-ஸ்ரீநிவாஸ் வெங்கட்

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் (கி.ரா.) பள்ளியைப் பற்றி கூறும்போது, “மழைக்கு ஒதுங்கத்தான் பள்ளிக்குச் சென்றேன்; ஆனால் பள்ளியைப் பார்க்காமல் மழையைத்தான் பார்த்தேன்” என்று சொல்வார். அந்த ஒரு வாக்கியத்தில் மனித மனத்தின் ஒரு இயல்பு வெளிப்படுகிறது. நாம் எதைப் பார்க்க விரும்புகிறோமோ அதைத்தான் பார்க்கிறோம்; மற்றவை நம் கவனத்திற்கே வராமல் போய்விடுகின்றன.
எனது அனுபவமும் ஓரளவிற்கு அப்படித்தான். கல்லூரிக் காலம் முதல் சமீப காலம் வரை புகைபிடிக்கும் பழக்கம் இருந்தது. அந்தக் காரணத்தால், ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்பு இருந்தபோதிலும், அந்த அமைப்பின் ஒழுக்க விதிமுறைகளாலும், என் சொந்த வாழ்க்கை முறையாலும் நெருக்கமாகச் செல்ல முடியாமல் போய்விட்டது. அதன் விளைவாக, அந்த அமைப்பைப் பற்றி வெளியிலிருந்து உருவான கருத்துக்களையே அதிகமாகக் கேட்டும், பேசியும் வந்தேன்.
ஒரு முறை கோவை ஆடிட்டர் முரளிதரனிடம் இந்து இயக்கப் பிரமுகர்களைப் பற்றிய எனக்குத் தெரிந்த சில எதிர்மறையான சம்பவங்களையே கூறிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் அமைதியாக, “நீங்கள் சொல்வதில் பல விஷயங்கள் உண்மையாக இருக்கலாம். ஆனால் அந்த இயக்கத்தில் இருக்கும் நல்லவர்களை நீங்கள் சந்தித்ததில்லை. குறிப்பாக நாமக்கல் ஹரிஹரகோபால்ஜி போன்றவர்களுடன் பழகியிருந்தால் உங்கள் பார்வை இன்னும் விரிவடைந்திருக்கும்” என்று கூறினார். அந்த வார்த்தைகள் அப்போது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், பின்னர் அதன் அர்த்தம் புரியத் தொடங்கியது.
அந்தப் பின்னணியில்தான் சமீபத்தில் வெளிவந்துள்ள ‘சப்தரிஷிகள்’ நூல் வரிசை என் கைகளுக்கு வந்தது. ஏழு தலைவர்களைப் பற்றிய தனித்தனி சிறு நூல்களைக் கொண்ட இந்தத் தொகுப்பு, ஓர் இயக்கத்தின் வரலாற்றை மட்டுமல்ல, அதை உருவாக்கிய மனிதர்களின் குணநலன்கள், தியாகம், சிந்தனை, தலைமைப் பண்புகள் ஆகியவற்றையும் அறிமுகப்படுத்துகிறது.









இந்த நூல் வரிசையில் ஆர்எஸ்எஸ் நிறுவனர் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார், இரண்டாவது சர்சங்கச்சாலக் எம்.எஸ். கோல்வல்கர் (குருஜி), பின்னர் தத்தோபந்த் தெங்கடி போன்ற அமைப்பாளர்கள் பற்றிய வாழ்க்கை வரலாறுகள் இடம்பெற்றுள்ளன. தெங்கடி, பாரதீய கிசான் சங்கம், பாரதீய மஸ்தூர் சங்கம், சுதேசி ஜாக்ரண் மன்ச் போன்ற பல அமைப்புகளை உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஸ்ரீ ஏகநாத் ரானடே, சிவராம்ஜி, சூரிஜி, கோபால்ஜி போன்ற தலைவர்களின் வாழ்வும் எளிமையாகவும் சுவையாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நூல்களின் சிறப்பு என்னவென்றால், இவை பெரிய ஆய்வு நூல்களாக இல்லாமல், கல்கண்டு போலச் சுருக்கமாகவும் இனிமையாகவும் வாசகர்களுக்குத் தேவையான தகவல்களை அளிக்கின்றன. ஒவ்வொரு தலைவரின் வாழ்க்கையிலிருந்தும் ஒரு பண்பு, ஒரு சிந்தனை, ஒரு நிர்வாகத் திறன், ஒரு மனிதநேயம் போன்ற அம்சங்களை எடுத்துக்காட்டுகின்றன.
‘வைரத்தின் மகிமை வைர வியாபாரிக்குத்தான் தெரியும்’ என்பார்கள். அதுபோல, ஒரு இயக்கத்தின் உள்ளார்ந்த வலிமையை அதன் தலைவர்களின் வாழ்க்கையைப் படித்தால்தான் உணர முடியும். வெளியில் இருந்து பார்க்கும்போது தெரியாத பல அம்சங்கள், இந்த நூல்களின் வழியாக வாசகருக்குப் புரியத் தொடங்குகின்றன.
காஞ்சி மகா பெரியவர் கூறிய ஓர் உவமை நினைவுக்கு வருகிறது. “ஒரு சைக்கிளை மிதிப்பதை நிறுத்திய உடனே அது கீழே விழாது; ஏற்கனவே மிதித்த வேகத்தின் காரணமாக இன்னும் கொஞ்ச தூரம் ஓடும்” என்பார். அதுபோல, கடந்த நூற்றாண்டு முழுவதும் ஆர்எஸ்எஸ் அமைப்பை வளர்த்த தலைவர்களின் சிந்தனை, பயிற்சி முறை, தொண்டர் உருவாக்கும் பண்பு ஆகியவை அடுத்த பல தசாப்தங்களுக்கும் அந்த அமைப்பை முன்னோக்கி நகர்த்தும் சக்தியாக இருக்கும் என்பதை இந்த நூல்கள் உணர்த்துகின்றன.
இது ஓர் இயக்கத்தின் தலைவர்களை அறிமுகப்படுத்தும் நூல் வரிசை மட்டுமல்ல. ஒரு குடும்பத் தலைவர் எப்படிப்பட்ட ஒழுக்கம், பொறுப்பு, எளிமை, தன்னலமற்ற சேவை மனப்பான்மை கொண்டிருக்க வேண்டும் என்பதற்கும் எடுத்துக்காட்டுகளை வழங்குகிறது. எனவே, எந்தக் கருத்தியல் சார்புடையவராக இருந்தாலும், ஓர் இயக்கத்தைப் பற்றி விமர்சிப்பதற்கு முன், அதனை உருவாக்கிய மனிதர்களின் வாழ்க்கையை அறிந்து கொள்வது அவசியம் என்பதை இந்த ‘சப்தரிஷிகள்’ நூல் வரிசை நினைவூட்டுகிறது.
ஓர் இயக்கத்தை அதன் கொள்கைகளால் மட்டுமல்ல, அதை வாழ்ந்து காட்டிய மனிதர்களின் வாழ்க்கையாலும் மதிப்பிட வேண்டும் என்பதே இந்த நூல்களை வாசித்த பிறகு மனதில் ஆழமாகப் பதியும் முக்கியமான உணர்வாகும்.
- குறிப்பு: திரு ஸ்ரீநிவாஸ் வெங்கட், பத்திரிகையாளர்.
***

நூல் விவரம்:
சப்தரிஷிகள்
(7 நூல்களின் தொகுப்பு)
இந்த நூல் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தில் சப்தரிஷிகளாகத் திகழ்ந்த ஏழு தலைவர்களைப் பற்றிய ஏழு நூல்களாகும்.
- தனித்துவ வழி கண்ட தலைவர் பரம பூஜனீய டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார்
- பன்முகம் கொண்ட பண்பாளர் பரம பூஜனீய ஶ்ரீ மாதவ சதாசிவ கோல்வல்கர்
- தீர்வு கண்ட தீரர் ஶ்ரீ ஏக்நாத் ரானடே
- பல்துறை கண்ட வித்தகர் ஶ்ரீ தத்தோபந்த் தெங்கடி
- சாமானிய சாதனையாளர் ஶ்ரீ சிவராம்
- அசாத்திய சாதகர் ஶ்ரீ சூரியநாராயணராவ்
- வீரத்துறவி இராம. கோபாலன்
சங்கத்தில் நீண்ட நாளைய செயல்வீரரான நாமக்கல்லைச் சேர்ந்த திரு. ஹரிஹரகோபாலன் இந்த ஏழு நூல்களைத் தொகுத்து ஒருங்கிணைப்பதில் பெரும் பணி ஆற்றியுள்ளார். தென்பாரத ஆர்எஸ்எஸ் தலைவர் திரு இரா.வன்னியராஜன் வாழ்த்துரை வழங்கியுள்ளார்.
இந்த நூல் தொகுப்பு கிடைக்குமிடம்:
விஜயபாரதம் பிரசுரம், 12. எம்.வி.நாயுடு தெரு, சேத்துப்பட்டு, சென்னை – 31
விலை பற்றிய விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்: (Whatsapp) 89391 49466
www.vijayabharathambooks.com
$$$