பதிப்புலகில்  திருக்கருவையந்தாதிகள்:  பகுதி-2

-கருவாபுரிச் சிறுவன்

வரதுங்க ராம பாண்டிய மன்னர் இயற்றிய ‘திருக்கருவை அந்தாதிகள்’ நூற்கள் இதுவரை யார் யாரால் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன என்று ஆராய்கிறார், திரு. கருவாபுரிச் சிறுவன். இது கட்டுரையின் நிறைவுப் பகுதி…

அந்தாதிக் கொத்து (1928):

தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் தொடர்ந்து சைவ நூற்களைப் பதிப்பிக்கும் பணியை தீவிரமாகச் செய்து வருகின்றனர். 

சிவப்பிரகாச சுவாமிகள், சிவஞான யோகிகள், கம்பர், குகை நமச்சிவாய தேவர், பரஞ்ஜோதி முனிவர், அபிராமி பட்டர் ஆகியோர் அருளிச் செய்த அந்தாதி நூற்களுடன் வரதுங்க ராம பாண்டியரின் திருக்கருவை அந்தாதிகள் மூல நூற்களை ஒன்றாக அச்சிட்டார்கள்.  இது பன்னிரெண்டு அந்தாதி நூற்கள் அடங்கிய தொகுப்பு.  இதனை  ‘அந்தாதிக்கொத்து’  முதற்பாகம் என பெயரிட்டு வெளியீடு செய்தார்கள். 

இதே ஆண்டு தான் குன்றக்குடி மேல மடம் நான்காவது பட்டத்தலைவர்  சற்குரு கணபதி சுவாமிகளால் பால்வண்ண நாத பெருமானுக்கு  மாபெரும் குடமுழுக்கு வைபவம் வெகு விமரிசையாக  நடைபெற்றது என்பது திருவருட் குறிப்பாகும். 

நாவுக்கு அழகுனது நாமம் நயந்துரைக்கும்
பாவுக் கழகுனையே பாடுவது - தாவில் 
கலைக் கழகு ஞானம் கருவையானே என் 
தலைக்கழகு நின்கமலத்தாள் 

    -வரதுங்க ராம பாண்டியர் 

வைணவர்களின் மறுபதிப்பு (1930):

திருக்கருவை வெண்பாவந்தாதி, திருக்கருவை கலித்துறையந்தாதி இரண்டிற்கும் தெளிவான உரையை எழுதியவர்கள் வை.மு.கோ., சே.கிருஷ்ணமாச்சாரியர் என்பது அறிந்ததே.  இந்நூலை மீண்டும் மறுபதிப்பாக  சென்னை நோபில் அச்சுக்கூடத்தில் பதிப்பித்தார்கள் என்பது கூடுதல் செய்தி.  

ஆறுமுக நயினார் செட்டியார் (1967):

மதுரை, திருப்பரங்குன்றத்தில் வசித்தவர் சுந்தர அடிகள். இப்பெரியாரை  ‘மெய்கண்ட சைவ சித்தாந்த ஞான போதகாசிரியர்’ என அழைப்பார்கள். அன்னாரிடம் பாடம் பயின்றவர்கள் பலர். அவர்களுள் ஒருவர் கரிவலம் வந்த நல்லூரில் வாழ்ந்த மிராசுதாரர் ஆறுமுக நயினார் செட்டியார்.  இயல்பாகவே, நல்லோரிடம் ஏற்பட்ட பழக்கமும், அரனாரின் வழிபாடும் இவரை சிவப்பணியில் ஈடுபடுத்தியது.  

திருக்கருவையந்தாதிகளில் ஒன்றான திருக்கருவை கலித்துறை அந்தாதிக்கு தவத்திரு சுந்தர அடிகளைக் கொண்டு ஒரு பொழிப்புரை செய்து வெளியீடு செய்துள்ளார் ஆறுமுக நயினார் செட்டியார். 

திருக்கருவை மாணவர் சீர்திருத்தச் சங்கம் (1973):

ஆன்மிகத்தோடு அறத்தையும் போதிக்கும் இளைஞர் கூட்டமாக உருவெடுத்தது திருக்கருவை மாணவர்கள் சீர்திருத்த சங்கம். 

ஆவணி தபசுத்திருநாள் வெளியீடாக திருக்கருவை வெண்பாவந்தாதி நூலை வெளியீடு செய்ய நினைத்தார்கள். அதற்காக, சங்கரன் கோயில் சைவ சித்தாந்த சபை செயலரும், திருவாவடுதுறை ஆதின வித்துவான் ரத்தினவேலன் அவர்களைக் கொண்டு அந்நூலுக்கு உரை செய்தார்கள். 

இத்தகைய அரிய செயலை அன்றைய சங்கரன் கோயில் சைவசித்தாந்த சபையினரும், கரிவலம் வந்த நல்லூர் ஆஸ்திக அன்பர்களும் இந்த நற்பணியில் ஈடுபட்ட மாணவர்களைப் பாராட்டினார்கள். இத்தகைய நல்லுள்ளம் கொண்ட அன்பர்களை இன்றைய காலகட்டத்தில்  காண்பது அரிது.  

காந்தியச் செம்மல் ராய.சொ. (1974):

பெரும் செல்வந்தரான ஆ.மருதப்பன் செட்டியார் அவர்கள் தன் ஜீவித காலத்திலேயே, கரிவலம் வந்த நல்லூர் பால்வண்ண நாத சுவாமி திருக்கோயிலை சங்கரன்கோவில் சங்கரலிங்க சுவாமி கோயில் நிர்வாகத்தோடு  இணைத்து விட்டார். 

அதனால் திருக்கோயில் நிர்வாகம் சார்பாக ஒரு மாபெரும் கும்பாபிஷேக வைபவம் நாடத்திட வேண்டிய கட்டாயச் சூழலுக்கு தள்ளப்பட்டது.  முழு வீச்சில்  திருப்பணிகள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு 1974 ஆம் ஆண்டு கும்பாபிஷேகமும் வந்தது.  இதனை முன்னின்று நடாத்தியவர் திருவாடானை அய்யா மணி சிவாசாரியார். 

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் புகழ் பெற்ற தமிழறிஞர், காந்தியவாதி, சிறந்த சைவ நன்மணி என்ற பட்டத்திற்கு சொந்தக்காரர், அழகப்பா பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை தலைவராக விளங்கியவர் ராய. சொக்கலிங்கம் என்னும்  ராய.சொ.  அவர்கள். 

இவருடைய மாணவர்  மதுரை அறநிலையத் துறையில் அதிகாரியாக இருந்தார்.  அந்த நேரம் கரிவலம் வந்த நல்லுார் கும்பாபிஷேகமும் நடைபெற்றது. ஏற்கனவே, சைவத்திருமுறைகள், தமிழ் இலக்கியங்களை பாடம் பயின்ற மாணவர் கும்பாபிஷேகத்தை ஒரு வாய்ப்பாகக் கருதிக் கொண்டு, திருக்கருவை பதிற்றுப்பத்து அந்தாதிக்கு ராய.சொ. அவர்களை பொழிப்புரை எழுதச் செய்து அதனை திருக்கோயில் வெளியீடாகவே வெளியீடு செய்தார். 

மேலும் இதே ஆண்டு அன்னாரின் நண்பர் பாகனேரி. இராம. முத்து பழநியப்ப செட்டியார், தனது அறுபதாண்டு நிறைவு நாள் விழாவில் இந்நூலினை மீண்டும் அச்சிட்டு அனைவருக்கும் அன்பளிப்பாகவும் வழங்கியுள்ளார்.  

பாலசுப்பிரமணியம் செட்டியார் (1980):  

கரிவலம் வந்த நல்லூர் சிவனடியார்களின் முன்னோடியாகத் திகழ்ந்தவர், செட்டியார் குல திலகர், பாலசுப்பிரமமணியம் செட்டியார். திருக்கருவை அந்தாதிகளில் தோய்ந்த இப்பெரியார் திருக்களா வனத்தான் திருவடி மாறாத சிந்தையுடையவர்.

காரைக்குடி திருமிகு. ராய. சொ.  1974 இல் நடைபெற்ற கும்பாபிஷேக ஞாபகார்த்தமாக  திருக்கருவை  பதிற்றுப்பத்தந்தாதியின் ஆசிரியர் அதிவீர ராம பாண்டியர்  என்று அச்சிட்டு வெளியிட்ட நூலைக் கண்ட பாலசுப்பிரமணியம் செட்டியார்,  நேரிடையாகவே, ராய. சொ.விடம்  “ஏன் இப்படி செய்தீர்கள்?” என நியாயமான வாக்குவாதம் செய்ததாக அவருடைய பேரன் செ. சுப்பையா கூறியுள்ளார். 

கும்பாபிஷே கமிட்டியின் துணைத்தலைவராகப் பணியாற்றியவர். இவ்வூரின் எல்லை தெய்வமாக இருக்கும் உத்தண்டசாமி கோயிலின் தர்மகர்த்தாவாகத் திகழ்ந்தவர்.  சங்கரன்கோவில் செல்லும் சாலையில் இருக்கும் விநாயகர் கோயில் அமையக் காரணமாக இருந்தவர். தன்னுடைய மணி விழாவில் வரதுங்க ராம பாண்டியர் அருளிச் செய்த பிரமோத்திர காண்டத்தில் இருந்து  ‘விபூதி மகிமை’ என்னும் தலைப்பில் மலர் வெளியிட்ட சைவசீலர். 

தனது பெற்றோர் சிரார்த்த நாள் நினைவாக,  வரதுங்கராம பாண்டியர் சரிதம், திருக்கருவையந்தாதிகள் மூலத்தை மட்டும் அச்சிட்டு இலவசமாக வெளியீடு செய்த பெரும் புண்ணியர் கரிவலம் வந்த நல்லுார் பி.ஆர்.பி. அவர்கள். 

சங்கரன்கோவில் சைவ சித்தாந்த சபையினர்,  குட்டித்திருவாசகத்தின் எண்ணற்ற திருப்பாசுரங்களை மனப்பாடமாக பாட வல்லவர் என்றும்,  கரிவலம் வந்த நல்லூர் சைவ சித்தாந்த சபை வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாக இருப்பவர் என்று புகழராம் சூட்டியுள்ளார்கள். 

திருவாவடுதுறை ஆதினம்  (1984):

சைவ சித்தாந்த செந்நெறி, திருமுறைச் செல்வம்,  செந்தமிழ் மொழி,  அரன் திருக்கோயில்கள், அறநிலையங்கள், அருங்கலைகள் யாவற்றையும் காத்துவரும் ஆதினங்களில் முதன்மையானது திருவாவடுதுறை யாதீனம். இவ்வாதினத்தின் 22 வது குருமகாசன்னிதானமாகத் திகழ்ந்தவர் அம்பலவாண தேசிக சுவாமிகள். 

சைவ மக்கள் யாவரும் உய்யும் பொருட்டு இவர்களுடைய சீர் மிகுந்த அருளாட்சிக் காலத்தில் வரதுங்க ராம பாண்டியர் அருளிச் செய்த  ‘பிரமோத்திர காண்டம்’ என்னும் நன்னூல் அச்சிட்டு வெளியீடு செய்யப்பட்டது. இவர் பத்தாண்டுகளில் நமச்சிவாய மூர்த்திகளின் திருவடியில் இரண்டறக் கலந்தார். 

இவர்களது முதலாம் ஆண்டு குருபூஜை மலரான திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி நூலுக்கு அன்றைய ஆதின வித்துவான் ஆதி.முருகவேளைக் கொண்டு பொழிப்புரை செய்தார் 23 வது குருமகா சன்னிதானம் சிவப்பிரகாச தேசிக சுவாமிகள்.  இதனை ஆதின வெளியீடாகவும் வெளியீடு செய்து கருவை நகர மக்களுக்கு பெருமை சேர்த்தது திருவாவடுதுறையாதீனம். 

பாடுவதுன் திருநாமம் நாள்தோறும் பத்தி செய்து 
சூடுவதுன் பொற்திருவடித் தாமரை தொண்டு செய்து 
கூடுவதுன் அடியார் திருக்கூட்டம் கூட்டத்துடன் 
நாடுவதுன் நிலைக்காண் கருவாபுரி நாயகனே 

    -வரதுங்க ராம பாண்டியர்

மணிவாசகர் பதிப்பகம் (1998):

தென்தமிழகத்தில் திருமுறைகளில் தொடங்கி தற்கால இலக்கியங்கள் வரை செம்பதிப்பாக அச்சிட்டு நூற்களை வழங்கி வரும் பதிப்பகங்களில் முன்னோடியாக விளங்குவது மாணிக்க வாசகர் பதிப்பகம். இது திருக்கருவை பதிற்றுப்பத்து அந்தாதியின் மூலச் செய்யுளை மட்டும் அச்சிட்டு வழங்கியுள்ளது. 

மறுபதிப்பு (2004):

30 ஆண்டுகளுக்குப் பிறகு கரிவலம் வந்த நல்லூரில் மாபெரும் கும்பாபிஷேகம். அதனை சிறப்பிக்கும் பொருட்டு, பி.ஆர்.பி. பேரன் செ.சுப்பைய, வை. ஆறுமுகம் ஆசிரியர் ஆகியோர்  இணைந்து,   ‘திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் நன்னெறி மன்றம்’ என்ற பெயரில்  ஒரு ஆன்மிக அமைப்பை  உருவாக்கினார்கள். 

1964 ஆம் ஆண்டு  திருக்கருவை தல புராணத்தை ஆ. ராமசாமியா பிள்ளையவர்களைக் கொண்டு வசன நடையாக்கி வெளியீடு செய்திருந்தார் பி.ஆர்.பி. அத்துடன் அவரால்  வெளியீடு செய்த குட்டி திருவாசகத்தையும் வரதுங்க ராம பாண்டியரின் வரலாறு ஆகிய மூன்று பகுதிகளையும் இணைத்து ஒரே நூலாக மறுபதிப்பு செய்து சைவ மக்களுக்கு திருக்கருவை அந்தாதிகளின் மீது ஒரு ஈர்ப்பினை உண்டாக்கினார்கள் இந்த இரு இளவல்கள்  என்றால் அது மிகையல்ல. 

கவிஞர் பத்மதேவன் (2004):

சிறந்த நூற்களை வெளியீடும் சென்னை செண்பகா பதிப்பகம்  இதே ஆண்டு திருக்கருவை பதிற்றுப்பத்து அந்தாதிக்கு கவிஞர் பத்மதேவன்  மூலம் பொழிப்புரை எழுதி வெளியீடு செய்தது.   

புலவர் மு.ராமலிங்கம் (2007):

சென்னை, எல்.கே.எம். பப்ளிகேஷன்ஸ்  நிறுவனத்தினர் கொட்டாம்பட்டி புலவர் மு.ராமலிங்கம் அவர்களைக் கொண்டு திருக்கருவை பதிற்றுப்பத்து அந்தாதிக்கு எளிய வடிவில் உரை எழுதியது வெளியாகியுள்ளது.

நினைவு வெளியீடு (2008, 2009, 2010):

கரிவலம் வந்த நல்லுார் பால்வண்ண நாத சுவாமி கோயில் பரிஜாகராக பணி செய்தவர் திருமிகு. ராஜா சுவாமிகள். அவர்கள் நினைவாக ஆண்டுதோறும் ஆடி சுவாதி அன்று, சுந்தர மூர்த்தி சுவாமிகள் அருளிச் செய்த ஒரு பதிகத்தோடு அதற்கு இசைந்த திருக்கருவை அந்தாதி பாடல்களை கோர்வையாகக் கோர்த்து ஒரு நினைவு நுாலாக்கியும், அது குருபூஜை மலராகவும் சங்கரன் கோயில் அன்பர் மா.பட்டமுத்து அவர்களைக் கொண்டு வெளியீடு செய்யப்பட்டது. இந்த நினைவு வெளியீடுகள் மூன்று ஆண்டுகள் நீடித்தது. 

இளம் முனைவர் பதிப்பு (2010):

சிறுவயதில் இருந்தே தாத்தாவுடன் பால்வண்ண நாத சுவாமி திருக்கோயிலுக்குச் சென்று வழிபடுவதும், கோயிலுக்குரிய மர வேலைகளை கூட செய்து தருவதுமாக இருந்தேன். மேலும், காணியாச்சிகாரர்கள் என்ற முறையில் தேர்த்திருவிழாவிற்குத் தேவையான பணிகளை குறைவற செய்து வந்த எங்கள் குடும்பம்  காலப்போக்கில் உடன் இருப்பவர்களின் அதிகார தோரணை, அத்துமீறல்கள் போன்ற செய்கையால் ஒதுங்கிக் கொண்டோம். 

தாத்தாவுடன் சிவச்சிந்தனைக்குச் செல்வது, சர்வோதய மேளாவில் கலந்து கொள்வது, திருவிழாக்காலங்களில் முன்னின்று தொண்டு செய்வது, திருமிகு ராஜா சுவாமிகளின் பழக்கம், பட்டமுத்து அடியாரின் சேர்க்கை யாவும் அடியேனை திருக்கருவை அந்தாதிகளின் ஆசிரியர் வரதுங்கர் தான் என்பதை நிரூபணம் செய்ய முன்னெடுக்க வைத்தது. 

அதன் பயனாக எனது தாய் தந்தையரின் ஆசீர்வாதத்தால், சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரியில் இளம் முனைவர் பிரிவுக்கு விண்ணப்பம் செய்தேன். 

அதில் அன்று வரை கிடைத்த தரவுகளைக் கொண்டு  ‘பன்முக நோக்கில் திருக்கருவை அந்தாதிகள்’ என்ற தலைப்பில் அரிய செய்திகளை எல்லாம் தொகுத்து வரதுங்கராம பாண்டியர் தான் திருக்கருவையந்தாதிகளின் ஆசிரியர் என நிறுவி இளம் முனைவர் பட்டமும் பெற்றேன்.

மறுபதிப்பு (2014):

திருக்கருவை வெண்பாவந்தாதிக்கு சங்கரன்கோவில் சைவ சித்தாந்த சபை செயலர் ரத்தினவேலன் அவர்கள் பொழிப்புரை ஒன்றை எழுதி இருந்தார். அதனை அப்படியே தனது சொந்தச் செலவில் மறுபதிப்பாக நூலாக்கம் செய்து அனைவருக்கும் இலவசமாக வழங்கினார் கரிவலம் வந்த நல்லூர் ஆன்மிகச் சொற்பொழிவாளர் வை.ஆறுமுகம். 

திருப்புகழ் சபை (2015):

‘களாஈசனை வாழ்த்தவே’ என்னும் நூலை வெளியீடு செய்து மக்களுக்கு ஆன்மிக விழிப்புணர்வு எழுச்சியை ஏற்படுத்திய தருணம் அது. ஒரு நாள்  செ.சுப்பையா அவர்கள்  “திருக்கருவை அந்தாதிகளுக்கு வயலி மொட்டைய சாமி என்பவர் உரை எழுதி வைத்துள்ளார்கள். அதை என்னிடம் கொடுத்து சில பல நாள்கள் ஆகிறது. அதையும் அச்சிட்டு வெளியீடு செய்தால் மகிழ்ச்சி அடைவார்கள்” என்றார். அவர் எழுதிய திருக்கருவையந்தாதி நுாற்கள் ஒவ்வொன்றாக வாங்கி அதனை அச்சேற்றிய பிறகு,  கரிவலம் வந்த நல்லூர் திருப்புகழ் சபை சார்பாக வெளியீடு செய்தால் நன்றாக இருக்கும் என யோசனை தெரிவித்த போது அதற்கு இசைவும் தெரிவித்தார்கள். 

ஒரு வைகாசி வசந்த உற்சவ விழாவில் சங்கரன்கோவில் சைவ சித்தாந்த சபை செயலர் ஆவுடையப்பன், வேல்மணி, திருமலை வேலு ஆகியோர் முன்னிலையில், ‘குட்டித்திருவாசகம்’ என்ற பெயரில் கும்பாபிஷேக கமிட்டி தலைவர் உட்பட, கரிவலம் வந்த நல்லூர், சங்கரன் கோயில் அன்பர்கள் அனைவருக்கும் சிறப்பு செய்து அந்நூல் வழங்கப்பட்டது. 

புலவர் பி.ரா.நடராஜன் (2016):

சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பாகவே, திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதியில் இருந்து சில செய்யுள்கள், குறிப்பிட்ட செய்யுள்கள், கடவுள் வாழ்த்து, சிறப்பு பக்கத்தில் ஒரு செய்யுளும் பாடமாக வைப்பது வழக்கம். அதிலும், தமிழ் கற்றவர்களுக்கு… 

சிந்தனை உனக்கு தந்தேன் 
   திருவருள் எனக்குத் தந்தாய் 
வந்தனை உனக்கு தந்தேன் 
   மலரடி எனக்குத்தந்தாய்
பைந்துணர் உனக்குத்தந்தேன் 
  பரகதி எனக்குத்தந்தாய் 
கந்தனை பயந்த நாதா 
  கருவையில் இருக்கும் தேவே. 

என்கிற இந்தப் பாடல் நிச்சயம் மறக்கவே மறக்காது. 

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும் பி.லிட், பி.ஏ. மாணவர்களுக்கு திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதியை முழுப் பாடமாக வைத்துள்ளார்கள். 

அம்மாணவர்களுக்கு புலவர் பி.ரா.நடராஜன் பொழிப்புரை, அரும்பதவுரை எழுதி, சென்னை சங்கர் பதிப்பகம் மூலம் வெளியீடு செய்தது போற்றத்தக்க செய்தியாகும்.  

தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூல் நிலையம் (2016):

தஞ்சை சரஸ்வதி மகால் நூல் நிலையம், பண்டிதர் மணி மாறன்  திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதிக்கு பொழிப்புரையுடன் கூடிய நூல் ஒன்றை அச்சிட்டு வெளியீடு செய்துள்ளார். 

முனைவர் ஞானம் (2017):

மயிலாடுதுறையைச் சார்ந்தவர் முனைவர் ஞானம். இவர் சென்னை சாரதா பதிப்பகம் வாயிலாக திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதிக்கு நாகை. சொ.தண்டபாணியா பிள்ளை அவர்களுடைய முன்னுரையை எடுத்தாண்டு தனக்கே உரிய பாணியில் அருஞ் சொற்பொருள், பொழிப்புரை ஒன்றை எழுதியுள்ளார். 

மகரத்தலைநாள் வைபவம் (2019):

திருவாவடுதுறை ஆதினத்தின் மகரத்தலைநாள் குருபூஜை, சங்கரன் கோவில் புரட்டாசி வேலப்பர் தேசிகர் குருபூஜை வைபவ விழாக்களில் விழா மலராக மூன்று  நூல்கள் இரு முறை வெளியீடு செய்யப்பட்டுள்ளன.  இந்த நிகழ்வில் தான் வயலி அம்பிகை தாசன் உரை எழுதிய மூன்று அந்தாதிகளையும் மறுபடியும் அச்சாக்கம் செய்து திருவாவடுதுறை ஆதினம் நமச்சிவாய சுவாமிகள் முன்னிலையில், 24 வது குருமகா சன்னிதானம் அம்பலவாண சுவாமிகளின் திருக்கரங்கள் வாயிலாக வெளியீடு செய்தனர்.

அறுபத்து மூவர் குருபூஜைக் குழு (2021):

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை, அறுபத்து மூவர் குருபூஜைக்குழு தலைவராகச் செயல்பட்டவர் ஸ்ரீ வைகுண்டம் தேவகளை ஆனந்தன். 

இவர், ரத்தின வேலன் அவர்களால் பொழிப்புரை செய்யப்பட்ட வெண்பா அந்தாதி, கழக வெளியீடு திருக்கருவைபதிற்றுப்பத்து அந்தாதி, வை.மு.கிருஷ்ணமாச்சாரியார் உரை செய்த திருக்கருவை கலித்துறை அந்தாதி ஆகிய மூன்றையும் ஒன்றாக இணைத்து திருக்கருவை அந்தாதிகள் என்ற பெயரில் மறுபதிப்பு செய்து வெளியீடு செய்தார். 

கண்ட கண்கள் புனல்பாயக் 
   களிப்பாய் உள்ளம் கரையழிய 
விண்ட மொழியின் நாக்குழற
   விம்மி மேனி மயிர் பொடிப்பப் 
பண்டை வசம் போய் பரவசமாய்ப் 
   பரமானந்தத் தெளிநறவம் 
உண்டு தெவிட்டா அருள்புரிந்தான் 
   கருவை வாழும் உரவோனே. 

   -வரதுங்க ராம பாண்டியர்

சைவ சித்தாந்தப் பேரவை (2023): 

சங்கரன்கோவிலில் இயங்கும் சைவ அமைப்புகளில் ஒன்று சைவ சித்தாந்தப் பேரவை. இம் மன்றம், தனது சபையின் எட்டாவது வெளியீடாக திருக்கருவை அந்தாதிகள் செய்யுள் மட்டும்  சங்குபுரம் 2 ஆம் தெருவிலுள்ள செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா மலராக அச்சிட்டு வெளியீடு செய்துள்ளது.

இணையத்தில் திருக்களாவீசன்:

கணினித்தமிழை வளர்க்கும் பொருட்டு தமிழக அரசால் 2001 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அமைப்பு தமிழ் இணையப் பல்கலைக்கழகம்.  பழம் பெரும் அரிய நூற்களை மின்மயமாக்கி வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.  இக்கழகம் தொடங்கிய ஆண்டில் இருந்தே  திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதியை மின்மயமாக்கப்பட்டு பலருக்கும் பயன்பாட்டு சேவையில் இருந்த வருகிறது. 

மேலும், சைவம் என்கிற தனியார் ஆன்மிக அமைப்பும் திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதியை மின்மயமாக்கி யாவருக்கும் பயன்படுமாறு வசதிகளை உருவாக்கி வைத்துள்ளது.

திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதியை பாடமாக வைத்திருக்கும் அரசு, தனியார் கல்லுாரிகள் தனிப்பட்ட முறையில் இணையத்தில் ஏற்றி மாணவர்களுக்குப்  பயன்படுமாறு திட்டமிட்டுள்ளார்கள். இச்செயலுக்கு மூலாதாரமாக விளங்குபவை  நாகை சொ.தண்டபாணியாப் பிள்ளையின் விளக்கவுரையுடன் கூடிய திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி ஆகும்.  

இது தவிர பாண்டித்துரைத்தேவர் பெருமகனார் உருவாக்கிய மதுரை தமிழ்சங்கம் நடாத்திடும் புலவர் பட்டத் தேர்விற்கு அன்றைய அறிஞர்கள் சிலர் சில  நூற்களைத் தேர்வு செய்திருந்தனர். அதில் வைணவர்களின் உரை செய்த திருக்கருவை அந்தாதி நூற்களும் அடக்கம் என்பதை தமிழ்சங்க வரலாற்றில் இருந்து தெரிந்து கொள்ளலாம். 

திருக்கருவை கலித்துறையந்தாதி,  திணை மாலை நூற்றைம்பது என்ற இரு நூல்களும் இணையத்தில் மின்னுருவாக்கம் பெற்றுள்ளன என்பது கூடுதல் தகவல். 

மேலும்,  வைணவர்கள் உரை செய்த திருக்கருவை வெண்பாவந்தாதி, திருக்கருவை கலித்துறையந்தாதி, திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி, திருமகள் அந்தாதி, மறைசை அந்தாதி, திருவான்மியூர் கலித்துறையந்தாதி, திருச்செந்துார் முருகன் பிள்ளைத்தமிழ், முருகன் வாவா பதிகம், முருகன் வேற்பதிகம் ஆகிய நூற்களும் ஒரே தொகுப்பாக இணையத்தில் கிடைக்கின்றன. 

இவையாவும் சுமார் நூறாண்டுகளுக்கு முன்பு திண்ணை பள்ளிக்கூட மாணவர்களுக்கு வாத்தியார்கள் போதித்த போதனை நூற்களாகவும் இருக்கலாம் என்பது அடியேனின் துணிபு. 

எப்படி இருப்பினும் தமிழ் கற்றுக் கொள்ள விரும்புபவர் யாராக இருப்பினும் அவர்கள் கருவைப்பரமன் கழலடியைச் சிந்தித்து வரதுங்க ராம பாண்டிய மன்னர் பெருமானை வந்தித்து வணங்குவது இன்றும் உயிர்ப்பான தொன்றுதொட்ட மரபாக இருந்து வருகிறது.

கரிவல மாநகருக்கு இறைவன் களவிலமர் 
     பால்வண்ணக் கடவுள் செம்பொற்
திருவடி சூடிய முடியான் பர ராசர் முடி 
    தோய்ந்த சிவந்த தாளான் 
அரிய தமிழ்க்குரையாணி அதிவீர ராமன் 
    முன்னோன் அவனிகாக்கும் 
மருவலர் கோளரி ஞான வரதுங்கன் அடியை 
     நிதம் வணங்குவாமே. 

      -சொ. வீரப்ப முதலியார் 

நானிலத்தோர் முன்னே நலனழிந்து நானிருந்தால் 
கான நறும்பூங் களவீசா - ஈனமுரைத்து 
என்னைச் சிரிப்பார் என்றெண்ணாதே  எம்பெருமான் 
உன்னைச் சிரிப்பாரும் உண்டு.
உண்டு பல குற்றம் உனையடைந்தேன் ஆதலினால் 
கண்டு பொறுத்தல் கடன் கண்டாய் - பண்டுதிரம் 
சிந்த அடித்தவனைச் சீறாது பாசுபதம் 
தந்த முகலிங்க நாதா.   

வாழ்க பாரதம் வாழ்க மணித்திருநாடு!

(நிறைவு)

$$$

Leave a comment