உண்மையான தீபாவளி!

-மகாகவி பாரதி

மகாகவி பாரதி நடத்திவந்த ‘இந்தியா’ பத்திரிகையில், 1906-இல் அக்டோபர் 20-ஆம் தேதி இதழில் தலையங்கமாக வெளிவந்தது இந்தக் கட்டுரை. பின் ‘கலைமகள்’ பத்திரிகையில் 1941-இல் அக்டோபர் மாதம் வெளியாயிற்று.  நமது நேயர்களுக்கு மகாகவி பாரதியின் இக்கட்டுரையை தீபாவளிப் பரிசாக வழங்கி மகிழ்கிறோம்!

நம் நேயர்களுக்கெல்லாம் கங்கா ஸ்நான பலன் கிடைத்தது பற்றி மகிழ்ச்சி அறிவிக்கின்றோம்.

சரீர சுத்தியுடன் மனோசுத்தியும் ஆத்மசுத்தியும் அவர்களுக்குப் பிராப்தியாக வேண்டுமென்று விரும்புகிறோம்.

தற்காலத்திலே இந்து ஜனங்களின் ஆத்மாவைப் பற்றியிருக்கும் அழுக்குகளாகிய பயம், அதைரியம் முதலியவையெல்லாம் அகன்று போய், அவர்கள் ஒளி மிகுந்த உள்ளத்தவர்களாகி விளங்க வேண்டுமென்பதே நமது கோரிக்கை.

நமது நாட்டைப் பற்றிய நரகாசுரன் இறந்து போய்விட்டான்.  பகவானுடைய  சக்தியும் எல்லா ஐசுவரியங்களுக்கும் ஆதாரமும் ஆகிய லட்சுமிதேவி நம்மீது கருணை கொண்டவளாகி நரகாசுரனை வதைத்துவிட்டாள். நாமெல்லோரும் அதுபற்றிச் சந்தோஷமடைந்து மங்கள ஸ்நானம் செய்து, நல்லாடைகள் புனைந்து ஆனந்தவசமாகி இருக்கின்றோம்.

ஆனால் சிறுகுழந்தைகளைப் போல் விளையாட்டுக்கு ஸ்நானம் செய்தும், தீபங்கள் கொளுத்தியும் சும்மா இருந்துவிடாமல் நாம் செய்யும் செய்கையினது பொருளை நன்றாக அறிந்து காரியங்கள் செய்ய வேண்டும்.

எத்தனை தரம் கொன்றபோதிலும் மறுபடியும் மறுபடியும் உயிர் தளிர்ப்பது ராட்சதர்களுடைய சுபாவம். அவர்களுடைய மர்ம ஸ்தலத்தை அழித்த பிறகுதான் மடிவார்கள்.

அதுபோலவே லட்சுமிதேவி நரகாசுரனை வதைத்தவுடனேயே நாம் அவனுடைய மர்ம ஸ்தானத்தை அழித்து விடாமையால் அவன் மறுபடியும் தளிர்க்கத் தொடங்குகிறான். ஆதலால் நாம் இனியேனும் நரகாசுரனுடைய மர்ம ஸ்தலத்தை நன்றாக அறிந்து அதைத் தாக்காமல் இருப்போமானால் யாதொரு பிரயோஜனமும் கிடையாது.

தீபாவளி தினத்திலேகூட அந்நிய தேசத் துணிகள் வாங்கும் ஈசுவரத் துரோகிகள் நமது நாட்டிலே இருப்பார்களானால், நரகாசுரன் எவ்வாறு ஒழிவான்? லட்சுமிதேவி எப்படி ஜயமடைவாள்?

ஆரிய குமாரர்களே! ராட்சதர், அசுரர், பிசாசர் முதலான துர்க்குணங்களுடைய ஜன்ம விரோதிகளே! உங்களுடைய உண்மையான சுபாவத்தை அறிந்து கொள்ளுங்கள்.

மஹா வீரத்தன்மை பெற்று அஷ்ட லட்சுமிகளுக்கும் இருப்பிடமாகி விளங்குதற்குரிய வழிகளைத் தேடுங்கள். உங்களுக்கெல்லாம் பரிபூர்ணமான ஆரியத்தன்மையும் சர்வாபீஷ்டங்களும் சித்தியடைவதாக!

ஓம் தத்ஸத். வந்தே மாதரம்!

  • இந்தியா (20.10.1906)

$$$

One thought on “உண்மையான தீபாவளி!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s