கரப்பான் பூச்சிகளால் நிலைகுலைந்த தில்லி

-ஆசிரியர் குழு

கரப்பான் பூச்சி கட்சியின் (சி.ஜே.பி.) தொடர் போராட்டம் ஜூலை 20ஆம் தேதி, தில்லியில் பெரும் அமளியுடன் முடிந்திருக்கிறது. போராட்டக்காரர்களின் வன்முறை, காவல்துறையில் தடியடி, தேசதுரோக கோஷங்கள், நாடாளுமன்றம் முற்றுகை, மாணவர்களுடன் தேசவிரோதிகள் கைகோர்ப்பு என போராட்டத்தின் திசை மாறியதில் இந்திய ஜனநாயகம் திக்கித் திணறியது. இது தொடர்பான சில முகநூல் பதிவுகள் இங்கே ஆவணப்பதிவாக….

1. தடையை நீக்கிய நீதிமன்றத்திற்கு தலைகுனிவு!

-கே.ஜி.ஜவர்லால்

மாணவர்கள் அரசியல் போராட்டங்களில் ஈடுபடுவது ஏற்புடையது அல்ல.

எவ்வளவு தீவிரமான பிரச்சினையாக இருந்தாலும் அதற்காகப் போராடுவது அவர்கள் வேலை அல்ல. அவர்களின் இலக்கு, முழுமையாக கல்வியில் மட்டும்தான் இருக்க வேண்டும். அவர்களை அரசியல் போராட்டங்களில் ஈடுபடுத்துகிறவர்களுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் தகும். ஏனெனில் அது பொறுப்பற்ற செயல்.

அதிலும், கல்லெறி, அடிதடி, வாகனங்களைத் தாக்குதல், காவல்துறையினரைத் தாக்குதல் என்று ரௌடித்தனமாக நடத்தப்படும் போராட்டத்தில் பலியாடுகளாக மாணவர்களை ஈடுபடுத்துகிறார்கள். அப்படிப் பண்ணிவிட்டு  ‘கண்ணீர்ப் புகை போட்டுவிட்டார்கள்’ என்று முதலைக் கண்ணீர் வேறு!

இந்த மாதிரி ரௌடிப் போராட்டங்களில் மாணவர்கள் ஈடுபட்டால், சம்பந்தப்பட்ட பள்ளிகளையும், கல்லூரிகளையும் மூடி விட வேண்டும். யார் தூண்டி விட்டார்களோ அவர்கள் பொது மன்னிப்புக் கேட்கும் வரை திறக்கவே கூடாது. அப்படியே திறந்தாலும், மூடப்பட்ட காலத்தில் விட்டுப் போன பாடங்களை நடத்தக் கூடாது.

இந்த உருப்படாத கட்சியைத் தடை செய்ததை நீதிமன்றம் தடுத்தது. இந்தக் கட்சி, பொறுப்பற்றவர்களால், சமூக விரோதிகளால், ஆளும் கட்சி மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களால் உருவானதோ என்கிற சந்தேகம் எழத்தான் செய்கிறது. இது ஒன்றும் சமூக அக்கறை கொண்டவர்களின் கூட்டமாகத் தெரியவில்லை.

நடந்திருக்கும் அவலங்கள், தடையை நீக்கிய நீதிமன்றத்தைத் தலைகுனிய வைக்கின்றன.

இப்போது நீதிமன்றமே முன்வந்து தடை செய்வதுதான் சரியாக இருக்கும்.

$$$

2. நவீன தகவல் போரில் அரசு வலுவாக இல்லை!

-கீர்த்திவாசன் பிள்ளை

நாம் பலரும் எதிர்பார்த்ததை விட இது மிகப் பெரிய போராட்டமாக இருந்தது. ஒரு கணம் பார்த்தால், அரசாங்கமே கூட இதை இவ்வளவு பெரிய அளவில் நடக்கும் என்று கணிக்காமல் இருந்திருக்கலாம்.

அதனால், ஆம் ஆத்மி கட்சிக்கு பாராட்டு சொல்ல வேண்டியதுதான். இவர்கள் மக்கள் மனநிலையை, குறிப்பாக இளைஞர்களின் மனநிலையை, பெரும்பாலான அரசியல்வாதிகளை விட நன்றாகப் புரிந்துகொள்கிறார்கள். அதை எப்படித் தூண்ட வேண்டும், எப்படித் தங்கள் அரசியல் பலனுக்கு பயன்படுத்த வேண்டும் என்பதையும் நன்றாக அறிவார்கள். அதிக வளமும், நீண்ட அரசியல் அனுபவமும் கொண்ட காங்கிரஸுக்குக் கூட இப்படிப்பட்ட பெரும் போராட்டத்தை இவ்வளவு வேகமாக திரட்ட முடியவில்லை.

இந்த நிகழ்வு பாஜகவின் நவீன தகவல் போரில் இருக்கும் பலவீனத்தையும் மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. அவர்கள் இன்னும் ஒரு அடிப்படை உண்மையை முழுமையாக உணரவில்லை: இளைஞர்கள் இயல்பாகவே ஆட்சிக்கு எதிரான மனநிலையுடன் இருப்பார்கள்; அவர்கள் தீவிரமான உணர்ச்சிகளாலும், கலாச்சாரப் போக்குகளாலும் இயக்கப்படுகிறார்கள். ஒரு போராட்டம்  ‘கூல்’ ஆகவும், கலாச்சார ரீதியாக ஆதிக்கம் செலுத்தும் ஒன்றாகவும் தோன்றினால், அதில் பங்கேற்பது திடீரென ஒரு சமூக அடையாளமாக மாறிவிடுகிறது. “நானும் இந்த தலைமுறையின் ஒரு பகுதி” என்பதை காட்டும் வழியாக அது பார்க்கப்படுகிறது.

இந்த ஆற்றலை பழைய ஹேஷ்டேக்குகளால் அல்லது “முந்தைய ஆட்சியில் நிலைமை இன்னும் மோசமாக இருந்தது” என்ற நினைவூட்டலால் எதிர்கொள்ள முடியாது. அந்த வரலாற்று ஒப்பீடு, அதை நேரில் அனுபவிக்காத தலைமுறைக்கு எந்த உணர்ச்சிப் பிணைப்பையும் உருவாக்காது. இன்றைய இளைஞர்கள் ஒரு அரசை அதன் கடந்தகாலத்துடன் ஒப்பிட்டு மதிப்பிடுவதில்லை; தங்கள் எதிர்கால எதிர்பார்ப்புகளை அது நிறைவேற்றுகிறதா என்பதைத்தான் பார்த்து தீர்மானிக்கிறார்கள்.

இதைக் சரிசெய்ய வேண்டுமென்றால், பாஜக முதலில் தனது தகவல் தொடர்பு அமைப்பை அடிப்படையாக மாற்ற வேண்டும். டிஜிட்டல் தந்திரத்தை இன்னும் நடத்திக்கொண்டிருக்கும் அந்த பழைய தலைமுறை “டைனோசர்களை” ஓய்வு பெறச் செய்ய வேண்டும். 2014 காலத்து சமூக ஊடக யுக்திகளில் சிக்கிக் கிடக்கும் அந்த அணுகுமுறை, இன்றைய இணைய உலகம் எப்படி இயங்குகிறது என்பதையே புரிந்துகொள்ளவில்லை. ரோபோ போல ஐடி-செல் ஹேஷ்டேக்குகளை ஸ்பாம் செய்வதும், செயற்கையாக டிரெண்ட் உருவாக்க முயல்வதும் மட்டுமே அவர்களுக்கு தெரியும்; அதை மக்கள் உடனே கண்டுபிடித்துவிடுகிறார்கள்.

அதற்குப் பதிலாக, இணைய கலாச்சாரத்தை உண்மையாக வாழும் இளம் தலைமுறையை முன்னிலைப்படுத்தி, இயல்பாக பரவும், மையமற்ற, மக்களிடமிருந்து உருவாகும் கதைகளையும் நரேட்டிவ்களையும் கட்டியெழுப்ப வேண்டும். அதுவே நவீன தகவல் போரில் வெல்லும் ஒரே வழி.

$$$

3. அரசைக் கவிழ்ப்பதே பிரதான நோக்கம்!

-சி.எம்.மகாதேவன்

எதிர்பார்த்தது போலவே வன்முறையில் முடிந்திருக்கிறது கரப்பான் பூச்சி போராட்டம். இலங்கை, நேபாள், பங்களாதேஷ் என இன்னும் பல நாடுகளில் வன்முறை போராட்டங்களின் மூலம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது போல இந்தியாவிலும் ஆட்சி மாற்றம் செய்ய வேண்டும் என்று தொடர்ச்சியான முயற்சிகள் நடக்கின்றன.

விவசாயிகள் போராட்டம், சிஏஏ போராட்டம் இதன் நோக்கம் ஒன்று தான். ஆளும் அரசாங்கத்தை அகற்ற வேண்டும். ஸ்தம்பிக்க வைக்க வேண்டும். அதனால் தான் சமூகத்திற்கு எதிரான, தேசத்திற்கு எதிரான அனைத்து சக்திகளும் இதுபோன்ற தேசவிரோத செயல்களுக்கு ஆதரவு தருகின்றன.

ஒரு நீதிபதி சொன்னார் என்பதற்காக  ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ என்று ஆரம்பித்து, 2-3 நாட்களுக்குள்ளாகவே மில்லியன் கணக்கில் பாலோயர்ஸைச் சேர்த்து, எங்கோ வெளிநாட்டில் இருக்கும் அபிஜித் திடீரென்று வெளிச்சம் பெற்று ஒரு போராட்டத்தை ஆர்கனைஸ் செய்து 20 நாட்கள் நடத்த முடிகிறது என்றால், இவர்களுக்கு பின்னால் இருக்கும் சக்திகள் சாதாரணப்பட்டதில்லை.

இந்த போராட்டத்தின் நோக்கம் நீட் தேர்வோ, தர்மேந்திரா பிரதானோ இல்லை. இந்த போராட்டத்தின் நோக்கம் அரசை கவிழ்ப்பது. நேபாள், பங்களாதேஷில் நடந்ததை போல இங்கே நடத்துவது. நேற்று போராட்டக்காரர்களே அதை சொல்லியும் விட்டார்கள்.

பாஜகவை இனிமேல் நேர்மையான முறையில் தோற்கடிக்கவே முடியாது என்ற நிலைக்கு வந்து விட்டது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள். இங்குள்ள சிறுபான்மையினர் எப்படியாவது பாஜக ஆட்சியை அகற்ற என்ன விலை கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள். ஒன்றுக்கும் லாயக்கில்லாத ராகுலை பிரதமராக்கினால், நாட்டையே சிதைத்து விடலாம் என்பது தான் இவர்களின் நோக்கம்.

அதனால் தான் டெல்லி போராட்டத்தில் அத்தனை பிரிவினை சக்திகளும் கலந்து கொண்டன. போராட்டத்தில் ஆதரவு தெரிவித்த ஒருவர் அல்லாஹ்வை பற்றி பாடுகிறார்,  ‘ஜெய் ஸ்ரீராம் சொல்லவேண்டுமா? நான் சொல்ல மாட்டேன்’ என்கிறார் பிரகாஷ்ராஜ்.  ‘காஷ்மீருக்கு 370 அந்தஸ்தை திரும்ப கொடுக்க வேண்டும்’ என்கிறார் ஒருவர். ஆனால் இது நீட் போராட்டமாம். இதை நாம் நம்ப வேண்டும். நீட் போராட்டத்திற்கும் இவர்கள் பேசியதற்கு என்ன சம்பந்தம்?

கடந்த 10 வருடங்களாக ஒவ்வொரு முறையும் பாராளுமன்றம் கூடும்போதெல்லாம் ஒரு பிரச்சினையை உருவாக்குவது எதிர்க்கட்சிகளின் திட்டமிட்ட வேலை. ரபேல், பிகாசஸ், ஹிட்டன்பர்க் என எதிர்க்கட்சிகள் கையில் எடுத்த மிகப்பெரிய பிரச்சினைகள் அனைத்துமே பாராளுமன்றம் செயல்படும் நாளை குறிவைத்துத் தான் ஆரம்பிக்கப்பட்டன. இவையனைத்தும் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவை குறி வைத்து திட்டமிட்டு உருவாக்கப்படும் பிரச்சினைகள்.

தற்போது இவையெல்லாம் எக்ஸ்போஸ் ஆகிவிட்டதால் உள்நாட்டிலேயே பிரச்சினைகளை ஆரம்பித்து சரியாக பாராளுமன்றம் கூடும் நாளை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

சிஸ்டத்தை மாற்றுவோம் என்று கோஷம் வைக்கிறார்கள். ஆனால் இவர்களின் நோக்கம் ஆட்சியை மாற்றுவது தான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்த்து, அராஜகமான முறையில், அப்பாவி இளைஞர்களை மூளைச்சலவை செய்து காங்கிரஸ் போன்ற நாசகார சக்தியை ஆட்சியில் அமரவைப்பது இவர்களின் நோக்கம்.

ஜென்சி இளைஞர்களை வன்முறைக்கு தூண்டி விடும் வேலையை ராகுல் 6 மாதங்களுக்கும் மேலாக செய்து வருகிறார். வெளிநாடுகளின் கைக்கூலியாக செயல்படும் ராகுல் போன்றவர்கள் இந்த நாட்டிற்கே சாபக்கேடு.

அதேசமயம் கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதானை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பல மாதங்களுக்கு முன்பே குரல்கள் எழுந்தது. ஆனால் மோடி அரசின் பிடிவாதம் தான் இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம்.

இந்தியாவுக்கு இப்படியொரு ஆபத்து இருக்கிறது என்பது நம்மை விடவும் மோடிக்கு நன்றாக தெரியும். ஆனாலும் இந்த காக்ரோச்சை வளர விட்டது ஏன் என்ற கேள்விக்கு காலம் தான் பதில் சொல்லும்

$$$

Leave a comment