-வ.மு.முரளி
மிகவும் நீண்ட பதிவு.. சமூகத்தின் மறதியைப் போக்க இதைத் தவிர வேறு வழியில்லை! பொறுமை காத்து அருளுங்கள். இதனை எப்படியாவது முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள நடிகர் விஜய்யின் கவனத்திற்குக் கொண்டு செல்லுங்கள்!

தமிழக வெற்றிக் கழகம் 2025 செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் நிகழ்த்தப்பட்ட செயற்கையான நெரிசலில் சிக்கி 41 அப்பாவிகள் பலியாகினர். அதுவே, தமிழக மக்களிடம் தவெக மீது பெரும் இரக்கம் ஏற்படக் காரணமானது என்பதை மறந்துவிட முடியாது. திமுகவுக்கு சவாலாக வளர்ந்துவந்த நடிகர் விஜய்க்கு முட்டுக்கட்டை போடவோ, அவருக்குப் பாடம் கற்பிக்கவோ தான் அந்த அவலம் அங்கே அரங்கேற்றப்பட்டது. அந்த நிகழ்வை திட்டமிட்டு அரங்கேற்றியது யார் என்பதை மக்கள் உணர்ந்ததால் தான் நடிகர் விஜய்க்கு ஆதரவாகத் திரண்டனர்.
ஆனால்…
அந்தச் சமயத்தில், ஆளும்கட்சியான திமுகவைக் காப்பாற்ற கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், எழுத்தாளர்கள் என்ற பெயரில் இயங்கிய இடதுசாரிகள் வெளியிட்ட கருத்துகள் இன்று பலருக்கு மறந்து போயிருக்கலாம். அவற்றை விஜய் முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள இன்று மக்களுக்கு நினைவுபடுத்துவது நமது கடமை.
ஏனெனில், அன்று கரூர் நெரிசல் சம்பவத்திற்கு நடிகர் விஜய் மீதே பழிபோட்ட விஷமிகள் இன்று, அவரது ஆட்சி அமைய ஆதரவளித்திருக்கின்றனர். அன்று திமுகவுக்கு ஜால்ரா போட்ட அவர்கள், இன்று திமுகவின் முதுகில் குத்தி விஜய்யை ஆதரிக்கின்றனர். அல்லது திமுகவே இவர்களை வழியனுப்பி வைத்திருக்கிறதோ என்ற சந்தேகமும் இல்லாமல் இல்லை. மிக விரைவில் இவர்கள் (கம்யூனிஸ்டுகள், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக்) நடிகர் விஜயின் முதுகில் குத்த மாட்டார்களா என்ன?
மக்களுக்கு மறதி அதிகம். ஆனால் நடிகர் விஜய்க்குமா?
இனி வருபவை, கரூர் கோர சம்பவத்தின் போது வெளியான சில முக்கியமான செய்தித் துணுக்குகளின் தொகுப்பு. இவை உங்கள் மனசாட்சியுடன் பேசட்டும்!
$$$

-1-
விஜய் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தமிழ்நாடு அரசு அச்சப்படுகிறதா? திருமாவளவன் கேள்வி
*
கரூர் உயிரிழப்புகள் தொடர்பாக தவெக தலைவர் விஜய் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தமிழ்நாடு அரசு அச்சப்படுகிறதா என்ற கேள்வியை வி.சி.க. தலைவர் திருமாவளவன் எழுப்பியுள்ளார்.
திருச்சியில் அக்டோபர் 2 அன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கரூர் சம்பவத்தில் அரசு முறையாக இயங்கவில்லை எனக் குற்றம் சுமத்தி அதன் மூலம் அரசியல் செய்வதில் விஜய் குறியாக இருக்கிறார் என்பதைக் காண்பதற்கு அதிர்ச்சியாக உள்ளது” எனக் கூறினார்.
“கரூர் உயிரிழப்புகள் தொடர்பாக துளியும் வருத்தமோ, குற்ற உணர்வோ அவரிடம் இருப்பதாக தெரியவில்லை. ஆட்சியாளர்கள் மீது பழிபோடுவதால் அவர் எவ்வளவு ஆபத்தானவர் அல்லது ஆபத்தானவர்களின் கைகளில் சிக்கியிருக்கிறார் என்பதைக் காணும்போது கவலையளிக்கிறது” எனவும் திருமாவளவன் தெரிவித்தார்.
கரூர் விவகாரத்தில் காவல்துறையின் மெத்தனம் அதிர்ச்சியளிப்பதாகக் கூறிய திருமாவளவன், “அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்வதற்கு உள்ள முகாந்திரம் விஜய்க்கு இல்லையா?” எனக் கேள்வி எழுப்பினார்.
- ஆதாரம்: பிபிசி.காம் (03.10.2025)
$$$
-2-
மனித மாண்பில்லாத விஜய் – சிபிஎம் கடும் விமர்சனம்
*
விஜய் பரப்புரையால் 41 உயிர்கள் பலியான கரூர் கொடுந்துயரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்ட காணொலி உரை என்பது முழுமையான அரசியல் உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் பெ.சண்முகம் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக வெற்றிக் கழகம் 27 ஆம் தேதி கரூரில் நடத்திய பரப்புரைக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி இதுவரை 41 அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோயுள்ளன. பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விரும்பத்தகாத நிகழ்வு நடைபெற்ற நொடியில் இருந்தே தன்னார்வத்துடன் பொதுமக்களும், மருத்துவத் துறை, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு மக்களின் மதிப்புமிக்க உயிர்களைப் பாதுகாத்துள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சர் உள்பட அமைச்சர்களும், அதிகாரிகளும் 27 ஆம் தேதி இரவு முதலே நேரில் கரூர் சென்று இப்பணிகளை விரைவுபடுத்தி வருகிறார்கள். உயிரிழந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் நிவாரணத் தொகையும் அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் உட்பட தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் நேரில் கரூர் சென்று தங்களது ஒருமைப்பாட்டையும், ஆறுதலையும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தெரிவித்து வருகிறார்கள்.
ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை துவங்கியுள்ளது. காவல் துறை மட்டத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழக வெற்றிக் கழகம் உட்பட பல்வேறு தரப்பினர் நீதிமன்றத்தையும் நாடியுள்ளனர். இதன் மூலம் மேலும் விவரங்கள் தெரிய வர வாய்ப்புள்ளது.
இந்நிலையில், இந்தக் கொடும் சம்பவம் நடைபெற்று மூன்று தினங்களுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது கட்சி நடத்திய நிகழ்வில் ஏற்பட்டுள்ள உயிர் இழப்புகளுக்கும், காயமடைந்தவர்களுக்கும் மாநில அரசும், அரசியல் கட்சிகளும், மக்களும் செய்திட்ட உதவிகளுக்கு நன்றி தெரிவிப்பதே சரியானதாக இருக்க முடியும்.
தான் மிக மிக தாமதமாக வந்தது குறித்தோ, பரப்புரையின் போது நெரிசலில் மக்கள் சிக்கிக் கொண்டிருந்த நேரத்தில் தனது தொண்டர்களைக் கட்டுப்படுத்த முயற்சிக்காதது, அவர் உடனடியாக கரூரை விட்டு வெளியேறியதற்கான உரிய காரணங்களைப் பற்றியோ காணொளியில் ஒரு வார்த்தை கூட தெரிவிக்கவில்லை.
இதற்கு மாறாக அவரது உரை என்பது முழுமையான அரசியல் உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது. உயிர் இழப்புகளுக்கு வருத்தம் தெரிவிப்பதற்கு மாறாக, அரசு நிர்வாகத்தின் மீது பழி சுமத்துவதாகவே இருக்கிறது. 41 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கைக் கூட தன்னையும், தன் கட்சித் தொண்டர்களையும் பழிவாங்குவதற்கான மாநில அரசின் சதி என்கிறார். தனது கட்சித் தொண்டர்களைத் தூண்டி விடும் விதமாகவே அவரது உரை அமைந்துள்ளது.
இதுபோன்ற அரசியல் உள்நோக்கம் கொண்ட பொறுப்பற்ற கருத்தை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். மதிப்புமிக்க மனித உயிர்கள் பறிபோயுள்ள நிலையில் தலைமைப் பண்பையும், மனித மாண்பையும் வெளிப்படுத்த வேண்டிய தருணத்தில் விஜய் வெளியிட்டுள்ள காணொளி எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. இத்தகைய உள்நோக்கங்கள் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து தமிழ்நாட்டு மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு பெ.சண்முகம் கூறியுள்ளார்.
- ஆதாரம்: தமிழ்வலை.காம் (01.05.2025)
$$$
-3-
“கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் யாரும் செய்யாத பித்தலாட்டத்தை செய்துள்ளார் விஜய்”.. வைகோ அட்டாக்!
*
“கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் யாரும் செய்யாத பித்தலாட்டத்தை செய்துள்ளார் விஜய். கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட போது திருச்சியில் கூட தங்காமல் விஜய் சென்னைக்கு ஓடி வந்துவிட்டார். கரூர் சம்பவத்தில் முதலமைச்சர் அரசியல் செய்ய வேண்டாம் என்றார், ஆனால் விஜய் சகட்டு மேனிக்கு பேசியுள்ளார்” என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் பொதுச் செயலாளர் வைகோ பேசியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், கரூர் சம்பவத்தில் 41 பேரின் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார். நவம்பர் 5 ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற்ற தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய், கரூர் சம்பவத்துக்குப் பின் 38 நாட்களுக்குப் பின் மௌனம் கலைத்தார். இந்தக் கூட்டத்தில், விஜய் தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தார்.
விஜய் தனது பேச்சில், “கரூர் சம்பவத்தால் நாங்கள் அளவிட முடியாத வலியில் இருக்கிறோம். அப்போது நாங்கள் அமைதியாக இருந்தபோது, அரசு நம்மைச் சொல்ல முடியாத வெறுப்பு, அவதூறு செய்தது. உச்ச நீதிமன்றத்தில் கூட இது விவாதிக்கப்பட்டது” என்று கூறினார்…
…இந்நிலையில், இன்று நடைபெற்ற மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் பேசிய பொதுச் செயலாளர் வைகோ, தவெக தலைவர் விஜய் குறித்து கடுமையாக பேசியுள்ளார். கரூர் பெருந்துயர விவகாரத்தில் விஜய் செய்தது பித்தலாட்டம் என வைகோ விமர்சித்துள்ளார். மேலும், முதல்வர் ஸ்டாலினை விஜய் விமர்சித்தது பற்றியும் பேசியுள்ளார்.
வைகோ பேசுகையில், “கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் யாரும் செய்யாத பித்தலாட்டம் செய்துள்ளார் விஜய். சென்னை அழைத்து வந்து துக்கம் கேட்டுள்ளார் விஜய். இது யாரும் செய்யாத பித்தலாட்டம். கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட போது திருச்சியில் கூட தங்காமல் விஜய் சென்னைக்கு ஓடி வந்துவிட்டார்; கரூர் சம்பவத்தில் முதலமைச்சர் அரசியல் செய்ய வேண்டாம் என்றார், ஆனால் விஜய் சகட்டு மேனிக்கு பேசியுள்ளார்.” என விமர்சித்துள்ளார்.
முன்னதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விஜய்யின் பேச்சை கடுமையாகக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.
அதில், “பொது வாழ்வில் ஆத்திச்சூடி கூட அறியாதவர் விஜய். கரூர் துயரத்திற்கு முழு காரணமான அவர், பொறுப்பற்று திசைதிருப்புகிறார். ஆட்சிக்கு வந்துவிட்டதைப் போல கனவுலகத்தில் திளைக்கிறார். காகிதக் கப்பலில் கடல் தாண்ட முனைகிறார், ஆகாயத்தில் கோட்டை கட்டுகிறார். அவரது நம்பிக்கைக் கனவுகள் கானல் நீராகிவிடும். கரூரில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்ததற்கு முழுக்க முழுக்க பொறுப்பேற்க வேண்டிய தவெக தலைவர் விஜய், தரம் தாழ்ந்த முறையில் திசைதிருப்ப, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது வெறுப்பையும் கசப்பையும் பொதுக்குழு என்ற பெயரில் நடந்த கூட்டத்தில் கொட்டித் தீர்த்திருக்கிறார். கரூர் சம்பவத்தில் விஜயின் கட்சியினர் பொறுப்பற்றுச் செயல்பட்டனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உண்மையான ஆதங்கம் இல்லாமல் அரசியல் செய்கின்றனர். இனிமேல் இதுபோன்ற அரசியல் நாகரிகமின்றி பேசக்கூடாது” என்று வைகோ தெரிவித்தார்.
- ஆதாரம்: தமிழ்.ஒன்இந்தியா.காம் (07.11.2025)
$$$

-4-
கரூர் துயரம் : தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்!
*
கரூரில் நடந்த பெருந்துயர சம்பவத்தில் விஜய் உள்ளிட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நேர்நிறுத்த தமிழ்நாடு அரசு தயங்கக்கூடாதென சமூக செயற்பாட்டாளர்கள் கூட்டறிக்கை ஒன்றை இன்று (2025 அக்டோபர் 2) வெளியிட்டுள்ளனர்.
கரூரில் நடிகர் விஜய் கலந்து கொண்ட பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது.
இந்த நிலையில் மூன்னாள் நீதியரசர் சந்துரு, ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், எம்.ஜி.தேவசகாயம் ஐஏஎஸ், எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை, ஊடகவியலாளர் ‘தி இந்து’ என்.ராம், வழக்குரைஞர் ஹென்றி டிபேன், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ரவிகுமார் (விடுதலைச் சிறுத்தைகள்) உள்ளிட்ட கலை இலக்கிய வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என 100க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில், “கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இரவு 7.20 மணியளவில் கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய “சாலையில் காட்சிதரும் – ரோடு ஷோ” நிகழ்வில் அதன் தலைவர் நடிகர் விஜய் அவர்களைக் காணவந்த பொதுமக்களில் 41பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மரணமடைந்துள்ளனர். இதனால் ஆற்றொணா துயரத்திலும் கடும் மனவுளைச்சலிலும் தமிழக மக்கள் தவித்து வரும் இவ்வேளையில், தவறான தகவல்களைப் பரப்பி இந்த மரணங்கள் உதாசீனப்படுத்தப்படுவதைக் காணச் சகியாமல் நாங்கள் இந்தக் கூட்டறிக்கையினை வெளியிடுகின்றோம்.
விஜய் அரசியல் கட்சி துவங்கியதிலோ தனது கட்சியினரை அவர் சந்திப்பதிலோ எவருக்கும் மாறுபட்ட கருத்து இல்லை. நாட்டின் குடிமக்கள் எவரொருக்குமானது போலவே அது அவருக்குரிய சனநாயக உரிமை. ஆனால் அவர் தனது கட்சியினரையும் ரசிகர்களையும் சந்திக்கத் தெரிவுசெய்துள்ள முறை, இந்த நாட்டின் அரசியல் முதிர்ச்சிக்கும் பொதுவாழ்க்கைக்கும் தனிமனித கண்ணியத்திற்கும் உகந்ததல்ல என்பதுடன், அதுவே இந்தப் பேரழிவுக்கும் இட்டுச்சென்றுள்ளது எனவும் சுட்டிக்காட்டுகிறோம்.
கரூருக்கும் முன்னதாக விக்கிரவாண்டி, மதுரை, திருச்சி, அரியலூர், நாகை ஆகிய இடங்களில் விஜய்யின் கூட்டங்கள் இந்தப் பேரழிவுக்கான முன்னோட்டம் போலவே நடந்திருக்கின்றன. போக்குவரத்து விதிகளைக் கடைபிடிக்காமலும் பொதுமக்களுக்கு அச்சமூட்டும் வகையிலும் வாகனங்களில் பயணம் செய்தது, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியது மற்றும் மின் கம்பங்கள், மரங்கள், அருகாமைக் கட்டிடங்கள் ஆகியவற்றில் ஏறி சேதப்படுத்தியது என அவரது கட்சியினர் பொறுப்புணர்வின்றியும் கட்டுப்பாடற்றும் சுயஒழுங்கின்றியும் நடந்துகொண்டனர். அவர்களில் பெரும்பாலோர் முப்பது வயதுக்குட்பட்டவர்கள், புதிதாக அரசியல் ஆர்வம் கொண்டவர்கள், விஜய்யின் சொல்லுக்கு கட்டுப்படக்கூடியவர்கள். அத்துமீறல்களுக்காக அவர்களைக் கண்டித்து, நல்வழிப்படுத்த அவர் அறிவுறுத்தியிருக்க வேண்டும். ஆனால் விஜய் அப்படியான முயற்சியெதையும் மேற்கொள்ளாமலும் அவர்களது அத்துமீறல்களை ரசிப்பவராகவும், அவர்கள் அவ்வாறு இருப்பதுதான் தனது பலமென்று கருதியும் அவற்றை இயல்பானதாக்க முயற்சித்ததன் விளைவே இந்த அநியாய மரணங்கள்.
விஜய், அறிவித்திருந்த நேர அளவுக்குள் கரூருக்கு வராமல் தன்னைக் காண்பதற்காகத் திரண்டிருந்தவர்களை 7 மணிநேரத்திற்கும் மேலாக காக்கவைத்ததும், அங்கு குடிநீர், உணவு, கழிவறை உள்ளிட்ட அடிப்படைத்தேவைகள் போதுமானதாக இல்லாதிருந்ததும், கூட்டத்திற்குள் வந்த பிறகும் முகம் காட்டாமல் மக்களை தன் வண்டிக்குப் பின்னேயே அலையவிட்டதும்தான் உயிரிழப்புக்குக் காரணம் என்பதை காணொளிச்சான்றுகள் காட்டுகின்றன.
ஆனால் இந்த உயிரிழப்புகளுக்குப் பின்னே “திட்டமிட்ட சதி” இருப்பதாகவும் விஜய் மீது எந்தத் தவறுமில்லையெனவும் உண்மைக்கு மாறான ஒரு கட்டுக்கதையை விஜய்யின் ஆதரவாளர்கள் சிலர் பரப்பத் தொடங்கினர். மணிப்பூர் உள்ளிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த இயற்கைப் பேரிடர்கள், மோதல்கள், கலவரங்கள், ஒடுக்குமுறைகள் பற்றி விசாரிக்கப் போயிராத தேசிய ஜனநாயகக் கூட்டணி, கரூர் மரணங்கள் பற்றி ஆராய தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்றை அனுப்பியுள்ளதும் அந்தக் குழுவினர் “சதி” கட்டுக்கதையை வலுப்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்து வருவதும் ஏற்கத்தக்கதல்ல.
தன் கண்முன்னேயே விபரீதம் நடப்பதைப் பார்த்தப் பிறகும் அதில் கவனம் செலுத்தி நிலைமையைச் சீராக்காமல் அங்கிருந்து வெளியேறிப் போய் இரண்டு நாட்கள் அமைதிகாத்த விஜய், இந்தக் கட்டுக்கதை கொடுத்த தைரியத்தில் 30.9.2025 அன்று ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். தன்னால்தான் இந்தச் சாவுகள் நிகழ்ந்தன என்பது பற்றிய குற்றவுணர்ச்சியோ வருத்தமோ தார்மீகப் பொறுப்பேற்போ இல்லாத அவரது காணொளி விளக்கத்தில் அரசின் மீது பழிசுமத்திவிட்டு தப்பித்துவிடும் உள்நோக்கமே துருத்திக் கொண்டுள்ளது.
கலையும் இலக்கியமும் சமூகத்தை மேம்படுத்துவதாக, விடுதலை உணர்வைத் தருவதாக, அடிமைச்சிந்தனைக்கு எதிராக தன்மதிப்புணர்வைத் தூண்டுவதாக இருக்க வேண்டும். ஆனால் விஜய்யின் அணுகுமுறை நேர்மைத் தன்மையற்றதாகவும், தனது ரசிகர்களை வேண்டுமென்றே தவறாக வழிநடத்துவதாகவும் உள்ளது. உழைப்பும், பொது சிந்தனையும், சமூக அக்கறையுமற்ற வழியில் அதிகாரத்தைப் பெறும் முனைப்பு மேலோங்கியுள்ளது. இழைத்துவிட்ட குற்றத்திலிருந்து தப்பிப்பதற்காக, இதுவரை தனது கொள்கை எதிரி என்று குறிப்பிட்டு வந்த வலதுசாரிகளை அண்டி நிற்கவும் தயாராகிவிட்டார் என்பதை அவரது அடுத்தடுத்த நகர்வுகள் உணர்த்துகின்றன.
எவ்வளவு கொடிய தீங்கினையும் இழைத்துவிட்டு வதந்திகளையும் கட்டுக்கதைகளையும் களமிறக்கி தப்பித்துவிட முடியும் என்கிற விஜய்யின் கெடுநோக்கம் தடுக்கப்பட வேண்டும். ரசிக மனப்பான்மையில் அவரது பின்னே திரண்டுள்ள சிறார்களையும் இளைஞர்களையும் மீட்டெடுத்து சமூகப் பொறுப்புணர்வும் தன்மதிப்பும் உள்ளவர்களாக, தமது உள்ளாற்றல்கள் மூலம் வியத்தகு சாதனை புரிபவர்களாக வளர்த்தெடுப்பதில் கலை இலக்கியவாதிகளுக்கும் கூட்டுப்பொறுப்பு உள்ளதென உணர்கிறோம்.
விஜய்யின் முந்தைய நிகழ்வுகள், விளைவுகள் குறித்த மதிப்பீட்டின் அடிப்படையில் கரூரில் மேற்கொண்டிருக்க வேண்டிய கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் தமிழ்நாடு அரசு கண்டறிய வேண்டும். வருங்காலத்தில் இதுபோன்ற அவலங்கள் உருவாகாமல் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வழிவகைகள் கண்டறியப்பட வேண்டும்.
சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்ய, கரூர் உயிரிழப்புகளுக்கு காரணமான விஜய் உள்ளிட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நேர்நிறுத்த தமிழ்நாடு அரசு தயங்கக்கூடாதென வலியுறுத்துகிறோம். மேலும், கரூர் நிகழ்வைக் காரணம் காட்டி சமூக, சனநாயக, பண்பாடு மற்றும் அரசியல் இயக்கங்களின் கருத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை, சங்கம் சேரும் உரிமை, போராடும் உரிமை ஆகியவற்றை தீர்மானிக்கும் அதிகாரத்தை காவல்துறையிடம் ஒப்படைத்துவிடக் கூடாது. அரசமைப்பு உரிமைகளான அவற்றைக் காப்பாற்றுவதில் தனக்குள்ள பொறுப்பினை தமிழ்நாடு அரசு உறுதியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.”
-இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆதாரம்: மின்னம்பலம் (02.10.2025)
$$$
பின்குறிப்பு- 1:
மேற்கண்ட செய்திகள் தவிர்த்து, திமுக தலைவர் (அன்றைய முதல்வர்) மு.க.ஸ்டாலின், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஆகியோரும் விஜய்யைக் கண்டித்துள்ளனர். அவர்களை இதில் சேர்க்கவில்லை. ஏனெனில் அவர்கள் இப்போது அந்தர் பல்டி எதுவும் அடிக்கவில்லை.
அதேபோல, விஜய் கரூர் கோர சம்பவத்தால் நிலைகுலைந்திருந்தபோது அவருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரின் கருத்துகளையும் இதில் சேர்க்கவில்லை. ஏனெனில் அவர்கள் ‘அன்றைக்கொரு பேச்சு, இன்றைக்கொரு பேச்சு’ பேசவில்லை.
அதேபோல, திமுகவின் அத்துமீறல்களை மக்களிடமிருந்து மறைக்கவும், அரசு மீதான அதிருப்தி மடைமாற்றவும் களமிறங்கிய இடதுசாரி எழுத்தாளர்கள் பலரும் இன்று முதல்வராக விஜய் பொறுப்பேற்பதைக் கொண்டாடுவதைக் காண்கிறோம். அவர்களின் நாடகத்தையும் முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள நடிகர் ஜோசப் விஜய் உணர வேண்டும்.
இவர்களின் போலிப் பித்தலாட்டத்திற்கு எதிராக, அன்றே ‘படைப்பாளர்கள் சங்கமம்’ சார்பில் நடிகர் விஜய் மீது குற்றம் சாட்டியவர்களுக்கு பதிலடியாக அறிக்கையை வெளியிட்டோம். (அது தனிப் பதிவாக அடுத்து வருகிறது).
இத்தனைக்கும் பிறகும், எந்தக் கட்சிகள் கரூர் விவகாரத்தில் விஜய்யை குற்றவாளியாக்க முயன்றனவோ, அதே கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் நடிகர் விஜய்யை எண்ணி வருத்தமே மேலிடுகிறது.
$$$
பின்குறிப்பு- 2:
அரசியல் அனுபவம் ஏதுமில்லாத ஒருவர், நடிகர் என்பதாலேயே பெற்ற வாக்குகளால் வென்று முதல்வராவதை நான் உண்மையில் விரும்பவில்லை. ஆனால், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. அதை ஏற்கிறேன். அவருக்கு அதிமுக நிபந்தனையற்ற ஆதரவு வழங்க வேண்டும் என்று முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டிருக்கிறேன். அதுவே சரியானதாக இருந்திருக்கும் என்பது என் யூகம்.
வரக்கூடிய ஆட்சி திராவிட மாடல் ஆட்சியின் இரண்டாவது வெர்ஷனாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். அசுர பலம் கொண்ட திமுகவையே ஆட்டிப் படைத்த விஷமிகளிடம் வசமாகச் சிக்கி இருக்கிறார் விஜய். எனவே நல்லது எதையும் எதிர்பார்க்க முடியுமா என்று தெரியவில்லை.
இவர்களின் கொடுங்கரங்களில் விஜய் சிக்கி சின்னாபின்னமாகாமல் இருக்க விஜய் நம்பும் திருச்செந்தூர் முருகனைப் பிரார்த்திக்கிறேன்! ஏனெனில் இவர்களின் நரித்தனங்களால் விஜய் மட்டுமே சின்னாபின்னமாகப் போவதில்லை.
$$$