-மகாகவி பாரதி
மகரிஷி அரவிந்தர் எழுதிய ‘கடலுக்கு’ என்ற ஆங்கிலக் கவிதையை தமிழில் மொழியாக்கம் செய்த மகாகவி பாரதி (கடல் கண்ணிகள்), அதற்கு எழுதிய முன்னுரை இது.

ஸ்ரீ மான் அரவிந்த கோஷ் ‘கடலுக்கு’ என்ற தலைப்பின்கீழ் ஆங்கில பாஷையில் சில கண்ணிகள் புனைந்து அவற்றை ‘மாடர்ன் ரெவியூ’ (நவீன பரிசோதகம்) என்ற கல்கத்தா மாதப் பத்திரிகையில் பிரசுரம் செய்திருக்கிறார். மொழிபெயர்ப்பைக் கீழே தருகிறேன்.
தாய் நல்லுணவு சமைப்பதைப் பின்பற்றிக் குழந்தை மணற் சோறாக்கி விளையாட்டுச் சமையல் செய்வதைப் போல், அந்த மகானுடைய செய்யுளை நான் அன்பினால் மொழிபெயர்க்க நேர்ந்தது. இதில் எனக்குத் தெரிந்தே பல வழுக்கள் இருக்கின்றன. பாஷை வேறுபாடு முதலிய சில காரணங்களால் இவ் வழுக்களை நிவர்த்தி செய்வது மிகக் கஷ்டமாயிருக்கிறது. இவற்றையும், எனக்குத் தெரியாமல் வீழ்ந்திருக்கும் பிழைகளையும் கற்றோர் பொறுத்தருளுமாறு வேண்டுகின்றேன்.
இச் சரிதையில் ஸ்ரீ அரவிந்தர் கடல் என்று எதைக் கூறுகிறார்? மானிட வாழ்க்கையை, சங்கடங்களும் துன்பங்களும் விரோதங்களும் எதிர்ப்புகளும் நிறைந்த சம்சாரத்தையே கடல் என்கிறார். ஆத்மா இவற்றிடையே விழுந்து, இவற்றால் மோதுண்டு, தான் இவற்றை மோதி, தனக்குக் கீழ்ப்படுத்தி வெற்றி ‘கொண்டால் ஆத்ம சித்தியும் ஞானமும் ஏற்படும். அபாயங்களைக் கண்டு விலகி நிற்பவன் மூடன். அவற்றை எதிர்த்து, அமுக்கிக் கீழ்ப்படுத்தி வெற்றிகொள் மானிடா, இதன் பொருட்டாகவே உன்னை ஈசன் இங்கு அனுப்பி யிருக்கிறான்.
இக் கொள்கை, பாட்டின் முதல் வரி முதலாகவே உள்ளே பொதிந்து கூடார்த்தமாகக் காணப்படுகிறது. இடையே ஓரிடத்தில் அரவிந்தர் அதை வெளிப்படையாகவும் சொல்லியிருக்கிறார். இக் கருத்தை மனத்தில் வைத்துக்கொண்டு பாட்டை வாசித்துப் பார்த்தால்தான் உண்மைப் பொருள் விளங்கும். இம் மொழிபெயர்ப்பைச் சகல ஜனங்களுக்கும் தெளிவாகும்படி மிக எளிய நடையிலே அமைக்க வேண்டுமென்று சிரமப்பட்டிருக்கிறேன். என்னை யறியாமல் அகராதிப் பண்டிதர்களுடைய சில ‘கற் சற்’ மொழிகள் விழுந்திருக்கின்றன. செய்யுள் அமைதி நாடி அம்மொழிகளுக்கு எளிய பிரதி பதங்கள் போடாமல் இருந்து விட்டேன், இதன் பொருட்டும் படிப்போர்கள் க்ஷமிக்குமாறு பிரார்த்தனை செய்கிறேன்.
-சி.சு.பாரதி
‘இந்தியா’ இதழ் (12-6-1909), புதுவை ஆதாரம்: பாரதி புதையல் 3, பக்கம் 1-4 காண்க: கடல் கண்ணிகள்
$$$