நில அளவைத் துறை ஆய்வறிக்கை என்ற பெயரில் தகவல் திணிப்பு மோசடி
திருப்பரங்குன்றம் மலையுச்சியில் உள்ள தீபத்தூணை சர்வே கல் தான் என்று ஆய்வறிக்கை வெளியிட்டு, மீண்டும் வம்பில் இறங்கி இருக்கிறது தமிழக அரசு. தவறுக்கு மேல் தவறு செய்துகொண்டே போகும் இந்த அரசு எப்போது திருந்துமோ தெரியவில்லை. இதுபற்றிய விவரமாவது:

திருப்பரங்குன்றம் மலையில் சர்ச்சைக்குரிய இடத்தில் சர்வே தூண் (GTS) அமைந்துள்ளதாக, தமிழ்நாடு அரசின் நில அளவைத் துறை மற்றும் தமிழ்நாடு தொல்லியல் துறை இணைந்து நடத்திய ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
‘தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள 484 நில அளவைக் கற்கள் நேரில் அடையாளம் காணப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது’ என, அரசின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘அவை ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் நிலப்பரப்பை அளப்பதற்காக அமைக்கப்பட்ட முக்கோணவியல் நில அளவைத் தூண்கள்’ எனவும் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள மலையின் ஒரு பகுதியில் சிக்கந்தர் தர்கா உள்ளது. ‘மலையுச்சியில் உள்ள தூணில் கார்த்திகை நாளில் தீபம் ஏற்றலாம்’ எனக் கடந்த ஜனவரி மாதம் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘ஒருமுறை மட்டும் தீபம் ஏற்றிக் கொள்ளலாம்’ என கடந்த வாரம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ள நிலையில், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூண், நிலப்பரப்பை துல்லியமாக அளப்பதற்காக பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட நிலஅளவைத் தூண் (GTS)’ என ஆய்வறிக்கை ஒன்றை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் நில அளவை மற்றும் தீர்வைகள் துறை மற்றும் தமிழ்நாடு தொல்லியல் துறை ஆகியவை இதனைத் தயாரித்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட நிலஅளவை தொடர்பான அனைத்து ஜிடிஎஸ் (Great trigonometrical survey) நிலையங்களைக் கண்டறிந்து ஆவணப்படுத்துமாறு தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிறப்பித்த அரசாணையின் அடிப்படையில் இந்த ஆய்வறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஆய்வறிக்கையை வெளியிடுவதற்கு வருவாய்த்துறை அனுமதி அளித்துள்ளது. அதில், சிக்கந்தர் தர்காவுக்கு அருகில் அமைந்துள்ள கல் தூண், நில அளவைக் கல் என்று கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பான வரைபடமும் ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள ஜிடிஎஸ் நிலையத்தில் இருந்து நாகமலை, சதுரகிரி, கோபால்சுவாமி மலை, மதுரை மீனாட்சி அம்மன் கோயில், பொன்னுருக்கி மலை, பெருமாள் மலை உள்ளிட்ட இடங்களில் எடுக்கப்பட்ட முக்கோண அளவீடுகளும் பிரிட்டிஷ் காலத்தில் உள்ள ஜிடிஎஸ் தொடர்பான அறிக்கையில் உள்ள மதிப்புகளுடன் ஒத்துப் போவதாகவும் இந்த ஆய்வறிக்கை கூறுகிறது. இதில் கூறப்பட்டுள்ளதாவது:
நில அளவைப் பணியில் முக்கோண அளவீட்டு முறை மூலம் ஜிடிஎஸ் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஓர் அடிப்படைக் கோட்டை ஆதாரமாகக் கொண்டு அருகில் உள்ள புள்ளிகளுக்கு இடையிலான கோணங்களை அளவிட்டுள்ளனர்.
மலைக் குன்றுகள் நிறைந்த நிலப்பரப்புகளில் தெளிவான கோடுகள் கிடைத்ததால் முக்கோண அளவீட்டுப் புள்ளிகளை நிர்ணயிப்பது எளிதாக இருந்துள்ளது. அதேநேரம், சமவெளிப் பகுதிகளில் தெளிவான கோடுகள் கிடைப்பது குறைவாக இருந்ததால் அதிக எண்ணிக்கையிலான ஜிடிஎஸ் நிலையங்களை ஆங்கிலேயர்கள் அமைத்துள்ளனர்.
அதன்படி, முக்கோணவியல் அளவீட்டை முதன்மை நிலையங்கள் மற்றும் சிறிய நிலையங்கள் என வகைப்படுத்தியுள்ளதாகக் கூறும் ஆய்வறிக்கை, ‘பெரிய நிலையங்களில் 3 முதல் 4 அடி விட்டமும் 1 முதல் 14 அடி உயரமும் கொண்ட திடமான கல் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை பொதுவாக குன்றுகள் அல்லது மேடுகள் போன்ற உயர்ந்த நிலப்பகுதிகளில் காணப்படுகின்றன. சமவெளிகளில் செங்கல் அடிப்படையிலான தூண்களைக் கொண்ட கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளன.
சமவெளிப் பகுதிகளில் சுமார் 35 அடி உயரமுள்ள மரக் கம்பங்களை ஆங்கிலேயர்கள் பயன்படுத்தியுள்ளனர். அவற்றில் கோணங்களை அளவிடுவதற்கு தியோடலைட் கருவிகள் பொருத்தப்பட்டதாக அரசின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜி.டி.எஸ். நிலையங்களின் கட்டுமானத்தில் புள்ளிகள் மற்றும் மைய வட்டங்களைக் கொண்டு இடங்களைக் குறித்துள்ளனர். ‘இந்தக் குறிப்புகள் அந்த இடத்திலேயே திடமான பாறை அல்லது கல் கட்டுமானக் கோயில்கள், குன்றுகள், மேடுகள் உள்ள தரையில் உறுதியான கற்களின் மீது பொறிக்கப்பட்டன.
இந்த நிலையங்களை தரைக்கு மேலே உயர்த்துவதற்காக ஓர் அடையாளக் கல் தரையில் பதிக்கப்பட்டு அதன் மேல் ஒரு மேடை அமைக்கப்பட்டு அதன் மீது மற்றொரு அடையாளக் கல் வைக்கப்பட்டது. நிலத்தை அளப்பதற்கான கருவிகளைத் தாங்கும் வகையில் கற்கட்டுமானத் தூண்கள் கட்டப்பட்டன. இவை எளிதில் அடையாளம் காணப்படுவதை உறுதி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
ஆய்வில் கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையில் தமிழ்நாட்டில் 800க்கும் மேற்பட்ட ஜிடிஎஸ் நிலையங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் 484 நிலையங்கள் நேரில் சென்று ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
ஆங்கிலேயர் ஆட்சிக்கால முக்கோண அளவீட்டு ஆய்வுகளின்போது நிறுவப்பட்ட முதன்மை நிலையங்கள், ரோம எண்களால் குறிப்பிட்டுள்ளன. நில அளவீட்டை எளிதாக்கும் வகையில் முதன்மை நிலையங்களுக்கு அருகில் இரண்டாம் நிலை நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
மலை உச்சிகளில் பெரும்பாலும் கல் தூண் வடிவிலான நிலையங்களே காணப்படுகின்றன. ஆவணப்படுத்தப்பட்ட 482 நிலையங்களில் சுமார் 63 நிலையங்கள் இத்தகைய கல் தூண்களைக் கொண்டுள்ளன.

இவை கற்கள் மற்றும் மண்ணால் ஆன சதுர மேடையின் மீது உறுதியான வட்ட வடிவக் கட்டுமானத் தூணைக் கொண்டுள்ளன.வ்தூணின் உச்சியில் குறியிடப்பட்ட கல் பதிக்கப்பட்டுள்ளது.
இந்த அளவீடுகள் சிக்கந்தர் (தமிழக அரசு திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்றே குறிப்பிடுகிறது!) மலையில் நிறுவப்பட்டுள்ள தூணும் பாறையின் மேற்பரப்பில் பொறிக்கப்பட்டுள்ள குறியீடுகளும் (வட்டத்துக்குள் புள்ளி) நில அளவை நிலையத்தை (GTS) குறிப்பதை உறுதிப்படுத்துகின்றன.
ஆவணப்படுத்தப்பட்ட 63 கல் தூண்களில் சுமார் 19 தூண்கள் எண்ணெய் ஊற்றும் தூண்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. 19 தூண்கள் வழிபாட்டில் உள்ளதான. சில தூண்கள் கைவிடப்பட்ட நிலையிலும் உள்ளன. அந்த வகையில், வழிபாடு, சமய சூழல், கைவிடப்படுதல் எனப் பல நிலைகளில் இந்தத் தூண்கள் உள்ளன.
இவ்வாறு ஆய்வறிக்கை கூறுகிறது. புகலூர், பழனி போன்ற மலைக் கோயில்களுக்கு அருகில் ஜி.டி.எஸ். நிலையங்கள் உள்ளதாகக் கூறும் ஆய்வறிக்கை, ‘மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள ஜிடிஎஸ் நிலையங்களின் அருகில் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. அங்குள்ள தூண்கள் வழிபாட்டுக்குரியவையாக மாறியுள்ளன’ என்கிறது.
சில இடங்களில் இத்தகைய தூண்கள் கருட ஸ்தம்பத்தின் ஒரு பகுதியாக ஒருங்கிணைப்பட்டுள்ளதாகவும், சுமார் 67 நிலையங்கள் விஷ்ணு, பெருமாள், ரங்கநாத சுவாமி, வெங்கடாசலபதி, பள்ளிகொண்ட பெருமாள், சிவன் ஆகிய கோயில்களுக்கு அருகில் அமைந்துள்ளதாகவும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது என்று தமிழக அரசு முடிவு செய்துவிட்டது. ஹிந்து மக்களை மூடர்கள் என்றே ஜோசப் விஜய் அரசு தீர்மானித்துவிட்டதாகத் தெரிகிறது.
- தகவல் ஆதாரம்: பிபிசி.காம்
$$$