-கருவாபுரிச் சிறுவன்

நாயேனையும் இங்கொரு பொருளாக நயந்து வந்து
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய் நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய் என்ன பேறு பெற்றேன்
தாயே! மலைமகளே! செங்கண்மால் திருத்தங்கச்சியே!
-அபிராமி பட்டர்
‘வேண்டிய வேண்டிய எல்லாம் எதிரும்’ என்பது வரதுங்கர ராம பாண்டிய மன்னரின் திருவாக்கு. வேண்டியதை விரும்பியவாறு பெற திரிகரண சுத்தி மிகவும் அவசியம் என்பதற்கு சான்று தான் இந்த வட்டார வரலாற்று நாவல்.
‘பாண்டியரில் இருவர் பட்டரில் இருவர்’ என்ற சொல் வழக்கு, கற்றறிந்தவர்களின் மத்தியில் மிகவும் பிரபலம். அந்த பாண்டிய மன்னர்கள் இருவரில் ஒருவர் வரதுங்க ராம பாண்டியர், மற்றொருவர் அதிவீர ராம பாண்டியர்.
இருவருமே அவனருளால் அவன் தாள் வணங்கி என்ற மாணிக்கவாசகரின் திருவார்த்தைக்கு இணங்க பிறவியிலேயே இறையருளை அறிந்து உணர்ந்தவர்கள்; சிவகருமத்தில் தோய்ந்த சிவநெறிக் கொள்கையாளர்கள்; உயிர்களின் பாதகம் அகல பரம்பொருளின் பாதகமலங்களை பற்றச் செய்த பெரும் பற்றாளர்கள்; நாட்டையாளும் மன்னன் என்கிற இருமாப்பு இல்லாத இயல்பினையுடைவர்கள்; பசு, பதி, பாசம் என்கிற சித்தாந்தக் கோட்பாட்டை ஆராய்ந்து அதன் நுட்பதிட்பங்களை தன் படைப்புகளில் பதிவு செய்யத் தயங்காத பகுத்தறிவுப் பகலவர்கள்…
தனது காவியங்களில் தன்னைப் பற்றி அடையாளப்படுத்தாத தன்மானமுடையவர்கள்; தமிழ் நெறி வேண்டும் என்று தயங்காமல் சுட்டிக்காட்டியவர்கள்; முன்னோரின் வாக்குகளை முறையாகக் கையாண்ட தெய்வீக நாவலர்கள்; ‘தீதும் நன்று பிறர் தர வாரா’ என்ற புறநானூற்று வரிகளுக்கு இலக்கணம் வகுத்த வள்ளாண்மை மிக்கவர்கள்…
தூய ஒழுக்கம் ஒன்று தான் உயிர்களை உயர்த்தும், அன்பின் வழியில் நின்று அறத்தின் பிடியில் சென்று இன்பக்கடலில் முழ்கி பிறவா நிலையே பேரின்பம் என்று வாழ்ந்து காட்டிய தீர்க்கதரிசிகள்; சிவபரத்துவம், சைவ மகத்துவம் இரண்டையும் இரு கண்களாக பாவித்து வழிகாட்டும் ஞான வள்ளல்கள்.
எம்மண்ணின் வாழ்ந்த இம்மன்னர்கள், தென்காசி, கரிவலம்வந்த நல்லுாரில் தவராஜனாகவும், கவிராஜனாகவும், புவிராஜனாகவும் பக்த ராஜனாகவும் திகழ்ந்துள்ளார்கள்.
கரிவலம் வந்த நல்லுார் பகுதியில் வாழ்ந்த இரு பெரும் அரசர்களைப் பற்றிய சிறப்புகளை தனக்கே உரிய பாணியில் ஒரு வட்டார வரலாற்று நாவலாகப் படைத்துள்ளார், பெண்ணின்நல்லாள் அகிலாண்ட பாரதி கோபாலகிருஷ்ணன்.
நாவலுக்கு உண்டான அத்துணை கூறுகளையும் படித்து உணரும் போது வாசகர்கள் நன்கு அறிவார்கள். ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும், குறிப்புகள் என்ற தலைப்பில் அத்தியாவசியமான செய்திகளைக் குறிப்பிடுகிறார். அதுவே இந்நாவலுக்கு வஜ்ராயுதம்.
ஒரு நாடு முன்னேற விரும்பினால், அந்நாட்டிலுள்ள அதாவது தத்தம் ஊரிலுள்ள கவிஞர்கள், பண்டிதர்கள், பாவலர்கள், புலவர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் உட்பட, அவர்கள் செய்து அருளிய பெரிய, சிறிய நூற்களை விரும்பிப் படிக்கவும், மற்றவரைப் படிப்பிக்கவும் செய்ய வேண்டும். அவர்களது நற்செயல்களை மற்றவருக்குத் தெரிவிக்க வேண்டும்.
அப்போது தான் அவர்களது வாழ்வியல் வரலாற்றை செம்மையுடன் உணர்ந்து, அன்பு, அறிவு, ஒழுக்கம் வாய்மை, அஞ்சாமை , ஆண்மை, கடமை, தன்னலமின்மை, தாய்மொழிப் பற்று , எல்லோருக்கும் உதவுதல், இடைவிடாத உழைப்பு ஆகிய நற்பண்புகள் நாமும் கடைபிடித்து, மற்றவருக்கும் தெரிவித்து, நல்வழியில் பயணிக்க அவர்களது நூற்கள் பயன்படும் என்பார் கழகப்புலவர் ராமசாமி அவர்கள்.
மேற்கண்ட இலக்கணத்திற்கு பொருந்துமாறு பாண்டிய மன்னர்களின் சிறப்புகளையும் அவர்களின் அருமை பெருமைகளையும் அறிந்துணர்ந்து பறை சாற்றும் நூலாக இது திகழ்கிறது.
Books for hour என்ற கணிப்பில் சேரும் பன்னூறு நுால்களுக்கு இடையே Books for ever எனும் எண்ணிக்கையில் சேரும் நுாலாக இது அமைகிறது.
பரசமயக் கோளரியாகவும், தமிழ் வளர்த்த தென்னவனாகவும் வாழ்ந்த நம் மண்ணின் மன்னர்களின் சிறப்புகளை விளக்கும் நுால் வரிசையில் இந்நாவலும் இடம் பெறுகிறது என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.
மன்னர்களின் மகத்துவத்தை அறிந்துணர்ந்து அவர்கள் சென்ற ஞானப்பெருவழியில் செல்ல மக்களுக்கு தோணியாக,ஏணியாக, ஞானியாக இந்நாவல் அமைகிறது என்று சொன்னாலும் அது மிகையல்ல.
கல்கி, சாண்டில்யன், அகிலன், பார்த்தசாரதி இவர்களைப் போன்று இன்னும் பல நாவலாசிரியர்கள் பெற்ற பெயரையும் புகழையும் கூடுதலாக தமிழ் இலக்கிய உலகில் இவர்கள் பெறுவார்கள் என்பது திண்ணம். கருணைமிகு கருவையம்பதியில் நித்திய மங்களமாய் வாழும் அன்னை ஒப்பனையம்பாள் சமேத எந்தை பால்வண்ண நாத சுவாமியின் திருவருள் அனைவருக்கும் கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்
ஒப்பனை மருவும் கருவை முகலிங்கன் தப்பாமல் செய்வான் அருள் எப்போதும் தமிழ் தவம் புரியும் பாரதிகிருஷ்ணனுக்கு அமிழ்தாக என்றும் இருப்பார் நன்று.
வாழ்க பாரதம்! வாழ்க மணித்திருநாடு.
***
நூல் விவரம்
பாண்டியர் இருவர் (வரலாற்று நாவல்)
ஆசிரியர்: டாக்டர் அகிலாண்ட பாரதி
பக்கம்: 172; விலை: ரூ. 165
வெளியீடு: வானதி பதிப்பகம், சென்னை
தொடர்புக்கு: 044- 2434 2810, 2431 0769.
டாக்டர் அகிலாண்ட பாரதி கோபால கிருஷ்ணன் – 98421 80556
$$$