-அ.போ.இருங்கோவேள், ஆமருவி தேவநாதன், ஆர்.வெங்கடேஷ்
மத்திய அரசின் தேர்வு சீர்திருத்தங்களுக்கான பணிக்குழு குறித்த நாடாளுமன்ற விவாதத்தின் போது (28.07.2026) காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடியை ‘கோமிய நிபுணர்’ என்ற கேலி செய்யும் வகையில் குறிப்பிட்டிருந்தார். அதுதொடர்மான மூன்று கண்டனங்களும் இரு செய்திகளும் இங்கே…

1. கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?
-அ.போ.இருங்கோவேள்
பேராசிரியர் காமகோடி மற்றும் அவரது தந்தை பேராசிரியர் வீழிநாதன் இருவருக்குமே நான் நன்கு அறிமுகமானவன். காமகோடி பற்றி எனக்கு வந்த ஒரு கருத்தைப் பகிர்கிறேன்.
நாடாளுமன்றத்தில் பிரியங்கா வாத்ரா காமகோடி குறித்து கூறிய ‘கோமூத்ரா’ (Goumuthra) கருத்தைப் பற்றிய என் பதிவுக்குக் கிடைத்த பதில் இது:
*
1980-ஆம் ஆண்டு கோடைக்காலம். மயிலாப்பூரில் உள்ள ஒரு எளிய வீட்டின் முற்றத்தில் ஏழாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவன் மனவேதனையுடன் நின்று கொண்டிருந்தான்.
உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் வேகப்பந்து (Fast Bouncer) அவன் அணிந்திருந்த கண்ணாடியை உடைத்துவிட்டது.
அதனால் அவனது பார்வைக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயந்த அவனது தந்தை, புகழ்பெற்ற சமஸ்கிருத தர்க்கவியலாளர், அந்தச் சிறுவனின் கிரிக்கெட் மட்டையை ஆழமான கிணற்றுக்குள் எறிந்தார்.
“உன் கிரிக்கெட் வாழ்க்கை இத்துடன் முடிந்தது” என்று கூறிவிட்டு, ஒரு வயலினை அவன் கையில் கொடுத்தார்.
“துல்லியத்தை (Precision) கற்றுக்கொள்ள விரும்பினால், இதில்தான் தேர்ச்சி பெறு.”
அந்தச் சிறுவன் கோபப்படவில்லை. தனது முழு கவனத்தையும் வயலின் இசையில் செலுத்தினான்.
கடுமையாகப் பயிற்சி பெற்று, பின்னர் இசை உலகின் ஜாம்பவான்களுடன் மேடையேறி வாசிக்கும் அளவிற்கு உயர்ந்தான்.
பாரத ரத்னா எம். எஸ். சுப்புலட்சுமி அவர்களிடமிருந்தே நேரடியாக ஆலோசனைகளையும் திருத்தங்களையும் பெற்றான்.
ஐந்து ஆண்டுகள் கழித்து (1985), அவனுக்கு மீண்டும் ஒரு பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது. IIT-JEE தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை.
ஆனால் அவன் மனம் தளரவில்லை. ஒரு பிராந்திய பொறியியல் கல்லூரியில் சேர்ந்தான்.
கணினி அறிவியலின் அடிப்படை தர்க்க அமைப்புகளை (Logic Gates) ஆழமாகக் கற்றான். பின்னர் முதுநிலை ஆராய்ச்சியாளராக IIT மதராசில் சேர்ந்தான்.
முனைவர் பட்டம் (PhD) பெற்றான். அதே கல்வி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியாற்றி, இறுதியில் ஒருகாலத்தில் தன்னை நிராகரித்த அதே நிறுவனத்தின் இயக்குநராக உயர்ந்தான்.
2011-ஆம் ஆண்டில், உலகம் முழுவதும் நுகர்வோர் பயன்பாட்டு மொபைல் செயலிகளை உருவாக்கிக் கொண்டிருந்த நேரத்தில், இந்தப் பேராசிரியர் இந்தியாவின் ஒரு மறைந்திருந்த தேசியப் பாதுகாப்பு பலவீனத்தைப் பற்றி சிந்தித்தார்.
இந்தியாவின் ரேடார்கள், போர் விமானங்கள், வங்கிச் சேவையகங்கள் (Banking Servers), பாதுகாப்பு அமைப்புகள் அனைத்தும் வெளிநாடுகளில் வடிவமைக்கப்பட்ட மைக்ரோ பிராசஸர்களைச் சார்ந்திருந்தன.
அவரது மனதில் ஒரே ஒரு கேள்வி:
“ஒரு வெளிநாட்டு சிப்பை (Chip), நாம் செய்ய வேண்டியதைச் செய்கிறதா என்று சோதிக்க முடியும்.ஆனால், போர்காலத்தில் அது நாம் விரும்பாத வேறு ஏதாவது செயலைச் செய்யாது என்று உறுதியாகச் சொல்ல முடியுமா?”
இதற்குத் தீர்வாக, முழுமையாக இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட, தொழில்துறை தரமான (Industrial Grade) ஒரு மைக்ரோ பிராசஸரை (Micro Processer) அடிப்படையிலிருந்து உருவாக்கும் திட்டத்தை முன்வைத்தார்.
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், “பல பில்லியன் டாலர் முதலீடும், மிகப்பெரிய கட்டமைப்பும், ஏராளமான வெளிநாட்டு காப்புரிமைகளும் இல்லாமல் இது சாத்தியமில்லை” என்று கூறின.
ஆனால் அவர் அதைப் பொருட்படுத்தவில்லை.
சிறிய ஆய்வகங்களில், நீண்ட நேர உழைப்புடன், தனது குழுவுடன் இணைந்து Open Source RISC-V Instruction Set-ஐ பயன்படுத்தினார். ஒவ்வொரு Logic Gate-ஐயும் கைமுறையாக வடிவமைத்து, Silicon Layout-களை உருவாக்கி, கோடிக்கணக்கான Instruction Cycle-களைச் சோதித்து உறுதிப்படுத்தினர்.
2018-ஆம் ஆண்டு ஜூலை மாதம், ‘Risecreek’ என்ற குறியீட்டுப் பெயருடைய வெறும் 16 சதுர மில்லிமீட்டர் அளவுள்ள சிலிக்கான் சிப் ஆய்வகத்திற்குத் திரும்பி வந்தது.
அந்தச் சிப்பை இணைத்து மின்சாரத்தை இயக்கியபோது, திரையில் மெல்ல மின்னியபடி Linux Operating System, வரலாற்றில் முதல் முறையாக 100 % இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட சிலிக்கானில் வெற்றிகரமாக இயங்கத் தொடங்கியது.
இன்று, அவரது SHAKTI Processor Architecture, பாதுகாப்புத் தகவல் தொடர்பு அமைப்புகள் முதல், ISRO உடன் இணைந்து உருவாக்கப்பட்ட விண்வெளித் தரக் கட்டுப்பாட்டு அமைப்புகள் வரை பல்வேறு துறைகளில் பயன்பட்டு வருகிறது.
ஒரு காலத்தில், IIT-JEE தேர்வில் தோல்வியடைந்த அந்த மாணவன்…
IIT இயக்குநருக்கான அதிகாரப்பூர்வ இல்லத்தில் குடியேறாமல், தனது மறைந்த தந்தையின் அரிய சமஸ்கிருத நூலகத்தைப் பாதுகாக்க குடும்ப வீட்டிலேயே வாழத் தேர்ந்தெடுத்த அந்த வயலின் கலைஞர்…
அவர்தான் பேராசிரியர் வீழிநாதன் காமகோடி.
*
கழுதைகளுக்கு கற்பூர வாசனை தெரிவதில்லை. கற்பூரத்தின் மகிமை அதனால் குறைவதில்லை!
$$$

2. நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு!
-ஆமருவி தேவநாதன்
பேரா.காமகோடியைக் குறிக்கும் விதமாக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா வதேரா சொன்ன கருத்தைக் கண்டித்து ஒரு தமிழ் எழுத்தாளரும் எழுதவில்லை. அவரது பெயர் காமகோடியாக இல்லாமல், கமால், ஜோசஃப் என்று இருந்திருந்தால் இந்நேரம் தமிழ் உணர்வாளர்கள் கழுத்தறுத்துக் கொண்டு உயிர்விட்டிருப்பார்கள்; மரீனாவில் உண்ணாவிரதம் தொடங்கியிருப்பார்கள். “ஐயோ, என் தமிழனுக்கு நேர்ந்த இழிவைக் கண்டு இன்னும் உயிரோடு இருக்கிறேனே” என்று பொங்கி வழிந்து, விடுதலை, த ஹிந்து, ஜனசக்தி, எக்ஸ்பிரஸ், தினமணி, விகடன், இந்து தமிழ் திசை என்று எல்லாவற்றிலும் கட்டுரைகள் கொட்டியிருக்கும். ஸ்டாலின், வைகோ, கனிமொழி, பழனிசாமி, உதயநிதி, ஜோசஃப் விஜய், திருமாவளவன், சைமன் செபாஸ்டியன், பாஜக என்று அல்லோல கல்லோலப்பட்டிருக்கும்.
ஆனால், அவதூறு செய்யப்பட்டது அரசு அதிகாரி; உயர் கல்விக் கழகத்தின் தலைவர். அவரது பெருமைகளைச் சொல்வதற்கு ஒரு கையேடு போட வேண்டும்.
பாஸ்போர்ட் எடுக்காதவர்: அல்பசங்கி போவதற்குக் கூட அமெரிக்கா போகும் 8ஆம் கிளாஸ் படித்த அரசியல்வாதிகள் மத்தியில் கணினித்துறையில் பிஎச்.டி. முடித்து, 50+ காப்புரிமைகளை இந்தியாவில் இருந்தபடியே பெற்று பல நூற்றுக் கணக்கான பிஎச்.டிக்களுக்கு வழிகாட்டுகிறவர்.
வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு ஆப்பு செருகியவர்.
‘சக்தி’ என்கிற ப்ராஸசர் வடிவமைத்தவர். வெளியே சொல்ல முடியாத ராணுவ ஆராய்ச்சிகளுக்கு உதவுபவர்.
பத்மஶ்ரீ விருது பெற்றவர்.
இவரது தலைமையில் தான் ஐ.ஐ.டி. சென்னை, தான்சானியாவில் கிளை தொடங்கியது. விரைவில் மேலும் சில நாடுகளில் தொடங்க உள்ளது.
அனைவருக்கும் ஐ.ஐ.டி என்கிற திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்.
சுந்தரேசன், பாஸ்கர் ராமமூர்த்தி, ஜுன்ஜுன்வாலா என்கிற ஜாம்பவான்களுக்குப் பிறகு சென்னை ஐஐடியின் தலைமைப் பொறுப்பில் மிகச் சிறப்பாகப் பணியாற்றி வருபவர்.
இத்தனைக்கும் மேலாக, இவர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்.
ஆனாலும் இவர் மீது ஒரு அவமதிப்பு நிகழ்ந்தால், அதை தட்டிக் கேட்க ஒரு தமிழக அரசியல்வாதிக்கும் திராணி இல்லை. வெட்கம் இல்லாமல் ஊடகங்கள் கடந்து செல்கின்றன. ஒரு தமிழ் எழுத்தாள சிரோன்மணியும் மானம், ரோஷம் வற்றிப் போய் வாய் திறகக்வில்லை.
காரணம், கேலிசெய்யப்பட்டவர் பிராம்மணர். அவரை என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். தகுதி எதுவுமே இல்லாத யாரும் என்ன சொன்னாலும் கேட்க நாதி கிடையாது. இதில், முற்போக்கு, இடதுசாரி, திராவிடம் என்று முச்சந்தியில் நின்று வெட்கம் சிறிதும் இல்லாமல் அலப்பறை செய்வதற்கு ஒன்றும் குறைச்சல் இல்லை.
ஒரு வகையில் காந்தி போலத் தான். வேறு எந்தத் தலைவரைப் பற்றியும் எதுவும் சொல்லிவிட முடியாது. ஆனால், காந்தியை காமுகன், பிரிட்டிஷ் ஏஜென்ட் என்று எதையும் சொல்லலாம். ஏனெனில் காந்தி சாதி என்று ஒன்றும் இல்லை. அதற்குச் சங்கமும் இல்லை. காந்தியைச் சொன்னால் கேட்க நாதி இல்லை. அதே நிலை தான் பேரா.காமகோடிக்கும்.
இந்தக் கேடுகெட்ட தமிழ் எழுத்தாளர்கள் எதையும் கேட்க மாட்டார்கள். உண்மையைக் கேட்க முதுகெலும்பில்லை. இதைக் கேட்டால் த ஹிந்துவில் எழுத முடியாது, அதைச் சொன்னால் இடதுசாரி புத்தகப் பதிப்பகங்கள் புறக்கணிக்கும், இப்படிச் சொன்னால் திராவிட இயக்க ஊடகங்கள் கண்டுகொள்ளாது. எனவே காமகோடி தமிழ் மண்ணின் உயரிய உதாரணமாக இருந்தாலும், அவருக்கு ஏற்பட்ட அவமதிப்பைப் பற்றிப் பேசவே மாட்டேன் என்று ஒரு எழுத்தாள, அரசியல் சமூகம் இருக்குமானால், அதில் நானும் ஒரு அங்கம் என்று நபும்ஸகத்தனமாக நடமாட என்னால் முடியவில்லை.
உண்மையைச் சொல்வதும், அதை உரக்கச் சொல்வதும் எழுத்தாளனின் பணி என்பது பாரதி பாணி. அவன் வழியில், நான் இந்த உண்மையைச் சொல்கிறேன்.
பேரா.காமகோடியை இழிவு செய்வதாக நினைத்து திமிர்த்தனமாக நாடாளுமன்றத்தில் பேசிய பிரியங்கா வதேராவிற்கு கடுமையான கண்டனங்கள். அதற்கு வலுவான எதிர்ப்புத் தெரிவிக்க வக்கில்லாத தமிழ் எழுத்தாளர் சமூகத்திற்கும், அரசியல் சமூகத்திற்கும் பாரதியின் பாடலில் இருந்து ஒரு வரி: “நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு ?”
பிரியங்கா வதேராவிற்கு ஒரேயொரு கேள்வி : பேரா.காமகோடி கோமூத்ர ஞானியாக இருக்கட்டும். அந்த ஒரு தகுதி மட்டுமே கொண்டவராக இருக்கட்டும். உங்களிடம் என்ன தகுதி உள்ளது ?
பி.கு.: US6410059B1, US6896907B2 – கோமூத்ரம் தொடர்பான இரண்டு அமெரிக்க காப்புரிமைகள். ( US Patents ).
$$$
3. ஏளனம் ஏற்புடையதல்ல
-ஆர்.வெங்கடேஷ்
“சபாநாயகர் அவர்களே, உங்கள் வாயிலாக மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். அவர் தன் ஆலோசகர்களை மாற்ற வேண்டும் என நினைக்கிறேன். இந்தப் புதிய குழுவில் ஒரு முன்னாள் ஐ.பி. தலைவர், ஒரு ஐ.டி. நிறுவனத்தின் உரிமையாளர், ஒரு கோமிய நிபுணர் ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள். இவர்களுக்குக் கல்வியைப் பற்றி என்ன தெரியும்?” என்று பிரியங்கா காந்தி நேற்று (ஜூலை 28) நாடாளுமன்றத்தில் பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அவர் குறிப்பிட்ட ‘கோமிய நிபுணர்’ என்பது, சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடியைக் குறிக்கிறது. இந்தச் சொல்லாடல் ஏன் எழுந்தது என்றே எனக்குப் புரியவில்லை.
வினாத்தாள் கசிவைத் தடுப்பதற்கான ஆலோசனைகளையும் மாற்று வழிமுறைகளையும் பரிந்துரை செய்ய மத்திய அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. அந்தக் குழுவின் அமைப்பு குறித்து காங்கிரஸுக்கு விமர்சனம் இருந்தால், அதை முன்வைக்க ஏராளமான ஆக்கப்பூர்வமான வழிகள் இருந்தன.
உதாரணமாக, “இந்தக் குழுவில் கல்வித் துறையைச் சேர்ந்த மேலும் சில நிபுணர்களையும் சேர்க்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருக்கலாம். அல்லது, “எதிர்க்கட்சிகளின் கருத்துகளையும் கேட்ட பிறகு இப்படிப்பட்ட குழு அமைக்கப்பட்டிருக்க வேண்டியது தானே?” என்று கேள்வி எழுப்பியிருக்கலாம். தங்களது தரப்பிலிருந்து தகுதியான நிபுணர்களின் பட்டியலையும் பரிந்துரை செய்திருக்கலாம்.
இந்த வழிகளை விட்டுவிட்டு, ஒரு விஞ்ஞானியையோ கல்வி நிர்வாகியையோ ‘கோமிய நிபுணர்’ என்று குறிப்பிட்டு, அதனைத் தொடர்ந்து ஏளனச் சிரிப்புடன் பேசுவது எந்த வகையில் ஆரோக்கியமான அரசியல் விவாதம்?
இது காமகோடி என்ற தனிநபரின் அறிவுத் திறன், நிர்வாக அனுபவம் மற்றும் கல்வித் துறைக்கான பங்களிப்பை மட்டுமல்ல, அவர் தலைமை வகிக்கும் இந்திய தொழில்நுட்பக் கழகமான (ஐ.ஐ.டி.) நிறுவனத்தின் மரியாதையையும் தேவையின்றி விவாதத்துக்குள் இழுக்கிறது.
இந்தக் குழுவில் தன்னைச் சேர்க்குமாறு அவர் கேட்டுக் கொள்ளவில்லை. அவரைத் தேர்வு செய்து நியமித்தது மத்திய அரசுதான். அந்த நியமனத்துடன் யாருக்காவது கருத்து வேறுபாடு இருந்தால், அந்த முடிவை விமர்சிக்கலாம். ஆனால், அதற்காக நியமிக்கப்பட்ட தனிநபரையே ஏளனப்படுத்துவது சரியான அரசியல் மரபாகத் தெரியவில்லை.
விமர்சனம் என்பது ஜனநாயகத்தின் அடிப்படை. ஆனால், அந்த விமர்சனம் கொள்கை, முடிவு, நிர்வாகம் ஆகியவற்றின் மீது இருக்க வேண்டும். தனிநபர்களின் கண்ணியத்தைப் புண்படுத்தும் வகையில் அமையக் கூடாது.
இந்த இடத்தில் எனக்கு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவுக்கு வருகிறார். அவர் வாழ்ந்த காலத்திலேயே சில அரசியல் வட்டாரங்களில் இருந்து விமர்சனங்களையும் அலட்சியத்தையும் சந்தித்தார். ஆனால் அவர் மறைந்தபோது, ராமேஸ்வரத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்த திரண்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் பெருங்கூட்டம், அறிவியலாளர்கள் மக்களின் மனத்தில் எந்த உயர்ந்த இடத்தைப் பெற்றிருக்கிறார்கள் என்பதை நாட்டுக்கே உணர்த்தியது.
அரசியல் கருத்து வேறுபாடுகள் இயல்பானவை. ஆனால், நாட்டின் அறிவியல் மற்றும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் போன்றோரின் பங்களிப்பை மதிக்கும் பண்பை அனைத்து அரசியல் கட்சிகளும் கடைப்பிடிப்பது நல்ல ஜனநாயக மரபாக இருக்கும். அதுதான் நாட்டுக்கும், அறிவியலுக்கும், அரசியல் பண்பாட்டிற்கும் அழகு.
$$$

4. பிரியங்காவுக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு
-தினமலர் செய்தி
புதுடில்லி, ஜூலை 30: ” கல்வியாளர்களின் வாதங்களும், சான்றுகளும் கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றாலும், அவர்களின் கல்விபுலத்தின் மதிப்பு குறைத்து மதிப்பிடக் கூடாது” என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்காவிற்கு கல்வியாளர்கள் 215 பேர் கடிதம் எழுதி உள்ளனர்.
மத்திய அரசு நடத்தும் தேர்வுகளைச் சீரமைப்பது தொடர்பாக இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நீலகேனி தலைமையில் குழு அமைக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்து இருந்தார். இந்தக் குழுவில் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி இடம்பெற்றுள்ளார்.
ஆனால், லோக்சபாவில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா பேசும் போது, “இந்தியாவில் தேர்வு முறையை சீர்திருத்துவதற்காக அமைக்கப்பட்ட குழுவில் முன்னாள் உளவுத்துறை தலைவர், தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆகியோருடன் பசு கோமியம் நிபுணரும் இடம்பெற்றுள்ளார்” என விமர்சித்துள்ளார்.சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடியைத் தான் அவர் இவ்வாறு சிறுமைப்படுத்தி பேசியுள்ளார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியிருந்தது.
இந்நிலையில், கல்வியாளர்கள், முன்னாள் துணைவேந்தர்கள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த 215 பேர் பிரியங்காவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதி உள்ளனர். அவர்கள் அனைவரும் அதில் கையெழுத்திட்டுள்ளனர். அந்தக் கடிதத்தில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது:
சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடியை பசு கோமியம் நிபுணர் என நீங்கள் விமர்சித்ததற்கு எங்களின் ஏமாற்றத்தை வெளிப்படுத்தவே இந்தக் கடிதத்தை எழுதுகிறோம். இது கிண்டலாக அல்லது அரசியல் சொல்லாடலாக இருந்ததா என்பதை நாங்கள் பொருட்படுத்தவில்லை; அந்த சித்தரிப்பு ஒரு தனி நபரைப் பற்றியது என்பதால் கவலையை ஏற்படுத்துகிறது.
கல்வியாளரின் கருத்துகளை கலந்துரையாடுவதற்குப் பதிலாக, ஒரு முத்திரை குத்தி நிராகரிப்பது என்பது, நமது அரசியல் அமைப்பு சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கிய உரிமையை பாதிக்கும். நமது விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் மற்றும் அறிஞர்கள், தாங்கள் நிராகரிப்பு என்ற முத்திரை குத்தப்படுவோம் என்ற பயமின்றி பொது விவாதத்தில் பங்கேற்க முடியுமா என தெரிந்து கொள்ள உரிமை உள்ளது.
இந்தியாவின் முன்னணியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவராக காமகோடி உள்ளார். அவர் சென்னை ஐஐடியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவில் எம்எஸ் மற்றும் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். 150க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி புத்தகங்களை வெளியிட்டுள்ளார். 50க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி திட்டங்களில் பங்கெடுத்துள்ளார்.
டிஆர்டிஓவின் சிறந்த திறமைக்கான விருது மற்றும் இந்திய மின்னணுவியல் மற்றும் செமி கண்டக்டர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் விருதுகளைப் பெற்றவர். இந்தியாவின் தொழில்துறை தரத்திலான மைக்ரோ பிராசஸரைக் கண்டுபிடித்ததில் முக்கிய பங்காற்றியவர். அவர் நாட்டின் தலைசிறந்த மேதைகளில் ஒருவர்.
ஒரு காலத்தில் நம்ப முடியாதவை எனக் கருதப்பட்ட கருத்துகள் இறுதியில் அறிவியல் ரீதியான அங்கீகாரத்தைப் பெற்றன. அதேநேரத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பல நம்பிக்கைகள் பின்னர் கைவிடப்பட்டன.
கல்வியாளர்களின் வாதங்களும், சான்றுகளும் கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றாலும், அவர்களின் கல்விப்புலத்தின் மதிப்பை குறைத்து மதிப்பிடக் கூடாது. ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடு இன்றியமையாதது. அதேசமயம், பகுத்தறிவுள்ள கலந்துரையாடலுக்கு கேலி ஒரு மாற்றாக அமையாது.
இவ்வாறு அவர்கள் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
- நன்றி: தினமலர் (30.07.2026)
$$$
5. நாடாளுமன்ற விவாதங்கள் நாகரிகமாக இருக்க வேண்டும்
-இந்து தமிழ் திசை செய்தி
புதுதில்லி: காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி மக்களவையில் சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி குறித்து ஆட்சேபனைக்குரிய வகையில் விமர்சித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதிலுமிருந்து 215-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், முன்னாள் துணைவேந்தர்கள் மற்றும் கல்வியாளர்கள் இணைந்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
மத்திய அரசின் தேர்வு சீர்திருத்தங்களுக்கான பணிக்குழு குறித்த நாடாளுமன்ற விவாதத்தின் போது பிரியங்கா காந்தி சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி குறித்து ‘கோமிய நிபுணர்’ என்ற விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.
இந்நிலையில், நாலந்தா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சச்சின் சதுர்வேதி, நிதி ஆயோக் முன்னாள் தலைவர் ராஜீவ் குமார், யுபிஎஸ்சி முன்னாள் தலைவர் டி.பி. அகர்வால் உள்ளிட்ட கல்வியாளர்கள் கையெழுத்திட்டுள்ள அந்த அறிக்கையில், “நாடாளுமன்ற விவாதங்களில் விமர்சனங்கள் நாகரிகமாகவும், தர்க்கரீதியாகவும் இருக்க வேண்டும்” என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
“கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவரும், இந்தியாவின் முதல் தொழில்முறை நுண்செயலி உருவாக்கத்தில் முக்கியப் பங்கும் வகித்தவருமான ஒரு கல்வியாளரை, அரசியல் கேலிக்காக இத்தகைய சொல்லாடல்களால் குறிப்பிடுவது இந்தியாவின் அறிவியல் நிறுவனங்களின் கண்ணியத்தைக் குறைப்பதாக அமையும்” என கல்வியாளர்கள் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முன்னதாக, ஜனவரி 2025-இல் சென்னையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பேசிய பேராசிரியர் காமகோடி, பசுவின் கோமியத்தில் உள்ள மருத்துவக் குணங்கள் குறித்துப் பேசியது இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியது. இதற்குப் பதிலளித்திருந்த காமகோடி, அறிவியல் பூர்வமாக வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் அடிப்படையிலேயே தாம் பேசியதாகக் குறிப்பிட்டிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
- நன்றி: இந்து தமிழ் திசை (30.07.2026)
$$$