டானா கம்பியும் பொட்டு வெடியும்

-எஸ்.எஸ்.மகாதேவன்

எழுதத் தொடங்கியது பொட்டுவெடி தான்; ஆனால், முடியும்போது வாணவேடிக்கை காட்டுகிறார் மூத்த பத்திரிகையாளர் திரு. எஸ்.எஸ்.மகாதேவன். வண்ணங்களின் சிதறலாக, எண்ணங்களின் குவியல்களை நம் முன் காட்சிப்படுத்தி இருக்கிறார் இக்கட்டுரையில்...

அறுபது  ஆண்டுகளுக்கு முன் தமிழக கிராமங்களில் பொட்டு வெடி (கேப்), ஓலை வெடி- இவைதான் தீபாவளியைக் கொண்டாட பட்டாசு! பொட்டு வெடியை கடையில் வாங்கக்கூட வசதி இல்லாத வீட்டு பிள்ளைகள், குறிப்பாக தென் தமிழக ஊரக பகுதிகளில், தாங்களாக ‘ட’னா கம்பி வடிவமைத்து கிராமத்து கொல்லரிடம் செய்து வாங்கி  கேப்  வெடித்துக் கொண்டாடுவார்கள்.  படத்தில் உள்ளது போல ஒருபுறம் வளையம் மறுபுறம் ஒரு செப்பு கொண்ட டானா வடிவ கம்பி;  செப்பில் நுழையும் அளவுக்கு சிறு கம்பி, அதன் ஒரு முனையில் வளையம்.  பொட்டு வெடி கிடைத்தால் வைப்பது. அல்லது தீக்குச்சியின் மருந்தை காக்கா பொன் பளபள காகிதத்தில் உருட்டி அதற்குள் வைத்து சிறு கம்பியை நுழைத்து பம்பர சாட்டையால் இரு வளையங்களையும் இறுக்கமாக இணைத்து விட்டால் போதும்.  கல்தரையில் சின்ன கம்பி மேலுள்ள வளையத்தை தட்டினால்  பொட்டு வெடியோ, தீக்குச்சி மருந்தோ ‘டப்’ சத்தத்துடன்  வெடிக்கும். 

சிறுவர்களின் ஊக்கம், கிராமத்துக் கொல்லரின் கை நுணுக்கம் இரண்டும் சேர்ந்ததில்  தீபாவளியே அமர்க்களம் ஆகிவிடும்.

தீபாவளி இரு நாளுக்கு முன்தினம் தையல்காரர் கடை வாசலில் தைத்த சட்டையை வாங்கிக் கொள்வதற்காக காத்துக் கிடக்கும் கூட்டத்தை ஒரு காலத்தில் பார்க்க முடிந்தது அனேகமாக அதேபோல, டானா  கம்பி அடித்து தரச் சொல்லி கொல்லரிடம் சொல்லிவிட்டு தீபாவளிக்கு முன் தினம் அவருடைய பட்டறை வாசலில் தவம் கிடப்பார்கள் ஊர்ச் சிறுவர்கள்.

மதுரை மாவட்ட கிராமப்புறச் சிறுவர்கள் கொடிக்காலில் வெற்றிலை கிள்ளும் கையடக்கமான அரிவாள் கொண்டு கட்டையை சீவிச் சீவி பம்பரம் உருவாக்குவார்கள் –  தாங்கள் விளையாடுவதற்காக. உருவான பம்பரத்திற்கு ஆணி பொருத்திவிட்டு அதை திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டிருப்பார்கள் … தஞ்சை பெரிய கோயில் நிர்மாணம் முடித்த தலைமை ஸ்தபதியார் மனநிலையில் அவர்கள் இருப்பார்கள். 

இருப்பதை வைத்து  இப்படி புத்தாக்கம் படைப்பது ‘இன்னோவேஷன்’ (மாத்தி யோசி?) எனப்படுகிறது. பாரத அரசு இந்தப் புத்தாக்க விஷயத்தில்  பள்ளிச் சிறார்களிடையே  ஆர்வம் ஏற்படுத்த முயன்று வருகிறது. கர்ணாவதியில் (ஆமதாபாத்) உள்ள தேசிய இன்னோவேஷன் ஃபவுண்டேஷன் ஆண்டுதோறும் பிள்ளைகளின்  புத்தாக்கங்களை வரவேற்கிறது, பரிசளிக்கிறது.  

கொரோனா காலகட்டத்தில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் வெண்டைக்காய் விளைச்சல் அமோகம்.  ஆனால் முழு அடைப்புக் காரணமாக அதை உரிய நேரத்தில் சந்தைப்படுத்த முடியவில்லை.  விவசாயிகள் மானியம் கோரி அரசாங்கத்தை  நாடினார்கள்.  சிற்றூர் ஒன்றில் ஒரு பள்ளி ஆசிரியை வெண்டைக்காயின் மதிப்புக் கூட்டு உத்தியைக் கையிலெடுத்தார்.   தேங்கிக் கிடந்த வெண்டைக்காயை ஊறுகாய் ஆக்கினார். இந்தப் பணிக்காக ஊரில் ஏராளமான பெண்களுக்கு வேலையும் ஊதியமும் கூட கிடைத்தது. மதிப்பு கூட்டப்பட்ட வெண்டைக்காய்  கடைவீதி அடைந்தது; அதிக விலைக்கு விற்க முடிந்தது; அதிக லாபம் பார்க்க முடிந்தது!

பல ஆண்டுகளுக்கு முன் திருவாரூரை அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஏழெட்டு இளைஞர்கள் முறை வைத்துக்கொண்டு நகரத்திற்குச் சென்று வருவார்கள். காலையில் சென்று மாலையில் திரும்புவார்கள். போகும்போது ஊரில் யாருக்கு என்ன பொருள் தேவை என்று கேட்டு குறித்துக்கொண்டு, தொகையும் பெற்றுக் கொண்டு செல்வார்கள். மாலை வரும்போது அதை வாங்கிக்கொண்டு அந்தந்த வீடுகளில் ஒப்படைப்பார்கள்.  இதே ஒரு பொழுதுபோக்காக, சேவையாகச் செய்தார்கள்.  இன்று ஸ்விக்கி,  சோமடோ வகையறா நிறுவனங்கள் இந்த உத்தியை கையில் எடுத்து நாலு காசு பார்க்கிறார்கள்.  தகவல் தொழில்நுட்பத்தை கருவியாக்கிக் கொள்கிறார்கள்; ஏராளமான பேருக்கு வேலை கிடைக்கிறது. 

பள்ளி மாணவ- மாணவிகள்,  அதாவது இளைய பாரதம், எப்படி யோசிக்கிறது? மாற்றி யோசி என்று போதிக்கிறது இந்திய இன்னோவேஷன் ஃபவுண்டேஷன் பாரதத்தின் பல்வேறு பகுதிகளில் படிக்கும் மாணவ மாணவிகளின் கெத்தான, உருப்படியான யோசனைகளைத் தொகுத்துள்ளது அதிலிருந்து ஒரு சில:

பொது குடிநீர் வடிகட்டி

வசதி குறைவான வீடுகளிலும் வடிகட்டிய தண்ணீர் கிடைக்கச் செய்ய ஊர் பொது குழாயிலேயே வடிகட்டிக் கருவியை இணைத்து விட்டால் போதும் என்று, மாற்றி யோசித்து சொல்கிறார்கள் சிக்கிம் மாநிலத்தின் ஸோரிங் லெப்சா (4ஆம் வகுப்பு), சுபஷ் பிரதான் (5ஆம் வகுப்பு) இருவரும். 

கட்டுப்போட்ட கைக்கு சாய்மானம்

கை எலும்பு முறிவுக்கு ஒரு நாடா கழுத்தை சுற்றி  வந்து கட்டுப்போட்ட கையைத் தாங்கும்.   மாதக்கணக்கில் இதுபோல செய்வது கழுத்திலும் தோளிலும் வலி ஏற்படுத்தும். எனவே கட்டுப்போட்ட கையை வைத்துக்கொள்ள  இடுப்பைச் சுற்றி  வரும் நாடா  கட்டுப்பட்ட கையின் அடிப்புறம் ஒரு  சாய் மானத்தைக் கொண்டிருக்கும். நகராமல் இருக்க இன்னொரு நாடா கையை சாய்மானத்துடன் இணைக்கும். இப்படி மாற்றி யோசித்தவர், பெங்களுருவில் ஐந்தாவது வகுப்பு படிக்கும் ஆதி குமார்.

கேஸ் அடுப்பு ஏற்றுவதற்கு பாஸ்வேர்டு

வீட்டில் கேஸ் அடுப்புக் குமிழை குழந்தைகள் திருப்பி எரிவாயு கசிவு அபாயம் ஏற்படுவதைத் தடுக்க, அடுப்பை  ஏற்ற  பாஸ்வேர்டு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது, சிக்கிம் மாநிலத்தில் 10 வது படிக்கும் நிம் லெப்சா சொல்லும் அருமையான யோசனை. 

தெர்மாமீட்டரில் வண்ணங்கள்

உடல் உஷ்ணம் எத்தனை டிகிரி என்று அறிய தெர்மாமீட்டரை  பயன்படுத்துகிறோம்.  படிக்கத் தெரியாதவர்கள் கூட தெரிந்து கொள்ளும் விதத்தில் தெர்மாமீட்டர் சிவப்பு காட்டினால் அவசர கேஸ், ஆரஞ்சு நிறம் காட்டினால் சுமாரான  ஜுரம்,  பச்சை காட்டினால்  காய்ச்சல் இல்லை…  இப்படி ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று, பஞ்சாபில் 10 வது படிக்கும் ஜஸ்பிரீத் கவுர், கர்நாடகாவில் பன்னிரண்டாவது வகுப்பு படிக்கும் ஜனமேஜய ராத்தோர் ஆகிய இருவரும் யோசனை தெரிவித்தார்கள்.

ஆக்கத்துக்காக அழிப்பு!

சென்னை, வியாசர்பாடி, விவேகானந்தர் வித்யாலயாவில் 11வது படிக்கும் போது அரவிந்த் கோபாலகிருஷ்ணன் தெரிவித்த யோசனை இது: பிரின்டர் போல ஒரு அமைப்பு இருக்க வேண்டும். அச்சிட்ட தாள்களை அதில் செலுத்தினால்  அதில் உள்ள எழுத்துக்கள் எல்லாம் அழிக்கப்பட்டு வெள்ளைத்தாளாக வெளிவர வேண்டும். இவ்வாறு  செய்வதால் அந்தத்  தாளை மறுபடியும் பயன்படுத்த  முடியும்.

ஊன்றிக் கவனியுங்க, இது  எல்லாம் வல்ல ஊன்றுகோல்

எஸ்.எஸ்.மகாதேவன்

முதியவர்களுக்கும் பார்வைத்திறன் அற்றவர்களுக்கும் மிகவும் பயன்படும் ஊன்றுகோல் பல்வேறு வசதிகளோடு உருவாக்கப்பட வேண்டும். உதாரணமாக எத்தனை காலடி வைத்து நடந்தார் என்று சொல்ல வேண்டும், மருந்து எடுத்துக்கொள்ளும் நேரத்தைச் சொல்ல வேண்டும், இருக்கும் இடம் எது என்று தெரிவிக்க வேண்டும், ஆபத்து என்றால் எச்சரிக்க வேண்டும், இடறி விழுந்ததைப் பதிவு செய்து, உதவ வருகிறவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இப்படிப்பட்ட எல்லாம் வல்ல ஊன்றுகோலை (வாக்கிங் ஸ்டிக்) உருவாக்க ஆசைப்படுகிறவர் புதுதில்லியின் பதினோராவது வகுப்பு மாணவர் சித்தாந்த் கன்னா.

நமது மாணவ மாணவிகள் புத்திக் கூர்மை உள்ளவர்களாக, கெட்டிக்காரர்களாக இருப்பது மட்டுமல்ல; உபயோகமாக ஏதாவது செய்ய வேண்டுமே, சிரமத்தில் இருப்பவர்களுக்கு சற்று கை கொடுக்க வேண்டுமே என்ற நல்ல எண்ணம் கொண்டவர்களாகவும் இருப்பது இந்த உதாரணங்களில் இருந்து தெளிவாகிறது அல்லவா?

$$$

One thought on “டானா கம்பியும் பொட்டு வெடியும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s