-ஆசிரியர் குழு
‘சூடான ஐஸ்கிரீம்’ பார்த்திருக்கிறீர்களா? வாய்ப்பில்லை. ஆனால், இந்து மதத்திலிருந்து பிற மதத்திற்கு மாறிய பின்னரும் எஸ்.சி., எஸ்.டி, எம்.பி.சி, பி.சி. போன்ற ஜாதிச் சான்றிதழ்களைப் பெறுவதற்கு வழிவகுக்கும் நமது செக்யூலர் அரசுகளின் கிறுக்குத்தனமான ஆணைகள், சூடான ஐஸ்கிரீமைத் தான் நினைவு படுத்துகின்றன. இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் (மதுரை அமர்வு) அளித்துள்ள தீர்ப்பு (26.06.2026) காலத்தே கிடைத்த சட்ட வழிகாட்டுதல் எனில் மிகையில்லை. அது தொடர்பான இரு செய்தி ஆவணங்கள் இங்கே...

இஸ்லாம் மதத்துக்கு மாறிய ஒருவர் முஸ்லிம் மட்டுமே!
பிற்பட்ட அந்தஸ்து கோர முடியாது: உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
மதுரை, ஜூன் 26: ‘இஸ்லாம் மதத்திற்கு மாறிய ஒருவர் முஸ்லிம் மட்டுமே. அதில், பிற்பட்ட வகுப்பு முஸ்லிம் என எந்த உட்பிரிவையும் அவர் கோர முடியாது. இட ஒதுக்கீடு சலுகைக்காக பிற்பட்ட வகுப்பு முஸ்லிம் சான்று வழங்க தமிழக அரசு பிறப்பித்த அரசாணை சட்டவிரோதம்’ என, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
துாத்துக்குடி மாவட்டம், தெற்கு இலந்தைக்குளம் சமீர் அகமது தாக்கல் செய்த மனு:
நாராயணன் – கோமதியம்மாள் என்ற ஹிந்து தம்பதி மகனான என் பெயர் பரமசிவம். நான் இஸ்லாம் மதத்தைத் தழுவி, சமீர் அகமது என பெயரை மாற்றிக் கொண்டேன். இதற்கு கயத்தாறு சுன்னத் ஜமாத் அமைப்பு 2015-இல் சான்று வழங்கியது.
இது குறித்த அறிவிப்பு அரசிதழில் வெளியானது. இஸ்லாமிய சடங்குகள் மற்றும் வழக்கப்படி வஹிதாவை திருமணம் செய்தேன். எங்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
‘முஸ்லிம் லெப்பை’ பிரிவைச் சேர்ந்தவர் என்பதற்குரிய ஜாதி சான்று கோரி, கயத்தாறு தாசில்தாரிடம் விண்ணப்பித்தேன். நிராகரிக்கப்பட்டது. ஜாதி சான்று வழங்க கலெக்டர், தாசில்தாருக்கு உத்தரவிட வேண்டும்.
-இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
அடிப்படை உரிமை
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமி நாதன், பி.பி.பாலாஜி அமர்வு பிறப்பித்த உத்தரவு:
பரமசிவம், ‘சமீர் அகமது’ என தன் அடையாளத்தை மாற்றிக்கொள்வது, இந்திய அரசியலமைப்பு பிரிவின் கீழ், ஒரு தனிநபர் தன் அடிப்படை உரிமையை பயன்படுத்துவதாக கருதலாம். அவ்வாறு மதம் மாறிய பின்னர், இட ஒதுக்கீட்டு சலுகைகளை தொடர்ந்து கோரும்போது, அதன் நியாயம் மற்றும் சட்டப்பூர்வ தன்மை குறித்த மற்றொரு விவாதத்திற்கு அது வழிவகுக்கிறது.
மிகவும் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் அக்பர் அலி என்ற பெயரில், இஸ்லாம் மதத்திற்கு மாறியதைத் தொடர்ந்து, பி.சி. முஸ்லிம் பிரிவின் கீழ் அரசுப் பணிக்கான வாய்ப்பைப் பெற விரும்பினார். ஆனால், அவர் ‘பொதுப்பிரிவு’ வரம்பிற்குள் தான் வருவார் என, டி.என்.பி.எஸ்.சி., நிலைப்பாடு எடுத்தது.
இவ்விவகாரம் குறித்து, 2022 டிச. 1-இல் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், டி.என்.பி.எஸ்.சி.யின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தினார். சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்புகளையே தனி நீதிபதி பின்பற்றினார்.
‘ஒருவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியதும் அவர் ஒரு முஸ்லிமாகிறார்; அவர் மதம் மாறுவதற்கு முன்பு சார்ந்திருந்த ஜாதியின் அடிப்படையில், இஸ்லாமிய சமுதாயத்தில் அவரது நிலையைத் தீர்மானிக்க முடியாது’ என்பதே அந்தத் தீர்ப்பின் சாராம்சம்.
இட ஒதுக்கீட்டுச் சலுகைகளை பெறுபவர்கள், மதம் மாறியதால் அத்தகைய சலுகையை இழக்க நேரிடும் என்ற சூழல் இருந்ததால், இத்தீர்ப்புகள் இஸ்லாம் மதத்திற்கு மாறுவதைத் தவிர்க்கும் ஒரு காரணியாக அமைந்திருக்கலாம்.
பரிந்துரை
இஸ்லாம், மதத்தைப் பரப்புவதை ஒரு நோக்கமாக கொண்ட மதம் என்பதால், அதன் ஆதரவாளர்கள் இயல்பாகவே இக்கோரிக்கையை அரசிடம் முன்வைத்தனர். இக்கோரிக்கை தமிழக பிற்பட்டோர் ஆணைய பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. அது, 2024 பிப். 6-இல் பரிந்துரையை அளித்தது.
அதன்படி, பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட வகுப்புகள், சீர்மரபினர் அல்லது பட்டியல் ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் ‘பிற்பட்ட வகுப்பு முஸ்லிம்கள்’ என அடையாளம் காணப்பட்ட, முஸ்லிம்களின் ஏழு பிரிவுகளில் ஏதேனும் ஒன்றுக்கு மாறும்போது, அவர்களுக்கு ‘பிற்பட்ட வகுப்பு முஸ்லிம்’ சமூகச் சான்றிதழ் வழங்குவதை முறைப்படுத்தவும், அதன்மூலம் அவர்களுக்கு பிற்பட்ட வகுப்பு முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டுச் சலுகைகள் கிடைப்பதை உறுதி செய்யவும் ஆணையம் பரிந்துரைத்தது.
அரசு வழக்கறிஞர், ‘இது அரசு கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டியது. அதன் அடிப்படையில் தான் 2024 மார்ச் 9ல் அரசாணை வெளியிடப்பட்டது. முன்னேறிய சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், இஸ்லாத்திற்கு மாறினால், அவருக்கு ‘பிற்பட்ட வகுப்பு முஸ்லிம்’ என்ற அந்தஸ்து கிடைக்காது. ஏற்கனவே இட ஒதுக்கீட்டுப் பலனைப் பெற்று வந்தவர்கள் மட்டுமே, இஸ்லாத்திற்கு மாறினால் அப்பலனை இழக்க மாட்டார்கள்’ என தனது வாதத்தில் சுட்டிக்காட்டினார்.
மேலும் அவர், ‘இஸ்லாத்தில் அடையாளம் காணப்பட்ட பிரிவுகள், குறிப்பிட்ட நம்பிக்கை, நடைமுறைகளைப் பின்பற்றுகின்றன. மதம் மாறியவரை அப்பிரிவுகளில் ஒன்றில் ஏற்றுக்கொள்வது, சம்பந்தப்பட்ட ஜமாத்தின் பொறுப்பு. ‘ஜமாத் சான்று வழங்கிய பின், வருவாய்த் துறை அதிகாரிகள் அதை கேள்விக்குள்ளாக்க முடியாது. நீதிமன்றமும் அதை மறுஆய்வு செய்வது நியாயமாக இருக்காது. அரசாணையை ரத்து செய்யக் கூடாது’ என்று வாதிட்டார்.
மதம், இனம், ஜாதி, பிரிவு, பிறந்த இடம் அல்லது இவற்றில் ஏதேனும் ஒன்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதை, நம் அரசியலமைப்பு தடை செய்திருந்தாலும், சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய பிரிவினர் அல்லது பட்டியல் ஜாதியினர், பழங்குடியினரின் முன்னேற்றத்திற்காக சிறப்பு ஏற்பாடுகளைச் செய்ய அரசுக்கு அதிகாரம் உண்டு.
மதத்தின் அடிப்படையில் மட்டும் ஒருவருக்கு இட ஒதுக்கீட்டுச் சலுகையை வழங்க முடியாது என்பதால், பட்டியல் ஜாதியினர் மற்றும் பழங்குடியினரைப் பட்டியலிட்டதுடன், அரசு பின்தங்கிய வகுப்பினருக்கான ஒரு பட்டியலையும் தனியாக வகுத்துள்ளது.
அரசாணை
தற்போதைய விவகாரத்தில், முஸ்லிம்களுக்கான பிற்பட்ட வகுப்பினர் இட ஒதுக்கீடு குறித்து மட்டுமே நாம் கவனத்தில் கொள்கிறோம்.
இஸ்லாம் மதத்தைப் பின்பற்றும் அனைவரையும், பிற்பட்ட வகுப்பினர் பிரிவின் கீழ் சேர்க்காமல், தமிழக அரசு திட்டமிட்டே, சரியாகவே செயல்பட்டுள்ளது. இஸ்லாத்தில் உள்ள குறிப்பிட்ட சில பிரிவுகளை மட்டுமே பிற்பட்ட வகுப்பினர் பிரிவின் கீழ் அது வகைப்படுத்தியுள்ளது.
‘தாவூதி போஹ்ராக்கள்’ போன்ற சில பிரிவினர் சமூக மற்றும் கல்வி ரீதியாக முன்னேறிய நிலையில் உள்ளனர். குறிப்பிட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், பிற்பட்ட வகுப்பு முஸ்லிம்கள் பட்டியலில் ஆரம்பத்தில் இருந்த பிரிவுகள் பின்னர் விரிவுபடுத்தப்பட்டன.
தற்போதைய நிலவரப்படி, தமிழக சட்டப்பிரிவின் கீழ், அன்சார், தக்காணி முஸ்லிம்கள், துபேகுலா, லப்பைகள், மாப்ளா, ஷேக், சையது ஆகியோர் முஸ்லிம்களின் பிற்பட்ட வகுப்பினர் என அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த ஏழு பிரிவுகளில் எதையும் சாராத ஒரு முஸ்லிமை, பிற்பட்ட வகுப்பினர் என அழைக்க முடியாது.
‘பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட வகுப்புகள், சீர்மரபினர் அல்லது பட்டியல் ஜாதியினரிலிருந்து இஸ்லாத்திற்கு மதம் மாறிய ஒருவரை, இட ஒதுக்கீட்டுப் பலன்களைப் பெறுவதற்காக, பி.சி. முஸ்லிம் என வகைப்படுத்தலாம்; அவ்வாறு மதம் மாறியவருக்கு அறிவிக்கப்பட்ட ஏழு பிரிவுகளில் ஏதேனும் ஒன்றைச் சேர்ந்தவர் என்பதற்கான ஜாதி சான்று வழங்கலாம்’ என, தமிழக அரசு 2024 மார்ச் 9-இல் அரசாணை வெளியிட்டது.
இந்நிலைப்பாடு அரசியலமைப்பு சட்டப்படி செல்லுபடியாகுமா என்பதே கேள்வி. ஜாதி அமைப்பை தன் உள்ளார்ந்த அம்சமாகக் கொண்ட ஹிந்து மதத்தைப் போலன்றி, தங்களின் மதங்கள் சமூக சமத்துவத்தை வழங்குகின்றன என கிறிஸ்தவ மிஷனரிகள், இஸ்லாமிய பிரசாரகர்கள் பல நூற்றாண்டுகளாக முழங்கி வந்துள்ளனர்.
மதமாற்றத்தை நோக்கமாக கொண்டு இத்தகைய நிலைப்பாட்டை எடுத்த பின், இஸ்லாத்திலும் படிநிலை அமைப்பு உள்ளது என்று கூறுவது நேர்மையற்றது. எங்கள் கண்ணோட்டத்தில், சில பிரிவினரை பிற்பட்டவர்கள், மற்றவர்களை முன்னேறியவர்கள் என வகைப்படுத்துவது, குர்ஆனின் போதனைகளுக்கு முரணானது. இஸ்லாம், சமத்துவ சமூகத்தை உருவாக்குவதே தன் நோக்கமாகக் கொண்டுள்ளது.
வரலாற்றுச் சூழல் காரணமாக, இஸ்லாமிய சமூகமும், பல்வேறு பிரிவுகளாக பிளவுபட்டுள்ளது. இவை, ஹிந்து மதத்திலுள்ள ஜாதி அமைப்பிற்கு இணையானவை என்று கூட துணிந்து கூறலாம்.
ஜாதி எவ்வாறு பிறப்பால் தீர்மானிக்கப்படுகிறதோ, அதுபோலவே ஒருவர் பிறப்பாலேயே ராவுத்தர், மரைக்காயர் அல்லது தக்காணி முஸ்லிமாக அறியப்படுகிறார்.
ஒருவரை, ‘ராவுத்தர் முஸ்லிமாக’ மதமாற்றம் செய்ய முடியும் என்று கூறுவது அபத்தமானது. 75 ஆண்டுகளுக்கு முன்பே சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தபடி, இஸ்லாத்திற்கு மதம் மாறியவுடன், ஒருவர் முஸ்லிம் ஆகிறார்; அவ்வளவே.
சட்டவிரோதம்
உயர் நீதிமன்றம் வகுத்தளித்த சட்டக் கோட்பாடு நடைமுறையில் இருக்கும்போது, வெறும் அரசாணையை வெளியிடுவதன் மூலம் அதனை மாற்றியமைக்க முடியாது.
நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பிற்கு எதிராக, நிர்வாகத் துறையால் ஒருபோதும் செயல்பட முடியாது. ஆனால், மாநில அரசு அதையே செய்துள்ளது. அத்தீர்ப்பின் சாரத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில், ஒரு அரசாணையை மாநில அரசு பிறப்பிக்க அதிகாரம் பெற்றதல்ல.
பிற்பட்ட வகுப்பு முஸ்லிம்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள ஏழு முஸ்லிம் உட்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றிற்கு மதமாற்றம் செய்ய முடியும் என அங்கீகரிக்கும் வகையில் அரசாணையை வெளியிட்டுள்ளது.
அரசியலமைப்பிற்கு மட்டுமல்லாமல், இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கும் முரணான புதிய நடைமுறையை அரசு கொண்டு வந்துள்ளது. அந்த அரசாணை சட்டவிரோதமானது. எனவே, ஜாதி சான்று நிராகரித்த உத்தரவு நிலைநிறுத்தப்படுகிறது.
இஸ்லாம் மதத்திற்கு மாறிய ஒருவர், பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த முஸ்லிம் என்ற அந்தஸ்தைக் கோர முடியாது. அவர் ஒரு முஸ்லிம் மட்டுமே; அவ்வளவு தான்.
இவ்வாறு உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
75 ஆண்டுகளுக்கு முன்…
சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வு, ‘ஒரு ஹிந்து இஸ்லாத்திற்கு மதம் மாறும்போது, அவர் வெறும் ஒரு முஸ்லிமாகவே கருதப்படுகிறார். மதம் மாறுவதற்கு முன்பு, அவர் சார்ந்திருந்த ஜாதி அவரது முஸ்லிம் சமூகத்திலான இடத்தை தீர்மானிப்பதில்லை. ஒரு ஜாதி அல்லது உட்பிரிவைச் சேர்ந்த ஒருவர் இஸ்லாத்திற்கு மாறும்போது, அவர் எந்தவொரு ஜாதியையும் சாராதவராகிறார்’ என, 1951-இல் தீர்ப்பளித்தது என்று நீதிபதிகள் குறிப்பிட்டுக் காட்டினர்.
- நன்றி: தினமலர் (27.06.2026)
$$$

மதம் மாறியவருக்கு ‘பிற்படுத்தப்பட்டோர்’ என சாதிச் சான்றிதழ் வழங்கும் அரசாணை ரத்து
உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
மதுரை, ஜூன் 26: வேறு மதத்தில் இருந்து முஸ்லிம் மதத்துக்கு மாறியவருக்கு ‘பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்’ என சாதிச் சான்றிதழ் வழங்கும் அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி, தெற்கு இலந்தைகுளத்தைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் கடந்த 2015-இல் முஸ்லிம் மதத்துக்கு மாறி தனது பெயரை சமீர் அகமது என மாற்றிக் கொண்டார். அதன்பின்னர், பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் பிரிவில் ‘முஸ்லிம் லெப்பை’ என சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார். அவரது மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், முஸ்லிம் லெப்பை என சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்து நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி.பாலாஜி அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவு:
தமிழக அரசு கடந்த 2024 பிப்.6-ஆம் தேதி பிறப்பித்த அரசாணை அடிப்படையில், மனுதாரர் தனக்கு பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் சான்றிதழ் கோரி மனு அளித்துள்ளார்.
அந்த அரசாணையில், ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் அல்லது பட்டியல் சாதி பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த 7 பிரிவுகளில் ஏதேனும் ஒன்றுக்கு மாறும்போது அவர்களுக்கு ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்கள்’ என சான்றிதழ் வழங்கலாம். அவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டு சலுகைகளை அனுபவிக்கலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.
மதம், இனம், சாதி, பிரிவு, பிறந்த இடம் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் தடை செய்கிறது. அதேநேரம், சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய குடிமக்கள் அல்லது பட்டியல் சாதியினர் அல்லது பட்டியல் பழங்குடியினரின் முன்னேற்றத்துக்காக சிறப்புச் சலுகைகள் வழங்க அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இவற்றைச் செயல்படுத்தும் வகையில்தான் இடஒதுக்கீட்டுக் கொள்கைகளும் அமைந்துள்ளன.
இந்த இடஒதுக்கீடு விஷயத்தில் தமிழக அரசு கவனமாகச் செயல்பட்டுள்ளது. முஸ்லிம் மதத்தைப் பின்பற்றும் அனைவரையும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் சேர்க்காமல், அதில் உள்ள குறிப்பிட்ட சில பிரிவுகளை மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் சேர்த்துள்ளது.
அரசாணையில், ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் அல்லது பட்டியல் சாதியினர் பிரிவில் இருந்து முஸ்லிம் மதத்துக்கு மாறிய ஒருவர் இடஒதுக்கீட்டுச் சலுகையைப் பெற ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்)’ எனக் கருதலாம். மதம் மாறிய பிறகு லெப்பை உள்ளிட்ட 7 பிரிவுகளில் ஒன்றைச் சேர்ந்தவர் என்பதற்கான சாதிச் சான்றிதழ் வழங்கலாம்’ என்றும் கூறப்பட்டுள்ளது. இது சட்டப்படி செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
‘இந்து மதம்போல அல்லாமல் தங்களது மதங்கள் சமூக சமத்துவத்தை அளிப்பதாக கிறிஸ்தவ மிஷனரிகளும், முஸ்லிம் பிரசாரகர்களும் கூறி வருகின்றனர். மதமாற்றத்தை ஊக்குவிக்கும் இத்தகைய நிலைப்பாடு இருக்கும்போது, முஸ்லிம் மதத்திலும் படிநிலை அமைப்பு உள்ளது என்பது நேர்மையற்றது.
முஸ்லிம் மதத்தில் சில பிரிவுகளை ‘பிற்படுத்தப்பட்டவை’ என்றும், மற்றவற்றை ‘முன்னேறியவை’ என்றும் வகைப்படுத்துவது குர்ஆனின் கட்டளைகளுக்கு முரணானது. இஸ்லாம் ஒரு சமத்துவ சமுதாயத்தை உருவாக்கவே விழைகிறது. இறைவனின் பார்வையில் அனைவரும் சமம். அங்கு சமூகப் படிநிலைகள் ஏதும் இல்லை.
இருப்பினும், வரலாற்று ரீதியான காரணங்களால், முஸ்லிம் சமூகமும் பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை இந்து மதத்தில் உள்ள சாதி அமைப்புக்கு இணையானவை என்றுகூட துணிந்து கூறலாம். சாதி எவ்வாறு பிறப்பால் தீர்மானிக்கப்படுகிறதோ, அதேபோல ஒருவர் பிறப்பாலேயே லெப்பை, ராவுத்தர், மரைக்காயர் அல்லது தக்காணி முஸ்லிமாக அறியப்படுகிறார்.
சென்னை உயர் நீதிமன்றம் 75 ஆண்டுகளுக்கு முன்பு பிறப்பித்த உத்தரவில், ‘முஸ்லிம் மதத்துக்கு மாறியவுடன் ஒருவர் முஸ்லிம் ஆகிறார்’ என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, மதம் மாறிய பிறகு அவர் ஒரு முஸ்லிம் என்பதுதான் அதன் பொருள். அவரை ஒரு குறிப்பிட்ட பிரிவுக்குள் அல்லது ஒரு சமூகத்தில் பிறப்பதன் மூலம், சலுகை பெறக்கூடிய பிரிவுகளுக்குள் அடக்க முடியாது. இந்த உத்தரவு அமலில் இருக்கும்போது, வெறும் அரசாணை பிறப்பித்து நீதிமன்ற உத்தரவை மாற்றியமைக்க முடியாது.
‘நீதிமன்றத்தின் உத்தரவு செல்லுபடி ஆகாதது அல்லது பயனற்றது’ என்று சட்டப்பேரவையால் அறிவிக்க முடியாது. சட்டம் நிறைவேற்ற சட்டப்பேரவைக்கு அதிகாரம், தகுதி இருந்தாலும் அரசு நிர்வாகத்துக்கு அத்தகைய உரிமை இல்லை. அரசு நிர்வாகம் ஒருபோதும் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு எதிராகச் செயல்பட முடியாது. அரசுக்கு எதிரான முடிவாக இருப்பதாகக் கூறி அதை மீறுவதற்கு நினைத்தால், அது சட்ட ஆட்சியின் முடிவுக்கு வழிவகுக்கும்.
முஸ்லிம் மதத்துக்கு மாறியவர்கள் ஏதேனும் ஒரு வகையான இடஒதுக்கீட்டுப் பலனை தொடர்ந்து பெறுவதை உறுதி செய்வதற்காக மட்டுமே மாநில அரசு இத்தகைய அணுகுமுறையை மேற்கொண்டுள்ளது. எனவே, தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை கடந்த 2024 மார்ச் 9-ஆம் தேதி பிறப்பித்த அரசாணை அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது. அந்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது.
இதனால், முஸ்லிமாக மதம் மாறிய ஒருவர் ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முஸ்லிம்’ என்ற அந்தஸ்தை கோர முடியாது. அவர் ஒரு முஸ்லிம் மட்டுமே. அதைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
- நன்றி: இந்து தமிழ் திசை (27.06.2026)
$$$