கவிதையின் இலக்கணம்

-மகாகவி பாரதி

கவிதையின் இலக்கணம் குறித்த மகாகவி பாரதியின் இந்தக் கட்டுரையில் (சுதேசமித்திரன்) ‘ஹொக்கு’ என்று குறிப்பிடப்படுவது தான் இன்றய ஹைகூ கவிதை.நூறாண்டுகளுக்கு முன்னமே அதனை அறிந்திருந்தார் நமது மகாகவி. 

பாரதியின் வசன கவிதைகளே தமிழ்ப் புதுக்கவிதைக்குத் தோற்றுவாய். இக்கட்டுரையில் கூறியுள்ள பல அம்சங்களை தனது வசன கவிதைகளில் மகாகவி பாரதி பயன்படுத்தி இருப்பதைக் காணலாம்.

சமீபத்திலே ‘மார்டன் ரிவ்யூ’ என்ற கல்கத்தாப் பத்திரிகையில் ‘உயோநே நோகுச்சி’ என்ற ஜப்பானியப் புலவர் ஒரு லிகிதம் எழுதியிருக்கிறார். அவர் அதிலே சொல்வது என்னவென்றால், இங்கிலாந்து, அமெரிக்கா என்ற தேசங்களிலுள்ள இங்கிலீஷ் கவிதையைக் காட்டிலும் ஜப்பானியக் கவிதை சிறந்தது. காரணமென்ன?

மேற்குக் கவிதையில் சொல் மிகுதி. எண்ணத்தை அப்படியே வீண் சேர்க்கை இல்லாமல் சொல்லும் வழக்கம் ஐரோப்பியக் கவிதையிலே இல்லை. எதுகை, சந்தம் முதலியவற்றைக் கருதியும், சோம்பற் குணத்தாலும், தெளிவின்மையாலும், பல சொற்களைச் சேர்த்து, வெறுமே பாட்டை அது போகிற வழியெல்லாம் வளர்த்துக் கொண்டு போகிற வழக்கம் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அதிகமிருக்கிறது. தம்முடைய மனதில் உள்ள கருத்தை நேரே வெளியிடுவதில் மேற்குப் புலவர் கதைகள் எழுதுவோரைக் காட்டிலும் சக்தி குறைந்திருக்கிறார்கள்.

ஜப்பானில் அப்படியில்லை. வேண்டாத சொல் ஒன்று கூடச் சேர்ப்பது கிடையாது. 

கூடை கூடையாகப் பாட்டெழுதி அச்சிட வேண்டும் என்ற ஒரே ஆவலுடன், எப்போதும் துடித்துக் கொண்டிருப்பவன் புலவனாக மாட்டான். கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையையே கவிதையாகச் செய்தோன் அவனே கவி. புலவனுக்குப் பணம் ஒரு பொருளன்று. வானத்து மீன், தனிமை, மோனம், மலர்களின் பேச்சு, இவற்றிலே ஈடுபட்டுப்போய், இயற்கையுடன் ஒன்றாகி வாழ்பவனே கவி.

ஜப்பானிய பாஷையில் பதினேழசை கொண்ட ஹொக்கு* என்ற பாட்டு ஒரு தனிக் காவியமாக நிற்கும். முப்பத்தோரசையுள்ள உத்தா என்பதும் அங்கனமே. 

உயோநே நோகுச்சி தமது கருத்தை விளக்கும் பொருட்டுச் சில திருஷ்டாந்தங்கள் காட்டியிருக்கிறார். அமெரிக்காவில் மிஸ் ரீஸ் என்பதோர் கவிராணியிருக்கிறார். வேண்டாததைத் தள்ளிவிடுவதில் அந்த மிஸ் ரீஸ் என்ற பெண் புலவர் பெயர் வாங்கியிருக்கிறார். அநாவசியமான பதச் சேர்க்கை, அநாவசியமான கருத்து விளக்கம் என்ற இரண்டுமில்லாமல், முத்துப் போல பதங்கள் கோர்க்கும் நல்ல தொழிலாளியாகிய அக் கவிராணி, இங்லீஷ் பாஷையில் எழுதியிருக்கும் அடிகள் சிலவற்றை நோகுச்சி எடுத்துக் காட்டுகிறார்.

மழை

மிஸ் ரீஸ் எழுதியதன் மொழிபெயர்ப்பு மாதிரியடிகள்:

1.

ஓ! வெண்மையுடையது மழை! இளையது.
கூரை மேலே சொட்டுச் சொட்டென்று விழுகிறது.
வீட்டுக்குள் நூறு வஸ்துக்கள் ஓடி வருகின்றன.
பூண்டுகளின் மணம், பழமையின் நினைவு, இவையெல்லாம்
புல்லாந்தரையிலே குணந் தெரிகிறது,
உடைந்த கண்ணாடித் துண்டு போல.

2.

சிறிய வெளிக்கதவு புடைக்கிறது பார்.
அதுவரை செவந்த கொடிப் பூண்டுகள்
நேர் ஓடிச் செல்லுகின்றன.

3.

ஓ! வீட்டுக்குள் நூறு வஸ்துக்கள் நுழைகின்றன.
கற்பூரச் செடியின் மணம், பழைய மகிழ்ச்சி, பழைய துன்பம்,
இளைய வெண்மழையிலே கிடைத்தன.

-மேற்கூறிய பாட்டை எடுத்துக்காட்டிவிட்ட பிறகு நோகுச்சி சொல்கிறார்:

வெண்மையுடையது மழை; இளையது என்ற முதலடியில் வியப்பில்லை. அதி சாமான்யமான வார்த்தை. கடைசி விருத்தம் வயிரம் போலிருக்கிறது. அதை மாத்திரம் தனிக் கவிதையாக வைத்துக்கொண்டு மற்றதைத் தள்ளிவிடலாம். ஜப்பானியப் புலவன் அப்படியே செய்திருப்பான். சிறிய பாட்டுப் போதும். சொற்கள், சொற்கள் சொற்கள், வெறும் சொற்கள் வளர்த்துக்கொண்டு போய் என்ன பயன்?

ஜப்பானிலே பதினெட்டாம் நூற்றாண்டில் ‘பூஸோன் யோஸாஹோ’ என்ற ஜப்பானியக் கவிராயர் ஒரு ஹொக்கு (பதினேழசைப் பாட்டு) பாடியிருக்கிறார். அதன் மொழிபெயர்ப்பு:

பருவ மழையின்
புழையொலி கேட்பீர்
இங்கென் கிழச் செவிகளே!

-இந்த வசனம் ஒரு தனிக்காவியம். பாட்டே இவ்வளவுதான்.

மேற்படி ஹொக்குப் பாட்டைப் படித்துவிட்டுத் திரும்பத் திரும்ப மனனம் செய்ய வேண்டும். படிப்பவனுடைய அனுபவத்திற்கேற்ப அதிலிருந்து நூறு வகையான மறைபொருள் தோன்றும்.

பலபலப் பதங்களை அடுக்கி ஏடுகளைப் பெருக்குவது சிறந்த கவிதையன்று. கேட்பவனுள்ளத்திலே கவிதை உணர்வை எழுப்பிவிடுவது சிறந்த கவிதை.

மற்றுமொரு நேர்த்தியான ஹொக்குப் பாட்டு, ‘வாஷோ மத்ஸுவோ’ என்றொரு ஜப்பானியக் கவியிருந்தார். அவர் வறுமையே விரதமாகப் பூண்டிருந்தாராம். ஒரு சீடன் இவரிடம் கல்வி கற்று முடித்து வீட்டுக்குத் திரும்புகையிலே இவரிடம் மூன்று ரியே, அதாவது ஏறக்குறைய முப்பது வராகன், காணிக்கையாகக் கொடுத்தான். இவர் ஒரு நாளுமில்லாதபடி புதிதாக வந்த இந்தப் பணத்தை வைத்துக் காப்பது தமக்குத் தொல்லையாதலால், வேண்டியதில்லை என்று திரும்பக் கொடுத்து விட்டாராம்..

இவருக்குக் காகா என்ற ஊரில் ஹொகுஷி என்றொரு மாணவர் இருந்தார். இந்த ஹொகூஷியின் வீடு தீப்பட்டெரிந்து போய்விட்டது. அந்தச் செய்தியை ஹொகூஷிப் புலவர், தமது குருவாகிய வாஷோ மத்ஸுவோ என்பவருக்குப் பின்வரும் பாட்டில் எழுதியனுப்பினார்:

தீப்பட்டெரிந்தது;
வீழும் மலரின்
அமைதி என்னே!

மலர் தனக்கு வாழுங்காலம் மாறிக் கீழே விழும்போது எத்தனை அமைதியோடியிருக்கிறதோ அத்தனை அமைதியோடு வரும் துன்பங்களை நோக்குகிறான். வீடு தீப்பட்டெரிந்தது. ஆனால் அது பற்றித் தன் மனம் அமைதி இழந்து போகவில்லை என விஷயத்தை ஹோகூஷி இந்தப் பாட்டின் வழியாகத் தெரிவித்தார்.

‘சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்’ ஜப்பானியக் கவிதையின் விசேஷத் தன்மையென்று நோகுச்சிப் புலவர் சொல்வதுடன் ஆங்கிலேயர் கவிதை இதற்கு நேர்மாறாக இருக்கிறதென்றும் சொல்கிறார். நமக்குள்ளே திருக்குறள் இருக்கிறது.

கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தரித்த குறள்.

கிழக்குத் திசையின் கவிதையில் இவ்விதமான ரசம் அதிகந்தான். தமிழ்நாட்டில் முற்காலத்திலே இது மிகவும் மதிப்பெய்தி நின்றது. ஆனாலும் கவிதை ஒரேடியாகச் சுருங்கியே போய்விட்டால் நல்லதன்று. ஜப்பானிலே கூட எல்லாக் கவிதையும் ஹொக்குப் பாட்டன்று. நோகுச்சி சொல்வதிலே அருமையான உண்மையிருக்கிறது.

எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு.

$$$


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s