தமிழகத்தின் போர்க்குரல் வாஞ்சிநாதன்

-ஆசிரியர் குழு

பலிதான  தினம்: ஜூன் 17

நம் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் தென்னகத்தின் போராட்டக் களத்தை விலைமதிப்பு மிக்கதாக மாற்றிய நிகழ்ச்சி ஆஷ்துரை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம். ஆங்கிலேயர் ஆட்சியில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ஆஷ்துரையை, வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்று, தானும் உயிர்நீத்த தினம் 1911, ஜூன் 17-ஆம் தேதி.  

திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையில், 1886-ஆம் ஆண்டு ரகுபதி ஐயர்,  ருக்மிணி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் வாஞ்சிநாதன். இயற்பெயர் சங்கரன். ஆனால், அவரை வாஞ்சி என்றே அனைவரும் அழைத்துள்ளனர். செங்கோட்டையில் பள்ளிப்படிப்பை முடித்த வாஞ்சி, திருவனந்தபுரத்திலுள்ள மூலம் திருநாள் மகாராஜா கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். 

கல்லூரியில் படிக்கும்போது பொன்னம்மாளுடன் திருமணம் நடந்தது. தொடர்ந்து, புனலூர் வனத்துறையில் பணியாற்றினார் வாஞ்சி. ஆங்கிலேய அரசாங்கத்தை எதிர்த்து நாடெங்கும் நடத்தப்பட்ட போராட்டம் உச்சத்தை அடைந்திருந்த நேரம். 

அந்த நேரத்தில், வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா ஆகியோரின் மேடைப் பேச்சுகளால் திருநெல்வேலி பகுதியில் சுதந்திர இயக்கம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இவற்றால் ஈர்க்கப்பட்ட வாஞ்சியும் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். 

இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்பட்ட புரட்சியாளர்களுக்கு, பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த புதுச்சேரியில் இருந்து உதவிகள் கிடைத்து வந்தன. அங்குள்ள புரட்சியாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட வாஞ்சி, அரசுப் பணியில் இருந்து விலகி, புரட்சிப் பாதைக்கு மாறினார். நண்பர்களுடன் இணைந்து ஆங்கிலேய ஆட்சியை ஒழித்துக்கட்ட ரகசியக் கூட்டங்களைக் கூட்டினார். 

புதுவையில் புரட்சியாளர் வ.வே.சு. ஐயர் வீட்டில் வாஞ்சி தங்குவது உண்டு. அங்கு மகாகவி பாரதியாரையும் சந்தித்துள்ளார். இந்தியர்கள் நடத்தி வந்த சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனியை இந்தியர்கள் நடத்தக் கூடாதென்று தடுத்தது வெள்ளையர் அரசாங்கம். சுதேசி கப்பல் கம்பெனியை நடத்தப் பாடுபட்ட வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா இருவரையும் கைதுசெய்து சிறையில் அடைத்தது. 

இதற்கெல்லாம் காரணமாக இருந்த திருநெல்வேலி ஆட்சியர் ஆஷ் துரையைக் கொல்வது என்று வாஞ்சி சார்ந்திருந்த பாரதமாதா சங்கத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, வாஞ்சிநாதனே இந்தப் பணியை மேற்கொள்வது என்று தீர்மானம் ஆனது. 

1911, ஜூன் 17. அன்று காலை 10.45 மணி. திருநெல்வேலியில் இருந்து மதுரை செல்லும் வழியில் உள்ள மணியாச்சி ரயில்நிலைய சந்திப்பில் திருநெல்வேலி ஆட்சியர் ஆஷ்துரை தன் மனைவியுடன் கொடைக்கானலுக்குச் செல்ல ரயிலில் முதல் வகுப்புப் பெட்டியில் அமர்ந்தார். அதுவே சரியான தருணம் என்று எண்ணிய வாஞ்சி, ஆஷ்துரையை தன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். 

காவலர்களிடம் பிடிபட்டால் தான் சார்ந்திருக்கும் பாரதமாதா சங்கம் பற்றிய ரகசியம் தெரிந்துவிடும் என்பதால், அருகே இருந்த கழிப்பிட அறை நோக்கி ஓடினார். அதனுள் சென்றவர், தன்னைத்தானே சுட்டுக்கொண்டு வீரமரணம் அடைந்தார். அவர் அணிந்திருந்த சட்டைப் பையில் இருந்த துண்டுக் கடிதத்தில், ஆஷ்துரையை சுட்டுக் கொன்றதற்கான காரணத்தைக் குறிப்பிட்டிருந்தார். 

திருநெல்வேலி ஆட்சியர் ஆஷ் கொலை வழக்கு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கியமானதாகும். வாஞ்சி வீரமரணம் எய்திய மணியாச்சி ரயில் நிலையத்துக்கு வாஞ்சி – மணியாச்சி சந்திப்பு என்ற பெயர் சூட்டப்பட்டது. வாஞ்சி பிறந்த செங்கோட்டையில் கம்பீரமான உருவச் சிலையும் திறந்து வைக்கப்பட்டது. இந்த நாளில் வாஞ்சியின் செயலுக்கும் வீரத்துக்கும் மரியாதை செலுத்தும் வகையில், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் ஊர்வலமாக வந்து, வாஞ்சியின் சிலைக்கு மாலை அணிவித்து சபதம் எடுக்கிறார்கள். 

$$$

தன்னைத் தந்து நம்மை உணர்த்தியவன்

‘இந்திய சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவர்கள்’ ‘ என்று ஒரு நீண்ட பட்டியல் உண்டு. இந்தப் பட்டியலில் உள்ளவர்களில் ஒருவராக மட்டுமே வாஞ்சிநாதன் சித்தரிக்கப் பட்டிருக்கிறார். உண்மையில்  இவர் வரலாற்று நாயகன். ஆனால், இவரது தீரச் செயலின் கன பரிமாணம் தனித்தன்மை வரலாற்று முக்கியத்துவம் சரியாக உணரப்படவில்லை.

1. ஆங்கிலேயரிடம் கணக்குத் தீர்த்தவர்.

ஆங்கிலேயர்கள் நாடு விட்டு நாடு வந்து இந்த மண்ணை ஆக்கிரமித்து இந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்களையே அடிமைப் படுத்தியவர்கள். தமிழகத்தில் தங்களை எதிர்த்துப் போராடிய தீரன் சின்னமலை, வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, அழகு முத்துக்கோன், மருது சகோதரர்கள் ஆகியோரை இந்த மண்ணிலேயே தூக்கிலிட்டுக் கொன்றவர்கள்.

கட்டபொம்மன் வாழ்ந்த பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைத் தகர்த்து தரைமட்டம் ஆக்கியதுடன் அந்த மண்ணில் தங்களுக்கு எதிராக மீண்டும் ஒரு போராட்டம் உருவாகிவிடக் கூடாது என்பதற்காக அந்த ஊரையே ஏர் கொண்டு உழுது விட்டார்கள்.
மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட பின் அவர்களது வாரிசுகள் மீண்டும் தங்களுக்கு எதிராகத் தலை எடுத்து விடக் கூடாது என்பதற்காக, இளம் சிறார்களாயிருந்த அவர்களது மகன்களையும் மருதுபாண்டியருக்குத் துணை நின்ற புரட்சிக்காரர்களையும் மலேயாவுக்கு நாடு கடத்தி அங்குள்ள சிறையில் அடைத்தவர்கள்.

பிற்காலத்தில் ஆஷ்துரையும் தன் பங்கிற்குத் தூத்துக்குடியில் ஊர்வலமாக வந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் சிலரை சுட்டு வீழ்த்தியிருக்கிறார். இத்தகைய கொடுமைக்கார ஆங்கிலேயரை எதிர்த்து பிற்காலத்தில் தமிழகத்தில் தமிழர்கள் கொடி பிடித்திருக் கிறார்கள். சிறை சென்றிருக்கிறார்கள். சிறை சென்றிருக்கிறார்களே தவிர, யாரும் ஆயுதம் ஏந்தவில்லை 1800களில் குறுநில மன்னர்களும் பாளையக்காரர்களும் நடத்திய ஆயுதப்புரட்சிக்குப் பின் 105 ஆண்டுகள் கழித்து அந்தக் குறையைப் போக்கி அவர்களிடம் கணக்குத் தீர்த்தவர் வாஞ்சிநாதன் தான்.

2.  இங்கிலாந்து நாடாளுமன்றத்திலும் பேசப் பட்டவர்.

இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் ஆங்கிலேய அரசை எதிர்த்து தமிழகத்தில் நடந்த போராட்டங்களின் பாதிப்புகள் எல்லாம் தமிழக எல்லையைத் தாண்டவில்லை. ஆனால், வாஞ்சிநாதன் நிகழ்த்திய தீரச் செயல்தான் இந்திய எல்லையையும் தாண்டி நம்மைப் பாதித்துக் கொண்டிருந்த இங்கிலாந்து நாட்டையே உலுக்கியது;  ஆங்கிலேயரிடம் பாதிப்பை ஏற்படுத்தியது. தகவல் தொடர்பு, போக்குவரத்து ஆகிய துறைகளில் மிகவும் பின் தங்கியிருந்த அக்காலத்திலேயே வாஞ்சிநாதன் 1911, ஜுன் 17 இல் ஆங்கிலேயப் பேரரசின் பிரதிநிதியான கலெக்டர் ஆஷ்துரையைச் சுட்டது பற்றி 1911 ஜுன் 19 ஆம் தேதி இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

3. வெளிநாட்டுப் பத்திரிகையில் புகழப் பட்டவர்.

இந்திய விடுதலையில் மிகவும் அக்கறை கொண்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களுக்குப் பக்கபலமாகத் திகழ்ந்த மேடம் காமா அவர்கள் அப்போது பாரீஸ் நகரிலிருந்து வெளியான தனது ‘வந்தே மாதரம்’ பத்திரிகையின் தலையங்கத்தில் வாஞ்சிநாதன் தீரச் செயலைப் புகழ்ந்து இவ்வாறு எழுதினார்: 

“திருநெல்வேலி கலெக்டர் ராபர்ட் வில்லியம் டி எஸ்கார்ட் ஆஷ் என்பவரை வாஞ்சிநாதன் என்ற இளைஞர் பட்டப் பகலில் சுட்டுக் கொன்ற நிகழ்ச்சி இந்திய மக்கள் உறங்கவில்லை என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு. வடக்கோ, தெற்கோ, கிழக்கோ இந்தியாவின் எந்தப் பகுதியுமே இனிமேல் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்குப் பாதுகாப்பான பகுதிகள் இல்லை என்பதை எச்சரிக்கும் அபாயச் சங்கு ஊதப்பட்டு விட்டது. இதுவரை மிதவாத அரசியலின் தொட்டிலாக விளங்கி வந்த தென்னாட்டிலும் புரட்சிக் கனல் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கி விட்டது. இனிமேல் இந்தியாவில் பணியாற்ற வரும் பிரிட்டிஷ் அதிகாரிகள் இங்கிலாந்திலிருந்து புறப்படும்போதே தங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தான் வர வேண்டியிருக்கும்”.

வாஞ்சிநாதனும் வ.உ.சியும்:

வ.உ.சி. மென்மையான, மேன்மையான பண்புக்குச் சொந்தக்காரர். ஈ, எறும்புக்குக் கூடத் துன்பம் விளைவிக்காதவர். இத்தகைய வ.உ.சி.யே கூட, சிறையிலிருந்த தன்னிடம் சிறைக்காவலன் கலெக்டர் ஆஷ்துரையை வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்ற செய்தியைக் கூறியதும், ஆஷ்துரை கொல்லப் பட்டதற்காகக் கொஞ்சமும் இரக்கப்படவில்லை. மாறாக, “நல்ல செய்தியைச் சொன்னாய். நீ நலம் பெறுவாய்” என்று அவனை வாழ்த்தினார். அத்துடன் அவனிடம் தான் சிறைவாசம் அனுபவிப்பதற்கும், தனது கப்பல் கம்பெனி நசிந்து போனதற்கும் இந்த ஆஷ்துரைதான் காரணம் என்றும் விளக்கினார்.

“சூரரைப் போற்று” என்பார் பாரதி. யாருக்கும் தலைவணங்காத தன்மானச் சிங்கம் பசும்பொன் முத்துராமலிங்க  தேவர். இவர் ஒவ்வோர்  ஆண்டும் தீபாவளிக்குச் சில நாட்களுக்கு முன் அப்போது சென்னையில் வசித்து வந்த வாஞ்சிநாதனின் மனைவி பொன்னம்மாள் அம்மையாரைச் சந்தித்து அவருடைய காலில் விழுந்து வணங்கி, அவருக்கு ஒரு புடவை வழங்குவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். இது அவர் வாஞ்சிநாதனிடம் கொண்டிருந்த அளப்பரிய மரியாதைக்கு எடுத்துக்காட்டு.

$$$

Leave a comment