உணவு, சாதாரண வாழ்க்கை ஆகியவற்றைத் தொடர்ந்து கடைப்பிடித்தார்.
அவரது நேர்மையை வெளிப்படுத்தும் ஒரு சிறிய சம்பவம் குறிப்பிடத்தக்கது. ஒருமுறை காய்கறி வாங்கியபோது தவறுதலாக ஒரு செல்லாத நாணயம் வியாபாரியிடம் சென்றுவிட்டதை அவர் அறிந்தார். உடனே அதைச் சரிசெய்ய வேண்டும் என்று கருதி, நல்ல நாணயத்தை வழங்கியதாக அவருடன் பணியாற்றியவர்கள் நினைவு கூர்ந்துள்ளனர்.
தொகை சிறியதாக இருந்தாலும், அவருக்கு அது முக்கியமல்ல. சிறிய விஷயத்திலும் நேர்மை காக்கப்பட வேண்டும் என்பதே முக்கியம். பொதுவாழ்க்கையில் பேசப்படும் கொள்கைகளுக்கு அன்றாட வாழ்க்கையே சோதனைக்களம் என்பதை அவரது வாழ்க்கை உணர்த்துகிறது.
அமைதியான உழைப்பால் உருவான அமைப்பாளர்:
1937-ஆம் ஆண்டு கான்பூரில் கல்வி கற்றபோது ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்துடன் தொடர்பு ஏற்பட்டது. பின்னர் முழுநேர அமைப்புப்பணியில் ஈடுபட்டார். அவரது திறமை மேடையில் பேசுவதில் மட்டும் இல்லை. பல்வேறு பகுதிகளுக்குச் சென்று தொண்டர்களைச் சந்தித்து, அவர்களுடன் தங்கி, அமைப்புப் பணியை முன்னெடுத்தார். புதிய தலைமுறையை உருவாக்குவதில் கவனம் செலுத்தினார்.
1951-ஆம் ஆண்டு பாரதிய ஜனசங்கம் உருவானபோது அதன் அமைப்பு வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றினார். பின்னர் அதன் அகில இந்திய பொதுச்செயலாளராகப் பணியாற்றினார். 1967-ஆம் ஆண்டு கோழிக்கோடு மாநாட்டில் அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவரது அரசியல் வாழ்க்கையின் முக்கிய அம்சம் பதவிகளின் எண்ணிக்கை அல்ல. மனிதர்களை உருவாக்கிய அமைப்புப்பணியே அவரது முக்கியப் பங்களிப்பாக அமைந்தது.
எழுத்தின் வழியாக சிந்தனையைப் பரப்பியவர்:
தீனதயாள் உபாத்யாயா ஒரு திறமையான எழுத்தாளரும் ஆவார். ‘ராஷ்ட்ரதர்மம், பாஞ்சஜன்யம், ஸ்வேதேஷ்’ போன்ற வெளியீடுகளுடன் அவர் தொடர்புடையவராக இருந்தார். தேசியஉணர்வு, இந்தியப்பண்பாடு, சமூகப்பொறுப்பு, அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றைப் பற்றி தொடர்ந்து எழுதினார். அவரது எழுத்துகளில் அடிக்கடி எழுந்த கேள்வி: இந்தியாவின் வளர்ச்சிப்பாதை இந்திய சமூகத்தின் தன்மைக்கும் தேவைகளுக்கும் ஏற்றதாக இருக்க வேண்டாமா?
பிற நாடுகளிடமிருந்து கற்றுக் கொள்வதை அவர் மறுக்கவில்லை. ஆனால் ஒரு நாட்டில் வெற்றி பெற்ற மாதிரியை அப்படியே வேறு சமூகத்தில் பொருத்த முடியாது என்ற பார்வையை முன்வைத்தார். இந்தியாவின் குடும்ப அமைப்பு, கிராம வாழ்க்கை, விவசாயம், உள்ளூர் வளங்கள், தொழில் மற்றும் பண்பாடு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு வளர்ச்சியை அணுக வேண்டும் என்றார்.
மனிதனை மையமாகக் கொண்ட பொருளாதாரப் பார்வை:
பொருளாதாரம் என்பது உற்பத்தி, முதலீடு, வருமானம் போன்ற எண்ணிக்கைகளால் மட்டுமே அளவிடப்பட வேண்டியதல்ல என்பது அவரது சிந்தனையின் முக்கிய அம்சமாகும். ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றம் சாதாரண மக்களின் வாழ்க்கையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதும் முக்கியம்.
வேலைவாய்ப்பு உருவாகிறதா? உழைப்புக்கு உரியமதிப்பு கிடைக்கிறதா? சிறுதொழில்கள் வளர வாய்ப்பு உள்ளதா? கிராம இளைஞர்கள் தங்கள் திறமையைப் பயன்படுத்த முடியுமா? விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரம் மேம்படுகிறதா? பெண்கள் தங்கள் திறமையை வருமானமாக மாற்றுவதற்கான வாய்ப்பைப் பெறுகிறார்களா?
இத்தகைய கேள்விகளை பொருளாதார விவாதத்தின் ஒரு பகுதியாகக் கருத வேண்டும் என்ற அணுகுமுறை அவரது சிந்தனையில் காணப்படுகிறது. இதனால் பொருளாதாரம் என்பது இறுதியில் மனித வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான கருவி என்ற பார்வை முன்வருகிறது.
அந்தியோதயா– வளர்ச்சியின் விளிம்பில் இருப்பவரை நோக்கி…
தீனதயாள் உபாத்யாயாவின் சமூக மற்றும் பொருளாதாரச் சிந்தனையில் ‘அந்தியோதயா’ முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. எளிமையாகச் சொன்னால், சமூகத்தின் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் மனிதனுக்கும் முன்னேற்றத்தின் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே இதன் மையக்கருத்து.
ஒரு நாட்டில் பெரிய தொழிற்சாலைகள் உருவாகலாம். நகரங்கள் வேகமாக வளரலாம். புதிய தொழில்நுட்பங்கள் வரலாம். ஆனால் தொலைதூரப் பகுதியில் வாழும் ஒரு ஏழைக் குடும்பத்தின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால், அந்த வளர்ச்சியின் முழுப்பயனைப் பற்றி கேள்வி எழுவது இயல்பானது.
அந்தியோதயா, ஏழைகளை வெறும் உதவி பெறுபவர்களாகப் பார்ப்பதற்குப்பதிலாக, பொருளாதாரச் செயல்பாட்டில் பங்கேற்கும் திறன் கொண்டவர்களாகப் பார்க்கிறது. அதற்கு வேலைவாய்ப்பு, திறன்மேம்பாடு, தொழில்வாய்ப்பு, சந்தைஅணுகல், நிதிவசதி போன்றவை தேவை. இதனால் அந்தியோதயா என்பது உதவி வழங்கும் எண்ணத்தைத் தாண்டி, தன்னிறைவு மற்றும் மனித மரியாதைக்கான வாய்ப்பை உருவாக்கும் அணுகுமுறையாகவும் புரிந்துகொள்ளலாம்.
கிராமம் – வாய்ப்புகளின் தளம்:
தீனதயாளின் பொருளாதாரச்சிந்தனையை இன்றையகாலத்துடன் இணைத்துப் பார்க்கும்போது கிராமம் முக்கியமானதாகிறது. இந்தியாவின் பொருளாதார வாழ்க்கையில் விவசாயம் மட்டுமல்ல; கைவினை, சிறுதொழில், கால்நடை, உணவுபதப்படுத்துதல், உள்ளூர் சேவைகள் போன்ற பல்வேறு துறைகள் கிராமங்களில் உள்ளன.
பல கிராமங்களில் தலைமுறைகளாகப் பாதுகாக்கப்படும் திறமைகள் உள்ளன. ஒரு கைவினைஞரின் திறமை, ஒரு பெண்ணின் பாரம்பரியத் தொழில்அறிவு, ஒரு விவசாயக் குடும்பத்தின் அனுபவம், ஒரு பகுதியின் இயற்கைவளம்-இவை அனைத்தும் பொருளாதார வளங்களாக மாறக் கூடியவை. அவற்றை நவீனத் தொழில்நுட்பத்துடனும் சந்தைவாய்ப்புகளுடனும் இணைத்தால் கிராமப்புறங்களில் புதிய வாழ்வாதாரங்கள் உருவாகலாம். இதில் முக்கியமானது, வளர்ச்சியை கிராமத்திற்கு வெளியிலிருந்து கொண்டுசெல்வது மட்டுமல்ல. கிராமத்துக்குள் இருக்கும் திறமையையும் வளத்தையும் அடையாளம் கண்டு வளர்ப்பதும் ஆகும்.
உழைப்பின் மதிப்பு:
ஒரு சமூகத்தின் பொருளாதார வலிமையை அதன் பெரிய நிறுவனங்களால் மட்டும் அளவிட முடியாது. விவசாயி, தொழிலாளர், கைவினைஞர், சிறுவணிகர், தொழில்முனைவோர், வீட்டு அடிப்படையிலான தொழில் செய்பவர் என ஒவ்வொருவரின் பங்களிப்பும் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாகும். தீனதயாளின் பார்வையில் உழைப்புக்கு மரியாதை வழங்கப்பட வேண்டும். இன்றைய சூழலில் இதை திறன்மேம்பாடு, தொழில்முனைவு, குறு மற்றும் சிறுதொழில் வளர்ச்சி, பெண்களின் பொருளாதாரப் பங்கேற்பு போன்ற துறைகளுடன் தொடர்புபடுத்திப் பார்க்க முடியும்.
ஒருவரிடம் திறமை இருக்கிறது என்பது மட்டும் போதாது. அந்தத் திறமைக்கு பயிற்சி வேண்டும்; சந்தை வேண்டும்; நிதிவசதி வேண்டும்; தொழில்நுட்ப உதவி வேண்டும். அப்போதுதான் திறமை வாழ்வாதாரமாக மாறும்.
பெண்களின் பொருளாதாரப் பங்கேற்பு:
இன்றைய கிராமப்புற வளர்ச்சியில் பெண்களின் பங்கு மிக முக்கியமானது. பல பெண்களிடம் பாரம்பரியத் திறன்கள் உள்ளன. தையல், நெசவு, உணவுப் பொருள் தயாரித்தல், கைவினைப் பொருட்கள், இயற்கை சார்ந்த பொருட்கள் போன்ற பல துறைகளில் அவர்கள் அனுபவம் பெற்றுள்ளனர். இந்தத் திறன்களை முறையான பயிற்சி, தொழில்நுட்பம், நிதி மற்றும் சந்தைவாய்ப்புகளுடன் இணைத்தால் குடும்ப வருமானம் அதிகரிக்கலாம்.
அதன் தாக்கம் குடும்பத்தைத் தாண்டிச் செல்கிறது. பெண்ணின் வருமானம் அதிகரிக்கும்போது குடும்பத்தின் கல்வி, சுகாதாரம், சேமிப்பு போன்றவற்றிலும் மாற்றம் ஏற்படலாம். பெண்களின் முடிவெடுக்கும் பங்கேற்பும் அதிகரிக்கலாம். இந்த வகையில் பெண்களின் தொழில்முனைவு, குடும்ப முன்னேற்றத்தையும் கிராமப்புற பொருளாதார வளர்ச்சியையும் இணைக்கும் பாலமாக அமைகிறது.
உள்ளூரிலிருந்து உலகத்தை நோக்கி…
இன்று “உள்ளூரிலிருந்து உலகளாவிய நிலைக்கு” என்ற கருத்து அதிகமாகப் பேசப்படுகிறது. ஆனால் அதன் அடித்தளம் உள்ளூர் அளவிலேயே உருவாக வேண்டும். ஒரு கிராமத்தில் கிடைக்கும் மூலப்பொருளை அங்கேயே மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக மாற்ற முடிந்தால், அதன்மூலம் உருவாகும் வருமானத்தின் ஒரு பகுதி அந்தப் பகுதியிலேயே தங்கும். உள்ளூர் கைவினைப் பொருளுக்கு தரம், வடிவமைப்பு, பேக்கேஜிங், டிஜிட்டல் சந்தை போன்ற வசதிகள் கிடைத்தால்அது பெரிய சந்தையை அடையலாம்.
இதுவே தற்சார்பின் நடைமுறை வடிவங்களில் ஒன்று. உலகத்திலிருந்து விலகுவது தற்சார்பு அல்ல; தன் திறமையையும் வளங்களையும் நம்பி உலகத்துடன் இணைவதே தற்சார்பின் வலிமை. இந்தக் கோணத்தில் தீனதயாளின் பொருளாதாரச் சிந்தனையை இன்றைய தொழில்முனைவு மற்றும் கிராமப்புற வளர்ச்சியுடன் இணைத்துப் படிக்க முடியும்.
ஒருங்கிணைந்த மனிதநேயம்:
தீனதயாள் உபாத்யாயாவின் சிந்தனையில் மிக முக்கியமான இடம்பெறுவது ‘ஒருங்கிணைந்த மனிதநேயம்’.1965-ஆம் ஆண்டு அவர் வழங்கிய தொடர் சொற்பொழிவுகளில் இதை விரிவாக விளக்கினார். மனிதனை உடல் என்ற ஒரு பரிமாணத்தில் மட்டும் பார்க்காமல், உடல், மனம், அறிவு, ஆன்மா ஆகிய பல பரிமாணங்களைக் கொண்ட முழுமையான மனிதனாகப் பார்க்க வேண்டும் என்பது அவரது அணுகுமுறை. அதேபோல மனிதன் தனிமையில் வாழ்பவன் அல்ல. குடும்பம், சமூகம், நாடு, இயற்கை ஆகியவற்றுடன் அவனுக்கு தொடர்பு உள்ளது.
இந்தப் பார்வையில் வளர்ச்சி என்பது வருமானம் அதிகரிப்பது மட்டுமல்ல; மனிதனின் வாழ்க்கைத்தரம், சமூக உறவு, பண்பாடு, சுற்றுச்சூழல், மனநலம் போன்ற பல அம்சங்களையும் கருத்தில்கொள்ள வேண்டியதாகிறது. இன்றைய நிலையான வளர்ச்சி மற்றும் மனிதமைய வளர்ச்சி குறித்த விவாதங்களுடன் இந்தக் கருத்தை ஒப்பிட்டு ஆய்வு செய்யலாம்.
காலம் கடந்தும் பொருந்தும் கேள்விகள்:
தீனதயாள்உபாத்யாயா 1968-ஆம் ஆண்டு மறைந்தார். இன்று நாம் செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் பொருளாதாரம், உலகமயமாக்கல், காலநிலை மாற்றம் போன்ற புதிய சூழலில் வாழ்கிறோம். அப்படியிருக்க, அவரது கருத்துகளை இன்று ஏன் படிக்க வேண்டும்? அவர் கூறிய ஒவ்வொரு கருத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்வதற்காக அல்ல. அவர் எழுப்பிய அடிப்படைக் கேள்விகளை மீண்டும் சிந்திப்பதற்காக.
வளர்ச்சி யாருக்காக? பொருளாதாரம் யாருக்காக? தொழில்நுட்பத்தின் பயன் யாரைச் சென்றடைகிறது? கிராமங்களின் பங்கு என்ன? உழைப்புக்கு நாம் அளிக்கும் மதிப்புஎன்ன? சமூகத்தின் மிகவும் பின்தங்கிய மனிதருக்கும் முன்னேற வாய்ப்பு கிடைக்கிறதா? இந்தக் கேள்விகள் காலம் மாறினாலும் மறைந்து போவதில்லை.
குறுகிய வாழ்க்கை – நீண்ட தாக்கம்:
தீனதயாள் உபாத்யாயாவின் வாழ்க்கையைப் பார்த்தால், அவரது கருத்துகளுக்கும் செயல்களுக்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதைக் காண முடிகிறது. எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார். மக்களுடன் நேரடியாகப் பணியாற்றினார். எழுத்தின் மூலம் கருத்துகளைப் பரப்பினார். அமைப்பை உருவாக்குவதில் நீண்டகாலம் உழைத்தார். பதவியைவிட பொறுப்பை முன்னிலைப்படுத்தினார். தனது வாழ்க்கையை பொதுப்பணிக்காக அர்ப்பணித்தார். இதனால் அவரைப் புரிந்துகொள்வதற்கு அவரது நூல்களைப் படிப்பதுடன், அவரது வாழ்க்கைமுறையையும் கவனிப்பது அவசியமாகிறது.
1968 பிப்ரவரி 11 அ ன்று முகல்சராய் அருகே ரயில்பாதையில் அவரது உடல் கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவரது மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அப்போது அவருக்கு வயது 51 மட்டுமே அவரது வாழ்க்கை திடீரென முடிவடைந்தாலும், அவரது எழுத்துகளும் கருத்துகளும் தொடர்ந்து வாசிக்கப்பட்டன. அவருடன் பணியாற்றியவர்களும் பின்னர் வந்த தலைமுறையினரும் அவரது பணியைத் தொடர்ந்து எடுத்துச் சென்றனர்.
ஒரு மனிதன் எவ்வளவு காலம் வாழ்ந்தான் என்பது மட்டுமே அவரது வாழ்க்கையின் அளவுகோல் அல்ல. அவன் வாழ்ந்த காலத்தில் எவ்வளவு அர்த்தமுள்ள பணியைச் செய்தான் என்பதும் முக்கியம். இந்த அளவில் தீனதயாள் உபாத்யாயாவின் வாழ்க்கை குறிப்பிடத்தக்கதாகிறது.
பிறந்தநாள் தரும் சிந்தனை:
செப்டம்பர் 25 அவரது பிறந்த நாள். இந்த நாளை ஓர் அரசியல் தலைவரின் பிறந்தநாளாக மட்டும் பார்க்காமல், இந்தியாவின் வளர்ச்சியைப் பற்றி சிந்திக்க ஒரு வாய்ப்பாகவும் பார்க்கலாம். ஒரு நாட்டின் முன்னேற்றம் பெரிய நகரங்களின் வளர்ச்சியில் மட்டுமல்ல; கிராமங்களின் மாற்றத்திலும் தெரிந்தாக வேண்டும்.
பெரிய தொழிற்சாலைகளின் எண்ணிக்கையில் மட்டுமல்ல; சிறுதொழில்களின் நிலைத்தன்மையிலும் வெளிப்பட வேண்டும். மொத்த வருமானத்தில்மட்டுமல்ல; ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரப் பாதுகாப்பிலும் பிரதிபலிக்க வேண்டும். புதிய தொழில்நுட்பத்தின் வேகத்தில் மட்டுமல்ல; அது சாதாரண மனிதனின் வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதிலும் அதன் மதிப்பு தெரிந்தாக வேண்டும். இதுவே தீனதயாள் உபாத்யாயாவின் சிந்தனையை இன்றைய காலத்துடன் இணைத்துப் படிப்பதற்கான ஒரு வழியாகும்.
தீனதயாள் உபாத்யாயாவின் வாழ்க்கை பல எளிய உண்மைகளை நமக்குக் கற்றுத் தருகிறது. எளிமையாக வாழலாம். நேர்மையாகப் பணியாற்றலாம். அதிகாரத்தைத் தேடாமல் பொதுப்பணி செய்யலாம். உள்ளூர் திறமைகளுக்கு மதிப்பளிக்கலாம். உழைப்பை மரியாதையுடன் பார்க்கலாம். வளர்ச்சியின் விளிம்பில் இருப்பவர்களை முன்னேற்றத்தின் மையத்துக்கு அழைத்து வரலாம். அவரது ‘ஒருங்கிணைந்த மனிதநேயம்’ மனிதனை முழுமையாகப் பார்க்கச் சொல்கிறது.
அவரது அந்தியோதயா, சமூகத்தின் கடைசி மனிதனையும் வளர்ச்சியின் பயணத்தில் இணைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. அவரது பொருளாதாரப் பார்வை, கிராமம், உழைப்பு, உள்ளூர்வளங்கள், சிறுதொழில் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நினைவூட்டுகிறது. அவரது வாழ்க்கை பொதுப்பணியில் தனிப்பட்ட எளிமைக்கும் நேர்மைக்கும் உள்ள மதிப்பை எடுத்துக்காட்டுகிறது. அவரது கருத்துகளை ஏற்றுக்கொள்வதும் விமர்சிப்பதும் ஒவ்வொருவரின் அறிவுசார் உரிமை. ஆனால் அவற்றைப் படித்து விவாதிப்பது முக்கியம். ஏனெனில் அவர் எழுப்பிய கேள்விகளில் ஒன்று இன்றும் நம்மைச் சிந்திக்க வைக்கிறது:
“வளர்ச்சி என்பது நாட்டின் பொருளாதார முன்னேற்றம் மட்டுமா? அல்லது நாட்டில் வாழும் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை முன்னேற்றமுமா?”
இந்தக் கேள்வியை தொடர்ந்து சிந்திப்பதே, பண்டித தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்த நாளில் அவரை நினைவு கூர்வதற்கான ஒரு பொருத்தமான வழியாகும். தீனதயாளரின் நினைவுக்கு மரியாதை செலுத்துவோம்; மனிதனை மையமாகக் கொண்ட வளர்ச்சியைப் பற்றி தொடர்ந்து சிந்திப்போம்.
*
- கட்டுரையாளரைத் தொடர்பு கொள்ள:
பேரா. பூ.தர்மலிங்கம்
முதுநிலை ஆய்வாளர் (இந்திய சமூக அறிவியல் கழகம்),
மேனாள் இருக்கைப் பேராசிரியர் (பண்டிட் தீனதயாள் உபாத்யாயா இருக்கை),
அழகப்பா பல்கலைக்கழகம்,
காரைக்குடி - 630003
அலைபேசி எண்: 91 9443850902
மின்னஞ்சல்: dharmaws@yahoo.co.in
$$$