மதம் மாறினால் இந்து பட்டியலின அந்தஸ்து கிடையாது: உச்ச நீதிமன்றம் உறுதி

-ஆசிரியர் குழு.

மதம் மாறிய பிறகு இந்து பட்டியலின சலுகையையும், அந்தஸ்தையும் இழக்க நேரிடும் என்று உச்ச நீதிமன்றம் உறுதிபடத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான இரு செய்திகள் இங்கே…

மதம் மாறியவர்கள் மீதான எஸ்.சி அந்தஸ்து விவகாரம்:

மறு ஆய்வு மனு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

புது தில்லி: ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ போதகரான சிந்தாதா ஆனந்த் பால், என்பவர் சிலருக்கு எதிராக எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தார். ஆனால் சிந்தாதா ஆனந்த் பால், கிறித்தவ மதத்திற்கு தழுவியதால் அவரால் எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுக்க முடியாது என்று குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதுதொடர்பான வழக்கை விசாரணை நடத்திய ஆந்திர உயர்நீதிமன்றம், ‘‘சிந்தாதா ஆனந்த் பால், ஒரு கிறிஸ்தவர், அவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பின்னர் பட்டியல் சாதி சமூகத்தின் உறுப்பினர் என்ற தகுதியை இழந்துவிட்டார்’’ என்று தீர்ப்பு வழங்கி இருந்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், முன்னதாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையே மீண்டும் உறுதி செய்து கடந்த மார்ச் மாதம் தீர்ப்பு வழங்கி இருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட விவகாரத்தில் முந்தைய தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.கே. மிஸ்ரா, என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,‘‘இந்த விவகாரத்தில் முன்னதாக ஆந்திர உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் விரிவான விசாரணையை நடத்திய பின்னர் தான் தெளிவான தீர்ப்பை வழங்கியது. எனவே கடந்த மார்ச் 24ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் எந்தவித மாற்றமோ அல்லது திருத்தமோ செய்ய வேண்டிய அவசியமில்லை’’ என்று திட்டவட்டமாக தெரிவித்து மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தனர்.

  • நன்றி: தினகரன் (28.07.2026)

$$$

மதம் மாறினால் பட்டியல் அந்தஸ்து இழப்பது உறுதி:

மறு ஆய்வு கோரிய மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி

தில்லி: இந்து மதத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர், முஸ்லிம் அல்லது கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவுடன் முழுமையாக தனது பட்டியல் இன அந்தஸ்தை இழந்துவிடுகிறார். அதேநேரம் இந்து மதத்தில் இருந்து சீக்கியம், புத்த மதங்களுக்கு மாறினால் மட்டுமே பட்டியல் இனத்தவர் அந்தஸ்தை இழப்பது இல்லை. இந்தச் சூழலில் நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர், கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார். அதில் பாஸ்டராகப் பணியாற்றி வந்தார். அவர் மீது தாக்குதல் நடந்துள்ளது. சாதிப் பெயரைக் கூறி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அவர் தன்னை மிரட்டியவர்கள் மீது எஸ்.சி,  எஸ்.டி. சட்டத்தில் நடவடிக்கை கோரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.

அந்தப் புகாரை எதிர்த்து ஆந்திர உயர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டவர் வழக்குத் தொடர்ந்தார். அந்த மனுவில், “என் மீது புகாரளித்தவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி பாஸ்டராகப் பணியாற்றி வருகிறார், எனவே அவருக்குப் பட்டியலினத்தவருக்கான எஸ்.சி, எஸ்.டி. சட்டப் பாதுகாப்பு செல்லாது; எனவே இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று முறையிட்டார்.

இந்த வழக்கை விசாரித்த ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதி ஹரிநாத்,  “கிறிஸ்தவ மதத்தில் சாதிக் கட்டமைப்பு அங்கீகரிக்கப்படவில்லை; எனவே கிறிஸ்தவத்திற்கு மாறிய நபர் எஸ்.சி, எஸ்.டி. சட்டத்தின்கீழ் பாதுகாப்பு பெற முடியாது” என்று அவரது மனுவை தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து, பாதிக்கப்பட்ட பாஸ்டர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆந்திர உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை கடந்த மார்ச் மாதம் உறுதி செய்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில்,  “1950-ஆம் ஆண்டின் அரசியலமைப்பு (பட்டியல் இனம்) ஆணையின் 3-வது பிரிவில், இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு மட்டுமே ஆரம்பத்தில் பட்டியல் இன அந்தஸ்து அளிக்கப்பட்டிருந்தது. பின்னர், சட்ட திருத்தங்கள் மூலம் சீக்கியம், புத்த மதம் ஆகிய மதங்களை பின்பற்றுபவர்களும் சேர்க்கப்பட்டார்கள். எனவே, 3 மதங்களைச் சேர்ந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பட்டியல் இன அந்தஸ்து கிடைக்கும். இந்த மதங்கள் அல்லாத வேறு மதங்களுக்கு மாறியவர்கள் உடனடியாக தங்களது பட்டியல் இன அந்தஸ்தை இழப்பார்கள். பட்டியல் இனத்தினருக்கான சட்டப்பூர்வ சலுகைகள், இடஒதுக்கீடு, முன்னுரிமை, நலத்திட்டங்கள் ஆகியவற்றையும் இழப்பார்கள். ஒருவர் ஒரே நேரத்தில் ஆன்மிகக் காரணங்களுக்காக வேறு மதத்தைப் பின்பற்றிக்கொண்டு, இடஒதுக்கீடுக்காக இந்து மதத்தைப் பின்பற்ற முடியாது” என்று நீதிபதிகள் கூறினர்.

இதற்கிடையே, இந்தத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.

அப்போது அவர்கள் கூறுகையில்,  “மறுஆய்வு மனுவையும், கடந்த மார்ச் 24-ஆம் தேதி அளிக்கப்பட்ட தீர்ப்பையும் ஆய்வு செய்தோம். தீர்ப்பில் எந்தத் தவறும் இல்லை. எனவே, அதை மறுஆய்வு செய்யக் கோரும் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்றனர்.

  • நன்றி: ஒன் இந்தியா (28.07.2026)

$$$

 

Leave a comment