சொரணையுள்ள இந்துக்களாக இருக்க வேண்டும்

-பி.ஆர்.மகாதேவன்

கரூர் இனாம் நிலம் தானம் தொடர்பான சர்ச்சை தமிழகத்தில் களைகட்டியுள்ள நிலையில், நமது மனசாட்சியுடன் பேசுகிறார் எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன்…

நம் பக்கம் 100 % நியாயம் இருக்கும் விஷயங்கள் உண்டு. 80 % நியாயம், 50 % நியாயம், 30 % நியாயம் 10 % நியாயம் என பல அளவிலான நியாயங்கள் உள்ள விஷயங்களும் உண்டு.

அதாவது நமக்கு முழுமையாக அநீதி இழைக்கப்பட்ட இடங்கள் என்று பல உண்டு. நன்மையும் தீமையும் கலந்தவை என்று சில உண்டு.

எதிரி மிக மிகத் தெளிவாக அவன் 100 % அநீதி செய்த விஷயங்கள் பக்கம், அதாவது நம் பக்கம் 100 %  நியாயம் இருக்கும் விஷயங்கள் பக்கம், நாம் நகரவிடாமல் தெளிவாகத் தடுக்கிறான். 50 % நியாயம் இருக்கும் விஷயங்களை முன்னெடுக்கும்படி நேரடியாகவும் மறைமுகமாகவும் தூண்டுகிறான். இதனால் என்ன ஆகுமென்றால், நம்மில் பாதி பேர் அதை ஆதரிப்பார்கள். மீதி பேர் அதை எதிர்ப்பார்கள்.

ஏற்கெனவே அவன் மறைமுக அதிகாரத்தில் இருப்பதாலும், எக்கோ சிஸ்டம் அவன் கையில் இருப்பதாலும், அவன் பலம் ஏற்கெனவே நம்மைவிட அதிகம். அதோடு நமது படை பிரிந்து போராட ஆரம்பிப்பதால் அவனுடைய வெற்றி மிக மிக எளிதாகிவிடுகிறது. பல நேரங்களில் நமக்குள் மோதுவது மட்டுமே நடக்கவும் செய்கிறது.

மருத்துவத்தில்  ‘நோய் நாடி, நோய்க்கு முதல் நாடி’ என்று சொல்வார்கள். காய்ச்சல் என்பது புற வெளிப்பாடு. வெறும் உடல் சூட்டைக் குறைத்தால் போதாது. நோய்க்கிருமி எங்கு சென்று தங்கியிருக்கிறது என்பதைத் தேடிப் பார்த்து வேரோடு அழிக்க வேண்டும்.

நமக்கு முழுமையாக அநீதி இழைக்கப்படும் விஷயங்களை நாம் விவாதப் பொருளாக ஆக்க வேண்டும். எதிரி எதை விவாதப் பொருளாக ஆக்குகிறானோ அதற்குள் முடங்கிவிடக் கூடாது.

இனாம் நில விவகாரத்தை எதிரி கிளப்பிவிடும்போது அந்த எல்லைக்குள்ளேயே நின்றுவிடக் கூடாது. அற நிலையத் துறையின் செயல்பாடுகள் முழுக்கவும் சட்ட விரோதமானவை என்பதையும் சேர்த்தே சொல்ல வேண்டும். மக்கள் கவனத்தை அதை நோக்கிக் குவிக்க வேண்டும்.

பொருளாதார முறைகேடுகள், சுரண்டல்கள் நடந்தால் அரசு அதை உரிய முறையில் சரி செய்துவிட்டு ஓரிரு வருடங்களில் ஓர் ஆலயத்திலிருந்து வெளியேறிவிட வேண்டும். இதுதான் சட்டம்.

ஆனால், இன்று அறநிலையத் துறை, அரசியல் சாசனம், சட்டம் அனைத்தையும் மீறித்தான் ஆலயங்களைத் தன் கட்டுப்பாட்டுக்குள் ஆக்கிரமித்து வைத்திருக்கிறது.

ஆலயங்களை மதச்சார்பற்ற அரசிடமிருந்து விடுவிக்க வேண்டும் என்பதே ஆலயம் தொடர்பான எல்லா விவகாரங்களிலும் நம் ஆதியும் அந்தமுமான வாக்கியமாக இருக்க வேண்டும்.

இல்லையென்றால், நாம் போடுவது நம் போராக இருக்காது. நம்மவர்கள் போராளிகளாக இருக்க மாட்டார்கள். எதிரியின் கூலிப்படையாகவே நாம் ஆகிவிடுவோம்.

ஒருவன் நம் வீட்டுக்குள் புகுந்து தங்கம், வைர நகைகளைத் திருடிச் செல்கிறான். வீட்டுக் கிணற்றில் விஷம் கலந்துவிட்டுச் செல்கிறான். கூரைக்குத் தீ வைக்கிறான். வேலி தாண்டி வளரும் பூக்களைப் பறிக்கிறான். நம்மில் ஒருவர்  ‘பூவைத் திருடாதே’ என்று திட்டுகிறார். எதிர் வீட்டுக்காரர்  ‘வீதியில் எட்டிக் கொண்டிருக்கும் பூவைப் பறித்தால் என்ன?’ என்று பதில் சொல்கிறார். இரண்டு பேரும் எதிரும் புதிருமாக நின்றுகொண்டு சண்டைபோட்டுக் கொள்கிறார்கள். வீட்டுக்குள் புகுந்து திருடி, விஷம் கலந்து, தீ வைத்து அராஜகம் செய்பவனை, பூப்பறிப்பது தவறா கூடாதா… அவனைத் திட்டலாமா கூடாதா என்று கட்சி கட்டிக் கொண்டு மோதுவதுபோல இருக்கிறது.

தங்கமான இந்துக்களைத் திருடும் அராஜகம் தொடர்ந்து நடக்கிறது. சமூக தர்மக் கிணற்றில் பகை விஷம் கலந்துவிட்டிருக்கிறான். தேச ஒற்றுமை எனும் கூரைகளுக்குத் தீவைத்திருக்கிறான். வேலிக்கு வெளியில் கருவூல மலர்களைக் கவர்ந்து செல்கிறான். நாம், கருவூலக் கையாடலை எதிர்க்கலாமா வேண்டாமா என்று கட்சி பிரிந்து சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம்.

நம் கதை இப்படித்தான் இருக்கிறது.

ஆயிரம் ஆண்டுகளாக ஆப்ரஹாமிய எஜமானர்களுக்கு அடிமையாக இருந்தோம். இப்போது ஆப்ரஹாமிய எஜமானர்களின் அல்லக்கைகளுக்கு அடிமையாக இருக்கிறோம்.

நம்மில் யார் அந்த நம்பர் ஒன் அல்லக்கை என்று போட்டி வேறு போட்டுக் கொண்டிருக்கிறோம்.

*

அரசிடமிருந்து ஆலயத்தை மீட்பது சரியா..?

அயோத்தி ராமர் கோயிலில் இப்போது சுரண்டல் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ஆலய நிர்வாகத்தில் அரசின் கண்காணிப்பு அவசியம் என்பதை இது நியாயப்படுத்துவதாகச் சொல்லப்படுகிறது.

ஒரு சர்ச்சிலோ மசூதியிலோ சுரண்டல் நடப்பாதாகப் புகார் வந்தால், அரசு தலையிடும். ஆனால் முழு சர்ச் அல்லது மசூதியின் நிர்வாகத்தையும் அரசு கைப்பற்றாது. இந்து விஷயத்தில் உண்டியல் இருந்தாலே அரசு முழுமையாக ஆக்கிரமித்துவிடும்.

இது இந்துக்களுக்கு இழைக்கப்படும் அநீதி. இஸ்லாமிய ஆட்சியில் கூட இருந்திராத அநீதி.

ஆனால், இந்துக்களிலேயே பலர் அரசின் கட்டுப்பாடு அவசியம். இந்து ஆலயங்களை இந்து தர்ம கர்த்தாக்களிடம் ஒப்படைப்பது தவறு என்று சொல்கிறார்கள்.

இதற்கான முக்கிய காரணம் பொதுவாக இந்து ஆலயங்களில் பெரும்பாலானவை மேல் ஜாதி இந்துக்களின் கைகளில் இருப்பவையே; இருந்தவையே. அவர்கள் சமத்துவம், சகோதரத்துவம் இல்லாதவர்கள்; எனவே அவர்களிடம் ஆலயங்களை ஒப்படைத்தால் மீண்டும் ஜாதி மோதல் பெரிதாகிவிடும் என்று சொல்லப்படுகிறது.

இது 100 % உண்மை. அதாவது, ஜாதி மோதல் பெரிதாகும் என்பது மட்டும் உண்மை.

மேல் ஜாதி இந்துக்கள் வசம் வந்தால் ஆலயங்களில் தீண்டாமைக் கொடுமை வந்துவிடும் என்பது தவறு. ஆனால், மேல் ஜாதி க்ரிப்டோவையும் கீழ் ஜாதி கிரிப்டோவையும் வைத்து, அந்த மோதலை எதிரி வெகு எளிதில் தொடங்கி கோயிலைப் பூட்டிவிடுவான்.

இலங்கையில் தமிழர்- சிங்களர் மோதல், இரு தரப்பிலும் இருந்த கிறிப்டோ கிறிஸ்தவர்களால்தான் தூண்டிவிடப்பட்டது.

பங்களாதேஷிலும் இதுவே நடந்தது. நாம் வங்காளிகள் என்று சொல்லித்தான் போரைத் தொடங்கினான்கள். இஸ்லாமுக்கு மாறிய கும்பல்தான் இந்த ‘விடுதலை’ முழக்கத்தை ஆரம்பித்தது. வங்காள இந்துக்கள் அதை நம்பி அவர்கள் பின்னால் அணி திரண்டார்கள். தனி நாடு கிடைத்ததும் முஸ்லிம் தேசமாக அறிவித்து வங்காள இந்துக்களைக் கொன்று குவிக்கத் தொடங்கினார்கள். இன்றும் அதுவே தொடர்கிறது.

இலங்கையில் இந்துக்களுக்கு நேர்ந்த கொடுமைகள், ஒரு நாளும் மறக்கவோ மன்னிக்கவோ முடியாதவை. உண்மையில் ஃபெட்னா போன்ற அமைப்பில் உள்ள தமிழர்கள் பலரும் இலங்கைத் தமிழர்களே. அவர்கள் உண்மையில் இந்து என்ற அடையாளத்தின் கீழ் இணைவதே அவர்களுக்கு நல்லது. ஆனால், நாம் வங்காளிகள் என்பதுபோல, நாம் தமிழர் என்றுதான் பேசுகிறார்கள்.

ஆலய நிர்வாக விஷயத்திலும், ராம ஜென்ம பூமி போல இந்து தர்ம கர்த்தாக்கள் கொள்ளையடிப்பது தவறு. பணத்தை, நகைகளைக் கொள்ளையடிக்கும் உரிமையை மதச்சார்பற்ற அரசுக்குத் தருவதே சரி. இல்லையென்றால் ஜாதி மோதலை ஆலயங்களில் தூண்டிவிடுவான்கள். எனவே தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போகட்டும் என்று விட்டுவிடுவதே நல்லது.

இந்தக் கையறு நிலையிலும் ஒரு நியாயம் இருக்கிறது.

ஆனால், புற்றை உடைத்தால் பாம்புகள் ஊருக்குள் புகுந்துவிடும் என்பதற்காக புற்றை அப்படியே விட்டுவைக்க முடியாது. ஏனென்றால் பாம்புகள் இப்போதும் இரவுகளில் ஊருக்குள் உலவிக் கொண்டுதான் இருக்கின்றன.

எனவே, ஆலயங்களை மீட்கவும் வேண்டும். பிரச்சினைகள் வராமல் நிர்வகிக்க வழிமுறைகள் கண்டடையவும் வேண்டும். இதுதான் இந்துக்கள் முன்னால் இருக்கும் சவால்.

கேரளாவில் இந்த விஷயத்தை ஓரளவுக்கு சிறப்பாகக் கையாள்கிறார்கள். அங்கு ஆலயங்கள் அரசின் பிடியிலும் இல்லை; மரபான தர்மகர்த்தாக்களின் பிடியிலும் இல்லை. இரண்டுக்கும் இடையிலான தேவசம்போர்டு என்ற இடைநிலை குழுவிடம் பொறுப்புகள் விடப்பட்டுள்ளன.

இந்தக் குழுவில் அரசின் ஆட்களே நியமிக்கப்படுகிறார்கள். ஆனால், ஆலய அன்றாட வழிபாடுகளில் மரபான ஆகம வழிமுறையே பின்பற்றப்படுகிறது.

அனைத்து ஜாதி அர்ச்சகர் போன்றவை அங்கும் முன்னெடுக்கப்படுகின்றன. என்றாலும் பெருமளவுக்கு மரபான வழிபாடுகளில் எந்தக் குறுக்கீடுகளும் இல்லை. கோவில் இன்றும் பெருமளவுக்கு கலாசார மையமாகவும் பக்தி கேந்திரமாகவும் தூய சான்னித்தியத்துடன் திகழ்கின்றன. இத்தனைக்கும் அங்கு கம்யூனிஸ சித்தாந்தம் வலுவாக வேரூன்றி இருக்கிறது.

உண்மையில் நாராயண குருவின் மூலம் முன்னெடுக்கப்பட்ட சமய சீர்திருத்த நடவடிக்கைகள் ஈ.வெ.ரா.விய அழித்தொழிப்பைவிட பல மடங்கு மேலானது என்பதால், கேரள ஆலயங்களில் இன்று வரையிலும் தெய்வீகம் காப்பாற்றப்பட்டுவந்திருக்கிறது.

கேரளத் திரையுலகம், அரசியல் களம், பொது புத்தி ஆகியவற்றில் தாங்க முடியாத அளவுக்கு இந்து விரோதம் ஊடுருவிக் கிடக்கும் நிலையிலும் கூட, கேரள இந்து மரபுகள் தமக்கான வெளிகளில் வலிமையுடன் தாக்குப் பிடித்து நிற்கின்றன.

தமிழகம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் அது.

*

இனாம் நில விவகாரத்தை எடுத்துக் கொண்டு பார்த்தால், கோயிலுக்கு தானமாகத் தரப்பட்ட நிலம், கோயில் குடிகளுக்கு தானமாகத் தரப்பட்ட நிலம், படைவீரர்கள் மற்றும் பிறருக்கு கோயில் பணி சாராமல் மன்னர் இனாமாகத் தந்த நிலம் என்று மூன்று வகைகள் இருக்கின்றன.

முதல் இரண்டை எக்காலத்திலும் விற்க முடியாது; கூடாது; அது இறைவனுக்கான நிலம். மூன்றாவது வகை கோயில் சார்ந்தது அல்ல.

மன்னர் காலத்தில் தரப்பட்ட தானம், இனாம் தொடர்பாக இன்று முடிவெடுப்பது கடினம். கோயில் சாராமல் தரப்பட்ட நிலத்தை உரியவர்கள் விற்கலாம் என்று சொன்னால்,  ‘ஒட்டு மொத்த கோயில் நிலமுமே விற்பனைக்குரியது’ என்று கிளம்புவான்கள்.

மன்னர் தந்த எதையுமே விற்கக் கூடாது என்று சொன்னால், அப்பாவி விவசாயிகள்,  ‘மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்’ என்று கிளம்புவான்கள் எனவே, எதிரி எதை விவாதிக்கச் சொல்கிறானோ அதை மட்டுமே விவாதித்தால், எதிரியின் போரையே நாம் போட்டுக்கொள்கிறோம் என்றே ஆகும்.

கோயில் நிதி அரசின் கஜானாவுக்குப் போகக் கூடாது; பக்தர்களின் கட்டுப்பாட்டில் கோயில் இருக்க வேண்டும். மரபான கோவில்களுக்கு மரபான வழிமுறைகள். நவீன கோயில்களுக்கு நவீன வழிமுறைகள்.

இந்துவாக இருப்பது போதாது; சொரணையுள்ள இந்துவாக இருக்க வேண்டும்.

பக்திமானாக இருந்தால் போதாது; தர்மப் பாதுகாவலனாகவும் இருக்க வேண்டும்.

$$$

Leave a comment