-இசைக்கவி ரமணன்

‘வாழும் பாரதி’ திரு. இசைக்கவி ரமணன் பொருள் புதிது வாசகர்களுக்கு அனுப்பிய கவிதை வாழ்த்துமடல்...
ஒற்றை வானம் ஒற்றைக் கதிரோன்
ஒன்றே நிலவு மறவாதீர்!
ஒன்றே நம்கடல் ஒற்றுமை என்னும்
ஒன்றே நம்கடன் பிறழாதீர்!
கற்றை விரிக்கும் கதிரின் கரங்கள்
தரையில் தொடாத தலையில்லை.
காணும் துன்பம் யாவும் மனிதனின்
கருணைக் குறைவே வேறில்லை! 1
.
எங்கும் இருக்கும் இறைவனின் பெயரால்
எத்தனை எத்தனை மதங்களடா!
எவனானாலும் ஒருநாள் இறப்பான்
எதற்கோ இத்தனை சாதியடா!
இங்கே வறுமை இருக்கும் வரையில்
எவனும் குற்ற வாளியடா!
ஏழை என்பவன் வாழத் தவித்தால்
ஏற்றம் அனைத்தும் வெட்கமடா! 2
.
இருளைக் கிழிக்கும் எந்த ஒளியும்
இருளி லிருந்தே பிறக்கிறது.
இன்பமும் துன்பமும் அமைதி என்னும்
வெளியில் கனிந்து முடிகிறது.
அருளே வாழ்வெனும் அரிய நினைப்புடன்
அழகிய தீபம் ஏற்றுங்கள்!
அடுத்தவன் இருளை அகற்றுவ தெதுவோ
அதுவே ஒளியெனப் போற்றுங்கள்! 3
.

கண்முன் சிரிக்கும் கடமை அதுதான்-
கண்கள் அறிந்த கடவுளடா!
கருணை, இரக்கம், காதல், நேசம்
இதுதான் தகுந்த பூசையடா!
எண்ணம் அனைத்தும் திரியாய் ஆக்கி
ஏற்றிடு வோமே ஒரு தீபம்!
இறைவன் வியக்கும் மனிதச் சுடரில்
இசைத்திடு வோமே புது கீதம்! 4
$$$
One thought on “தீபாவளி வாழ்த்துகள்! (கவிதை)”