-தஞ்சை வெ.கோபாலன்
தமிழகத்தில் பிராமணர் அல்லாதோர் இயக்கம் தொடங்கி, நீதிக் கட்சியாகி, பிறகு திராவிடர் கழகமாகி, அதிலிருந்து திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக போன்ற பல கிளைக் கட்சிகள் உருவான வரலாற்றைச் சுருக்கமாகத் தந்திருக்கிறார் அமரர் தஞ்சை வெ.கோபாலன். இது பகுதி- 6…

7. பட்டியல் பிரிவினர், முஸ்லிம்களின் ஆதரவிழப்பு
1920 இல் ஆட்சிக்கு வந்த நீதிக்கட்சி பிராமணரல்லாத அனைத்துப் பிரிவினரின் நலனிற்காகச் செயல்படுவதாகக் கூறினாலும், மெல்ல பல சமூகத்தினரின் ஆதரவை இழந்தது. தியாகராய செட்டி மற்றும் பனகல் அரசரின் தலைமையின் கீழ் பிராமணரல்லாத சில உயர் சாதியினரின் கட்சியாக மாறியது; பட்டியல் பிரிவினர் மற்றும் முஸ்லிம்கள் கட்சியை விட்டு விலகினர். முதல் நீதிக்கட்சி அரசினை முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள் முதலில் ஆதரித்தனர். ஆனால் பதவி வழங்கல்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், பின்னர் தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டனர். முஸ்லிம்களின் அதிருப்தி முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர் அப்பாஸ் அலி கானின் பின்வரும் கூற்றால் (1923) விளங்கும்:
“எனது அனுபவத்தில் பதவி வழங்கும் தருணங்களில் எல்லாம் அவர்கள் [நீதிக்கட்சியினர்] ஒரு முதலியார், நாயுடு, செட்டியார் அல்லது பிள்ளை சமூகத்தினரையே தெரிவு செய்கிறார்கள். ஒரு இஸ்லாமியரைத் தேர்வு செய்வதில்லை.”
இழந்த முஸ்லிம் ஆதரவை நீதிக்கட்சியால் பின் எப்போதும் திரும்பப் பெற இயலவில்லை. வகுப்புவாரி இட ஒதுக்கீட்டால் கிட்டிய இடங்களில் பெரும்பான்மையை உயர் சாதி இந்துக்கள் பிடித்துக் கொண்டதே இதற்குக் காரணம்.
பட்டியல் சமூக மக்களுடனான பிரிவும் இக்காலகட்டத்தில் தான் நடந்தது. டி.எம்.நாயரின் மரணத்துக்குப் பின் பட்டியல் பிரிவினர் நீதிக்கட்சியில் ஓரங்கட்டப்பட்டனர். நடந்த சில நிகழ்வுகளின் காரணமாக பிராமணரல்லாத சாதிகளான வேளாளர்கள், பெரி செட்டியார்கள், பலிஜா நாயுடுகள், கம்மா மற்றும் காப்புகள் ஆகியோருக்கும், ஆதி திராவிடர்களுக்கும் இடையேயான உறவு கசக்கக் காரணமாக அமைந்து விட்டது.
மே 11, 1921 இல் பி அண்ட் சி ஆலையில் வேலை செய்து வந்த ஆதி திராவிடர்களும் மேல்சாதி ஹிந்துகளும் வேலை நிறுத்ததைத் தொடங்கினர். ஜூன் 20 ஆம் தேதி பங்கிங்காம் ஆலைத் தொழிலாளர்கள் அவர்களுடன் சேர்ந்து கொண்டனர். ஆனால் நிர்வாகம் ஆதி திராவிட தொழிலாளர்களை விரைவில் சமாதானப் படுத்தியதால் அவர்கள் வேலைக்குத் திரும்பினர். மேல்சாதி ஹிந்துக்கள் வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்தனர். இதனால் இரு பிரிவினர் இடையே பகை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மேல்சாதி இந்துக்களுக்கும் காவல்துறைக்கும் ஏற்பட்ட மோதலில் பலர் கொல்லப்பட்டனர்.
நீதிக்கட்சித் தலைவர்கள், பிரிட்டிஷ் அரசு ஆதி திராவிடர்களுக்கு ஆதரவளிப்பதாகக் குற்றம் சாட்டினர். ‘ஜஸ்டிஸ்’ இதழ் பின்வருமாறு எழுதியது:
“இவ்வளவு மோசமான நிலை உருவாகக் காரணம், தொழில் துறை அரசு அலுவலர்கள் ஆதி திராவிடர்களுக்கு அளவுக்கு அதிகமாகச் செல்லம் கொடுத்ததும் சில காவல்துறை அதிகாரிகள் தங்களை அறியாமலே ஆதி திராவிடர்களை ஊக்குவிப்பதும் தான் எனப் பொது மக்கள் கருதுகின்றனர்.”
அக்டோபர் 12 இல் ஓ. தணிகாசல செட்டி இந்தப் பிரச்சினையை சென்னை சட்டமன்றத்தில் எழுப்பினார். இதனைத் தொடர்ந்து நீதிக்கட்சி உறுப்பினர்களுக்கும் சென்னை ஆளுனரின் நிர்வாகக் குழுவின் சட்டத் துறை உறுப்பினரான எஸ்.ஸ்ரீனிவாச ஐயங்கார் என்ற பிராமணர் மற்றும் உள்துறை உறுப்பினரான லயனல் டேவிட்சன் என்ற ஆங்கிலேயருக்கும் இடையே ஒரு காரசாரமான விவாதம் நடந்தது. டேவிட்சன் இவ்விவகாரத்துக்கான மொத்தப் பொறுப்பும் தொழில் துறை அமைச்சகத்தையே சாரும் என்று குற்றம் சாட்டினார்.
“இது வேலை நிறுத்தம் செய்பவர்களுக்கும் செய்யாதவர்களுக்குமிடையே நடக்கும் ஒரு தொழிற் பிரச்சினை மட்டுமல்ல. இரு கோஷ்டிகளுக்கிடையே சாதிக் காழ்ப்புணர்வால் நடந்த மோதல்” என்று டேவிட்சன் கூறினார். சட்டமன்றத்தில் ஆதி திராவிடர்களின் பிரதிநிதியான எம்.சி.ராஜா, டேவிட்சனின் கூற்றை ஆமோதித்தார். ‘மெட்ராஸ் மெயில்’ இதழில் ஒரு ஆதி திராவிட வாசகர், முன்பு டி.எம்.நாயர் பிராமணர்களைக் கண்டித்த அதே பாணியில் நீதிக்கட்சியைக் கண்டித்தார். சிறிது காலத்தில் ராஜாவும் ஆதி திராவிடர்களும் நீதிக்கட்சியை விட்டு விலகினர்.
திராவிட இயக்கம் என்பது 19 ஆம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்ச் சமுதாயத்தில் உருவாகிய ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமூக மற்றும் அரசியல் இயக்கமாகும். இக் காலகட்டத்தில் சாதாரண மக்களுக்குக் கிடைத்த கல்வி வாய்ப்புக்கள் அவர்களிடையே சமூக உணர்வுகளைத் தட்டி எழுப்பியிருந்தன.
இவ்வாறானவர்களில் சிலர் சாதாரண மக்களின் உரிமைகளுக்காக வாதிட்டதுடன், அக்காலத்தில் இருந்த பிராமண ஆதிக்கத்தையும் எதிர்த்து வந்தனர். நாட்டுக்கு விடுதலை வரும்போது அது பிராமண ஆதிக்கத்தின் கீழ் வருமே ஒழிய அதன் பயன்கள் இதர மக்களுக்குக் கிட்டாது என அவர்கள் நம்பினர்.
இவ்வாறான கருத்துக்களை முன்வைத்துப் போராடியோரில் அயோத்தி தாசர், இரட்டைமலை சீனிவாசன் போன்றோர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் முன்னணியில் இருந்தனர். இருபதாம் நூற்றாண்டில் டி.எம்.நாயர், தியாகராசச் செட்டியார், கேசவப் பிள்ளை, நடேச முதலியார் போன்றோர் முன்னணியில் இருந்தனர்.
திராவிட இயக்கம் தோற்றம்:
‘திராவிட மகாஜன சபை’ என்பது திராவிட இயக்கத்தைத் தோற்றுவித்தவரான அயோத்தி தாசர் என்பவரால் 1891ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அயோத்தி தாசர் 1885 ஆண்டிலேயே ‘திராவிட பாண்டியன்’ என்னும் இதழைத் தொடங்கினார். அவர் 1886ஆம் ஆண்டில் “இந்துக்களில் தீண்டத்தகாதவர்கள் எனப்பட்டவர்கள் இந்துக்கள் அல்லாதவர்கள்” என்றார்; அவர்கள் யாரும் சாதியற்ற திராவிடர்கள் என்னும் கருத்தையும் முன்வைத்தார். இதனால் இவர் ‘திராவிடக் கருத்தியலின் முன்னோடி’ என அறியப்பட்டார். திராவிட மகாஜன சபையை நிறுவி திராவிட அரசியலைத் தொடங்கி வைத்ததால் ‘திராவிட அரசியலின் முன்னோடி’ எனவும் கூறப்படுகிறார்.
1912 ஆம் ஆண்டில் திராவிடர் நலனை முன்வைத்து ஓர் இயக்கம் சென்னையில் தொடங்கப்பட்டது. 1916 ஆம் ஆண்டில் இதன் பெயர் ‘தென்னிந்திய நல உரிமைக் கழகம்’ என மாற்றப்பட்டது. பொதுவாகவே வைதீக எதிர்ப்பாளர்கள், தமிழர் மத்தியில் நிலவிய சாதிக் கொடுமை முதலியவற்றுக்கு, வைதீகத்தையும், பிராமணரையுமே குற்றஞ்சாட்டினர். வைதீகத்துக்கு முந்தைய பண்டைத் தமிழகம் சாதிப் பாகுபாடற்ற சமூகமாக இருந்ததை எடுத்துக்காட்டிய அவர்கள், இனம், மொழி, பண்பாடு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி மக்களை அணிதிரட்டினர்.
1930 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் வெற்றிபெற்று நீதிக்கட்சி மீண்டும் ஆட்சி அமைத்ததுடன் தொடர்ந்து வந்த தேர்தல்களிலும் வென்று 1937 ஆம் ஆண்டுவரை நீதிக்கட்சி ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருந்தது. எனினும், 1926 ஆம் ஆண்டு முதலே நீதிக்கட்சியின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்தே வந்தது. 1937 ஆம் ஆண்டுத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்த நீதிக்கட்சி முற்றாகவே சிதையத் தொடங்கியது.
1937க்குப் பின்னர் தலைமைப் பதவியை பெரியார் என பின்னாளில் அழைக்கப்பட்ட ஈ.வெ.ராமசாமி ஏற்றுக் கொண்டார். திராவிட இனக் கொள்கையை மேற்கொண்டிருந்த இவர், தனது தன்மான இயக்கத்தின் (சுயமரியாதை இயக்கம் என்பது அவர்கள் சொன்ன பெயர்) மூலம் புகழ் பெற்றிருந்தார். இதனால், நீதிக் கட்சியின் வீழ்ச்சியையும் கடந்து திராவிட இயக்கம் நிலைக்க முடிந்தது.
ஈ.வே.ராமசாமி நாயக்கர்:
தொடக்கத்தில் இந்திய தேசிய காங்கிரசில் ஈடுபாடு காட்டிய ஈ.வே.ராமசாமி நாயக்கர், அடிமட்ட மக்கள் நலன், சாதிப்பாகுபாட்டு ஒழிப்பு முதலிய விஷயங்களில் காங்கிரஸ் காட்டிய மெத்தனப் போக்கை எதிர்த்து காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறினார். ‘சுயமரியாதை இயக்கம்’ என்ற பெயரில் ஓர் அமைப்பைத் தொடங்கி மக்கள் மத்தியில் சமூகச் சீர்கேடுகள், அறியாமை, மூடநம்பிக்கை என்பவற்றை எதிர்த்துப் போராடினார்.
1935 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று சக்கரவர்த்தி சி.ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) தலைமையில் அமைந்த காங்கிரஸ் அரசு ‘ஹிந்தி மொழியை சென்னை மாகாணத்திலும் படிக்க வேண்டும்’ என்று கொண்டு வந்த கொள்கையை எதிர்த்துப் போராட்டம் நடத்தினார். அதில் ஈ.வெ.ரா. சிறை சென்றார். இவர் சிறையில் இருந்தபோதே நீதிக் கட்சியின் தலைமைப் பதவி இவரைத் தேடி வந்தது.
திராவிட நாடு கோரிக்கை:
ராஜாஜி அரசின் ஹிந்தி கற்க வேண்டுமென்கிற கொள்கையின் காரணமாக திராவிட இயக்கத்தினர் திராவிட நாடு கோரும் நிலைக்கு வந்தனர். 1940களின் முதல் பாதியில் உருவான இக் கொள்கை 1944 ஆம் ஆண்டில் இறுதி வடிவம் பெற்றது. ஈ.வே.ரா. தலைமையிலான இயக்கம் ‘திராவிடர் கழகம்’ எனப் பெயர் மாற்றம் பெற்றதும் இந்தக் காலகட்டத்தில் தான்.
அந்த ஆண்டில் சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் வேறு பல தீர்மானங்களுடன் ‘திராவிட நாடு’ என்ற பெயரில் இந்தியாவில் தென்பகுதியைப் பிரித்துத் தனிநாடாக அறிவிக்க வேண்டுமென்கிற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ‘முழுத் தன்னாட்சி கொண்ட திராவிட நாடு, மத்தியில் கூட்டாட்சி’ என்பதே இக் கொள்கையின் முக்கிய அம்சமாக இருந்தது.
இளைஞர்கள் பலரையும் இணைத்துக்கொண்டு திராவிடர் கழகம் வளர்ந்து வந்தது. திராவிடர் கழகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராக சி.என்.அண்ணாதுரை திகழ்ந்தார். திராவிடர் கழகத்தின் செயற்பாடுகள் சமுதாய மட்டத்திலேயே முனைப்புப் பெற்றிருந்தன. சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பிராமண ஆதிக்க எதிர்ப்பு, பெண்களின் உரிமைகள் ஆகியவை தொடர்பான விஷயங்களில் இவர்கள் தீவிர கவனம் செலுத்தினர். ஒரு கட்டத்தில் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுப்பதென்று அட்லி தலைமையிலான பிரிட்டிஷ் அரசு முடிவு செய்தபோது, இந்தியா சுதந்திரம் அடைந்தாலும் தாங்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருக்க விரும்புவதாகவும் அவர் அறிவித்தார்.
1940கள் தொடங்கி திராவிடர் கழகம் பிராமணர்களை எதிர்த்தும், ஹிந்து கடவுள்களையும் மதத்தையும் இழிவுபடுத்தியும் பல போராட்டங்களைச் செய்தது. பிள்ளையார் சிலை உடைப்பு, ராமர் படத்துக்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலம் நடத்தியது, திருச்சி காவிரிக் கரையில் ஆவணி அவிட்டம் பூணூல் போட்டுக் கொண்டிருந்த பிராமணர்களின் பூணூலை அறுத்தது, நாத்திக வாதம் பேசி மக்களிடையே பிளவை உண்டு பண்ணியது போல பல நிகழ்வுகள் 1940 முதல் தொடர்ந்து நடந்து வந்தன. அந்த நிலையில் அந்தக் கட்சியின் பலம் பெருகிக் கொண்டிருந்தது.
(தொடர்கிறது)
$$$