உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

புதுதில்லி, நவ. 20: திருப்பரங்குன்றம் மலை உச்சி தூணில் தீபம் ஏற்றலாம் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. என்றபோதும், வரும் திருக்கார்த்திகை அன்று மட்டும் ஒருமுறை தீபம் ஏற்ற அனுமதி அளித்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி தலைவர் ராம. ரவிகுமார், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீப திருவிழா அன்று தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால், தீபம் ஏற்றப்படவில்லை.
இந்நிலையில், தனி நீதிபதியின் இந்த உத்தரவுக்கு எதிராக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலர், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோர் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெயசந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபத்திருவிழா அன்று தீபம் ஏற்ற வேண்டும் எனக் கூறி, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தனர்.
இதற்கிடையில், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்த தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. தவிர, திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் காவல்துறை, தொல்லியல் துறை நிபந்தனையை எதிர்த்து ராம. ரவிகுமாரின் மனு, திருப்பரங்குன்றம் மலையை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் எடுக்கவும் தீபத்தூணில் அணையா விளக்கை ஏற்றவும் கோரி இந்து தர்ம பரிஷத் தாக்கல் செய்த ரிட் மனு ஆகியவையும் விசாரணைக்கு வந்தன.
அதுமட்டுமின்றி, தீபத்தூணில் பக்தர்கள் அமைதியான முறையில் பாரம்பரிய தீபத்தை ஏற்றுவதற்கு அனுமதிப்பதை உறுதி செய்யவும், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், திருப்பரங்குன்றம் மலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போதுமான மத்திய ரிசர்வ் காவல் படையை உடனடியாக பணியமர்த்தவும் மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி இந்து தர்ம பரிஷத் மற்றொரு மனுதாக்கல் செய்தது.
இந்த மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார், வி.எம்.பஞ்சோலி அடங்கிய அமர்வு விசாரித்தது. கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த இந்த விசாரணையில் மனுதாரர்கள் தரப்பில் அனைவரும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.

உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு:
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சி தூணில் தீபம் ஏற்றலாம் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அதேசமயம், வரும் கார்த்திகை அன்று மட்டும் ஒருமுறை தீபம் ஏற்ற அனுமதி அளித்துள்ளது. கோயில் நிர்வாகம், அதிகாரிகள் மட்டும் செல்ல வேண்டும் என்றும், பொதுமக்களை அனுமதிக்கக் கூடாது என்றும் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது.
அவ்வகையில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலையில் உள்ள தீபத்தூணில் வரும் 24-ஆம் தேதி கார்த்திகை தினத்திருநாளன்று ஒருமுறை மட்டும் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு இறுதி உத்தரவு அல்ல என்று கூறியுள்ள நீதிமன்றம், இடைக்கால உத்தரவாக வரும் 24-ஆம் தேதி தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், கோயில் நிர்வாகம், அரசு அதிகாரிகள் போன்ற அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே மலைக்கு சென்று தீபம் ஏற்ற வேண்டும் என்றும், தீபம் ஏற்ற பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
தீபத்தூணில் தீபம் ஏற்ற போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், தேவைப்பட்டால் மத்திய தொழிற் பாதுகாப்புப் படையினரையும் பாதுகாப்புக்கு பயன்படுத்திக்கொள்ளவும் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து, வரும் 24-ஆம் தேதி கார்த்திகை தீபத்திருநாளன்று திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது.
- ஆதாரம்: ஐ.இ.தமிழ் இணையதளம்
$$$

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ஒருநாள் தீபம் ஏற்ற அனுமதி:
உச்சநீதிமன்ற உத்தரவு என்ன?
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நவம்பர் 24ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று மட்டும் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதேநேரத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இந்த உத்தரவுக்கு பாஜக , இந்து அமைப்புகள் வரவேற்றுள்ள நிலையில் சிபிஎம், இஸ்லாமிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கின் பின்னணி என்ன? உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவின் முக்கிய அம்சங்கள் என்ன?
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
அதேநேரம், கார்த்திகை தீப நாளான நவம்பர் 24 ஆம் தேதி மட்டும் தூணில் தீபம் ஏற்றிக் கொள்ளவதற்கு நீதிபதிகள் அனுமதி வழங்கினர். ‘இந்த ஏற்பாட்டை இறுதி அங்கீகாரமாக கருதக் கூடாது’ என நீதிமன்றம் குறிப்பிட்டதாக, ‘லைவ் லா’ தளம் கூறுகிறது.
‘நீதிமன்றம் வழங்கியுள்ள அனுமதியை வழக்கமான நடைமுறை இருந்ததற்கான ஆதாரமாக எந்தத் தரப்பும் பயன்படுத்த முடியாது. இதை அடிப்படையாக வைத்து வரும் ஆண்டுகளில் இதேபோன்ற நிகழ்வுகளை நடத்துவதற்கு உரிமை கோர முடியாது’ என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்த அனுமதி குறித்து மேலதிகக் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ள நீதிபதிகள், “வரலாற்று ரீதியாக மத சடங்குகள் செய்யும் இடமாக கல் தூண் இருந்ததையோ அல்லது தனி நபர்களோ அல்லது அமைப்புகளோ அங்கு தீபம் ஏற்றுவதற்கு சட்டப்பூர்வ உரிமை உள்ளதா என்பதையோ இந்த ஏற்பாடு உறுதிப்படுத்தவில்லை” எனத் தெரிவித்தனர்.
‘கார்த்திகை தீப நாளில் கோயில் நிர்வாகத்தின் சார்பில் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மட்டுமே அந்த இடத்துக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்’ என நீதிமன்றம் தெரிவித்தது.
‘பொதுமக்கள் யாரும் தூண் அமைந்துள்ள பகுதிக்குச் செல்வதற்கு அனுமதியில்லை. தீபம் ஏற்றும் நிகழ்வின்போது ஊர்வலங்கள், மக்கள் கூடுதல், முழக்கமிடுதல் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்வதற்கு அனுமதியில்லை’ எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
தீபம் ஏற்றுவதற்குப் போதுமான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், ‘இதில் தேவைப்பட்டால் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரை பணியமர்த்தலாம்’ எனக் கூறினர்.
திருப்பரங்குன்றம் வழக்கின் மூலம் அரசியலமைப்புச் சட்டத்தின் 25 மற்றும் 26 ஆகிய பிரிவுகளின்கீழ் மத உரிமைகளின் வரம்பு உள்ளிட்ட பல முக்கியமான கேள்விகள், இந்த உத்தரவைப் பிறப்பிக்கும்போது எழுந்ததாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
‘தற்போதுள்ள நிலையில் இந்த கேள்விகளை நீதிமன்றம் ஆய்வு செய்யவில்லை’ எனவும் ‘அவை உரிய நேரத்தில் பரிசீலிக்கப்படும்’ எனத் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.
தர்காவுக்கு அருகில் உள்ள தீபத்தூணில் மத சடங்கை நடத்துவதற்கு உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி மற்றும் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு என இரண்டு நீதித்துறை அமைப்புகள் அனுமதி அளித்திருந்தன எனபது இடைக்கால நிவாரணம் வழங்குவதில் முக்கிய காரணியாக கருதப்படுவதாக நீதிமன்றம் கூறியது.
‘நவம்பர் 24ஆம் தேதி விழாவை நடத்துவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டால், பிற்காலத்தில் வழங்கப்படும் தீர்ப்பின் மூலம் அதனை மீண்டும் ஈடுசெய்ய முடியாது’ என்று உச்ச நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
ஒருமுறை மட்டுமே மேற்கொள்ளக் கூடிய பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய இந்த ஏற்பாடு, இரு தரப்பினரின் நலன்களை சமநிலைப்படுத்தும் என நீதிமன்றம் கருதுவதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
- ஆதாரம்: பிபிசி.காம்
$$$

திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதி!
உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நிபந்தனைகள்
புதுதில்லி, நவ. 20: திருப்பரங்குன்றம் மலைமீதிருக்கும் தூணில் கார்த்திகை தீபத்தன்று ஒரே ஒரு நாள் மட்டும் தீபம் ஏற்ற அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதோடு, பல்வேறு முக்கிய நிபந்தனைகளையும் விதித்துள்ளது.
திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் இன்று இடைக்கால உத்தரவை பிறப்பித்த உச்ச நீதிமன்றம், மிகக் கவனத்துடன் பல்வேறு நிபந்தனைகளையும், இடைக்கால உத்தரவையும் பிறப்பித்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வழங்கிய தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்ததோடு, இந்த வழக்குத் தொடர்பான முக்கிய ஆவணங்களை தாக்கல் செய்ய ஆறு வார கால அவகாசத்தையும் வழங்கி, நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இன்று உத்தரவை பிறப்பிப்பதற்கு முன்பு, 10 நிமிடங்கள் வரை, நீதிபதிகள் பல்வேறு கருத்துகளை முன் வைத்திருந்தனர். அதன் சில அம்சங்கள்:
இந்த வழக்கு, ஒரு மத ரீதியான விவகாரம் என்பதால், இதில் நீதிமன்றம் எந்த அளவுக்கு தலையிடலாம் என்பது குறித்து ஆலோசித்திருக்கிறோம்.
இந்த தீர்ப்பை ஒரு முன்மாதிரி வழக்காக எடுத்துக் கொண்டு வேறு எந்த வழக்கிலும் தீர்ப்புகளை வெளியிட்டுவிடக் கூடாது என்று பதிவு செய்கிறோம்.
சபரிமலை ஐயப்பன் கோயில் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புடன் இந்த வழக்கை ஒப்பிட்டுப் பார்த்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று நினைக்கிறோம்- என அடிக்கோடிட்டுக் காண்பித்திருக்கிறார்கள்.
இன்று பிறப்பிக்கும் இடைக்கால உத்தரவு, வழக்கில் தீர்ப்பளிக்கப்படுவதற்கு கால அவகாசம் ஆகும் பட்சத்தில், தன்னிச்சையாக அடுத்த ஆண்டும் தீபம் ஏற்றிக் கொள்ளலாம் என்பது கருத்தில் கொள்ளப்படும் என்பதால், இந்த ஆண்டு கார்த்திகை தீபம் அன்று ஒரே ஒரு நாள் மட்டுமே தீபம் ஏற்றிக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது என்பதை சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.
நிபந்தனைகள்:
- கார்த்திகைத் தீபத் திருநாள் அன்று ஒரு ஒரே முறை மட்டும் துணில் தீபம் ஏற்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்படுகிறது.
- கார்த்திகை அன்று தூணில் தீபம் ஏற்றும் குழுவை மதுரை மாவட்ட ஆட்சியர் தேர்வு செய்ய வேண்டும்.
- மதுரை மாவட்ட ஆட்சியர், காவல்துறை, தொல்லியல் துறை அதிகாரிகள் இணைந்து, யார் யார் தீபம் ஏற்ற அனுமதிக்கப்படலாம் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
- இவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே விளக்கு ஏற்றும் இடத்துக்கு செல்ல வேண்டும். வேறு யாரும் அங்கே செல்லக் கூடாது.
- திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மட்டுமே தூணில் தீபம் ஏற்றும் நிகழ்வில் பங்கேற்க வேண்டும். இவர்களை மதுரை மாவட்ட ஆட்சியரே தேர்வு செய்வார்.
- வரும் கார்த்திகைத் தீபத் திருநாள் அன்று மட்டும் தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது முழுக்க முழுக்க இடைக்காலத் தீர்ப்பு.
- சிஆர்பிஎஃப் வீரர்களைக்கூட பாதுகாப்புக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
- தூண் அருகே கோஷம் எழுப்பவோ, கும்பல் கூடவோ கூடாது.
- மக்கள் யாரும் தீபம் ஏற்றும்போது தூண் பகுதிக்கு செல்லவே கூடாது.
- அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே தூண் பகுதிக்குச் செல்ல வேண்டும். வேறு யாருக்கும் அனுமதி கிடையாது.
- உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் ஆணையர் செய்யவேண்டும்.
இவ்வாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது இடைக்கால உத்தரவு மட்டுமே, தொடர்ந்து இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று தீர்ப்பளிக்கப்படும். தீர்ப்பளிக்க கால அவகாசம் ஆகும் பட்சத்தில், அடுத்த ஆண்டுக்கு இந்த உத்தரவு பொருந்தாது, இந்த ஒரே ஒரு கார்த்திகை தீபத்துக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.
- ஆதாரம்: தினமணி.காம்
$$$