தரித்த நறுந்திலகம்!

-அ.ராதிகா

நீராடும் கடலை ஆடையாக உடுத்த நில மகளின் சீரான அழகிய வதனமாக பரதக் கண்டம் விளங்குகிறது. அதன் தென்புறத்தே சிறப்பு மிகுந்த திராவிட நல் திருநாடு அமைந்திருக்கிறது. அந்த அழகிய முகத்தின் நிலா போன்ற நெற்றியில் திலகமிட்டதுபோல தமிழணங்கு விளங்குகிறாள். அவள் எத்திசையும் புகழ் மணக்க வீற்றிருப்பவள். அவளை வாழ்த்துவோம்! வாழ்த்தி மகிழ்வோம்!

மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின் பிரதான வரிகள் கூறும் விஷயம் இதுதான். பரந்த உலகின் அழகிய வதனமான பரத கண்டத்தின் தரித்த நறுந்திலகமாக, அனைத்துலகமும் இன்புற வீற்றிருப்பவள் தமிழன்னை. திராவிட நல் திருநாட்டில் அவள் இருக்கிறாள். அந்தத் திருநாடு பரத கண்டத்தின் சிறந்த பகுதியாகத் திகழ்கிறது.

நமது தளத்தின் நோக்கமும் இதுவே. தமிழன்னை எமது ஆருயிர் எனில், பரத கண்டமே எனது வலிய உடல். இந்துப் பண்பாடு எனது ஆன்மா. உடலும் உயிரும் ஆன்மாவும் இணைந்ததே வாழ்க்கை.

இந்த பாரத பூமி பழம்பெரும் பூமி; நாமதன் புதல்வர்கள். இந்நினைவை அகற்றிடக் கூடாது என்பதே, மகாகவி பாரதி எமக்கு ஊட்டிய தாபம்.

செப்பு மொழி பதினெட்டில் நமது அருந்தமிழ் முதன்மை வகிக்கிறது. இந்த நாட்டை ஒருங்கிணைக்கும் ஆன்மிக, இலக்கிய, கலைக் கருவூலங்கள் தொன்மை குன்றாமல் இப்பெரும் தேசத்தில் நிலை பெற்றிருப்பது தமிழகத்தில் மட்டுமே. அதுவே நமது பெருமை. ஆனால், அது நம்மை அகங்காரம் கொண்டதாகச் செய்துவிடக் கூடாது.

சிவன் திருவிளையாடல்கள் நிகழ்த்திய திருநிலம்; ஸ்ரீராமன் கால் பதித்த திருமண்; குமரன் வேலெறிந்த திருத்தலம்; சங்கப் புலவர்களும் ஆழ்வார்களும் நாயன்மார்களும் தமிழ் வளர்த்த திருவிடம் தமிழகம். ஆனால், இடைக்காலத்தே சில தவறான வழிகாட்டிகளால் தமிழகம் திசை திரும்பியது; இன்றும் திக்குமுக்காடுகிறது. ’இந்நிலை’யை மாற்ற, நம்மால் இயன்றதைச் செய்யவே இத்தளம் இயங்குகிறது.

நாம் தேசியத்தால் இந்தியன்; மொழியால் தமிழன்; பண்பாட்டால் ஹிந்து. இம்மூன்றும் பின்னிப் பிணைந்ததே நமது தேசம். இதை வலியுறுத்துவது எம் கடமை. ’என் கடன் பணி செய்து கிடப்பதே‘ என்ற நாவுக்கரசரின் அமுதமொழியே எம்மை வழிநடத்தும் ஆப்த வாக்கியம்.

நாம் அனைவரும் இணைந்தே தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு. தாய்மொழி மீதான பெருமிதத்துடன், தாய்நாட்டைப் பற்றிய அக்கறையுடன் செயல்படுவோம்.

நமது நாட்டை ஒருங்கிணைத்ததில் கலை, இலக்கியங்களுக்கு எத்துணை பங்குண்டோ, அதே அளவுக்கு பண்டிகைகளுக்கும் பங்குண்டு. குறிப்பாக தீபாவளி நமது பண்டிகைகளுள் முதன்மையானது. ஆண்டு முழுவதும் உழைத்துக் களைத்த மக்களுக்கு பேரானந்தம் அளிக்க வரும் தீபாவளியை இருகரம் நீட்டி வரவேற்போம்!

இந்த தீபாவளியை ஒட்டி, பொருள் புதிது தளத்தில் சிறப்புப் பகுதியாக ‘தீபாவளி மலர்’ வெளியாகிறது. இம்மலரின் இதழ்களை ஊன்றிப் படியுங்கள். உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் தெரியப்படுத்துங்கள்.

இருள் அகலட்டும்; ஒளி பெருகட்டும்!

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

$$$

One thought on “தரித்த நறுந்திலகம்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s