பாரதி விருது பெறும் சிறந்த எழுத்தாளர் Dr. ஜெயஸ்ரீ சாரநாதன்: வாழ்க்கைக் குறிப்பு

-ஆசிரியர் குழு

தஞ்சையைப் பூர்விகமாகக் கொண்டு, ஒசூரில் வளர்ந்து, தற்போது சென்னையில் வாழும் முனைவர் ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்கள், விஜயபாரதம் பிரசுரத்தின் இந்த ஆண்டுக்கான பாரதி விருது பெறும் எழுத்தாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். எழுத்தாளர், ஜோதிட ஆராய்ச்சியாளர், பேச்சாளர் எனப் பன்முகம் கொண்டவர் இவர்.

தஞ்சை மாவட்டம், புளியக்குடி ராமானுஜ ஐயங்கார்- காழியூர் கௌசல்யா அம்மையார் தம்பதியின் ஐந்தாவது மகவாகப் பிறந்தவர் ஜெயஸ்ரீ. இவர்களது முன்னோர் காஞ்சிபுரத்திலிருந்து தீர்த்த யாத்திரையாக ராமேஸ்வரம் வந்தபோது, தஞ்சையில் இறையருளால் குடியேறியவர்கள்; பஞ்சகிராமங்களுள் ஒன்றான புளியக்குடியில் இவர்களது முன்னோர் வசித்தனர். மற்றொரு பஞ்சத்தலமான காரப்பன்காட்டிலுள்ள அபிஷ்டவரதப் பெருமாள் திருக்கோயிலில் ஆயிரம் ஆண்டுகளாக கைங்கர்யம் செய்து வந்தவர்கள்.

பள்ளிப் பருவத்திலிருந்தே, கவிதை, கட்டுரை, ஓவியம், பாடுதல் என, பல துறைகளிலும் திறமையை வளர்த்துக் கொண்டவர் ஜெயஸ்ரீ. எதிராஜ் கல்லூரியில் பொருளாதாரமும் சரித்திரமும் பயின்ற இவர், விண்வெளி ஆய்விலும் சிறு வயதிலிருந்தே ஆர்வம் கொண்டவர். ஜோதிடத்தில் தேர்ச்சி பெற்ற பரம்பரையில் வந்ததனால், பன்னிரெண்டாம் வயதில் இருந்தே தாய்வழிப் பாட்டனாரிடம், ஸ்ரீராமரது ஜாதகத்தைக் கொண்டு ஜோதிடத்தின் ஆரம்பப் பாடம் கற்றவர்.

இவரது எட்டாவது வயதில் தாயார் காலமானார். அவரது மறைவுக்குக் காரணம் என்ன என்ற தேடலால் தான், ஜோதிடம் கற்றுக்கொண்டேன் என்று கூறும் இவர், விண்கோள்கள், நட்சத்திரங்களைக் கவனித்தல் மட்டுமல்லாமல், பதினேழு வயதுமுதல் ஜோதிடப் புத்தகங்களையும் வாசிக்கத் தொடங்கினார். பின்னாளில், ஜோதிடம் ஒரு பாடமாக கல்லூரிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட போது, பட்டயப் படிப்பு, முதுகலைப் படிப்பு, முனைவர் பட்ட ஆராய்ச்சி என ஜோதிடம் கற்றார். ஜோதிடம் என்பது ஜாதகம் பார்த்து, பலன் சொல்வது மட்டுமல்ல; உலகத்திலும், உலகத்துக்கு அப்பாலும் பல விவரங்களை, அறிவியல்ரீதியாகவும், ஜோதிடம் தன்னுள்ளே அடக்கியுள்ளது என்பதை ஜோதிடக் கல்வியின்போது உணர்ந்த ஜெயஸ்ரீ, அந்த அறிவை ஆராய்ச்சிக்குப் பயன்படுத்திக்கொண்டார்.

ஒசூர் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தில் உயரதிகாரியாகப் பணியாற்றிய திரு சாரநாதனை 1981-இல் மணம் புரிந்து ஒசூர் வந்தவர் ஜெயஸ்ரீ. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். மகள் மும்பையில் பல் மருத்துவராக உள்ளார். மகன் விண்வெளித் துறையில் விஞ்ஞானியாக அமெரிக்காவில் வசிக்கிறார். ஒசூரில் இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்தது, இவரது எழுத்துப் பயணத்துக்கும் சமூகப் பணிகளுக்கும் களமாக அமைந்தது.

எழுத்துலகில் இவர் முதலில் தடம்பதித்தது,  ‘குமுதம்’ வாரஇதழில்.  ‘விண்மீன் அறிமுகம்’ என்னும் நிகழ்ச்சி குறித்து இவரது கருத்து 1981 ஆம் ஆண்டு பிரசுரமானது. அதன்பிறகு 1990 முதல் இவர்   ‘தி ஹிந்து’ நாளிதழ்,  ‘மங்கையர் மலர்’ மாதப் பத்திரிகை,  ‘அவள் விகடன்’ வாரப் பத்திரிகை,  ‘உமன்ஸ் இரா’ என்னும் ஆங்கில மாதப் பத்திரிகை போன்றவற்றிலும், ஒசூர் நகர பத்திரிகைகளிலும், அரசியல், சமூக, குடும்பப் பிரச்னைகள் தொடர்பாக இருபது வருடங்கள் எழுதி வந்தார். இக்காலத்தில் ஜோதிட ஆலோசனையும் வழங்கி வந்தார்.

 பெண்கள் படும் அவதிகளுக்குத் தீர்வு காண ஒசூரில் ஒரு பெண்கள் குழுவை ஆரம்பித்தார். 18 வயது முதல் 80 வயது வரை, 80க்கும் மேற்பட்ட பெண்களை ஒசூர் நகரில் ஒருங்கிணைத்து, சுற்றுப்புற சுகாதாரம், ஆரோக்கியம், சமூக விழிப்புணர்வு, எழுத்து, பேச்சாற்றல், ஏழை மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தல், கண்தான விழிப்புணர்வு  என, பல வழிகளிலும், அவர்களை ஊக்குவித்தார். அவர்களைக் கொண்டு ‘நகர்வலம்’ என்னும் மாதாந்திரப் பத்திரிகையையும் நடத்திவந்தார்.  

மேலும், பள்ளிகளில் விண்மீன் அறிமுகம் நடத்துதல், அரிமா சங்கம், ரோட்டரி சங்கம் சார்பாக, குவிஸ் போட்டிகளை நடத்துதல், இலக்கிய மன்றச் செயல்பாடுகளில் ஈடுபடுதல், பட்டிமன்றத்தில் பேச்சாளராகவும், நடுவராகவும் இருத்தல் என பல துறைகளிலும் பரிமளித்த ஜெயஸ்ரீ, 2006 இல் சென்னைக்கு இடம்பெயர்ந்தார்.

2000 ஆண்டுமுதல் ஜோதிட ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஜெயஸ்ரீ எழுத ஆரம்பித்தார்.  முனைவர் பி.வி. ராமன் ஆரம்பித்துவைத்த ஜோதிடப் பத்திரிகையில் முப்பதுக்கும் மேற்பட்ட இவரது ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியாயின. தமிழ் மரபில் உள்ள அகத்தியநாடி, ஈஸ்வரநாடி பாடல்களைப் பொருளறிந்து, அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அவை  ‘சப்தரிஷி’ என்னும் ஜோதிடப் பத்திரிகையில் வெளியாயின.

பொட்டி ஸ்ரீராமுலு தெலுங்கு பல்கலைக்கழகத்தில் ஆங்கிலவழிக் கல்வியில் ஜோதிடம் படித்த இவர், ஜோதிட முதுகலையில் தங்கப்பதக்கம் பெற்றார். இவர் ஜோதிடத்தில் எழுதிய  ஆராய்ச்சிக் கட்டுரைகள் பொதுநலம் சார்ந்ததாக இருந்தன.  ‘பயங்கரவாதத் தாக்குதலை முன்கூட்டியே கண்டுபிடித்தல்’ என்பது இவரது முதுகலைப் பட்டத்துக்கான ஆராய்ச்சியாகும். அதுதவிர, நிலநடுக்கம் குறித்தும் விரிவான ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.

மழை குறித்தும் ஒன்பது வருடகாலம் தொடர்ஆய்வு செய்து, தன்னுடைய வலைத்தளத்தில் வெளியிட்டுவந்தார். வானிலை ஆய்வுடன், ஜோதிட ஆய்வையும் இணைத்தால், இன்னும் துல்லியமான வானிலை நிலவரங்களைச் சொல்ல முடியும் என்பது இவரது கருத்து.

அடுத்த முக்கியமான ஆய்வு, முனைவர் பட்டம் பெற புற்றுநோய் குறித்து இவர் செய்தது. அடையாறு புற்ருநோய் மருத்துவமனையின் மேலாளராக இருந்த டாக்டர் சாந்தா அவர்கள் இந்த நோய் குறித்த பல விவரங்களைத் தந்ததுடன், என்னென்ன விவரங்களை ஆராய வேண்டும் என்றும் வழிநடத்தினார். அதன்படி இவர் பலவித புற்றுநோயாளர்களது ஜாதகங்களை ஆராய்ந்து, குறிப்பாக, வாய்ப் புற்றுநோய் குறித்து பாதிக்கப்பட்ட 100 பேர்களது ஜாதகத்தை, ஜோதிடம் தெரியாதவரும் புரிந்துகொள்ளும் வண்ணம், அறிவியல்ரீதியாக முனைவர் பட்டத்துக்குச் சமர்ப்பித்தார்.  அது புத்தக வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தனி ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.

இவை தவிர, இவர் மேற்கொண்ட ஆராய்ச்சிகள், முற்கால வரலாறு, இதிஹாசம், இலக்கியம் சார்ந்தவை. கவிஞர் வைரமுத்து அவர்கள், ஆண்டாள் நாச்சியார் குறித்து எழுதிய கட்டுரைக்குப் பதிலடியாக இவர் எழுதிய நூல் Rare Publications ரங்கநாதன் அவர்களால் வெளியிடப்பட்டது.

விசிஷ்டாத்வைதம் அருளிய ஆசாரியர்  ராமானுஜர் மீது அவதூறு பரப்பும் சிலரது கருத்துகளுக்கும், நூறு வருடங்களுக்கும் மேலாக நீலகண்ட சாஸ்திரி போன்ற அறிஞர்கள் மறுத்துச்சொன்ன விவரங்களுக்கும் பதில் கொடுக்கும் வண்ணம் ‘ராமானுஜ இதிஹாசம்’ என்னும் ஆய்வு நூலை எழுதியுள்ளார்.  இந்தப் புத்தகம், சோழர் வரலாற்றையே புரட்டிப் போடுகிறது. ராமானுஜர் ஸ்ரீரங்கத்தைவிட்டு வெளியேறக் காரணமாக இருந்த கிருமிகண்ட சோழன் யார், 11- ஆம் நூற்றாண்டிலேயே மேல்கோட்டை, தொண்டனூர் போன்ற இடங்களைச் சூறையாடிய மொகலாயர்கள் யாவர், சூறையாடப்பட்ட பெருமாள் திவ்ய விக்ரஹத்தை, தில்லி சென்று ராமானுஜர் எவ்வாறு மீட்டு வந்தார், மொகலாய அரசனது பெண் பெருமாள் விக்ரஹத்தை விட மனமில்லாமல் தொடர்ந்து வந்த போது, அதை எப்படி சமாளித்து, கோயிலைக் காப்பாற்றினார் போன்ற பல விவரங்களைத் தருகிறது இந்த நூல்.

அண்மையில் கலைமகள் பிரசுரமும் தேஜஸ் ஃபவுண்டேஷனும்  ஸ்ரீ கிருஷ்ணாஃபவுண்டேஷனும் இணைந்து நடத்திய போட்டியில் சிறந்த நூலாகத் தேர்வு செய்யப்பட்ட நான்கில் இந்த ராமானுஜ இதிஹாசமும் ஒன்று. இந்த நூல் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டு, சரித்திர ஆர்வலர்களாலும், வைணவர்களாலும் பாராட்டப்பட்டுள்ளது.

ஜோதிடப் பின்னணியுடன் கச்சிதமாக எழுதப்பட்ட இவரது ஆய்வு நூல் ‘மஹாபாரதம் 3136 BCE’ என்பதாகும். மற்றொரு இதிஹாஸமான வால்மீகி ராமாயணத்தையும் மூன்று வருடங்கள் ஆராய்ந்து நூலாக இந்த மாதம் வெளியிடுகிறார்.  “இராமாயணம் ஒரு உண்மையான காவியம். அதற்கு முக்கியமான தொல்லியல்ஆதாரம் ராமர் சேது” என்று நான்கு அறிவியல் ஆய்வுகளைத் தந்துள்ளார். வால்மீகி சொன்ன வழியிலேயே அனைத்து விவரங்களையும் இந்தப் புத்தகத்தில் காணலாம்.

ஆதிசங்கரரது பிறந்த வருடம் சந்தேகத்துக்கிடமாக இருக்கவே, காஞ்சி சங்கர மடத்தின் சீடர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, இவர் ஆதிசங்கரர் காலத்தை ஆராய்ந்து, நூலாக வெளியிட்டுள்ளார். அவர் கரிகால் சோழனது சமகாலத்தவர் என்றும், ஆதிசங்கரர் சொற்படியே, கரிகால் சோழன் காஞ்சிநகரை நிர்மாணித்து, அங்குள்ள கோயில்களையும் புனர்நிர்மாணம் செய்துள்ளான் என்பதையும் கண்டறிந்து எழுதியுள்ளார். ஆதிசங்கரர் பிறந்த வருடம் பொதுயுகத்துக்கு முன் 148 ஆம் ஆண்டு என்றும் நிரூபித்துள்ளார். இவரது ஆய்வுக்கு  ஜோதிட அறிவு பயன்பட்டது.

கல்வெட்டுஇயலில் ஆரம்பப்படிப்பு படித்துள்ளஇவர், கல்வெட்டு மூலம் காலம் கண்டுபிடிக்க, ஜோதிடத்தைப் பயன்படுத்துகிறார். அவ்வாறு எழுதப்பட்ட நூல் ‘ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்?’ என்பது.

பாரதத்தின் வரலாறு 12,000 வருடங்களுக்கு முன் முருகனிடமிருந்து ஆரம்பித்தது என்று பல காணொளிகளை வெளியிட்டுள்ள இவர், அதைப் புத்தகமாகவும், தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிட்டுள்ளார். நம் இதிஹாச, புராணங்களில் சொல்லப்பட்ட விவரங்களை, காலநிலை, தட்பவெப்பம், கடல்ஆழம், கடல்வெள்ளம் போன்றவை குறித்த அறிவியல் ஆய்வுகளுடன் தொடர்புபடுத்தி, சரித்திர காலத்துக்கு முற்பட்ட விவரங்களைக் கொடுத்துள்ளார்.  

இவைதவிர, தவறான கருத்துக்கள் பரப்பப்படும் போது, அவற்றைத் தட்டிக்கேட்டுள்ளார். அந்த வகையில், மஹாபாரத காலஆராய்ச்சி குறித்து ஒரு விமரிசனப் புத்தகமும் எழுதியுள்ளார்.  ‘தமிழன் திராடனில்லை’ என்பதை வலியுறுத்தி ஒரு வலைத்தளமும் நடத்திவருகிறார். அதைப் புத்தகவடிவில் கொண்டு வர இருக்கிறார். இவரது எழுத்தார்வம், ஆய்வுகள் ஆகியவற்றைப் பாராட்டி, சர்வதேச பெண்கள் தின விருதினை, ஸ்வதேசி ஜாக்ரண் மன்ச் இவருக்கு வழங்கியுள்ளது.

தனது காலம் கடந்து நிற்கும் ஆராய்ச்சி என்று இவர் நினைப்பது, சூரியனது பாதையை நிர்ணயிக்கும் வேதவானியல் ஆராய்ச்சி ஆகும். அதன் அடிப்படைக்கூற்றை நாம் ஜோதிடத்தில் பயன்படுத்துகிறோம்.  ‘அயனாம்சம்’ எனப்படும் அந்த விவரம், சூரிய சித்தாந்தம் போன்ற பல சித்தாந்தங்களில் சொல்லப்பட்டுள்ளது. கூடிய விரைவில் தனது ஆய்வு அறிவியல் உலகில் நிரூபிக்கப்படும் என்பது இவரது நம்பிக்கை.  இதுதொடர்பான விவரங்களை Indian Knowledge System- IKS ஆய்வு நூலில் வெளியிட்டுள்ளார்.

பழந்தமிழரின் சங்ககால வரலாற்றையும், இதிஹாச புராணங்களையும் ஒருங்கிணைத்துப்  பார்க்கும்போதுதான், பாரதத்தின் வரலாறு முழுமையாகிறது என்பது உள்பட பல கட்டுரைகளையும்  எழுதி வருபவர் இவர்.

இதுவரை எழுதியுள்ள புத்தகங்கள்: 9; அவற்றுள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவை: 3; உள்நாட்டு, வெளிநாட்டு தளங்களில் பிரசுரிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் : 5

இவரது முகவரி:

திருமதி Dr. ஜெயஸ்ரீ சாரநாதன்,
6F1, ‘ஹேப்பி விண்டோஸ்’ அபார்ட்மென்ட்,
CTA கார்டன் அருகில்,
காட்டுப்பாக்கம்,
சென்னை – 600 056
போன்: 96009 89982.

$$$

Leave a comment