-மகாகவி பாரதி

‘இதுவரை அச்சேறாத பாரதியார் கவிதை’ என்று குறிப்பிட்டு 1966 தினமணி ஞாயிறு மலர் ஒன்றில் ‘கடல் – கண்ணிகள்’ என்ற தலைப்பில் வெளியான கவிதை - மனிதனும் கடலும் உரையாடுவதாக அமைந்த 44 வரி படைப்பு இது.
வெள்ளைத் திரையாய்
.வெருவுதரு தோற்றத்தாய்
கொள்ளை ஒலிக்கடலே!
.நல்லற நீ கூறுதிகாண்.
விரிந்த பெரும்புறங்கள்
.மேலெறிந்துன் பேயலைகள்
பொருந்தும் இடையே
.புதைந்த பிளவுகள்தாம்.
பாதலம் போல் ஆழ்ந்திருப்ப
.பார்க்க அரிதாய் அவற்றின்
மீதலம்பி நிற்கும் ஒரு
.வெள்ளைச் சிறு தோணி!
[கடல் போதனை முழங்குதல்]
ஏனடா நீ கரையில்
.ஏகுற்று நிற்கின்றாய்?
வானளாவு என் திரைகள்
.வாளாதான் காண்பானாய்?
புன்படகு காணாய்
.புடைக்குமென்றன் வார்திரைமேல்
துன்ப மிலாதே மிதந்து
.துள்ளி விளையாடுவதே
.
அல்லாது இது வீழ்ந்து
.அழிந்தாலும் என்னேகாண்?
பல்லாயிரம் இதுபோல்
.பார்மிசைவே றுள்ளனவே.
சூழும் எனது அதிர்ச்சிக்கு
.அஞ்சேல் துணிகநீ!
ஏழைக் கரையில்
.இருப்ப தெளிமையடா.
வாராய், இடுக்கணினும்
.மாறியதை எற்றலினும்
பாராய் நல்லின்பப்
.பரவசம் உண் டென்பதையே.
[மனிதன் மறுமொழி]
என்று முழங்கி
.அழைக்கும் இருங்கடலே!
நன்றுநீ சொல்லினைகாண்
.நான் வருவேன் இக்கணமே
நின்னில் வலியேன்
.நினதுதிரை வென்றிடுவேன்
முன்னிஅவற்றின்
.முடியேறி மேலெழுங்கால்
வானகத்தோடு ஆடல்செய
.வாய்க்கும் காண்; மூழ்குறினும்
யானகத்தே பேரொலிக்கீழ்
.உள்ள தறிகுவனால்
அபாயம் இலாது
.இக்கரைமேல் ஆர்ந்திருப்போ ரீசன்
உபாயம் அறியாத
.ஊமரன்றோ ஓருங்கால்
ஆழவுயிர் மானுடர்க்கு
.ஐயன் அருளிப் பின்
வாழிசிவத் தன்மை
.அதற்கிலக்கா வைத்தனனே
ஆதலாற் கோடி
.அபாயமிடை யூறெல்லாம்
மோதுகடல்களைப் போல்
.முன்னர் இட்டான் அவ்வுயிர்க்கே
துன்பம் அருள்செய்தான்
.தோல்வி தனையளித்தான்
மன்பதையின் கால்சூழ
.வைத்தான் வலைத் திரளே.
நெற்றிமேல் மேகத்து
.மின்னிடிகள் நேர்வித்தான்
எற்றி எமைவீழ்த்த
.பெருங்காற்று இயற்றினனே
இங்கு மனிதன் வரும்
.இன்னலெலாம் மாற்றி எதிர்
பொங்கும் இடுக்கணெலாம்
.போழ்ந்துவெற்றி கொள்கெனவே.
.
விதிதான் எதிர்த்து வர
.வெல்லொண்ணாத் தன்னுயிரை
மதியாது அதில் தாக்கி
.மைந்தன்வி ஜயம் பெறவே
.
[முடிவுரை]
.
ஏற்றிடுவாய் என்னை
.இருங்கடலே நின்மீது
தோற்றிடாது ஏறிப்போய்
.வானுலகு துய்ப்பேன்யான்
வாரிதி யாம் கோளரியே
.வந்துன் பிடர் பிடித்துப்
பாருன்னை என் இவ்
.வசப்படுத்தும் பண்பினையே
அல்லாது நும்மார்
.அகழ்ப்பா தலங்களினும்
பொல்லாக் குகையினும்யான்
.போய் வீழ்ந்து விட்டாலும்
அங்கிருந்துன் பாரம்
.அனைத்தும் பொறுத்து விதி
மங்கியழியும் வகைதேட
.வல்லேன் காண்.
தளையறியா வார்கடலே!
.நின்னோடு சாடி
அளவறிவேன் என்றன்
.பெரியவுயி ராற்றலுக்கே!
.
- நன்றி – படியெடுத்து அனுப்பி உதவியவர்: எஸ்.எஸ்.மகாதேவன்
$$$
One thought on “கடல் – கண்ணிகள்”