-கவியரசு கண்ணதாசன்
இங்கே திரைப்பாடலில் ராமனை எப்படி வர்ணிக்கிறார் கவியரசர் என்று பாருங்கள். இதுதான், நாட்டின் நாடியுணர்ந்த எழுத்தாளனின் கடமை. திரைக்கலையும் பண்பாட்டுப் பெருவெளியுடன் உறவு கொண்டதாக இருக்க வேண்டும் என்ற கவிஞரின் தாபம் இப்பாடலில் இழையோடுகிறது. இப்பாடல் இடம்பெற்ற திரைப்படம்: லட்சுமி கல்யாணம்.

ராமன்… எத்தனை ராமனடி?
ராமன்… எத்தனை ராமனடி?
ராமன்… எத்தனை ராமனடி – அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி – தேவன்
ராமன் எத்தனை ராமனடி – அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி – தேவன்
ராமன் எத்தனை ராமனடி!
கல்யாணக் கோலம் கொண்ட கல்யாண ராமன்…
கல்யாணக் கோலம் கொண்ட கல்யாண ராமன்!
காதலுக்கு தெய்வம் அந்த சீதாராமன்!
அரசாள வந்த மன்னன் ராஜா ராமன்…
அரசாள வந்த மன்னன் ராஜா ராமன்!
அலங்கார ரூபன் அந்த சுந்தர ராமன்… ராமன்!
ராமன்… எத்தனை ராமனடி?
ராமன்… எத்தனை ராமனடி?
தாயே என் தெய்வம் என்ற கோசல ராமன்…
தாயே என் தெய்வம் என்ற கோசல ராமன்!
தந்தை மீது பாசம் கொண்ட தசரத ராமன்!
வீரம் என்னும் வில்லை ஏந்தும் கோதண்ட ராமன்…
வீரம் என்னும் வில்லை ஏந்தும் கோதண்ட ராமன்!
வெற்றி என்று போர் முடிக்கும் ஸ்ரீஜெய ராமன்… ராமன்!
ராமன்… எத்தனை ராமனடி – அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி – தேவன்
ராமன்… எத்தனை ராமனடி?
வம்சத்திற்கொருவன் ரகு ராமன்!
மதங்களை இணைப்பவன் சிவ ராமன்!
வம்சத்திற்கொருவன் ரகு ராமன்!
மதங்களை இணைப்பவன் சிவ ராமன்!
மூர்த்திக்கு ஒருவன் ஸ்ரீ ராமன்!
முடிவில்லாதவன் அனந்த ராமன்!
மூர்த்திக்கு ஒருவன் ஸ்ரீ ராமன்!
முடிவில்லாதவன் அனந்த ராமன்!
ராமஜெயம், ஸ்ரீ ராமஜெயம்!
நம்பிய பேருக்கு ஏது பயம்?
ராமஜெயம், ஸ்ரீ ராமஜெயம்!
நம்பிய பேருக்கு ஏது பயம்?
ராமஜெயம், ஸ்ரீ ராமஜெயம்!
ராமனின் கைகளில் நான் அபயம்!
ராமஜெயம், ஸ்ரீ ராமஜெயம்!
ராமனின் கைகளில் நான் அபயம்!!
ராம்ராம் ராம்ராம்!
ராம்ராம் ராம்ராம்!
ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்!
ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்!
ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்!
ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்!
ராமன்… எத்தனை ராமனடி!
திரைப்படம்: லட்சுமி கல்யாணம் (1968)
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: பி.சுசீலா
நடிப்பு: வெண்ணிற ஆடை நிர்மலா
$$$
ராமதாசனாக மாறிய கண்ணதாசன்
-சேக்கிழான்
ராமன் என்ற பெயர் இந்த நாடு முழுமைக்கும் சொந்தமானது. இந்தப் பெயர் கொண்ட நபர்கள் இல்லாத ஊர்கள் நம் நாட்டில் மிகவும் சொற்பம். ராமன் பாதம் பதியாத நிலமே இந்த தேசத்தில் எங்கும் இல்லை என்று கூறும் அளவுக்கு, எங்கு சென்றாலும் ராமனுடன் தொடர்புடைய ஊர்கள் மிகுந்த நாடு இது.
ராமன் என்ற பெயர் கொண்ட பிரபலங்களைப் பட்டியலிட்டாலே மலைத்துப் போவோம். தமிழகத்திலேயே ராமலிங்க வள்ளலார், ஆற்காடு ராமசாமி முதலியார், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், ராமசாமி படையாச்சி, ஈ.வெ.ராமசாமி நாயக்கர், ராம்நாத் கோயங்கா, பி.ராமமூர்த்தி, இசையமைப்பாளர் ராமமூர்த்தி, ராமதாஸ், ராமராஜன், என்று பட்டியல் நீளும்.
1980-85 காலகட்டத்தில் தென் மாநிலங்கள் நான்கிலும், தமிழகம் (முதல்வர்- எம்.ஜி.ராமசந்திரன்), கேரளம் (ஆளுநர்- பா.ராமசந்திரன்), கர்நாடகம் (முதல்வர்- ராமகிருஷ்ண ஹெக்டே), ஆந்திரப் பிரதேசம் (முதல்வர் – என்.டி.ராமராவ்) ஆகியோர் ஆட்சிபீடத்தில் இருந்த காட்சி என்றும் மறக்க முடியாதது.
தேசிய அளவிலோ, ராமன் பெயர்களைப் பட்டியலிட்டால் தனி இணையதளமே உருவாக்க வேண்டும். ராம்நாத் கோவிந்த் தொடங்கி ராம்தாஸ் அதவாலே வரை அனைத்துக் கட்சிகளிலும் ராமர்களின் ஆதிக்கம் உண்டு.
ஒரு வகையில் இந்த நாட்டைப் பின்னிப் பிணைத்து ஒரே நாடாக உருவாக்கி இருப்பதே ராமநாமம் தான் என்று சொல்லத் தோறுகிறது. அதனால் தான் ராமநாமத்தை ஜபித்த மகாத்மா காந்தியை தேசத் தந்தையாக இந்த நாடு ஏற்றுக்கொண்டது. அயோத்தி ராமர்கோயிலை முன்னிறுத்திய பாஜக தேசிய அரசியலின் மையப்புள்ளியானதும் அதனால் தான்.
இங்கே திரைப்பாடலில் ராமனை எப்படி வர்ணிக்கிறார் கவியரசர் என்று பாருங்கள். இதுதான், நாட்டின் நாடியுணர்ந்த எழுத்தாளனின் கடமை. திரைக்கலையும் பண்பாட்டுப் பெருவெளியுடன் உறவு கொண்டதாக இருக்க வேண்டும் என்ற கவிஞரின் தாபம் இப்பாடலில் இழையோடுகிறது. இப்பாடல் இடம்பெற்ற திரைப்படம்: லட்சுமி கல்யாணம்.
இந்தப் பாடல் இடம்பெறும் காட்சியில், கோயிலும் இல்லை, பக்தர்களும் இல்லை. தன்னைப் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வந்திருக்கும் போது, அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப கதாநாயகி பாடுவதாக காட்சியமைப்பு. அவ்வளவுதான்.
அதையும் ஒரு நல்வாய்ப்பாக மாற்றி, தனக்குள்ளே கனன்று கொண்டிருக்கும் ராமபக்தியையே கருவாக்கி, ‘ராமன்’ என முடியும் பெயர்களையே பாட்டாகப் பட்டியலிட்டு, காலத்தை வென்ற காவியமாக தனது திரைக்கவிதையை வழங்கி இருக்கிறார் கவியரசர் கண்ணதாசன். இப்பாடலைப் பொருத்த வரை, அவர் ராமதாசனாகவே மாறி இருக்கிறார்.
இப்பாடல் குறித்து, தெலுங்குக் கவிஞர் ஆருத்ரா கூறிய அனுபவம் ஒன்றை இங்கு நினைவுகூரலாம். ஒருசமயம், சென்னையில் கலைவாணர் அரங்கில் கண்ணதாசன் விழா நடைபெற்றது. தெலுங்குக் கவிஞர் ஆருத்ரா உள்ளிட்ட சிலருக்கு ‘கண்ணதாசன் விருதுகள்’ வழங்கப்பட்டன. விருது பெற்ற ஆருத்ரா விழாவில் பேசியது இது…
கண்ணதாசனும் நானும் நண்பர்கள். நேரிலோ அல்லது தொலைபேசியிலோ அடிக்கடி பேசிக் கொள்வோம். நான் சமீபத்தில் எழுதிய பாடலை அவரிடம் சொல்வேன்; அதேபோல தான் எழுதிய பாடலை அவர் என்னிடம் சொல்வார். அப்படி அவர் எழுதிய பாடலைச் சொன்னபோது அசந்துபோனேன். அது, ‘லட்சுமி கல்யாணம்’ படத்தில் இடம்பெற்ற ‘ராமன்… எத்தனை ராமனடி?’ என்னும் பாடல்.
எல்லாப் பாடலுக்குமே ஒரு கரு இருக்குமல்லவா? அப்படி, “இத்தனை ராமனை எப்படி வரிசைப்படுத்தினீர்கள்?” என்று அவரிடம் கேட்டேன்.
கண்ணதாசன் சொன்னார்:
“சலவைத் தொழிலாளி சொன்னதைக் கேட்டு, சீதையை காட்டில் விட்டு வருமாறு லட்சுமணனுக்கு ஆணையிடுவான் ராமன். காட்டில் சீதையை விட்ட பின் அவன் வீடு திரும்புவான். அப்போது, வீட்டின் நிலைப்படியில் தலையை வைத்து அழுது கொண்டிருப்பான் ராமன், ‘அண்ணா, நீங்கள் தானே அண்ணியைக் காட்டில் விடச் சொன்னீர்கள்? இப்போது நீங்களே ஏன் அழுகிறீர்களே?’ என்று அதிர்ச்சியடைந்து கேட்பான் லட்சுமணன். அதற்கு ராமன் சொல்வான்: ‘ஆணையிட்டவன் கோசலராமன்; அழுது கொண்டிருப்பவன் சீதாராமன்’ என்று! இந்தப் பாடல் உருவானதற்குக் கரு அந்தத் தீப்பொறிதான்” என்றார் கண்ணதாசன்.
-இந்த அனுபவத்தைக் கூறிய கவிஞர் ஆருத்ரா, கவியரசரின் அனுமதியுடன் இந்தப் பாடலை அப்படியே தெலுங்கில் மொழிபெயர்த்துப் பாடலாக்கி, அந்தப் பாடலுக்கு மாநில அரசின் விருது பெற்றதையும் சொன்னார்.
இதோ அப்பாடலின் வைர வரிகளின் அற்புதமான சொல்லாக்கம்…
கல்யாணக் கோலம் கொண்டவன் கல்யாணராமன்; காதலுக்குத் தெய்வமானவன் அந்த சீதாராமன்; அரசாள வந்த மன்னன் ராஜாராமன்; அலங்கார ரூபன் சுந்தரராமன்!
தாயே என் தெய்வம் என்றவன் கோசலராமன்; தந்தை மீது பாசம் கொண்டவன் தசரதராமன்; வீரத்தின் அடையாளமான ‘கோதண்டம்’ என்னும் வில்லை ஏந்தியவன் கோதண்டராமன்; வெற்றி என்று போர் முடிப்பவன் ஸ்ரீஜெயராமன்!
வம்சத்திற்கு ஒருவன் ரகுராமன்; ராமேஸ்வரத்தின் சிவபூஜை செய்து மதங்களை இணைத்தவன் சிவராமன்; மூர்த்தி என்றாலே ஒருவன் தான், அவன் ஸ்ரீராமன்; ஆதி அந்தமில்லாதவன் அனந்தராமன்!
பாடலின் முடிவில், “ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்! நம்பிய பேருக்கு ஏது பயம்? ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்! ராமனின் கைகளில் நான் அபயம்” என்றும் முடித்திருப்பார் கவியரசர்.
தமிழக அரசியல் அரங்கில் நாத்திகர்கள் கோலோச்சத் தொடங்கிய காலகட்டத்தில் வெளியான திரைப்படத்தின் அங்கமாக இப்பாடலை மிகவும் திறமையாக அமைத்திருக்கிறார் கவியரசர். இப்படத்தின் திரைக்கதையும் இவரே.
காலத்தை வென்று பக்தியின் இனிமையை காற்றில் தவழவிடும் பாடலாக இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது, ‘ராமன்… எத்தனை ராமனடி?’ பாடல்…
$$$
பாடலின் இணைப்பு:
$$$