-இரா.மாது

திரு. இரா.மாது, திருச்சி தேசிய கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய அமரர் திரு. இரா.ராதாகிருஷ்ணன் அவர்களது புதல்வர்; திருச்சியில் ஆசிரியராகப் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். பட்டிமன்ற மேடைகளை அலக்கரிக்கும் தமிழகம் அறிந்த, இனிய மேடைச் சொற்பொழிவாளர். சுவாமி விவேகானந்தர் குறித்த இவரது அற்புதமான கட்டுரை இது…
உலக இயக்கம் யாருக்காகவும் நின்று விடுவதில்லை. இந்தப் பிரபஞ்சத்தில் பிறந்த பலர் யாராலும் அறியப்படாமல் வாழ்ந்துவிட்டுப் போய் விடுகிறார்கள். அவர்கள் வாழாமல் வாழ்ந்தவர்கள். ஒருசிலர் நொடியில் தோன்றி மறையும் மின்னலைப் போல இப்பூவுலகில் தோன்றி, தாங்கள் வாழ்ந்ததற்கான அடையாளத்தை அழுத்தமாய்ப் பதித்துவிட்டு மறைந்தும் மறையாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
வாழ்க்கையில் தடுமாறி நிற்கிற மக்களின் துயர் நீக்க தம்மால் இயன்ற பணியைத் தன்னலம் கருதாது ஆற்றிவிட்டு, அவர்கள் தங்கள் இயக்கத்தை மறைத்துக் கொள்கின்றனர். அவர்கள் இயங்கிய காலத்தில் அளித்துவிட்டுச் சென்ற அவர்தம் வாழ்க்கையே, என்றும் இயங்கிக் கொண்டிருக்கின்ற இந்த உலகத்திற்கும் உலக உயிர்களுக்கும் துணையாய் அமைந்து விடுகின்றது.
போக வாழ்க்கை என்னும் சேற்று நிலத்தில் உழன்று கிடக்கின்ற மக்கள் எழுந்து நிற்கவும் சேற்று நிலத்தில் அவர்கள் வழுக்கி விழுந்துவிடாமல் ஊன்றுகோலாய் நின்று காத்து வருவதும் ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச்சொல்லே ஆகும்.
அத்தகு சான்றோர் எதற்காகவும் கலங்கி நின்றதில்லை. பயம் அவர்கள் அறியாத ஒன்று. அதையே தங்களை நாடி வருபவர்களுக்கும் சொல்லிச் சென்றார்கள்; வாழ்ந்தும் காட்டினார்கள். அத்தகு வீர புருஷர்களில் ஒருவர் தான் வீரத்துறவி சுவாமி விவேகானந்தர்.
Be not afraid of anything, you will do marvellous work, the moment you fear you are nobody – “எதற்காகவும் அஞ்சி நின்றுவிடாதே. அப்படி அஞ்சி நின்று விட்டால் உன்னால் செயற்கரிய செயலைச் செய்ய இயலாது போகும். எப்போது நீ பயந்து சாகிறாயோ? அப்போதே நீ எதற்கும் தகுதியற்றவனாகி விடுகிறாய்” என்பது சுவாமிஜியின் வாக்கு.
சொல்வது மட்டும் அவருடைய செயல் அன்று; சொன்னபடி நடந்து காட்டுவது அவரது குறிக்கோள். தன் வாழ்க்கையில் துன்பத்தின் உச்சியில் நின்றபோதும் கலங்காது தன் குறிக்கோளை அடைவதற்கு மேன்மேலும் முயன்று அதில் வெற்றி கண்டவர் அவர்.
குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர் எதைக் கருதி ஒரு இளைய சந்நியாசி படையை உருவாக்க நினைத்தாரோ, அவர்கள் அதனைச் செயலாக்கத் தொடங்கிய நேரம். அவர்கள் தங்களது துறவு வாழ்விற்குத் தக்கபடி தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருந்த நேரம். சமுதாயம் அவர்களை அங்கீகரிக்கத் தயங்கியது. அந்த இளைஞர்கள் அவர்களை நன்கு அறிந்தவர்களாலேயே முற்றிலும் புறக்கணிக்கப் பெற்றனர். அவர்களை நோக்கிக் கேலியும் கிண்டலுமான பேச்சுகள் அம்புகளாய்ப் பாய்ந்து மனத்தைத் தைக்கத் தொடங்கின. யாரும் தங்கத் தயங்கும் ‘பேய் வீடு’ என்றழைக்கப்படும் வீடே அவர்களுக்குத் தங்கும் இடமாயிற்று. அவர்களைச் சந்தேகக் கண்ணோடுதான் அனைவரும் நோக்கினர்.
மறுபுறம் இல்லற வாழ்க்கையைத் துறந்து தவம் செய்யும் நோக்கில் இருந்த இளைஞர்கள் தங்கள் பக்கம் இருந்தால் நன்றாகயிருக்கும் என்று நம்பிய கிறிஸ்தவ மிஷனரிகள் இளைஞர்களைத் தங்கள் பக்கம் இழுக்க விரும்பின; பணம் தருவதாகக் கூறின. அதற்கு மயங்காதபோது பெண்களைக் கூடத் தருவதாகக் கூறினர்.
இவற்றையெல்லாம் கண்டு அஞ்சி நடுங்காது, தங்கள் கொள்கையில் உறுதியோடு நின்றனர் அந்த வீர இளைஞர்கள். அவர்கள் அனைவரையும் வழிநடத்திய பெருமை சுவாமிஜியையே சேரும்.
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!
– என்ற மகாகவி பாரதியின் வைர வரிகள் எவ்வளவு உண்மையான வரிகள்!
அந்தக் காலத்தில் சந்நியாசி கோலத்தில் திரிபவர்கள் பலரால் மதிக்கப்பட்டனர்; சிலரால் அவமதிக்கபட்டுத் துன்புறுத்தப்பட்டனர். சுவாமிஜி ஒருமுறை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது குதிரை மீது அமர்ந்து வந்த போலீஸ்காரர் ஒருவர் அவரை அவமரியாதையாகப் பேசியதோடு மிரட்டவும் தொடங்கினார்; “என்னுடன் வா! உன்னை சிறையில் அடைத்து விடுகிறேன்” என்றார்.
சுவாமிஜியோ அமைதியாக, ” எத்தனை நாட்களுக்கு?” என்றார்.
“பதினைந்து நாட்களோ, அல்லது ஏன் ஒரு மாதமாகக் கூடயிருக்கலாம்” என்றார் போலீஸ்காரர்.
சுவாமிஜி அவரைப் பார்த்துக் கேட்டார், ” ஒரு ஆறு மாதத்திற்கு சிறையிலேயே இருப்பதற்கு இயலாதா?”
அந்த அதிகாரிக்கோ தூக்கிவாரிப் போட்டது. “ஏன் இப்படிக் கேட்கிறாய்?” என்றார்.
சுவாமிஜியோ, ” நான் இப்போது வாழும் வாழ்க்கையை விட சிறையில் வாழ்வது மிக எளிது. காலை முதல் மாலை வரை இப்படிக் கொளுத்தும் வெயிலில் நடக்க வேண்டாம். வேளைக்கு உணவு கிடைத்து விடுகிறது. இங்கே உணவு நிரந்தரமில்லை” என்று சுவாமிஜி பேசப் பேச, வெறுப்பின் உச்சிக்குப் போன போலீஸ் அதிகாரி “விலகிப் போ” என்று கூறிவிட்டு குதிரையை அங்கிருந்து பறக்க விட்டான்.
தாய்நாட்டில் மட்டுமன்று, அமெரிக்காவில் ஒரு கண்காட்சியைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது எவனோ ஒருவன் பின்னால் இருந்து அவரது தலைப்பாகையைப் பிடித்து இழுத்தான். ஒருநாள் அவரை ஒருவன் பிடித்துத் தள்ளிவிட்டான். நாகரிகத்தின் உச்சியில் நிற்பதாகப் பெருமை பேசித் திரிந்த அந்த நாட்டில், சுவாமிஜி ஒரு இந்து என்பதற்காகவே, நாற்காலியில் உட்காரக்கூட இடம் கொடுக்க மறுத்த சம்பவமும் நடந்தேறியது. ஆனால் இந்த அவமானங்களைக் கண்டு அவர் அஞ்சி நடுங்கியதில்லை; மனம் கலங்கியதில்லை.
துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!
துறவிகள் வெறுத்து ஒதுக்க வேண்டியது காம எண்ணம். சிகாகோவில் உரை நிகழ்த்திய பிறகு சுவாமிஜியின் புகழ் பெண்கள் மத்தியில் சூறாவளியாய் வீசத் தொடங்கி விட்டது. அவர் உரை நிகழ்த்தி முடித்த உடனேயே வரிசை வரிசையாக பெஞ்சின் மீது ஏறி அவரைக் கண்டால் போதும் என்று சுவாமிஜியை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்தனர்.
“இளைஞனே! இந்தப் பெண்களின் படையெடுப்பிற்குத் தாக்குப் பிடித்து விட்டாயானால் நீ உண்மையிலேயே கடவுள் தான் என்று எனக்குள் நான் சொல்லிக் கொண்டேன்” என்று பிற்பாடு இதுகுறித்து விவேகானந்தரே எழுதுகிறார்.
சுவாமிஜியைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று தபால் மூலம் கேட்ட பெண்களும் உண்டு. அதற்கெல்லாம் அவர் பதிலே எழுதாமல் விட்டு விடுவார். அவரிடம் நேரில் வந்து திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய பெண்களும் உண்டு.
ஒரு சமயம் ஒரு பெரிய பணக்காரி, “சுவாமி, என்னையும் எனது திரண்ட சொத்தையும் தங்களுக்கே தந்து விடுகிறேன். என்னைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்றாள்.
“இதோ பாருங்கள், நான் ஒரு இந்து மதத்தைப் பின்பற்றும் துறவி. என்னால் திருமணம் செய்துகொள்ள இயலாது. என்னைப் பொருத்த வரை பெண்கள் அனைவருமே என் தாய்” என்று மறுத்து விட்டார்.
“அமெரிக்கப் பெண்கள் எளிதில் உணர்ச்சிவயப்பட்டு விடுகிறார்கள். காதல் களியாட்டங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர். நானோ, இது ஏதும் அறியாத ஒரு வினோத மிருகம். என் உள்ளத்தில் காதல் எழ வாய்ப்பே இல்லை. அதனால் அவர்கள் அனைவரையும் என் மீது மதிப்புக் கொள்ளுமாறு செய்ததோடு, என்னை அப்பா! அண்ணா! என்றழைக்கும்படிச் செய்து விட்டேன். ஒருமுறைகூட காம எண்ணம் என்னுள் புக நான் அனுமதிக்கவில்லை. என் மனம், எனது சிந்தனை, என் ஆற்றல்கள் அனைத்தையும் ஓர் உயர்ந்த போக்கில் போகுமாறு பயிற்சி அளித்தேன். அது யாராலும் தடுக்க முடியாத ஒரு மாபெரும் ஆற்றலாக உருவெடுத்தது” என்று எழுதுகின்றார் சுவாமிஜி.
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!
என்ற மகாகவி பாரதியின் வாக்கிற்கு ஒரு எடுத்துக்காட்டு சுவாமிஜி.
மைசூர் மாகாண திவான் சேஷாத்ரி ஐயரின் விருந்தினராகத் தங்கியிருந்தார் சுவாமிஜி. அரசவையில் அனைவரும் கூடியிருக்கிற வேளையில் திவான் குறித்தும் மற்றவர்கள் குறித்தும் அரசர் கேட்ட கேள்விகளுக்கு, ஒளிவு மறைவு இன்றி உள்ளதை உள்ளபடி உள்ளத்தில் கருதியதைக் கூறி விட்டார் சுவாமிஜி.
அரசரோ அவரை தனிமையில் சந்தித்து, “சுவாமிஜி, எல்லோர் முன்னிலையிலும் இப்படி வெளிப்படையாகப் பேசினால், அவர்களில் யாராவது உங்களை விஷம் வைத்துக் கொன்று விடுவார்கள்” என்றார். சுவாமிஜி அஞ்சவில்லை; சிரிப்பே பதிலானது. ஆனால், அமெரிக்காவிலோ அது நடந்தே விட்டது.
அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் சுவாமிஜியின் புகழ் பரவுவது கண்டு வெகுண்டெழுந்த பாதிரிகளில் சிலர் என்ன முயன்றும் தங்களுடைய முயற்சியில் தோல்வியே கண்டனர். டெட்ராய்ட்டில் சுவாமிஜியை ஒரு விருந்திற்கு அழைத்தனர். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட காபியைக் குடிப்பதற்காக வாயருகே சென்ற சுவாமிஜியைக் குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர் “அதைக் குடிக்காதே! அதில் விஷம் கலந்துள்ளது” என்று (அசரீரியாக) தடுத்து விட்டார்.
ஆண்டவன் மீது நம்பிக்கையும் குருவின் பரிபூரண அருளும் சுவாமிஜி பெற்றிருந்த காரணத்தால்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
நஞ்சை வாயி லேகொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!
என்பது நிரூபணமானது.
சுவாமிஜியின் தந்தை விஸ்வநாத தத்தர் மறைந்த பிறகு குடும்பம் ஒரே நாளில் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டது; நம்பிய உறவினர்கள் நட்டாற்றில் விட்டனர். அவர் தந்தையின் பெயரைப் பயன்படுத்தி அவர்கள் செய்த செலவெல்லாம் இவர்கள் தலையில் கடனாய் இறங்கியது. பல நாட்கள் பட்டினி. குருதேவரைச் சென்று சந்திப்பது ஒன்று தான் ஆறுதல்.
ஒருமுறை அவரது நண்பர் இறைவன் குறித்தான ஒரு பாடலைப் பாடிய பொழுது, சுவாமிஜியோ, “போதும் நிறுத்து உன் பாட்டை! யார் பசியால் வாடி வதங்கவில்லையோ, யாருக்கு மானத்தைக் காப்பாற்ற போதுமான அளவிற்குத் துணி இருக்கிறதோ, யார் பஞ்சணையில் சுகமாகப் படுத்து உறங்குகிறார்களோ, அவர்களுக்கு வேண்டுமானால் நீ சொல்வது போல ஆண்டவன் இனிமையானவனாக இருக்கலாம். ஆனால் வாழ்க்கையின் யதார்த்தமான உண்மையின் முன்பு அவையெல்லாம் கேலிக்கூத்தாகவே எனக்குத் தெரிகின்றன” என்று கோபமாகக் கூறி விட்டார்.
“வறுமையின் எத்தகைய கோரப் பற்களில் அரைபட்டுக் கொண்டிருந்தால் என் வாயிலிருந்து இப்படிப்பட்ட சொற்கள் வந்திருக்கும் என்பதை என் நண்பன் எப்படி அறிவான்?” என்று எழுதுகிறார் சுவாமிஜி.
பரிவ்ராஜக வாழ்க்கையில் இந்தியா முழுவதும் சுற்றிவந்த காலத்திலும், பல நாள் பட்டினியோடு கிடந்தாலும்கூட, யாரிடமும் சென்று யாசகம் கேட்டதில்லை சுவாமிஜி. நாடி வந்ததை ஏற்றுக்கொண்டு பிச்சை ஏற்கும் நிலை ஏற்பட்டபோதும், தன்மானம் குன்றாது நின்று வழிகாட்டியவர் அவர்.
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
பிச்சை வாங்கி யுண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!
இச்சை கொண்ட பொருளெலாம் இழந்து விட்ட போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!
சுவாமிஜி முழுப்பட்டினியால் சாகும் நிலையில் கிடந்திருக்கிறார். குரல் தளர, களைப்பு மேலிட, உயிரற்ற உடல் போலக் கிடந்தாலும், அவர் உள்மனத்திலிருந்து ஒரு குரல் எழும்- “தளராதே! உனக்குப் பயமோ சாவோ இல்லை. பசியோ தாகமோ இல்லை. இயற்கை முழுவதும் திரண்டு வந்தாலும், உன்னை நசுக்கவோ அழிக்கவோ முடியாது. உன் பலத்தை உணர்ந்து கொள். எழுந்து நட” என்று தட்டி எழுப்பும். உடனே புத்துணர்ச்சி பெற்றவராக எழுந்து விடுவார் சுவாமிஜி.
“இருள் உன்னைச் சூழ்கின்ற போதிலெல்லாம் உன் உண்மை இயல்பை வலியுறுத்து. துன்பங்கள் மலையளவு தோன்றி உன்னை நிலைகுலையச் செய்யலாம். ஆனால் இவையெல்லாம் வெறும் மாயை. பயப்படாதே! மாயை மறைந்து விடும். நசுக்கு! அது ஒடிவிடும். காலால் மிதி! அது இறந்து விடும். பயத்திற்கு ஒருபோதும் இடம் கொடுக்காதே” என்று சுவாமிஜி எழுதியுள்ளதை இன்றைய இளைஞர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!

சுவாமி விவேகானந்நரின் சகோதரர் பூபேந்திரநாத தத்தர், விவேகாநந்தரின் சிஷ்யை சகோதரி நிவேதிதை ஆகியோரைப் பற்றி, தனது இறவாக் கவிதைகள் மூலம் இருவர் புகழையும் அமரத்துவம் ஆக்கிய மகாகவி பாரதி, விவேகானந்தர் குறித்து தனிக் கவிதையில் யாதும் பதிவு செய்யவில்லையே என்ற ஏக்கம் பலருக்குண்டு. ஆனால் பாரதியோ சுவாமிஜியின் வாழ்க்கையையே கவிதையாக்கிக் குறிப்பால் உணர வைத்து விட்டார்.
அச்சமின்றி வாழ்ந்த சுவாமிஜியின் வாழ்க்கையை அர்த்தத்தோடு புரிந்து கொண்டால், வாழ்வில் அச்சமேது? அவலமேது? என்றும் யாருக்கும் அச்சமில்லை! அச்சமில்லை!
$$$
One thought on “அச்சமில்லை… அச்சமில்லை..!”