-ஆசிரியர் குழு
விஜயபாரதம் பிரசுரம் 2024ஆம் ஆண்டுமுதல், சிறந்த எழுத்தாளர்களுக்கு விருது வழங்கி வருகிறது. தமிழ் எழுத்துத் துறையில் சாதனையாளராக இயங்கி வருபவர்களுக்கு அமரர் உ.வே.சாமிநாத ஐயர் பெயரிலான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. அவரைப் பற்றிய சுருக்கமான வாழ்க்கைக் குறிப்பு இது…

கரிசல்காட்டு எழுத்தாளர்கள் என்று சொல்லப்படும் படைப்பாளிகளில் ஒருவரான திரு. சோ.தர்மன் அவர்களின் இயற்பெயர் சோ.தர்மராஜ். 1953 ஆக. 8-இல் பிறந்தவர்; புதினம், சிறுகதை, நாட்டாரியல் ஆகிய பிரிவுகளில் செயல்பட்டு வருபவர். தமிழிலக்கியத்தில் 1990களில் உருவான இயல்புவாத இலக்கிய அலையில் தனியிடம் பெற்றவர்; ‘சூல்’ என்னும் நாவலுக்காக 2019-ஆம் ஆண்டில் சாஹித்ய அகாதெமி விருதைப் பெற்றார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டத்திலுள்ள கடலையூருக்கு அருகில் உருளைகுடி என்னும் ஊரில் மீ.சோலையப்பன் – பொன்னுத்தாய் ஆகியோருக்கு 1953 ஆக. 8-ல் பிறந்தார். புகழ்பெற்ற எழுத்தாளரான பூமணி (2014-இல் சாஹித்ய அகாதெமி விருது பெற்றவர்) இவருடைய தாய்மாமா. இவரது மனைவி பெயர் மாரியம்மாள். வினோத் மாதவன், விஜய சீனிவாசன் என இரு மகன்கள்.
உருளைக்குடி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆரம்பக் கல்வி; கடலையூரிலுள்ள திருநெல்வேலி டயோசீசன் டிரஸ்ட் அசோசியேஷன் பள்ளியில் (TDTA) உயர்நிலைக் கல்வி; கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலைக்கல்வி; தூத்துக்குடி புனித மரியன்னை தொழில்நுட்ப பள்ளியில் தொழிற்கல்வி கற்றார்.
1976 முதல் 1996 வரை இருபதாண்டுகள், கோவில்பட்டியிலுள்ள லாயல் டெக்ஸ்டைல் மில் என்னும் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். அதன் பின்னர் முழு நேர எழுத்தாளராக கோவில்பட்டியில் வசித்து வருகிறார். தொழிலாளியாக இருந்தபோது, தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபட்டவர்; அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (ஏ.ஐ.சி.டி.யூ.) அமைப்பில் நிர்வாகியாக இருந்தார்.
சோ.தர்மன் தன் தாய்மாமாவான எழுத்தாளர் பூமணியிடமிருந்து எழுத்தாளராகும் ஊக்கத்தைப் பெற்றார். கி.ராஜநாராயணன், சி.கனகசபாபதி, ஜோதிவிநாயகம், தேவதச்சன் ஆகியோரால் வழிநடத்தப்பட்ட கோவில்பட்டியின் இலக்கியச் சூழலில் உருவானவர் சோ.தர்மன். கோயில்பட்டி பகுதியின் கரிசல் காட்டின் இலக்கிய முன்னோடியான கி.ராஜநாராயணனின் எழுத்துக்களை முன்னுதாரணமாகக் கொண்டவர். கோவில்பட்டியில் 1970களில் தொடர்ச்சியாக நடந்துவந்த இலக்கிய உரையாடல்கள் சோ.தர்மனின் இலக்கியப்பார்வையை வடிவமைத்தன. தொழிற்சங்க அரசியலின் சிக்கல்களும் அவரை எழுதத் தூண்டின.
ஆனால் முக்கியமாக அவருடைய எழுத்துக்கான தூண்டுதல், கரிசல்நிலத்தில் நிகழ்ந்து வந்த தொடர்மாற்றங்களில் இருந்து எழுந்தது. வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட கரிசல்நிலத்தில் பருத்தி முதலிய கரிசல் பயிர்கள் இழப்பு தருவனவாக ஆயின. கண்மாய்கள் (ஏரிகள்) சார்ந்தே வேளாண்மை நடந்துவந்த கரிசலில் அந்நீர்நிலைகள் கைவிடப்பட்டு பராமரிப்பின்றி அழிந்தன. மக்கள் தொடர்ச்சியாக ஊரைவிட்டு வெளியேறவே, கிராமங்கள் ஆளில்லாமல் கைவிடப்பட்டன. மில் தொழிலாளியாக இருந்தாலும் சோ.தர்மன் தன்னை விவசாயியாகவே உணர்பவர். கிராமத்தின் வீழ்ச்சி, அவருள் வாழ்ந்த விவசாயியை துயரமும் சீற்றமும் கொள்ளச் செய்ததன் விளைவுகளே அவருடைய கதைகள்.
1980-இல் மதுரையிலிருந்து வெளிவந்த ‘மகாநதி’ இதழில் வெளியான ‘விருவு’ தான் சோ.தர்மனின் முதல் சிறுகதை. தொடர்ச்சியாக இலக்கியச் சிற்றிதழ்களில் சிறுகதைகளை எழுதினார். அன்பின் ‘சிப்பி, ஈரம், சோகவனம், வனக்குமாரன்’ உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளையும்,ஐந்து புதினங்களையும் எழுதியுள்ளார்.

சோ.தர்மனின் முதல் புதினம் ‘தூர்வை’ 1996-இல் சிவகங்கை, அன்னம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. அத்தியாயப் பகுப்புகள் இல்லாமல் ஒரே உரைநடை ஓட்டமாக எழுதப்பட்டது அந்நாவல். சோ.தர்மனின் புதினங்களில் முதன்மையாகக் கருதப்படுவது ‘கூகை’. ஒடுக்கப்பட்ட மக்களின் குறியீடாகவே ‘கூகை’ மாறிவிட்டது. 2019ஆம் ஆண்டுக்கான சாஹித்ய அகாதெமி விருது, இவர் எழுதிய ‘சூல்’ புதினத்துக்கு வழங்கப்பட்டது.
‘பதிமூன்றாவது மையவாடி’ (2020) புதினம், உருளைக்குடி கிராமத்திலிருக்கும் கருத்தமுத்துவை மையமாகக் கொண்ட கதை. ஒரு கிராமத்திலிருந்து கல்வி நிமித்தம் வெளியே சென்று உலகத்தை அவன் அனுபவங்களால் கற்றுக் கொள்வதாக கதை விரிகிறது. ‘வௌவால் தேசம்’ (2022) புதினம், பகடியுடன், நம்மைச் சூழ்ந்திருக்கும் சமூக வீழ்ச்சியைச் சித்தரிக்கிறது.
நாட்டாரியல் சார்ந்த செய்திகளைச் சேகரித்து ஆவணப்படுத்துவதில் ஈடுபாடு கொண்டவர் சோ.தர்மன். வில்லிசைக் கலைஞர் பிச்சைக்குட்டி பற்றிய வாழ்க்கை வரலாற்று நூலை எழுதியிருக்கிறார். கி.ராஜநாராயணன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், வெங்கட்சாமிநாதன் ஆகியோரை இலக்கியத்தில் தனக்கு அணுக்கமாகக் கருதுபவர்; அவர்களுடன் தொடர் விவாதத்தில் இருந்தவர்.
சோ.தர்மன் சுற்றுச்சூழல் விழிப்புணர்வையும், இயற்கையோடு இயைந்த வாழ்வையும், மரபின் அறிவையும், பண்பாட்டையும் எடுத்துரைப்பதில் ஆர்வம் கொண்டவர். ‘அரசின் குத்தகைக் கண்மாய்களில் ஆடு, மாடு நீர் அருந்த அனுமதிக்கப்படவில்லை. மேய்ப்பவர் அடித்து விரட்டப்படுகிறார்’ என்ற இவரின் ஆதங்கமான முகநூல் பதிவை மேற்கோள் காட்டி மதுரை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சோ.தர்மனின் பெரும்பாலான நாவல்கள் ‘உருளைக்குடி’ என்னும் அவருடைய சொந்த ஊரை களமாகக் கொண்டவை. சென்ற ஐம்பதாண்டுகளில் வேளாண்மையில் உருவான சரிவும், அதன் விளைவாக கிராமச் சமூக அமைப்பில் உருவான சிதைவும், அதன் வழியாக மானுட உறவுகளில் உருவாகும் சிக்கல்களுமே அவருடைய பேசுபொருள்.
இவரது படைப்புகள்:
புதினங்கள்:
- தூர்வை (1996)
- சூல் (2016)
- கூகை (2017)
- பதிமூன்றாவது மையவாடி (2020)
- வௌவால் தேசம் (2022)
சிறுகதைத் தொகுதிகள்:
- ஈரம் (சிறுகதைத்தொகுதி)
- சோகவனம்
- வனக்குமாரன்
- அன்பின் சிப்பி
- நீர்ப்பழி (முழு அறுபத்தெட்டு கதைகள் அடங்கிய தொகுப்பு – 2020 அடையாளம் பதிப்பகம்)
ஆய்வு நூல்:
- வில்லிசைக் கலைஞர் பிச்சைக்குட்டி (2014).
எழுத்தாக்கம் குறித்த மதிப்பீடு:
சோ.தர்மனை ‘இயல்புவாத அழகியல் கொண்ட படைப்பாளி’ என ஜெயமோகன் மதிப்பிடுகிறார். ஆசிரியரின் இடையீடின்றி, மெய்யான தகவல்கள் வழியாகவும், உணர்ச்சியற்ற மிகையற்ற சித்தரிப்பு வழியாகவும் ஒரு நம்பகமான வாழ்க்கைக்களத்தை உருவாக்கி, அதிலிருந்து வாசகர்களை தங்கள் முடிவுகளுக்குச் செல்லச்செய்வது சோ.தர்மனின் எழுத்துமுறையாகும்.
சோ.தர்மன் ‘தலித்’ இலக்கியவாதிகளில் ஒருவராக அடையாளப்படுத்தப்படுபவர். ஆனால் அத்தகைய அடையாளங்கள் இலக்கியத்திற்கு எவ்வகையிலும் தேவையானவை அல்ல என்னும் கருத்து கொண்டவர். இடதுசாரி அமைப்புகளுடன் முப்பதாண்டுகள் இணைந்து செயல்பட்டவர். ஆயினும், ‘இடதுசாரிக் கருத்துக்களை இலக்கியத்தின் பேசுபொருள் ஆக்கக் கூடாது; இலக்கியவாதியின் பார்வையை அந்தக் கொள்கைகள் முடிவு செய்யக் கூடாது’ என்று சொல்பவர்.
தன் கிராமத்தின் கதையை இயல்பாகச் சொல்லமுற்படும் கதைசொல்லியாகவே தன்னை உருவகம் செய்துகொள்பவர்; இலக்கியத்தைக் கற்றறிந்தவராயினும் தன் எழுத்து சாமானியனின் குரலாக மட்டுமே ஒலிக்க வேண்டும் என எண்ணுபவர். சோ.தர்மனின் எழுத்தில் கி.ராஜநாராயணன், பூமணி இருவருடைய செல்வாக்கும் உண்டு. தமிழிலக்கியத்தில் சாமானியனின் அறச்சீற்றத்தையும் வரலாற்றுணர்வையும் வெளிப்படுத்தியவை இவருடைய படைப்புக்கள்.
“கு.அழகிரிசாமி, கி.ரா., பூமணிக்கு அடுத்த நிலையில் கரிசல் மண்ணின் ஆளுமை சோ.தர்மன்” என்று எழுத்தாளர் கோணங்கி குறிப்பிடுகிறார். சோ.தர்மனின் வாழ்க்கை வரலாற்றை கோ.சந்தனமாரியம்மாள் நூலாக எழுதியிருக்கிறார்.
பெற்றுள்ள விருதுகள்:
- 1992 மற்றும் 1994 ஆண்டுகளில் ‘இலக்கியச் சிந்தனை’யின் சிறந்த சிறுகதைக்கான விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
- ‘கூகை’ புதினத்திற்காக, தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005-ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான பரிசினைப் பெற்றிருக்கிறார்.
- ‘சூல்’ புதினத்திற்காக 2016-ஆம் ஆண்டிற்கான சுஜாதா விருதைப் பெற்றார்.
- ‘சூல்’ புதினத்திற்காக 2019-ஆம் ஆண்டில் சாஹித்ய அகாதெமி விருது இவருக்கு வழங்கப்பட்டது.
- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் விருது, சுந்தரனார் விருது பெற்றவர்.
- கனடா தோட்ட விருது (2005)
- ஆனந்த விகடன் விருது (2019)
தமிழகத்தில் பெரும்பாலான எழுத்தாளர்கள் அரசியல் சரிநிலைகளுக்கு ஏற்ப தங்கள் கருத்துகளை வெளியிடுவது வழக்கமாக உள்ளது. ஆனால். திரு. சோ.தர்மன் அவர்களிடம் இதுபோன்ற சமரசங்கள் கிடையாது. தனக்கு சரியென்று தோன்றுவதை உரக்கச் சொல்வதில் இவருக்கு எந்தத் தயக்கமும் இருப்பதில்லை. அதனால்தான், சமுதாயத்திற்கு வழிகாட்டும் முன்னோடி எழுத்தாளராக இவர் வீற்றிருக்கிறார்.
இவரது முகவரி:
திரு. சோ.தர்மன்
எழுத்தாளர்,
53 D, கதிரேசன் கோயில் தெரு,
கோவில்பட்டி – 628 502
தூத்துக்குடி மாவட்டம்
போன்: 75980 75536
- தகவல் உதவி: தமிழ் விக்கி
$$$