-வ.மு.முரளி

தமிழகத் தேர்தல் களத்தில் நடந்திருப்பது ஓர் அமைதிப்புரட்சி. 1967க்குப் பிறகான அரசியல் புலத்தில் இரு திராவிடக் கட்சிகள் அல்லாத ஒரு கட்சி வெல்வது, அதுவும் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே வெல்வது சாமானியமானதல்ல. இதனைச் சாதித்திருக்கும் நடிகர் விஜய் நிச்சயம் பாராட்டுக்குரியவர். ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அவரது கட்சி கிட்டத்தட்ட வெற்றிக்கோட்டை எட்டிவிட்டது (த.வெ.க.- 106). ஆளும்கட்சியாக மார்தட்டிக் கொண்டிருந்த திமுக படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது (திமுக கூட்டணி- 74). திமுக அரசை வீட்டுக்கு அனுப்பப் போராடிய அதிமுக கூட்டணி 54 தொகுதிகளில் (பாஜக- 1) மட்டுமே வென்றிருக்கிறது. இந்த முடிவுகள், தமிழக மக்கள் மிகவும் புத்திசாலிகள் என்பதை வெளிப்படுத்தி இருக்கின்றன.
கடந்த ஐந்தாண்டு திமுக ஆட்சி வெறும் நாடகக் கம்பெனி தான் நடத்திக் கொண்டிருந்தது. ஊடகங்கள் அனைத்தும் திமுகவின் ஊதுகுழல்களாக மாறியிருந்த நிலையில், அரசு மீதான சிறு அதிருப்தியைக் கூட ஏற்க முடியாமல் கடும் நடவடிக்கையை எடுத்து வந்தார் மு.க.ஸ்டாலின். கருத்துச் சுதந்திரம் என்றால் என்ன என்று கேட்கும் அளவிற்கு திமுக ஆட்சி இருந்தபோதும், ஊடகங்கள் அவரைப் பாராட்டி மகிழ்ந்து கொண்டிருந்தன. அதனால்தான் களத்தின் யதார்த்த நிலவரம் தெரியாமல், அகந்தையுடன் மத்திய அரசுக்கு எதிராக அறிக்கைப் போர் நடத்திக் கொண்டிருந்தார் ஸ்டாலின்.
‘திராவிட மாடல்’ என்ற பெயரில் தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரான சிந்தனை, மனம் முழுக்கப் புரையோடிய இந்து வெறுப்பு, சுயநல குடும்ப அரசியல், ஊழல் மயமான அரசு நிர்வாகம், சட்டம் ஒழுங்கைக் காக்க வக்கில்லாத காவல் துறை, சாராய ஆறு பிரவகித்ததால் போதையில் தள்ளாடிய இளம் தலைமுறையினர் ஆகியவற்றால் தன்மதிப்பிழந்திருந்த போதும், சிறுபான்மையினரின் ஒட்டுமொத்த வாக்குகளால் வென்றுவிட முடியும் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருந்த ஸ்டாலினுக்கு, அதே சிறுபான்மையினத்தைச் சார்ந்த ஒருவரைக் கொண்டே இறைவன் பாடம் கற்பித்திருக்கிறார்.
நடிகர் ஜோசப் விஜயின் திரையுலகக் கவர்ச்சி மட்டுமே இத்தேர்தலில் இந்த வெற்றியைக் கொடுத்துவிடவில்லை. திமுக அரசு மீதான அதிருப்தி அலை சுனாமியாகப் பெருகி ஓட்டுகளாக மாறி இருக்கிறது. இந்த சுனாமி அலையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் சுருண்டிருக்கிறது. தேர்தலுக்கு முந்தைய கூட்டணிப் பேச்சுவார்த்தைகளின் போது (இரு தரப்புமே அதை மறுத்த போதிலும்) எடப்பாடி பழனிசாமி கொஞ்சம் விட்டுக் கொடுத்திருக்கலாம் என்று இப்போது நினைக்கக் கூடும்.
ஆட்சிக்கு எதிரான மனநிலையை விஜய் மிகவும் சாதுரியமாகக் கையாண்டார். விஜயை பெருத்த அபாயம் என்று ஆரம்பத்திலேயே திமுக கண்டுகொண்டதால்தான் அவரது பிரசாரக் கூட்டங்களுக்கு பல இடையூறுகளை உருவாக்கியது. விஜயின் கரூர் பிரசாரக் கூட்டத்தில் திமுகவினர் திட்டமிட்டு நிகழ்த்திய கொடூரம், அவர் மீது ஒரு கழிவிரக்கத்தை உருவாக்கியதும் உண்மை. அதை விஜய் நன்கு பயன்படுத்திக் கொண்டார்.
அவர் தன்னை மக்களிடம் மிகவும் நெருங்காமல் இருக்க கரூர் சம்பவத்தைக் காட்டி, தப்பிக் கொண்டார். அதன்மூலமாக, அவரது முழுமையான பிரசாரத்தையோ, அவரது கொள்கைகளையோ மக்கள் அறிய வழியில்லாமல் போனது. எனினும், நடிகர் என்ற கவர்ச்சி அதை மறைக்கப் போதுமானதாக இருந்தது. சினிமாவில் நடிக்கும் நடிகர் விஜயை விட ஆட்சியில் நடித்துக் கொண்டிருந்த ஸ்டாலின் மீது மக்களின் கோபம் திரும்பியது. அதுவே த.வெ.க.வின் வெற்றிக்கு அடிப்படைக் காரணம். மற்றபடி, திமுகவின் சிந்தனையற்ற தேர்தல் அறிக்கைக்கு சற்றும் சளைத்ததல்ல, த.வெ.க.வின் தேர்தல் அறிக்கை.
ஆனால், வாக்குக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்தில் இரு திராவிடக் கட்சிகளும் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, த.வெ.க. எந்தத் தொகுதியிலும் பணம் செலவழிக்காமல் வென்றிருப்பது இமாலய சாதனை. பாஜகவும் கம்யூனிஸ்டு கட்சிகளுமே கூட கூட்டணி நிர்பந்தத்தால் தேர்தலில் பெரும் பணம் செலவு செய்த நிலையில், த.வெ.க. வேட்பாளர்களில் பெரும்பாலோர் தேர்தலில் பிரசாரம் கூட செய்யாமல் ஜெயித்திருக்கிறார்கள். இத்தனைக்கும் அவர்கள் அறிமுகமான முகங்கள் கூட அல்ல. த.வெ.க.வுக்கு வாக்களித்த அனைவரும் விஜய் என்ற ஒற்றை முகத்திற்காகவே வாக்களித்திருக்கின்றனர். இந்த நம்பிக்கையை விஜய் காப்பாற்றிக் கொள்வது அவசியம்.
வரும் காலத்தில் பணத்தால் தேர்தலில் வென்று விடலாம் என்று எந்த முட்டாளாவது நினைத்தால், 2026 தேர்தல் முடிவுகள் நல்ல பாடமாக இருக்கும். அதேபோல, சிறுபான்மையினரின் வாக்குவங்கியைக் காட்டி இனியும் அரசியல் கட்சிகள் மிரட்ட முடியாது. விஜயை கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் இந்துக்களைப் போலவே ஆதரித்திருக்கிறார்கள் என்பது திமுகவுக்குக் கசக்கக் கூடும். மாநிலநலன் என்று வரும்போது, மக்கள் மதம் பார்ப்பதில்லை என்பதை திமுக கூட்டணிக் கட்சிகள் இப்போது உணர்ந்திருக்கும்.
திமுக மீதான அதிருப்தி அலை அதிமுகவுக்குத் தான் சாதகமாக மாறி இருக்க வேண்டும். ஆனால், நடிகர் விஜயின் புதிய நுழைவு, ஆட்டத்தின் போக்கை மாற்றிவிட்டது. தனது பிரசாரக் கூட்டங்களில் விஜய் திமுகவை மட்டுமே கடுமையாக விமர்சித்தார். அதிமுக- பாஜக கூட்டணியை அவர் கண்டுகொள்ளவே இல்லை. அதுவே ஒரு மிகச் சிறந்த வியூகம் தான். ஸ்டாலினுக்கு நிகராக தன்னை நிலைநிறுத்தியதால் விஜய் வென்றிருக்கிறார்.
ஒருவேளை பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை தலைமை வகித்திருந்தால் கூடுதலாக வெற்றி பெற்றிருக்கலாம் என்ற அங்கலாய்ப்புகளையும் கேட்க முடிகிறது. நிதர்சனம் என்னவென்றால், முன்னணி நடிகர் மீதான கவர்ச்சிக்கு முன்பு கொள்கைகள் செயல்படுவதில்லை. எனவே, அதிமுக கூட்டணி வென்றிருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையுடன் திருப்திப்பட்டுக் கொண்டு, திறமையான எதிர்க்கட்சியாகச் செயல்பட்டு மக்களிடம் நம்பிக்கையைப் பெறுவதே காலத்தின் கட்டளை.
எனினும் முக்கியமான ஒரு கவலை உள்ளது. ஆட்சி நிர்வாகத் திறனோ, பொதுவான விஷய ஞானமோ இல்லாத த.வெ.க.வினர் எவ்வாறு அரசை நடத்த முடியும் என்ற கேள்வி எழாமல் இல்லை. அவர்களை ‘அணில் குஞ்சுகள், தற்குறிகள்’ என்று ஏளனம் பேசியவர்களின் கவலைகள் அல்ல இவை. நாட்டுநலனில் அக்கறை கொண்டவர்களின் கவலை இது. எனவே, திறமையான, சேவை உள்ளம் கொண்ட நடுநிலையாளர்களை நடிகர் விஜய் தன்னுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். மு.க.ஸ்டாலினுக்கு எதிராகத் தன்னை முன்னிறுத்தியே விஜய் வென்றிருக்கிறார். எனவே ஸ்டாலின் செய்த அதே தவறுகளை இவர் செய்யாமல் இருக்க வேண்டும்.
இத்தேர்தலில் அதிமுகவுக்கும் பாடங்கள் உண்டு. அனைவரையும் அரவணைக்கும் அனுசரணை இல்லாததே எடப்பாடி பழனிசாமியின் பலவீனம். செங்கோட்டையன் போன்ற அனுபவம் வாய்ந்த ஒருவரை விஜய் பக்கம் தள்ளிவிட்டது அவரது பெரும் தவறு. அதேபோல, கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் இன்னும் நியாயமாகவும் பெருந்தன்மையாகவும் அவர் நடந்திருக்கலாம். இனி அதைப் பேசிப் பயனில்லை. ஆனால், எதிர்காலத்தில் இதே தவறுகளை அவர் செய்யாமல் இருக்கலாம்.
திரைத்துறையில் உச்சத்தில் இருக்கும்போதே, பல கோடி வருவாயை விட்டுவிட்டு அரசியல் களம் புகுந்த நடிகர் விஜயை தங்கள் காப்பாளராக இளம் தலைமுறையினர் கருதுவது இயல்பானதே. இன்றைய இளம் தலைமுறையினரின் மனவோட்டத்திற்கேற்ப இன்றைய அரசியல் கட்சிகள் செயல்படவில்லை என்பதும் இத்தேர்தல் முடிவுகளுக்குக் காரணம்.
தற்போதைய அரசியல் மீதான நம்பகத்தன்மை இழப்பு மட்டுமல்ல, வெறித்தனமான ரசிகர்களாக இளைய தலைமுறை மாறக் காரணமான தோல்வியடைந்த நமது கல்வி முறையும் விஜய்க்கு வெற்றி மகுடத்தைச் சூட்டி இருக்கின்றன. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிந்திக்க வேண்டும். நடிகர் விஜய் மாற்றம் தருவார் என்ற நம்பிக்கை நனவாகட்டும் என்பதே இப்போதைக்கு நமது பிரார்த்தனை.
தமிழகத்தில் மட்டுமல்லாது மேலும் நான்கு மாநிலங்களில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளும் நம்பிக்கை அளிப்பவையாகவே இருக்கின்றன. குறிப்பாக அசாமிலும், பாண்டிச்சேரியிலும் பாஜக கூட்டணியின் ஆட்சி தொடர மக்கள் வாக்களித்திருக்கின்றனர். அசாமில் சென்ற தேர்தலை விட அதிக இடங்களில் வென்று, மூன்றாவது முறையாக ஆட்சியைத் தொடர்கிறது பாஜக. முதல்வர் ஹிமாந்த பிஸ்வ சர்மாவின் தலைமைக்குக் கிடைத்த பரிசு இது. அதேபோல, பாண்டிச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி தொடர்கிறது.
கேரளத்தில் ஜனநாயகம் என்ற பெயரில் காட்டு தர்பார் நடத்திக் கொண்டிருந்த, ஊழல் மலிந்த இடதுசாரி கூட்டணி அரசு தோற்கடிக்கப்பட்டு அங்கு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்திருக்கிறது. இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்சிகள் காங்கிரஸ் கட்சியுடன் இருப்பது ஒன்றுதான் உறுத்தல். ஆனால், இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் துடைத்தெறியப்பட வேண்டும் என்ற இலக்கு கேரளத்தில் பினராயி விஜயனின் தோல்வி மூலமாக நிறைவேறி இருக்கிறது. இங்கு பாஜக 3 இடங்களில் வென்றிருப்பது, எதிர்கால மாநில அரசியலின் திசைக்கு முன்னோட்ட்டம்.
இவை அனைத்தையும் விட மிகச் சிறப்பான தேர்தல் முடிவு, மேற்கு வங்கத்தில் கிடைத்திருக்கிறது. மூன்று ஐந்தாண்டுகளாக காட்டாட்சி நடத்தி வந்த மமதா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றி இருக்கிறது பாஜக. சுவேந்து அதிகாரி தலைமையில் மாநில பாஜக இதற்காகப் போராடிய சமர் ஒரு ரத்த சரித்திரம். மத்திய, மாநிலத் தலைமைகள் ஒருங்கிணைந்து போராடி, மமதை பீடித்த முதல்வரை வீட்டுக்கு அனுப்பி இருக்கின்றன. மேற்கு வங்கம் பிழைத்தது.
பங்களாதேஷிலிருந்து ஊடுருவும் முஸ்லிம் அகதிகளை வாக்காளராக்கி, அவர்களை தனது வாக்கு வங்கியாக்கியே இதுநாள் வரை டி.எம்.சி. கட்சி வென்று வந்தது. இதனை எதிர்ப்பவர்கள் மதச் சிறுபான்மையினரால் கொடூரமாக ஒடுக்கப்பட்டனர். கொலை, பாலியல் அத்துமீறல், சொத்துகள் அபகரிப்பு, அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை மேற்கு வங்கத்தில் வழக்கமாக மாறி இருந்தன. இந்துக்கள் இரண்டாம்தரக் குடிமக்களாகவே மாற்றப்பட்டிருந்தனர். இதனை நூற்றுக்கு மேற்பட்ட தொண்டர்களின் உயிர்த்தியாகத்தால் மாற்றிக் காட்டி இருக்கிறது பாஜக.
இறுதி வரை நியாயமான தேர்தல் நடவடிக்கைகளுக்கு மமதா தடையாக இருந்தார். தேர்தல் ஆணையமும், உச்ச நீதிமன்றமும் உண்மையை உணர்ந்து அங்கு ராணுவம், துணைநிலை ராணுவத்தைக் களமிறக்கிய பிறகே மமதா அடங்கினார். அதனால் தான் இம்முறை தேர்தல் வன்முறைகளால் மாநில மக்களை மிரட்டவோ, போலித் தேர்தலை நடத்தவோ மமதாவால் முடியவில்லை. அதனால்தான், மக்கள் ஒன்று திரண்டு வாக்களித்து பாஜகவுக்கு மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையை வழங்கி இருக்கிறார்கள்.
அசாமிலும் மேற்கு வங்கத்திலும் தேர்தல் முடிவுகளில் இந்து வாக்காளர்களின் ஒருங்கிணைவு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. எல்லைப்புற மாநிலங்களான இங்கு தேசிய சிந்தனையுடைய அரசுகள் ஆட்சியில் இருப்பது அவசியம் என்பதை உணர்ந்து மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். கேரளத்தில் இந்த மாற்றம் அடுத்த தேர்தலில் நடக்கலாம். பொதுவாக இந்துக்கள் ஒருங்கிணைந்து வாக்களிப்பது மதரீதியான பதற்றத்தை ஏற்படுத்துவதில்லை. மாறாக, நாட்டின் எதிரிகளை அது கட்டுப்படுத்துகிறது. சிறுபான்மையினரின் ஒட்டுமொத்த வாக்குகளுக்காக மாநில நலனையே விலைபேசிய ஸ்டாலின் அரசுடன் ஒப்பிட்டால்தான் மத அடிப்படைவாத வாக்களிப்பு வேறு, மதத் தற்காப்பு ஒருங்கிணைவு வேறு என்பது புரியும்.
திருப்பரங்குன்றத்தில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க மறுத்து அழிச்சாட்டியம் செய்த – முதல்வராக இருந்த – மு.க.ஸ்டாலின் தற்போது சட்டசபைக்கே செல்ல முடியாத வகையில் த.வெ.க. வேட்பாளரிடம் படுதோல்வி அடைந்திருக்கிறார். இதிலிருந்து கற்க, வருங்கால முதல்வர் விஜய்க்கு முக்கியமான படிப்பினை இருக்கிறது.
‘திராவிட மாடல் அரசு’, ‘தமிழகம் தோற்காது’ என்று எவரோ எழுதிக் கொடுத்த துண்டுச்சீட்டு வாசகங்களைப் படித்துக் கொண்டு, தேசிய ஒற்றுமைக்குக் குந்தகமாகச் செயல்பட்டுவந்த ஸ்டாலினும், மேற்கு வங்கத்தையே சித்ரவதைக் கூடமாக மாற்றியிருந்த மமதாவும் இத்தேர்தலில் தோற்கடிக்கப்பட்டிருப்பது மிகவும் நல்லது. இண்டி கூட்டணி என்ற பெயரில் இவர்கள் இனிமேல் நடத்தும் கூத்துகள் எடுபடாது. மொத்தத்தில் மத்தியில் ஆளும் மோடி அரசுக்கு, இத்தேர்தல் முடிவுகள் உற்சாக டானிக் எனில் மிகையில்லை.
$$$