கட்டுமானத் துறையில் புரட்சி செய்யும் டீமேஜ் ப்ரிகாஸ்ட்!

என்.கே.நந்தகோபால், நிர்வாக இயக்குநர், டீமேஜ் ப்ரிகாஸ்ட்

-நேர்காணல்: வ.மு.முரளி

தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் தமிழகத்தின் முன்னோடி ஜவுளி நிறுவனங்களில் ஒன்று. அதன் துணை நிறுவனம் ’டீமேஜ் ப்ரிகாஸ்ட்’. வழக்கமான கட்டுமானப் பணியில் ஆறு மாதங்களில் கட்டும் கட்டடத்தை மூன்றே மாதங்களில் உருவாக்கும் சாதனைக்கு சொந்தக்காரர்கள் இவர்கள். கட்டடத்திற்குத் தேவையான தூண்கள், பாளங்கள், சுவர்கள், படிகள், ஆகியவற்றை அச்சில் வார்த்து (ரெடிமேட்) அவற்றை ஒருங்கிணைக்கும் இந்தத் தொழில்நுட்பம் மிகப்பெரிய கட்டுமானங்களுக்கு மிகவும் உகந்ததாகவும், விரைவில் முடிக்கக் கூடியதாகவும் உள்லது. இந்தத் தொழில்நுட்பத்தை நமது நாட்டில் பிரபலப்படுத்தியுள்ள நிறுவனம் டீமேஜ் ப்ரிகாஸ்ட். இதன் நிறுவனர் என்.கே.நந்தகோபால். அவருடனான உரையாடலிலிருந்து…

மிகப் பெரிய ஜவுளிக் குடும்பத்தில் பிறந்தவன் நான். நாங்கள் சகோதரர்கள் 8 பேர்; சகோதரி ஒருவர். நான் ஏழாவது ஆண் பிள்ளை. எங்கள் குடும்பத் தொழிலான ஜவுளி வியாபாரத்தில் சகோதரர்களுடன் இணைந்து செயல்பட்டு வந்தேன்.

எங்கள் தந்தை குழந்தைவேலு முதலியார் 1962 முதல் நடத்திவந்த கதர் வஸ்திராலயம் தான் 1991-இல் குமரன் சில்க்ஸ் ஆக மாறியது. 2001இல் அது தி சென்னை சில்க்ஸாக, பெரும் நிறுவனமாக உயர்ந்தது.

எனக்கு பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்க ஆர்வமில்லை. நினைவு முழுவதும் குடும்பத் தொழிலில் இருந்ததால், அதில் இளம் வயதிலேயே ஈடுபட்டேன். ஏழெட்டு ஆண்டுகள் நிறுவன வளர்ச்சிக்காக ஊர் ஊராகச் சென்றிருக்கிறேன். எங்கள் நிறுவனம் வளரத் தொடங்கியபோது, அதற்கான சாயஆலை அமைக்கும் பணியைக் கவனித்தேன். அப்போது எனக்கு உள்கட்டமைப்பிலும் கட்டுமானப் பணியிலும் ஆர்வம் ஏற்பட்டது.

எங்கள் நிறுவனங்களுக்கு புதிய கட்டடங்களைக் கட்டும் போது, கட்டுமான நிறுவனத்தாரால், சரியான நேரத்துக்கு அவற்றைக் கட்டித் தர முடியவில்லை. தரத்திலும் சில குறைபாடுகள் இருந்தன. அந்த சமயத்தில் சென்னையில் ஒரு நிறுவனத்திற்கு     கட்டுமான ஆணையை வழங்கினோம். 2010 ஆம் ஆண்டு நிகழ்ந்த அந்தக் கட்டுமானத்தின் ஒவ்வொரு நிலையிலும், மூலப்பொருட்களை கொள்முதல் செய்வதிலிருந்து பல பணிகளையும் நான் உடனிருந்து கவனித்தேன். ஆனால் ரூ. 7 கோடிக்கு திட்டமிடப்பட்ட அந்தக் கட்டுமானம் நிறைவடைகையில் ரூ. 13 கோடியாகிவிட்டது. எனவே இத்தொழிலில் நாமே ஈடுபட்டால் என்ன என்ற எண்ணம் ஏற்பட்டது. அப்போதுதான் ப்ரிகாஸ்ட் தொழில்நுட்பம் குறித்து அறிந்தோம்.

’ப்ரிகாஸ்ட்’ தொழில்நுட்பம் ஐரோப்பாவில் 1935-40களில் உருவான கட்டுமானத் தொழில்நுட்பம். அதனை நமது நாட்டில் 2000ஆம் ஆண்டு வரை யாரும் கண்டுகொள்ளவில்லை. விரைந்த கட்டுமானம், தரமான கட்டுமானத்திற்கு ப்ரிகாஸ்ட் மிகவும் பொருத்தமானது என்பதை உணர்ந்தோம். முதலில் நமது ஜவுளி நிறுவனத்தின் தேவைகளுக்கு இதனைப் பயன்படுத்தவே இத்தொழிலில் இறங்கத் திட்டமிட்டோம்.

அதன்படி பின்லாந்தில் உள்ள ஒரு நிறுவனத்தின் தொழில்நுட்பக் கூட்டுறவுடன், அதிநவீன இயந்திரங்களை இறக்குமதி செய்தோம். ரூ. 40 கோடி முதலீட்டில்  ‘டீமேஜ் ப்ரிகாஸ்ட்’ 2011இல் தொடங்கப்பட்டது. இதற்காக ஜெர்மனி சென்று 15 நாட்கள் பயிற்சி பெற்று வந்தோம். காங்கயம் அருகே இதற்கான மிகப்பெரிய தொழிலகம் அமைக்கப்பட்டு 2012இல் பணியைத் தொடங்கியது. திருப்பூரில் இதன் தலைமை அலுவலகம் உள்ளது.

நாங்கள் இதுவரை எங்கள் நிறுவனத் தேவைகளுக்காக மட்டுமே 35 லட்சம் சதுர அடி ப்ரிகாஸ்ட் கட்டடங்களைக் கட்டி இருக்கிறோம். முதல் 4 ஆண்டுகள் எங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யவே சரியாக இருந்தது. அதன் பிறகு வெளியாட்களுக்கும் ப்ரிகாஸ்ட் கட்டுமானங்களை செய்துதர ஆரம்பித்தோம்.

இதனிடையே, மத்திய, மாநில அரசுகளின் கட்டுமான ஒப்பந்தகளைப் பெற முயன்றோம். 2014 முதல் மத்திய அரசுக்கும் 2019 முதல் மாநில அரசுக்கும் தேவையான கட்டுமானங்களை உருவாக்கித் தந்து வருகிறோம்.

இதன் சிறப்பம்சம் என்னவென்றால், வழக்கமான கட்டுமானப் பணியில் அஸ்திவாரம் அமைத்த பிறகு, வழக்கமான தூண்களையும் பாளங்களையும் அமைத்து தளம் அமைப்பார்கள். செங்கற்களில் சுவர் அமைத்து பூச்சு செய்வார்கள். நாங்கள் முன்கூட்டியே வடிவமைத்து உருவாக்கிய தரமான தூண்களையும் சுவர்களையும் கொண்டுவந்து கிரேன்களின் உதவியுடன் நிறுவி, மிக விரைவில் கட்டுமானத்தை நிறைவு செய்கிறோம். இந்த ரெடிமேட் தூண்கள் மற்றும் சுவர்களின் தரத்தை அவ்வப்போது ஆய்வக சோதனைகளில் உறுதி செய்கிறோம்.

மும்பையில் செயல்படும் ப்ரிகாஸ்ட் நிறுவனங்களில் 25 சதவீதம் வரை மட்டுமே ப்ரிகாஸ்ட் கட்டுமானம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், எங்கள் பணிகளில் 95 சதவீதம் வரை ப்ரிகாஸ்ட் பொருட்களே பயன்படுத்தப்படுகின்றன. அடித்தளத்தில் மட்டுமே வழக்கமான கான்கிரீட் அமைக்கப்படுகிறது. இந்தியாவில் இத்தொழிலில் நாங்கள் தான் முன்னோடி.

வழக்கமான கட்டடங்களின் ஆயுள் சுமார் 40 ஆண்டுகள் மட்டுமே. ஆனால் ப்ரிகாஸ்ட் கட்டுமானங்களின் ஆயுள் 100 ஆண்டு வரை நீடிக்கும். காரைப்பூச்சுப் பணி இல்லாமல், நேரடியாக பெயின்டிங் செய்யலாம். தொடர் பராமரிப்பும் தேவையில்லை. ஆரம்ப நாட்களில் எங்கள் கட்டுமானப் பணியில் நீர்க்கசிவு ஒரு குறைபாடாக இருந்தது. ஆனால் அதனை ரசாயனங்களின் உதவியுடன் சரி செய்துள்ளோம்.

400 ஆண்டுகால அனுபவம் கொண்ட ஜப்பானிய நிறுவனமான ‘டெகினெக்கா’ உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம். அதன்மூலமாக நமது நாட்டில் அமைக்கப்படும் ஜப்பான் நிறுவனங்களின் கட்டுமானப் பணிகளுக்கு உதவி வருகிறோம். கடந்த 8 ஆண்டுகளாக, அவர்களுடன் பணி புரிவதன் வாயிலாக, ஜப்பானியர்களின் தொழில் நேர்த்தி, நேரிய அணுகுமுறை, முறையான திட்டமிடல், தர மேலாண்மையைக் கற்றுக் கொண்டோம். அவர்கள் ஓராண்டுக்கு கட்டுமானத் திட்டமிடலைச் செய்வார்கள். பிறகு நான்கே மாதங்களில் அதனைச் செயல்படுத்துவார்கள். அவர்களுடனான உறவால் நாங்கள் அடுத்தகட்டத்திற்கு வளர்ந்திருக்கிறோம்.

பசுமைக் கட்டடங்களை அமைப்பதில் ப்ரிகாஸ்ட் தொழில்நுட்பம் மிகவும் உதவுகிறது. எங்கள் ஸ்பின்னிங் மில் ஒன்றுக்கு ப்ரிகாஸ்ட் கட்டுமானத்தைப் பயன்படுத்தி, 5 மாதங்களில் நிறுவி, பசுமைக் கட்டடத்திற்கான பிளாட்டின சான்றிதழைப் பெற்ற ஒரே நிறுவனமாகி உள்ளோம்.

50,000 சதுர அடிக்கு மேற்பட்ட கட்டுமானங்களுக்கு ப்ரிகாஸ்ட் லாபமாக இருக்கும். அதைவிடக் குறைந்த பரப்பளவில் செய்யும்போதும் கூடுதல் செலவாகும். பெரிய தொழிற்சாலைகளை இத்தொழில்நுட்பத்தில் அமைக்கும்போது மிகவும் லாபமாகவும்  குறைந்த நேர்த்திலும் செய்ய முடியும்.

2014இல் மோடி பிரதமரான பிறகு  ‘மேக் இன் இந்தியா’ திட்டங்களுக்கு உத்வேகம் அளிக்கப்படுகிறது. அதைப் பயன்படுத்தி ப்ரிகாஸ்ட் கட்டுமானங்களை நிறைய அமைத்துள்ளோம். இதுவரை 475 கட்டுமானத் திட்டங்களைச் செயல்படுத்தி உள்ளோம்.

எங்கள் அரசுப் பணிகளில் அரசிடம் திட்ட ஒப்புதல் பெறுவது தான் மிகவும் சவாலாக இருக்கிறது. என்றபோதும் தற்போதைய மத்திய அரசில் எங்களுக்கு சிரமங்கள் குறைவாக உள்ளன. முதல் பணியே சி.ஆர்.பி.எஃப். குடியிருப்பைக் கட்டினோம். மத்திய அரசிடம் பணி புரிகையில் அவர்கள் குறிக்கும் நிலையான மதிப்பீட்டுக்குள் தரமான கட்டுமானத்தை வழங்குவது தான் எங்கள் பணி. இதற்காக ப்ரிகாஸ்ட் கட்டுமானத்திற்கென்றே ஒப்பந்தப் புள்ளிகளை மத்திய அரசு நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கியுள்ளோம். ஐ.ஐ.டி. கட்டடங்கள், திருப்பதி மற்றும் விஜயவாடாவில் விமானநிலைய கண்காணிப்புக் கோபுரங்கள் ஆகியவற்றையும் அமைத்திருக்கிறோம். கோவையிலும் திருச்சியிலும் விமான நிலைய அலுவலர் குடியிருப்பைக் கட்டியுள்ளோம். கூடங்குளத்திலும் அலுவலர் குடியிருப்பை அமைத்திருக்கிறோம்.

தமிழக அரசுக்கும் பல கட்டுமானத் திட்டங்களில் உதவி வருகிறோம். 2021-இல் திருப்பூர் மாவட்டத்தில் மலைவாழ் மக்களுக்கான குடியிருப்பாக 12 வீடுகளைக் கட்டித் தந்துள்ளோம். 2021இல் கொவிட் தொற்றுக் காலத்தில் ரோட்டரி அமைப்புடன் இணைந்து பெருந்துறை மருத்துவக் கல்லூரிக்காக, 45 நாட்களில் 401 படுக்கை வச

திகளுடன் கூடிய 70,000 சதுர அடி பரப்பளவு கொண்ட சிகிச்சை மையத்தை ரூ., 20 கோடி மதிப்பீட்டில் அமைத்துக் கொடுத்தோம். அதில் 4 மின் தூக்கிகளும், சாய்தளங்களும் நவீன மருத்துவ வசதிகளும் அமைத்தோம். இது ஒரு உலக சாதனையாகப் பதிவாகியுள்ளது. அது மிகவும் மனநிறைவான விஷயம்

எங்கள் தொழில் பயணத்தில் ஜப்பானிய நிறுவனத்தின் ஒத்துழைப்பு, ஐ.ஐ.டி, என்.ஐ.டி நிறுவனங்களின் ஆய்வக உதவி ஆகியவை மிகவும் உறுதுணையாக இருந்து வருகின்றன. மிகவும் விரைவாக கான்கிரீட் இறுகும் தொழில்நுட்பம் ஏற்கனவே இருந்தாலும், அதையும் ஐஐடி உதவியுடன் மேம்படுத்தியுள்ளோம்.

எங்களிடம் சொந்தமாக 18 பிரமாண்டமான கிரேன்கள் இருப்பதால் கட்டுமானச் செலவைக் கட்டுக்குள் வைக்க முடிகிறது. எங்கள் நிறுவனத்தில் 350 பொறியாளர்கள் உள்பட, 1250 பேர் நேரடியாகப் பணிபுரிகின்றனர். தவிர 1500 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிகின்றனர். தூத்துக்குடி, குருகிராம், சென்னை, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் எங்கள் தொழிற்சாலைகள் உள்ளன.

தொழில்துறையில் எதிர்கால கட்டுமானத் தொழில்நுட்பம் ப்ரிகாஸ்ட் தான். ஸ்பிக், எல்.எம்.டபிள்யூ, ரூட்ஸ் போன்ற பெரு நிறுவனங்களுக்கும் பணிகளைச் செய்து வருகிறோம். எங்களிடம் பணி புரிந்த ஊழியர்கள் பலர் நாடு முழுவதும் உள்ள 65க்கு மேற்பட்ட ப்ரிகாஸ்ட் நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். நாடு முழுவதும் உள்ள ப்ரிகாஸ்ட் நிறுவனங்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறேன்.

தமிழ்நாட்டில் பொறியியல் கல்வியின் தரம் மிகவும் குறைவாக இருக்கிறது. சிவில் எஞ்சினீயரிங் படிப்பு மாணவர்களின் கடைசி விருப்பத் தேர்வாக இருக்கிறது. எனவே ஆர்வமின்றி பெயரளவில் படிக்காமல், ஈடுபாட்டுடன் தீவிரமாகப் படித்து வந்தால் கட்டுமானத் தொழிலில் சாதனைகளைப் படைக்க முடியும். இது இளைஞர்களுக்கு எனது வேண்டுகோள்.

  • நன்றி: விஜயபாரதம் தீபாவளி மலர்- 2026

$$$

Leave a Reply