பொருள் புதிது – தீபாவளி மலர் 2022

அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்! பொருள் புதிது - தீபாவளி மலர் 2022இன் உள்ளடக்கம்.... (தலைப்பைச் சொடுக்குக!)

தரித்த நறுந்திலகம்!

நமது நாட்டை ஒருங்கிணைத்ததில் கலை, இலக்கியங்களுக்கு எத்துணை பங்குண்டோ, அதே அளவுக்கு பண்டிகைகளுக்கும் பங்குண்டு. குறிப்பாக தீபாவளி நமது பண்டிகைகளுள் முதன்மையானது. ஆண்டு முழுவதும் உழைத்துக் களைத்த மக்களுக்கு பேரானந்தம் அளிக்க வரும் தீபாவளியை இருகரம் நீட்டி வரவேற்போம்! இந்த தீபாவளியை ஒட்டி, பொருள் புதிது தளத்தில் சிறப்புப் பகுதியாக ‘தீபாவளி மலர்’ வெளியாகிறது. இம்மலரின் இதழ்களை ஊன்றிப் படியுங்கள். உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் தெரியப்படுத்துங்கள்.

உண்மையான தீபாவளி!

மகாகவி பாரதி நடத்திவந்த ‘இந்தியா’ பத்திரிகையில், 1906-இல் அக்டோபர் 20-ஆம் தேதி இதழில் தலையங்கமாக வெளிவந்தது இந்தக் கட்டுரை. பின் ‘கலைமகள்’ பத்திரிகையில் 1941-இல் அக்டோபர் மாதம் வெளியாயிற்று.  நமது நேயர்களுக்கு மகாகவி பாரதியின் இக்கட்டுரையை தீபாவளிப் பரிசாக வழங்கி மகிழ்கிறோம்!

சனாதனத்தில் சமத்துவம்

தற்காலத்தில் பொருளறியாமல் அரசியல் வியாதிகளால் அதிக அளவில் புண்படுத்தப்படும் சொல் ‘சனாதனம்’. அதிலும், அதிலும், திராவிட அரசியல் (திராவிடம் என்பதும், அதுவும் பொருளறியாத - அநர்த்தக் கும்பலிடம் சிக்கித் தவிக்கிறது) பேசுவோர் சனாதனத்தை அழிப்பதாகவே முழங்குகின்றனர். இதனால், பலர் குழப்பமடைகின்றனர். அவர்களைத் தெளிவுபடுத்துகிறது திரு. பத்மன் எழுதியுள்ள இக்கட்டுரை....

நாட்டை இணைக்கும் தீபாவளி

நமது நாடு பண்பாடுகளின் சங்கமம்; நாகரிகங்களின் விளைநிலம். என்று தோன்றியது எனக் கூற இயலாத் தொன்மைச் சிறப்பும், ஆன்மிகமும் சமயமும் இணைந்த வாழ்வியலும், மானுடம் வியக்கும் உன்னதமான கலைச்சிறப்பும், பல மொழிகளில் எழுந்த இலக்கிய வளமும் சேர்த்துச் சமைத்த நாடு இது. இந்த நாட்டை அமைத்த பல காரணிகளுள் பண்டிகைகள் தலையாயவை. அவற்றுள் முதன்மை பெறுவது தீபாவளி. இதுகுறித்து, பத்திரிகையாளர் திரு. சேக்கிழான் எழுதிய கட்டுரை இது....

தீபாவளி வாழ்த்துகள்! (கவிதை)

'வாழும் பாரதி’ திரு. இசைக்கவி ரமணன் 'பொருள் புதிது’ வாசகர்களுக்கு அனுப்பிய கவிதை வாழ்த்துமடல்...

டானா கம்பியும் பொட்டு வெடியும்

எழுதத் தொடங்கியது பொட்டுவெடி தான்; ஆனால், முடியும்போது வாணவேடிக்கை காட்டுகிறார் மூத்த பத்திரிகையாளர் திரு. எஸ்.எஸ்.மகாதேவன். வண்ணங்களின் சிதறலாக, எண்ணங்களின் குவியல்களை நம் முன் காட்சிப்படுத்தி இருக்கிறார் இக்கட்டுரையில்...

அச்சமில்லை… அச்சமில்லை..!

திரு. இரா.மாது, திருச்சி தேசிய கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய அமரர் திரு. இரா.ராதாகிருஷ்ணன் அவர்களது புதல்வர்;  திருச்சியில் ஆசிரியராகப் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். பட்டிமன்ற மேடைகளை அலக்கரிக்கும் தமிழகம் அறிந்த, இனிய மேடைச்  சொற்பொழிவாளர். சுவாமி விவேகானந்தர் குறித்த இவரது அற்புதமான கட்டுரை இது…

புடவையும் சல்வார் கமீஸும் 

என் உடை, என் உரிமை - என்றெல்லாம் முழங்கும் பெண்ணியக் கூட்டம் ஒன்று நம்மூரில் உண்டு. அவர்களுக்காகவே, நமது நாட்டின் கலாச்சார உடையான புடவைக்கு சகோதர நாட்டில் ஏற்பட்ட சோதனையை இக்கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார், எழுத்தாளர் திரு. திருநின்றவூர் ரவிகுமார். நம் ஊரிலும் காட்சிகள் மாறி இருக்கின்றன; ஆனால் புடவை மீதான வெறுப்பாக இல்லாமல், மேற்கத்திய ஆடை மோகம் அதற்குக் காரணமாக இருக்கிறது. நாகரிகம் என்பதே சுழற்சி தானே?

காந்தாரா: வனக் கடவுளின் முழக்கம்

அண்டை மாநிலத்தில் கன்னடத்தில் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம், மிகக் குறுகிய நாட்களில் தேசிய அளவிலும், உலக அளவிலும் பாராட்டப்பட்டு பேசுபொருளாகி இருக்கிறது. பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை என்பது போல, எந்த விளம்பரமும் இல்லாமலே, அதீத ஊடக வெளிச்சம் இல்லாமலே, இதைச் சாதித்திருக்கிறது, ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘காந்தாரா’. தமிழ்த் திரையுலகின் ‘புள்ளிங்கோ’க்கள் பார்க்க வேண்டிய திரைப்படம்; பொன்னியின் செல்வன் எடுப்பதற்கு முன் இயக்குநர் மணிரத்னம் பார்த்திருக்க வேண்டிய திரைப்படம் இது. சமகாலத் திரையுலகில் ஒரு பெரும் திசைமாற்றத்தை வெளிப்படுத்தும் கருவியாக உள்ளதால், இப்படம் குறித்த விமர்சனங்கள் இங்கு வெளியாகின்றன.

ஆனந்தமாய் விளக்கேற்று! (கவிதை)

புதுமைக் கவிஞர் திரு. ஸ்ரீ.பக்தவத்சலம் எழுதிய மரபுக் கவிதை இது. மரபிலிருந்து கிளைப்பது தானே புதுமை?

அக இருள் நீக்கும் ஜோதிடக் கலை

‘விஜயபாரதம்’ வார இதழின் முன்னாள் ஆசிரியரான திரு. குரு.சிவகுமார், ஜோதிட வல்லுநரும் கூட. ஜோதிடத்தின் பெயரால் நடத்தப்படும் மோசடிகளை கடுமையாகக் கண்டிக்கும் இவர், ஜோதிடம், கணிதமும் வானியலும் அனுபவ ஞானமும் இணைந்த ஒரு கலை என்கிறார். இவரது அறிவுரைக் கட்டுரை இது.

வேலையே பிரார்த்தனை, ஈடுபாடே தியானம்!

முன்னோடி பெண் தொழில் முனைவோரும், நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள எழுத்தாளருமான செல்வி காம்கேர் கே.புவனேஸ்வரி, சென்னையில் உள்ள, மென்பொருள் தயாரிக்கும் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் இயக்குநருமாவார். அவர் எழுதி, காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனம் வெளியிட்டுள்ள ‘இலக்கில் கரையுங்கள்’ என்ற இ-புத்தகத்தில் (EBook) இருந்து சில பகுதிகள் இங்கே நமக்காக...

கம்பன் பாடிய ‘குறள்’

பெங்களூரில் வசிக்கும் தகவல் தொழில்நுட்ப நிபுணரான திரு. ஜடாயு, இலக்கிய ஆர்வலர்; ‘தமிழ் ஹிந்து’ இணையதளத்தின் ஆசிரியர் குழு உறுப்பினர்; கம்பனில் தோய்ந்தவர். வாமனாவதாரம் குறித்த கம்ப ராமாயணச் செய்யுள்களை விளக்கி, தமிழ் ஹிந்து இணையதளத்தில் இவர் எழுதிய அற்புதமான ஆய்வுக் கட்டுரை இங்கே...

மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும்

தமிழகத்தின் சமகால பாரதீய சிந்தனையாளர்களுள் திரு. அரவிந்தன் நீலகண்டன் குறிப்பிடத்தக்கவர்; ஆழி பெரிது, ஹிந்துத்துவம்- ஓர் எளிய அறிமுகம், உடையும் இந்தியா, நம்பக்கூடாத கடவுள்- உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; சமரசமில்லாமல் உண்மைக்குக் குரல் கொடுப்பவர். ‘ஸ்வராஜ்யா’ பத்திரிகையின் ஆசிரியர் குழு உறுப்பினராக இவர், தமிழ் ஹிந்து இணையதளத்தில் எழுதிய கட்டுரை இங்கு மீள்பதிவாகிறது...