-ஏ.சூரியபிரகாஷ்
மூத்த பத்திரிகையாளரும் பிரஸார் பாரதி முன்னாள் தலைவருமான திரு. ஏ.சூரியபிரகாஷ், நாட்டை உலுக்கிய நெருக்கடி நிலையின் நினைவலைகளை தனது ‘Emergency- The Indian Democracy’s Darkest Hour’ நூலில் பதிவு செய்திருக்கிறார். இரண்டாண்டு கால சர்வாதிகாரத்துக்கு எதிரான போரை நினைவூட்டும் பல நிகழ்வுகள் இந்நூலில் இடம் பெற்றிருக்கின்றன. அதன் சில பகுதிகள் இங்கே…

காலமான ஜனநாயகம்!
இந்தியாவில் நெருக்கடிநிலை 1975, ஜூன் 25-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. நாட்டில் ஜனநாயகத்தை மரணிக்கச் செய்த அந்த நாளிலும் கூட, உரிமைப் போராளிகள் தளரவில்லை. மும்பையிலிருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றில் ஜனநாயக விரும்பி ஒருவர் மறைமுகமாக அளித்திருந்த “காலமானார்’ விளம்பரம், ஜனநாயகம் சாகாது என்பதை நிலைநாட்டியது. ஆங்கிலத்தில் பூடகமாக வெளியிடப்பட்ட அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்த விஷயம் இதுதான்:
‘O’cracy D.E.M., beloved husband of T.Ruth, loving father of L.I.Bertie, brother of Faith, Hope, Justice, expired on 26th June’
இதன் பொருள்: நம்பிக்கை, விசுவாசம், நீதி ஆகியவற்றின் சகோதரரும், சுதந்திரத்தின் அன்புக்குரிய தந்தையும், உண்மையின் அன்புக்குரிய கணவருமான ஜனநாயகம் ஜூன் 26-இல் காலமானார்.

பிரதமரும் அவரது மகனும்…
இந்திராகாந்தியின் சுயசரிதையை எழுதியலரான புபுல் ஜெயகர், அந்த நாட்களில் நிலவிய பதற்றமான சூழலை பதிவு செய்திருக்கிறார். அவரது நூலிலிருந்து..
அப்போது அதிகாலை 3 மணி இருக்கும். தனது உரைக்கான அறிக்கையை இறுதி செய்துவிட்டு இந்திரா காந்தி தனது அறைக்குச் சென்றார். அப்போது அங்கிருந்த சித்தார்த்த சங்கர் ராய் (அப்போதைய மேற்கு வங்க முதல்வர்), தாழ்வாரத்தில் சோகமாக நடந்துவந்த நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் ஓம் மேத்தாவைக் கண்டார். அவருடன் பேசியபோது, “நாளை காலை அனைத்து பத்திரிகை அலுவலகங்களுக்கும் மின்சாரம் துண்டிக்கப்பட உள்ளது. நாளை எந்தப் பத்திரிகையும் வெளிவராமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது’ என்றார்.
இதைக் கேட்டவுடன் ராய் அதிர்ச்சி அடைந்தார். “இது பிரதமரின் கருத்து அல்லவே. முழு விவகாரமும் அபத்தமாக இருக்கிறதே’ என்றார். ஆனால், ஓம் மேத்தா தனது தகவலை உறுதிப்படுத்தினார். அது மட்டுமல்ல, “நாளை உயர் நீதிமன்றங்களும் பூட்டப்பட உள்ளன’ என்றார். அதனால் திகைப்படைந்த ராய், உடனே பிரதமரிடம் இதுகுறித்து கேட்பதாகக் கூறிச் சென்றார்.
பிரதமரின் உதவியாளர்களோ, அம்மையார் உறக்கத்தில் இருப்பதாகவும், அவரை தொந்தரவு செய்யக் கூடாது என்றும் தடுத்தனர். அப்போது அங்கு வந்த பிரதமரின் இளைய மகன் சஞ்சய் காந்தி, “”இந்த நாட்டை எப்படி ஆல்வது என்ரே உங்கள் யாருக்கும் தெரியவில்லை” என்று கடிந்துகொண்டார். அம்மா வரும் சப்தம் கேட்டவுடன் அங்கிருந்து அவர் கிளம்பிவிட்டார்.
இந்திரா காந்தி வந்தவுடன், அவரிடம் ஓம் மேத்தா சொன்ன தகவலைக் கூறினார். உடனே சில நிமிடங்கள் காத்திருக்குமாறு சொல்லிவிட்டு தனது அறைக்குள் சென்றார் அவர். இருபது நிமிடங்கள் கழித்து இந்திரா காந்தி திரும்பியபோது, அவரது கண்கள் அழுததால் சிவந்திருந்தன. நடக்கக் கூடாத ஏதோ நடந்துவிட்டது ராய்க்குப் புரிந்தது. “”சித்தார்த்தா, பத்திரிகைகளுக்கு நாளை மிந்சாரம் துண்டிக்கப்படாது. அதேபோல, உயர் நீதிமன்றங்களும் நாளை இயங்கும்” என்றார் அவர்.
மறுநாள் காலையில் அனைத்து உயர் நீதிமன்றங்களும் இயங்கின. ஆனால், பல பத்திரிகைகளுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை. ஸ்டேட்ஸ்மேன், ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆகிய பத்திரிகைகள் மட்டுமே முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டதால் வெளிவந்தன.
இந்த நிகழ்வு, பின்னாளில் ஷா ஆணையத்தில் ராய் அளித்த வாக்குமூலத்தில் இடம் பெற்றிருக்கிறது. பிரதமருக்கும் அஇவரது மகனுக்கும் இடையிலான உரசலான உறவையும், பிரதமர் மீது ஆதிக்கம் செலுத்திய சஞ்சயின் தன்மையையும் இதனால் உணர முடிகிறது. அரசு நிர்வாகம் தொடர்பான சஞ்சய் காந்தியின் அணுகுமுறையையும் இது வெளிப்படுத்துகிறது.
இந்திராவின் தாளத்துக்கு பாட மறுத்த கிஷோர் குமார்
நெருக்கடி நிலையின் கொடுமைகளை மறைக்க, பிரதமரின் இருபது அம்சத் திட்டம் குறித்த பிரசாரத்தை தொலைக்காட்சியில் மேற்கொள்ள அரசு முனைந்தது. அதற்காக திரைப்படத் துறையிலுள்ள பிரபலங்களை அணுகியது, செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சகம். பிரபல பின்னணிப் பாடகர்கள் அரசு துதிப் பாடல்களைப் பாடவும் ஏற்பாடு நடந்தது. அப்போதைய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர் வி.சி.சுக்லா உத்தரவுப்படி, திரைத்துறையினரின் ஆதரவைப் பெற, மும்பை சென்றது அமைச்சகக் குழு.
மும்பையில் அரசு ஏற்பாட்டில் திரைப்பட தயாரிப்பாளர்கள் ஜி.பி.சிப்பி, பி.ஆர்.சோப்ரா, சுபோத் முகர்ஜி, ஸ்ரீராம் வோரா உள்ளிட்டவர்களுடன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது, பிரபல பின்னணிப் பாடகர் கிஷோர் குமார், அரசிந் பிரசாரத் திட்டத்தில் பாட உடன்படவில்லை என்பதை சிப்பி மூலமாக அதிகாரிகள் அறிந்தனர்.
அதையடுத்து, அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சி.பி.ஜெயின், கிஷோர் குமாருடன் பேசினார். செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சகக் குழு கிஷோர் குமாரை அவரது இல்லத்தில் சந்திக்கவும், அரசு பிரசாரம் தொடர்பாக ஆலோசிக்கவும் விரும்புவதாக ஜெயின் தெரிவித்தார்.
நால், தனக்கு உடல்நலமில்லாததால், அவர்களை தன்னால் சந்திக்க முடியாது என்று கிஷோர் குமார் மறுத்துவிட்டார். தவிர பொதுநிகழ்ச்சியில் பாடக்கூடிய வகையில் தனக்கு உடல்நலமில்லை என்றும், நெஞ்சுவலி காரணமாக ஓய்விலிருக்குமாறு மருத்துவர் அறிவுறுத்தி இருப்பதாகவும், அவர் கூறிவிட்டார். அரசு வானொலியிலோ, தொலைக்காட்சியிலோ பாடுவதை அவர் எந்த வகையிலும் விரும்பவில்லை.

இது டி.டி.திரிபாதியின் கதை!
நெருக்கடி நிலைக் காலத்தில் அப்பாவிகள் பலர் எந்தக் காரணமுமின்றி பல மாதங்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டனர். சார்லி சாப்ளினின் “மாபெரும் சர்வாதிகாரி’ திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி போல பல சம்பவங்கள் நடைபெற்றன. சர்வாதிகார ஆட்சியின்போது, அரசாங்கத்துக்கு தங்கள் விசுவாசத்தை நிரூபிக்க அரசு அதிகாரிகள் எந்தக் கீழ்நிலைக்கும் செல்லத் தயாராக இருந்தனர்!
இதற்கு ஓர் அற்புதமான உதாரணம், தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவராக இருந்த தேவி பிரசாத் திரிபாதியின் “கைது’ நிகழ்வு. அந்தக் கதை இதோ…
நெருக்கடி நிலையின்போது ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவராக திரிபாதி இருந்தார். இந்திரா காந்தியின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக அவர் பல்கலைக்கழக வகுப்புகளைப் புறக்கணிக்குமாறு மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தார். அதே பல்கலைக்கழகத்தில் தான் பிரதமரின் மருமகள் மேனகா காந்தியும் படித்து வந்தார். மேனகா பல்கலைக்கழகத்துக்கு வந்தபோது, வகுப்புகளைப் புறக்கணிக்குமாறு திரிபாதி பிரசாரம் செய்வதைக் கண்டார். உடனே தகவல் எங்கு செல்ல வேண்டுமோ அங்கு சென்றது.
இந்திரா காந்தியின் வீட்டில் ஆலோசனை நடந்தது. அப்போது, உடனடியாக திரிபாதியை கைது செய்து மிசா சட்டத்தில் சிறையில் அடைக்கத் தீர்மானிக்கப்பட்டது. அந்தப் பணியை தானே நிறைவேற்றுவதாக முன்வந்தார், தில்லி காவல் துறை டி.ஐ.ஜி.யாக இருந்த பி.எஸ்.பிந்தர்.
சஞ்சயிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற வேகத்துடன் பல்கலைக்கழகத்துக்கு காவலர்களை அனுப்பினார் பிந்தர். அவர்கள் அங்கு சென்று திரிபாதியைத் தேடினர். அப்போது யாரோ சொன்னதைக் கேட்டு வேறொரு அப்பாவி மாணவரை போலீஸôர் கைது செய்துவிட்டனர். அவரது பெயர் பிரபீர் புர்காயஸ்தா. தான் திரிபாதி அல்ல என்று அவர் எவ்வளவோ கெஞ்சியும் விளக்கியும் பிந்தர் காதில் விழவில்லை. மிசா சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார், பிரபீர். தனக்கு அளிக்கப்பட்ட பணியை சிறப்பாக நிறைவேற்றிவிட்டதாக பிரதமருக்கு தகவலும் அளித்துவிட்டார் டி.ஐ.ஜி. பிந்தர்.
இந்தத் தவறு சில மாதங்கள் கழித்துத் தான் போலீஸôருக்குத் தெரியவந்தது. ஆனால், உண்மைக் குற்றவாளிக்கு பதிலாக வேறொருவரை கைது செய்துவிட்டதை ஒப்புக் கொள்ளும் துணிவு யாருக்கும் இல்லை. அதன் விளைவாக திரிபாதியின் இடத்தில் பிரபீர் சிறையில் வாடினார்.
பல மாதங்கள் கழித்து, உண்மையான திரிபாதி கைது செய்யப்பட்டார். அப்போதும், தில்லி போலீஸôர் தங்கள் தவறைத் திருத்திக்கொள்ள தயாராக இல்லை. பிரபீர் வெளிவந்தால் அவர்களின் குட்டு வெளிப்பட்டுவிடுமே?
பிறகு, பிரபீர் மீது புதிய வழக்கு ஜோடிக்கப்பட்டது. ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்களைப் போராடத் தூண்டியதாக பிரபீர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 1975, செப்டம்பர் 25-இல் மிசா சட்டத்தின் கீழ், மாவட்ட நீதிபதி பி.கோஷின் உத்தரவுப்படி பிரபீர் கைது செய்யப்பட்டதாக போலீஸôர் கூறினர். அதற்கு முன், பல்கலைக்கழகத்தில் அரசுக்கு எதிராக அவர் முழக்கமிட்டதைக் கண்டதாகவும் போலீஸôர் தெரிவித்தனர்!
மாருதி: சஞ்சயின் புனிதப்பசு
மாருதி உத்யோக் நிறுவனம், சஞ்சய் காந்தியின் கனவுத் திட்டம். இத்திட்டம் எவ்வாறு இந்திரா காந்தி குடும்பத்தில் குழப்பங்களை ஏற்படுத்தியது என்பதை புபுல் ஜெயகர் பதிவு செய்திருக்கிறார். அவரது பதிவிலிருந்து…
1973-இன் இறுதியில், தனது அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியத்திடம், பிரதமர் இந்திரா காந்தி, மாருதி விவகாரம் குறித்து கவனம் செலுத்துமாறு குறிப்பிட்டார். அந்நிறுவனம் தொடர்பான தகவல்கள் அவருக்கு கவலையை ஏற்படுத்தி இருந்தன. அந்நிறுவனம் செயல்பட இயலாமல் திண்டாடிக் கொண்டிருந்தது…. மாருதி நிறுவனத்துக்கு இனிமேலும் கடன் வழங்க வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு உத்தரவிடும் நிலை சி.சுப்பிரமணியத்துக்கு ஏற்பட்டது. அதனால் அவருக்கும் சஞ்சய்க்கும் மோதல் நேரிட்டது. அது மிக வருத்தமான அனுபவம் என்றார் அவர். இந்த விவகாரத்தால் இந்திரா காந்தி மன அமைதி குலைந்தார். அதற்காக அவர் கம் கலங்கியதையும் சி.எஸ். குறிப்பிட்டிருக்கிறார்.

கட்டாய கருத்தடை திட்டம்…
இந்திய மக்கள்தொகையை கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை முஸ்லிம்களிடம் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது சஞ்சை காதியின் கருத்தாக இருந்தது. நெருக்கடி நிலைக் காலம் அதற்கான வாய்ப்பாக அமைந்தது. உத்தாவர் கிராமத்தில் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்துக்கு உள்ளூர் முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்ற தகவலை பன்சிலால் மூலமாக அறிந்த சஞ்சய், அந்த மக்களுக்கு பாடம் நட்த்துவது என்று தீர்மானித்தார். அந்த மாவட்ட ஆட்சியருக்கு கட்டளைகள் பறந்தன.
அதன்படி, ஒருநாள் திடீரென அந்த கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். கிராமத்தில் மின்சாரமும் தடை செய்யப்பட்டது. ஒவ்வொரு வீட்டிலும் இருந்த ஆண்கள் அனைவரும் போலீஸ் வாகனங்களில் இழுத்துவரப்பட்டு, நூவிலுள்ள ஆரம்ப சுகாதார நிலைஅயத்தில் அவர்களுக்கு கட்டாய வாசக்டமி குடும்பநல அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது! இந்தக் காட்சி கிட்டத்தட்ட ஜெர்மனியின் ஹிட்லர் ஆட்சியில் யூதர்கள் கொலைக்களத்துக்கு இழுத்துச் செல்லப்பட்ட்தற்கு இணையாக இருந்த்து. ஒரே வித்யாசம், இங்கு இழுத்துச் செல்லப்பட்டவர்கள் முஸ்லிம்கள். அதுவும் வாசக்டமிக்காக.
ஊடகங்களுக்கு தார் நிர்ணயம்…
நெருக்கடி நிலைக் காலத்தில் அரசின் முதன்மை தகவல் அலுவலராக இருந்த ஏ.ஆர்.பாஜி, பத்திரிகைகளை தர நிர்ணயம் செய்ததற்கான ஆவணத்தை, பின்னாளில் ஷா ஆணையம் கண்டறிந்தது. அவரது மதிப்பீட்டின்படி, பத்திரிகைகள் ஒன்பது வகைப்பாடுகளில் தர நிர்ணயம் செய்யப்பட்டிருந்தன. அவை வருமாறு:
ஏ (நட்பானது), ஏ+ (முழுமையான ஆதரவு), ஏ- (நட்பானது எனினும் கண்காணிப்புக்கு உரியது), பி (பகைமை பாரட்டுவது), பி+ (தொடர்ந்து எதிர்ப்பது), பி- (முன்னரை விட எதிர்ப்பு குறைந்துள்ளது), சி (நடுநிலைமையானது), சி+ (நடுநிலையிலிருந்து ஆதரவாக மாறுகிறது), சி- (நடுநிலையிலிருந்து எதிரியாக மாறுகிறது).
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் (ஆங்கிலம்), கன்னட பிரபா (கன்னடம்), சந்தேஷ் (குஜராத்தி), தைனிக் அசோம் (அசாமி) ஆகியவை தொடர்ந்து பி+ வகைப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தன. சி, சி- வகைப்பாடுகளில் குஜராத் சமாச்சார் (குஜராத்தி), ராஜஸ்தான் பத்திரிகா (ஹிந்தி), பிரஜாவாணி (கன்னடம்), தி பயனீர் (ஆங்கிலம்), ஆந்திர பூமி (தெலுங்கு) ஆகி பத்திரிகைகள் இடம் பெற்றிருந்தன.

சில முன்கணிப்புகள்…
இந்திய அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ உள்ளதை முன்கூட்டியே கணித்தவர்களும் இருந்தனர். அவர்களுள் ஒருவர், பிரதமர் அலுவலக அதிகாரியாக இருந்த பி.என்.தாண்டன். அவர் தனது நாட்குறிப்பேட்டில் 1974, டிசம்பர் 12-இல் இவ்வாறு எழுதி இருக்கிறார்:
“ நாட்டில் மெல்ல நெருக்கடி வளர்ந்து வருகிறது. இது பின்னால் வரும் தீமையை உணர்த்துவதாகவே நான் அனுமானிக்கிறேன். பல விஷயங்களில் அரசு தொடர்ந்து திணறுகிறது. இந்த நிலையில் மாற்ரம் இல்லாவிட்டால், நெருக்கடி முற்றும்.
உண்மை என்னவென்றால் அரசில் அவரது (பிரதமரின்) ஆதிக்கம் பூதாகரமாகப் பெருகி வருகிறது. ஜெயபிரகாஷ் நாராயணனும் மொரார்ஜி தேசயும் வேறு பல விஷயங்களில் தவறிழைத்திருக்கலாம். ஆனால், அவரது (இந்திராவின்) சர்வாதிகாரதன்மையையும் ஃபாசிஸத் தன்மையையும் அவர்கள் முன்கூட்டியே உணர்ந்து எச்சரித்தனர். அது பிழையானதல்ல.
… தனது அதிகாரத்தை நிலைநாட்ட எந்த அளவுக்குச் செல்லவும் அவர் கூசுவதில்லை. இது நமது ஜனநாயகத்துக்கு மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கும். தனிப்பட்ட சுதந்திரங்கள் பறிக்கப்படலாம். புதிய ஆண்டு அச்சம் மிகுந்த தொடுவானத்தில் தான் உதயமாக உள்ளது”.
காந்தி பொன்மொழிகளுக்கும் தடை!
நெருக்கடி நிலையின்போது பத்திரிகைகள் சில அரசுக்கு எதிராக மரைமுகமாக செயல்பட்டன. எனவே, அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்த்து. அதில் ஒன்று, அரசு தலைமை தணிக்கையாளராக ஹெச்.ஜே.டி.பென்ஹா நியமிக்கப்பட்டதாகும். அவருக்கு தணிக்கை விதிமுறைகள் அப்போதைய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்த வி.சி.சுக்லாவால் வடிவமைக்கப்பட்டு அனுப்பப்பட்டன. அவை, அரசியல் சாசன விதி-48-ஐ அப்பட்டமாக மீறுபவை.
அந்த விதிகள், பத்திரிகைகளின் ஆசிரியர்கள் தலையங்கப்பக்கத்தில் காலியிடம் விடுவதை தடை செய்தன. அதுவரை, எதேச்சதிகாரத்துக்கும் செய்தித் தணிக்கைக்கும் எதிர்ப்பு தெரிவித்து முதுகெலும்புள்ள சில பத்திரிகை ஆசிரியர்கள் தங்கள் பத்திரிகைகளில் தலையங்கம் இடம்பெறும் இடத்தை காலியாக விட்டு, அரசின் அராஜகத்தை வெளிப்படுத்தி வந்தனர். அதன் அர்த்தம் உணர்ந்த அரசு, புதிய விதிமுறை மூலமாக அதற்கும் முற்றுப்புள்ளி வைத்தது.
அதையும் சில பத்திரிகை ஆசிரியர்கள் சமயோசிதமாகக் கையாண்டனர். மகாத்மா காந்தி, ரவீந்திரநாத் தாகூர் போன்ற தேசிய தலைவர்கள், உலகத் தலைவர்களின் பொன்மொழிகளை தலையங்க இடத்தில் வெளியிட்டனர் சில ஆசிரியர்கள். அவை ஜனநாயகம், பேச்சு சுதந்திரம் ஆகிய உன்னத உரிமைகள் குறித்தனவாகவும் இருந்தன. கொடுங்கோலாட்சுக்கு எதிராக மக்களை சிந்திக்கச் செய்வனவாக அந்தப் பொன்மொழிகள் மிளிர்ந்தன. அதையும் அரசு உடனடியாக புரிந்துகொண்டது.
உடனடியாக, அரசு தனது விதிமுறைகளை மீண்டும் திருத்தியது. இத்தகைய பொன்மொழிகள், பத்திரிகைகளின் தலையங்க இடத்தில் இடம் பெறக் கூடாது என்றது புதிய திருத்தம்! அதேபோல, பாகிஸ்தான், வட கொரியா, சீனா போன்ற அண்டை நாடுகளின் சர்வாதிகாரிகளை விமர்சித்து எழுதப்படும் கட்டுரைகளையும் அரசு தடை செய்த்து. அந்தக் கட்டுரைகளில் எதிர்க்கப்படுவது தானே என்று பிரதமர் இந்திரா காந்தி உறுதியாக நம்பினார். அவரது கண்ணசைவுக்குக் கட்டுப்பட்டு தணிக்கை அதிகாரிகளும் அளவுக்கு அதிகமாகவே செயலாற்றினர்!
- நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் / தினமணி (2017)
- தமிழாக்கம்: வ.மு.முரளி
$$$