நாட்டை இணைக்கும் தீபாவளி

-சேக்கிழான்

நமது நாடு பண்பாடுகளின் சங்கமம்; நாகரிகங்களின் விளைநிலம்.  என்று தோன்றியது எனக் கூற இயலாத் தொன்மைச் சிறப்பும், ஆன்மிகமும் சமயமும் இணைந்த வாழ்வியலும், மானுடம் வியக்கும் உன்னதமான கலைச்சிறப்பும், பல மொழிகளில்  எழுந்த இலக்கிய வளமும் சேர்த்துச் சமைத்த நாடு இது. இந்த நாட்டை அமைத்த பல காரணிகளுள் பண்டிகைகள் தலையாயவை. அவற்றுள் முதன்மை பெறுவது தீபாவளி. இதுகுறித்து, பத்திரிகையாளர் திரு. சேக்கிழான் எழுதிய கட்டுரை இது....

பண்டிகைகள்  மக்களுக்கு ஆனந்தம் அளிப்பவை மட்டுமல்ல, இவை தான் மக்களை ஒரு சமுதாயமாகப் பிணைக்கின்றன. அதிலும் பல்வேறு மதங்கள், இனங்கள், மொழிகள் புழங்கும் இந்தியப் பெருநிலத்தில் பண்டிகைகளின் முக்கியத்துவம் சாதாரணமானதல்ல.

அன்றாட வாழ்வின் இயந்திரத்தன்மையிலிருந்து நம்மை நாமே மீட்டெடுத்துக் கொள்ளவே பண்டிகைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்தப் பண்டிகைக்கு தத்துவார்த்தக் காரணமும், பாரம்பரிய வரலாறும் இருக்கும்போது அந்தப் பண்டிகை சிறப்புப் பெற்றுவிடுகிறது.

குறிப்பாக, தீபாவளிப் பண்டிகையின் முக்கியத்துவம் அளவிட முடியாதது. ‘பண்டிகைகளின் ராஜா’ என்று தீபாவளியைக் குறிப்பிடலாம். அந்த அளவுக்கு பல்வேறு சமுதாயத்தினரிடமும், பல்வேறு மதத்தினரிடமும் தீபாவளியின் தாக்கம் உள்ளது.  சொல்லப் போனால், இந்த நாட்டை ஆரவாரமாக ஒருங்கினைக்கிறது தீபாவளிப் பண்டிகை.

நாம் இன்று கொண்டாடும் தீபாவளிக்கு குறைந்தபட்சம் 9,300 ஆண்டுகளுக்கு முந்தைய சரித்திரப் பின்னணி உள்ளது. ஆனால் முந்தைய காலத்தில் கொண்டாடிய விதம் வேறு. இப்போது நாம் கொண்டாடும் தீபாவளியின் கோலாகலம் வேறு. ஆயினும் தீபங்களை வரிசையாக ஏற்றும் வழக்கம் மட்டும் அப்படியே நீடிக்கிறது.

முதன்முதலில் தீபாவளி எப்போது கொண்டாடப்பட்டது என்பதற்கு மிகச் சரியான ஆதாரம் கிடைக்கவில்லை. ஆயினும், 14 ஆண்டு வனவாசம் முடிந்து, ராவணவதம் முடித்து ராமன் அயோத்தி திரும்பியபோது, அந்நாட்டு மக்கள் தங்கள் இல்லங்களின் முன்பு தீபங்களை ஏற்றி அவரை வரவேற்றது இதிகாசத்தில் பதிவாகி இருக்கிறது.

ராமாயணத்தைப் படைத்த வால்மீகி, அதில் பல இடங்களில் ஒவ்வொரு நிகழ்வும் நிகழ்ந்த காலத்தில் இருந்த வானியல் கிரக நிலைகளை சுலோகங்களில் கூறிச் சென்றிருக்கிறார். ராமன் பிறப்பு, சீதையுடன் மணம், வனவாசம் துவங்கியது, சீதை அபகரிப்பு, அனுமன் விஜயம், சேதுபந்தனம், இலங்கைவேந்தனுடன் யுத்தம், போரில் வெற்றி, நாடு திரும்பியது போன்ற நிகழ்வுகளை வால்மீகி வர்ணிக்கும்போது, அன்றைய கிரகநிலைகளை தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

தற்போதைய வானியல் விஞ்ஞானிகளும் அதிசயிக்கத் தக்க பல வானியல் நிகழ்வுகள் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொதுவாக திரேதாயுகத்தில் ராமாயண கதை நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது. அந்த யுகத்துக்கான கால அளவீடுகள் மிகையாகவே உள்ளதை மறுக்க முடியாது. ராமாயணத்திலுள்ள கிரகநிலைகளைக் குறிப்பிடும் சுலோகங்களை மட்டும் ஆராய்ந்த அறிஞர்கள், ராமன் கற்பனை நாயகன் அல்ல; கி.மு. 7,300ல் வாழ்ந்த ஒரு மன்னனே என்று நிரூபித்திருக்கிறார்கள்.

அதன்படி, கி.மு. 7,292ல் ராமன் அயோத்தி திரும்பியதாகக் கணக்கிட்டிருக்கிறார், மராட்டியில் ‘வாஸ்தவ ராமாயணம்’ நூலை எழுதிய டாக்டர். பி.வி.வர்த்தக். ராமன் அயோத்தி திரும்பிய நாளே தீபாவளியின் துவக்கம் என்ற நம்பிக்கை நம் நாட்டில் உள்ளது. எனவே, தற்போதைய நமது தீபாவளிக்கு குறைந்தபட்ச வயது 9,300 என்று தாராளமாகச் சொல்லலாம்.

இதற்கு அடுத்து வருவதே நாம் பொதுவாகக் கூறி வரும், துவாபர யுகத்தில் நிகழ்ந்த நரகாசுர வதம். ஏற்கனவே நடைமுறையிலிருந்த இல்லங்களில் தீபமேற்றும் பண்டைய வழக்கத்தை அனுசரித்தே, கிருஷ்ணனிடம் நரகாசுரன் ‘தீபாவளி வரம்’ கேட்டதாகவும் கொள்ளலாம்.

***

தொடரும் விளக்கொளி:

‘தீபாவளி’ என்றால் தீபங்களின் வரிசை (தீப+ ஆவளி) எனப் பொருள் என்று அனைவருக்கும் தெரியும். இன்றும் நாட்டின் பல மாநிலங்களில் தீபாவளியன்று அகல் விளக்குகளை வரிசையாக ஏற்றி இறைவனை வழிபடுவது மரபாக உள்ளது.

தமிழகத்திலும் தீப வழிபாடு சிறந்து விளங்கியுள்ளது. பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான நெடுநல்வாடையில்,  ‘இரும்புசெய் விளக்கின் ஈர்த்திரிக் கொளீஇ- நெல்லும் மலரும் தூஉய்க் கைதொழுது…’ என்று பாடுகிறார் நக்கீரர் (நெடுநல்வாடை: 42- 43). சங்க காலத்தில் தமிழகத்தில் தீப வழிபாடு நிலவியதற்கு இப்பாடல் சான்றாகும்.

தமிழகத்தில் தீப வழிபாடு கார்த்திகை தீப நன்னாளில் கொண்டாடப்படுகிறது. ஐப்பசி மாத அமாவாசையில் வரும் தீபாவளிக்கும், கார்த்திகை மாத பௌர்ணமியில் வரும் திருக்கார்த்திகை விழாவுக்கும் 15 நாட்கள் மட்டுமே வித்தியாசம் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

***

ஹிந்துக்களின் கொண்டாட்டம்

தீபாவளி ஹிந்துப் பண்டிகைகளில் தலையாயது. குறிப்பாக, ஹிந்து சமயத்தின் இரு பெரும் பிரிவுகளான சைவம், வைணவம் இரண்டிலுமே தீபாவளிக்கு முக்கியத்துவம் உள்ளது. சைவர்கள் கேதாரகௌரி விரதம் அனுஷ்டித்து தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.

புனிதத்தலமான கேதாரத்தில் (தற்போதைய கேதார்நாத்) சுயம்புவாகத் தோன்றிய சிவனை அடைய விரும்பி பராசக்தி 21 நாள் விரதம் இருந்ததாக கந்தபுராணம் கூறுகிறது. அதன் இறுதியில் சிவன் சக்திக்கு காட்சியளித்து தன்னில் ஒருபாதியாக சக்தியை ஏற்று அர்த்தநாரீஸ்வரராக மாறினார் என்பது புராணம் கூறும் கதை. அந்த நன்னாள் தான் தீபாவளித் திருநாள்.

இதையொட்டி, புரட்டாசி மாதம் தசமி வளர்பிறை திதியில் துவங்கி ஐப்பசி மாத தேய்பிறை சதுர்த்தசி திதி வரை 21 நாள்கள் விரதம் இருந்து சிவனை வழிபட மணவாழ்க்கை சிறப்புறும் என்பது நம்பிக்கை. இதுவே கேதாரகௌரி விரதமாகும்.

வனவாசம் முடிந்து ராமன் அயோத்தி திரும்பிய நாள் என்பதாலும், நரகாசுரனை கிருஷ்ணர் வதைத்த நாள் என்பதாலும் வைணவர்களுக்கு இந்நாள் முக்கியமான பண்டிகை நாளாகிறது. மாலவனிடம் நரகாசுரன் கேட்ட வரத்திற்காகவே தீபாவளி நன்னாளில் எண்ணெய்க் குளியலுடன் வழிபடுவது பொதுவான பண்பாட்டுப் பழக்கமாக நாடு முழுவதும் மாறி இருக்கிறது.

பாண்டவர்கள் பன்னிரு ஆண்டு வனவாசமும், ஓராண்டு அஞ்ஞாதவாசமும் முடிந்து நாடு திரும்பிய நாளும் தீபாவளி நாளே. இதுதவிர, தீபாவளியை பலநாள் திருவிழாவாகக் கொண்டாடுவது வடமாநிலங்களில் விசேஷமாக உள்ளது.

கோவத்ச துவாதசி, தனத் திரயோதசி, லட்சுமி பூஜை, கோவர்த்தன பூஜை, காளி பூஜை, யம துவிதியை, மார்வாரிப் புத்தாண்டு, பஹு பீஜ் என தீபாவளியை ஒட்டிய ஒருவார காலமும் பண்டிகைக் கொண்டாட்டம் பல் மாநிலங்களில் பலவிதங்களில் தொடர்வது இப்பண்டிகையின் கோலாகலச் சிறப்பு.

***

சமணர்களின் தீபாவளி:

தீபாவளிப் பண்டிகை சமணர்களுக்கும் உரித்தானது. சமண மதத்தின் கடைசி (24-ஆவது) தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் மோட்சம் அடைந்த நாள் தீபாவளி (கி.மு. 567) என்பதால், இந்நாளை சமணர்கள் பக்தியுடன் கொண்டாடுகின்றனர்.

பழமையான சமண இலக்கியமான ‘கல்பசூத்திரம்’ என்ற பிராகிருத மொழியில் எழுதப்பட்ட நூலில் தீப வழிபாடு குறித்த செய்தி வருகிறது. இதை எழுதியவர் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆச்சார்யார் பத்ரபாகு என்ற சமண முனிவர்.

‘மகாவீரர் என்ற தீப ஒளி மறைந்துவிட்டதால் தீப விளக்கை ஏற்றி வைப்போம் என்று, காசி, கோசல மக்களும், பதினாறு கண அரச மக்களும் தங்கள் வீடுகளின் முன்பு தீபம் ஏற்றி வைத்தனர்’ என்று எழுதி இருக்கிறார் பத்ரபாகு.

இலக்கியத்தில் ‘தீபாவளி’ என்ற சொல் முதன்முதலாகப் பிரயோகிக்கப்படுவது, கி.பி. ஆறாம் நூற்றாண்டில் ஆச்சார்ய ஜினசேன முனிவரால் இயற்றப்பட்ட ‘ஹரிவம்ச புராணம்’ என்ற சமண இலக்கியத்தில் தான். அதில் வரும் ‘தீபாவளி காயா’ என்ற வார்த்தையின் பொருள் “ஞான ஒளி உடலைவிட்டு நீங்குகிறது” என்பதே. இதிலிருந்து உருவானதே தீபாவளி என்ற வார்த்தை என்று சமண இலக்கிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

***

பௌத்தர்கள் போற்றும் நாள்:

மாமன்னர் அசோகர் புத்தமதத்துக்கு மாறிய நாளாக, புத்தமதத்தினரால் தீபாவளி கொண்டாடப்படுகிறது. குறிப்பாக நேபாளத்திலுள்ள புத்த மதத்தினர் இதை விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். பௌத்த மதத்தில் இந்நாள் ‘அசோக விஜயதசமி’ என்று குறிப்பிடப்படுகிறது. அசோகரின் காலம், கி.மு. 274 முதல் கி.மு. 232 வரை என்று சரித்திர நிபுணர்கள் கூறுகின்றனர். இன்றும், தீபாவளியன்று புத்த மடாலயங்களில் மகான் புத்தருக்கு விசேஷ ஆராதனைகள் நிகழ்த்தப்படுகின்றன.

***

சீக்கியரின் வீரம் செறிந்த நாள்:

பஞ்சநதி பாயும் பஞ்சாபைச் சேர்ந்த சீக்கியர்களுக்கோ, தியாகமயமான சரித்திர நிகழ்வுகளின் திருநாளாக தீபாவளி மிளிர்கிறது.

‘சீக்கியர்கள் தங்கள் குருவிடம் வந்து உபதேசம் பெற உகந்த நாள் தீபாவளி’ என்று மூன்றாவது சீக்கிய குரு அமர்தாஸ் (1552- 1574) அறிவித்தார்.

சீக்கியர்களின் ஆலயமான ‘ஹர்மந்திர் சாஹிப்’ எனப்படும் பொற்கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதும் ஒரு தீபாவளி நன்னாளில் தான். அமிர்தசரஸ் குளத்தையும் அதையொட்டிய நகரையும் நிர்மாணித்த நான்காம் சீக்கிய குரு ராம்தாஸ் 1577-ஆம் ஆண்டு தீபாவளியன்று இப்பணியைத் துவக்கினார். இப்பணியை முழுமையாக்கி அமிர்தசரஸ் நகரை உருவாக்கினார் அடுத்து வந்த ஐந்தாவது சீக்கிய குரு அர்ஜூன் தேவ்.

சீக்கியர்களின் ஆறாவது குரு ஹர்கோவிந்த சிங் (1595 – 1644), அப்போதைய முகலாய மன்னர் ஜஹாங்கீரால் கைது செய்யப்பட்டார். அவருடன் 52 இந்து அரசர்களும் கைது செய்யப்பட்டு குவாலியர் கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். மதமாற்றத்தை வலியுறுத்தி சிறைக்குள் இவருக்கு கொடிய சித்ரவதைகள் இழைக்கப்பட்டன.

அவை அனைத்தையும் தனது ஆன்ம வலிமையால் வென்ற குரு ஹர்கோவிந்த சிங்கின் பெருமையை மன்னர் ஜஹாங்கீர் உணர்ந்தார். இறுதியில் சிறையில் இருந்து குருவை விடுவிக்க மன்னர் முன்வந்தார். ஆனால், தன்னுடன் சிறையிலுள்ள 52 இந்து மன்னர்களையும் விடுவித்தால் மட்டுமே தானும் வெளிவருவேன் என்றார் குரு ஹர்கோவிந்த் சிங்.

கடைசியில் ஒரு தீபாவளி நன்னாளில் குரு ஹர்கோவிந்தருடன் 52 இந்து மன்னர்களையும் விடுவித்தார் மொகலாய மன்னர் ஜஹாங்கீர். 1619, அக்டோபர் 26-ஆம் நாள் இந்தச் சரித்திர நிகழ்வு நடைபெற்றது. அதனை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் ‘பந்தி சோர் திவஸ்’ என்ற விழா சீக்கியர்களால் கொண்டாடப்படுகிறது.

சீக்கியர்களின் பத்தாவது மற்றும் கடைசி குரு கோவிந்த் சிங், 1699-ஆம் ஆண்டு, சீக்கியர்களின் பண்டிகைகளில் பைசாகிக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகையாக தீபாவளியை அறிவித்தார்.

அமிர்தசரஸ் பொற்கோவிலின் நிர்வாகி குரு பாயி மணிசிங் மொகலாய அரசுக்கு செலுத்த வேண்டிய கப்பத்தைக் கட்ட மறுத்ததால், 1737-இல் லாகூர் கோட்டை சிறையில் சித்ரவதைக்கு ஆளாகி தீபாவளியன்று பலியானார். சீக்கியர்களின் கால்சா படை மொகலாயருக்கு எதிராக தீவிரமாகப் போராட இவரது படுகொலையே காரணமாக அமைந்தது.

இத்தகைய தியாகமயமான சரித்திரப் பதிவுகளுடன், முந்தைய குருமார்களின் புனித நினைவுகளுடன் தீபாவளியை சீக்கியர்களும் கொண்டாடுகின்றனர்.

***

எல்லோருக்கும் பூரிப்பு:

இந்துக்கள், சமணர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள் மட்டுமல்லாது, இந் நாட்டிலுள்ள இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களும் கொண்டாடும் விழாவாக தீபாவளி உள்ளது. பொதுவான பண்டிகை வழிபாடுகளில் இவர்கள் பங்கேற்காவிடிலும், தீபாவளிக்கே உரித்தான பட்டாசு வெடிப்பதிலும் பட்சணங்கள் பறிமாறுவதிலும் இவர்களும் பங்கேற்கின்றனர்.

பட்டாசுகள் ஒலிக்க, மத்தாப்புகள் ஒளிவீச, எங்கும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க நாடு முழுவதும் தீபாவளி கொண்டாடப்படும்போது, நம்மைப் பிரிக்கும் வேற்றுமைகளை விட நம்மை இணைக்கும் பண்டிகைகள் வலிமையானவை என்பதை நாம் உணர்கிறோம்.

இவ்வாறாக, நாடு முழுவதும் உள்ள மக்களைப் பிணைக்கும் பசையாக, சமுதாயத்தை இணைக்கும் விசையாக தீபாவளிப் பண்டிகை விளங்கி வருகிறது. நமது பண்பாட்டுப் பாலமாக, நாட்டின் ஒருமைப்பாட்டின் ராகமாக தீபாவளி விளங்குகிறது எனில் மிகையில்லை.

$$$

One thought on “நாட்டை இணைக்கும் தீபாவளி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s