விஜயபாரதம் பிரசுரம் ஆண்டுவிழாவில் நால்வருக்கு விருது!

-ஆசிரியர் குழு

சென்னையில் ஏப்ரல் 26ஆம் தேதி மாலை நடைபெற்ற விஜயபாரதம் பிரசுரம் ஆண்டுவிழாவில், மூத்த எழுத்தாளர் சோ.தர்மன் உள்பட எழுத்தாளர்கள் நால்வருக்கு விருது வழங்கப்பட்டது.

தேசிய சிந்தனையை வலுப்படுத்தும் நூல்களை வெளியிட்டு வரும் விஜயபாரதம் பிரசுரத்தின் மூன்றாம் ஆண்டுவிழா, சென்னை, மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். முதுநிலை மேல்நிலைப் பள்ளியின் தட்சிணாமூர்த்தி அரங்கத்தில், 26.04.2026, ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

விழாவுக்கு தினமலர் இணையாசிரியர் கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு தலைமை வகித்தார். கவிஞரும் எழுத்தாளருமான இசைக்கவி ரமணன் வாழ்த்துரை வழங்கினார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில பாரத செயற்குழு உறுப்பினர் வி.ரவிகுமார் சிறப்புரையாற்றினார்.

குரோம்பேட்டை குருகிருபா இசைப்பள்ளி மாணவிகளின் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் வந்தேமாதர கீதத்துடன் விழா தொடங்கியது. இவ்விழாவில் சாஹித்ய அகாதெமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் சோ.தர்மன் அவர்களுக்கு உவேசா வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. மேலும், எழுத்தாளர்கள்  ஜெயஸ்ரீ சாரநாதன் (சிறந்த எழுத்தாளர்), ஜனனி ரமேஷ் (சிறந்த மொழிபெயர்ப்பாளர்), ரேர் பதிப்பகம்  ரங்கநாதன் (சிறந்த பதிப்பகம்) ஆகியோர் பாரதி விருது பெற்றனர்.

ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவை ஒட்டி தொகுக்கப்பட்ட ‘சப்தரிஷிகள்’ என்ற நூல் தொகுப்பை ஆர்.எஸ்.எஸ். மூத்த நீர்வாகி ஹரிஹரகோபாலன் அறிமுகம் செய்தார். இந்நூலை சிறப்பு விருந்தினர்கள் வெளியிட்டனர். எழுத்தாளர் ஜெயஸ்ரீ சாரநாதன் எழுதிய ராமாயணம் குறித்த ஆராய்ச்சி நூலும் வெளியிடப்பட்டது.

விழாவின் உரைகள்:

விழாவில் தலைமையுரை ஆற்றிய தினமலர் இணையாசிரியர் கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு பேசியதாவது:

விஜயபாரதம் பிரசுரம் சார்பில் சிறப்பான நூல்கள் பல வெளியிடப்பட்டுள்ளன. ஆனால்,  நூல்களில் உள்ள தகவல்களுக்கான மூல ஆதாரம் குறிப்பிடப்படுவதில்லை. எனவே அவற்ரை மேற்கோள் கட்ட முடிவதில்லை. இந்தக் குறையை அடுத்த பதிப்புகளில் நிவர்த்தி செய்ய வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ். இரண்டாம் தலைவர் குருஜி கோல்வல்கர் குறித்து மராத்தியில் வெளிவந்துள்ள அனைத்து நூல்களும் இன்னமும் தமிழில் வெளிவரவில்லை. அவற்றை மராத்தியில் இருந்து நேரடியாக தமிழில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும்.

குழந்தைகளுக்குப் புரியும் வகையில், எளிய நடையில் பாரத வரலாறு குறித்த நூல்கள் வெளிவர வேண்டும். தேசிய சிந்தனையுடன் கூடிய நூல்கள் அனைத்தும் அனைத்து மாவட்டங்களிலும் கிடைக்க வேண்டும். ஒரு லட்சம் மக்கள் கொண்ட ஊர்களில் புத்தக விற்பனை நிலையங்களை அமைப்பதன் மூலமாக தேசிய சிந்தனையுள்ள நூல்களின் விற்பனையைப் பெருக்க முடியும்  என்றார்.

வாழ்த்துரை வழங்கிய இசைக்கவி ரமணன் பேசுகையில், “நம் விதியை மாற்ற வேண்டுமானால், மரத்துப் போன சமுதாயத்தைத் தூண்டி செயல்பட வைக்கும் எழுத்தாளர்கள் தேவை. அந்த வகையில் இங்கு விருது பெறும் எழுத்தாளர்கள் அனைவரின் பங்களிப்பையும் அறிவேன். அவர்கள் தங்கள் எழுதுகளால் தொடர்ந்து மக்களை எழுச்சி பெறச் செய்ய வேண்டும்” என்றார்.

ஆர்.எஸ்.எஸ். அகில பாரத செயற்குழு உறுப்பினர் வி.ரவிகுமார் தனது சிறப்புரையில், உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் தமிழர்கள் எவ்வாறு பாரதத்தின் கலாச்சாரத் தூதுவர்களாக விளங்கி வருகிறார்கள் என்பதை சரித்திர நிகழ்வுகளுடனும், நிகழ்காலச் சான்றுகளுடனும் விளக்கினார். விருது பெற்ற எழுத்தாளர்கள் நால்வரும் ஏற்புரையாற்றினர். தேசிய கீதத்துடன் விழா நிறைவடைந்தது.

$$$

தினமலர் செய்தி (27.04.2026) சென்னை பதிப்பு.

$$$

Leave a comment